நீரிணை கடந்த கப்பல்கள்?
ஹோர்முஸ் நீரிணையை கடந்த கப்பல்;
இந்தியக் கொடியுடன் கூடிய எல்.பி.ஜி கப்பல் ஒன்று வெள்ளிக்கிழமை இரவு நீரிணையை கடந்துள்ளதாக கப்பல் கண்காணிப்பு தரவுகள் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடியது.
இதனால், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போன்றவற்றை ஏற்றிக் கொண்டு வரும் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டன.
இந்நிலையில், இந்தியக் கொடியுடன் கூடிய எல்.பி.ஜி கப்பல் ஒன்று வெள்ளிக்கிழமை இரவு நீரிணையை கடந்துள்ளதாக கப்பல் கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்திய கப்பல் கழகத்திற்கு சொந்தமான ஷிவாலிக் கேஸ் கப்பல் வெள்ளிக்கிழமை இரவு ஹோர்முஸ் நீரிணையை கடந்து சனிக்கிழமை அதிகாலை 12:45 மணியளவில் ஓமன் வளைகுடாவில் இருந்ததாக 'மரைன் டிராஃபிக்' தரவுகள் உறுதிப்படுத்தின.
இதேபோல் மற்றொரு எல்பிஜி கப்பலான நந்தா தேவியும் சில மணி நேரங்களில் இந்த நீரிணையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் பேசிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஈரான் அமைச்சருடன் இது குறித்துப் பேசியுள்ளார்.
இந்தியாவிற்கு வரும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
முன்னதாக, ஈரான் தனது சொந்த கச்சா எண்ணெய் கப்பல்களையும் சீனக் கப்பல்களையும் மட்டுமே ஹோர்முஸ் நீரிணையை கடக்க அனுமதித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின.
ஆனால், சமீபத்தில் சவுதி அரேபியா மற்றும் ஈராக்கிலிருந்து சுமார் 30 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெயைச் சுமந்து வந்த இரண்டு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியக் கடல் எல்லைக்கு வந்து சேர்ந்துள்ளன.
இந்தியாவின் எல்.பி.ஜி நுகர்வு ஆண்டுக்கு 33 மில்லியன் டன்களாக உள்ள நிலையில், அதில் 60% இறக்குமதியைச் சார்ந்துள்ளது.
இதில் 90% மேற்கு ஆசியாவிலிருந்து வருவதால், இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எரிவாயு தேவையில் 54% இந்த ஒரே ஒரு கடல் பாதையைத்தான் நம்பியுள்ளது.
இந்த வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள முடக்கத்தால், இந்தியாவின் எல்.பி.ஜி இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், 33 கோடி இந்தியக் குடும்பங்களின் சமையல் எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, வணிக மற்றும் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு விநியோகத்தை இந்திய அரசு குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடற் கொள்ளையைத் தடுக்க?
பல படையெடுப்புகள், கடற்கொள்ளையர்கள் தாக்குதல், நிலநடுக்கங்களை தாண்டி நிற்கும் மதில் நகரம் குறித்து பார்க்கலாம்.
பண்டைய காலம் தொட்டு, மனிதர்கள் தங்கள் வீடுகளையும் சமூகங்களையும் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப் பெரிய மதில்களைக் கட்டி வந்துள்ளனர்.
ஜெரிகோ (Jericho) மற்றும் டிராய் (Troy) போன்ற புகழ்பெற்ற கோட்டை நகரங்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டாலும், இன்றும் பல வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்கள் அவற்றின் பழங்கால மதில் சுவர்களுடன் சிதையாமல் கம்பீரமாக நிற்கின்றன.மலை உச்சியில் அமைந்த கோட்டைகள் முதல் கடற்கரைப் பாதுகாப்பு அரண்கள் வரை உலகெங்கிலும் உள்ள மிகக் கவர்ச்சிகரமான கோட்டை நகரங்கள் குறித்து பார்க்கலாம்.
அயர்லாந்து தீவிலேயே முழுமையாக மதில் சுவர்களால் சூழப்பட்ட ஒரே நகரம் டெர்ரி/லண்டன்டெர்ரி ஆகும். இதன் தற்காப்பு மதில்கள் 1613 மற்றும் 1618-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டன.
இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் இருந்து வந்து குடியேறியவர்களைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதே இந்த மதில்களின் முக்கிய நோக்கமாக இருந்தது.
சுமார் ஒரு மைல் சுற்றளவு கொண்ட இந்த 400 ஆண்டுகள் பழமையான மதில்களைச் சுற்றி நடப்பது, இன்று இந்த நகரத்தின் முதன்மையான சுற்றுலா கவர்ச்சிகளில் ஒன்றாக உள்ளது.
சான் ஜுவான் பழைய நகரத்தைப் பாதுகாக்கும் இந்த வியக்கத்தக்க மதில் சுவர்கள், பெரும்பாலும் அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டவர்களாலேயே கட்டப்பட்டன.
ஸ்பானிஷ் காலனித்துவவாதிகள், தங்கள் துறைமுகத்தைப் கடற்கொள்ளையர்கள் மற்றும் எதிரிப் படைகளிடமிருந்து பாதுகாக்க விரும்பியபோது, 1630-ஆம் ஆண்டில் இந்த வலுவான கோட்டை கட்டும் பணியை தொடங்கினர்.
சான் ஜுவான் நகரம் இன்று இந்த மதில்களைத் தாண்டி வெகுதூரம் விரிவடைந்துவிட்ட போதிலும், பழைய நகரத்தின் பாதுகாப்பு அரண்களும் வலிமையான கோட்டைகளும் இன்றும் மிகச் சிறந்த நிலையில் உள்ளன.செங்குத்தான மலைச்சரிவிலிருந்து கோடார் வளைகுடாவை (Kotor Bay) நோக்கி இறங்கும் கோடார் பழைய நகரம், ஏட்ரியாடிக் கடல் பகுதியின் மிகவும் கவர்ச்சிகரமான காட்சிகளில் ஒன்றாகும்.
பழங்காலக் கற்கோயில்கள், வெனிஸ் பாணி வில்லாக்கள், பொதுச் சதுக்கங்கள் மற்றும் மடாலயங்கள் என அனைத்தும் இன்றும் மத்திய காலப் பாதுகாப்பு மதில்களால் சூழப்பட்டுள்ளன.
கடல் மட்டத்திலிருந்து தொடங்கி, மலை உச்சியில் உள்ள சான் ஜியோவானி (San Giovanni) கோட்டை வரை உயர்ந்து செல்லும் இந்த மதில் சுவர்கள் 2.7 மைல் நீளம் கொண்டவை. இவை பல படையெடுப்புகள், கடற்கொள்ளையர்களின் தாக்குதல்கள் மற்றும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைத் தாண்டி இன்றும் கம்பீரமாக நிற்கின்றன.
10 ஏவுகணைகளை ஏவிய வடகொரியா;
வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே உள்ள சுனான் பகுதியிலிருந்து கிம்ஜாங் உன் உத்தரவின் பேரில் 10 ஏவுகணைகள் திடீரென்று ஏவப்பட்டுள்ளது.
வடகொரியாவின் அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். இந்த நாட்டிடம் சக்தி வாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைகள் முதல் அணுஆயுதம் வரை எல்லாம் இருக்கிறது.
அதாவது, வடகொரியாவில் இருந்து வெள்ளை மாளிகையை தாக்கும் அளவிற்கு அந்நாட்டிடம் ஏவுகணைகள் இருப்பதாக கூறப்படுகிறது. வட கொரியாவின் அண்டை நாடாக தென்கொரியா உள்ளது.இந்த 2 நாடுகள் இடையே காலம் காலமாக பிரச்சனை உள்ளது.
இதற்கிடையே தான் அமெரிக்கா தென் கொரியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதாவது, அமெரிக்காவிற்கும் வட கொரியாவுக்கும் இடையே பகை உள்ளது. அதனால் தான் அமெரிக்கா தற்போது தென் கொரியாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.
மேலும், தென்கொரியாவில் அமெரிக்கா ராணுவ வீரர்கள் மற்றும் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தென்கொரியாவின் பாதுகாப்புக்காக அமெரிக்கா இதனை செய்துள்ளது.
அமெரிக்காவின் இந்த செயல் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை ஆத்திரமடைய வைத்துள்ளது. இதனால் அவ்வப்போது அமெரிக்கா, தென்கொரியாவை மிரட்டும் வகையில் ஏவுகணை சோதனைகளை கிம் ஜாங் உன் நடத்தி வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க மறுபுரம் அமெரிக்காவும், தென்கொரியா வீரர்களும் இணைந்து ராணுவ கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவும், தென்கொரியாவும் சேர்ந்து Freedom Shield என்ற பெயரில் கூட்டு பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்த பயிற்சி வரும் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த பயிற்சியின்போது இருநாட்டின் வீரர்களும் தங்களின் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துவது உள்பட கணினி சார் டெக்னாலஜி சார்ந்த ஒத்துழைப்பை சிறப்பாக மேற்கொள்வதை அடிப்படையாக கொண்டு செயல்படுவார்கள்.
இந்த பயிற்சின்போது தான் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளார். அதாவது வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே உள்ள சுனான் பகுதியிலிருந்து கிம்ஜாங் உன் உத்தரவின் பேரில் 10 ஏவுகணைகள் திடீரென்று ஏவப்பட்டுள்ளது.இந்த ஏவுகணை ஜப்பானில் போய் விழுந்துள்ளது.
இதுபற்றி ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி கூறுகையில், ''வடகொரியா ஏவிய இந்த ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்துள்ளது.
இந்த ஏவுகணைகளால் எந்தவொரு விமானங்கள் அல்லது கப்பல்களுக்கும் சேதம் ஏற்படவில்லை'' என்றார்.
அதேபோல் வடகொரியா ஏவுகணைகள் ஏவியதை தென்கொரியாவின் ராணுவம் உறுதி செய்துள்ளது.
வடகொரியாவில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் சுமார் 350 கிலோமீட்டர் தூரம் பறந்து ஜப்பான் அருகே விழுந்ததாக தெரிவித்துள்ளது.
தற்போது அமெரிக்கா, தென்கொரியா நாடுகள் வடகொரியாவை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
வானம் பார்த்து மாறும் ஏரி.
இந்தியாவின் பரந்து விரிந்த நிலப்பரப்பில் உள்ள ஏரிகள் குறித்தும் அதன் நிறம் மாறும் தன்மை குறித்தும் பார்க்கலாம்.
இந்தியாவின் இந்த ஏரிகள் நிறம் மாறக் கூடிய தன்மை கொண்டவையாகும். அதுமட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரக் கூடிய ஏரிகளில் முக்கியமானவையாக திகழ்கிறது. அது எந்தெந்த ஏரிகள் என்பது குறித்து பார்க்கலாம்.
லோநனார் ஏரி
சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விண்கல் மோதியதால் உருவான லோனார் (Lonar), உப்புத்தன்மை வாய்ந்த எரிமலைவாய் ஏரியாகும். 2020 ஜூன் மாதத்தில், இந்த ஏரி பச்சை நிறத்திலிருந்து இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறி பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதிகரித்த உப்புத்தன்மை மற்றும் சிவப்பு பாசிகள் மற்றும் 'ஹாலோஃபிலிக்' நுண்ணுயிரிகளின் பெருக்கமே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இளஞ்சிவப்பு நிறம் தோன்றுவதற்கு அதிக வாய்ப்புள்ள கோடைக்காலத்தின் தொடக்கத்தில் இங்கு செல்வது சிறந்ததாகும்.
பேங்காங் த்சோ ஏரி
கடல் மட்டத்திலிருந்து 4350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த உயரமான உப்பு நீர் ஏரி, அதன் நிறம் மாறும் தன்மைக்காகப் புகழ்பெற்றது. வானத்தின் பிரதிபலிப்பு மற்றும் தாதுக்களின் ஒளிவிலகல் காரணமாக, இந்த ஏரி நீலம் முதல் மரகதப் பச்சை மற்றும் இளஞ்சிவப்பு நிறம் வரை மாறிக்கொண்டே இருக்கும்.
மே முதல் செப்டம்பர் வரையிலான காலமே இதைப் பார்ப்பதற்கு உகந்த நேரம். அக்காலகட்டத்தில் இந்த ஏரிக்கரையில் முகாமிட்டுத் தங்குவது, சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் மிகச்சிறந்த காட்சிகளை உங்களுக்கு வழங்கும்.
சாம்பர் உப்பு ஏரி
இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு உப்பு ஏரியான சாம்பர், கோடையில் இளஞ்சிவப்பு நிறமாக மாறுகிறது. இந்த நிற மாற்றம், பீட்டா- கரோட்டின் உற்பத்தி செய்யும் பாசிகள் மற்றும் 'ஹாலோஆர்க்கியா' (Haloarchaea) போன்ற நுண்ணுயிரிகள் வளர்வதற்கு ஏற்ற உப்புத்தன்மை கொண்ட சூழலால் ஏற்படுகிறது.
பிப்ரவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமே இதைப் பார்ப்பதற்கு உகந்த நேரம்.
சாங்கு ஏரி
'சாங்கு ஏரி' (Changu Lake) கேங்டாக்கிற்கு அருகில் அமைந்துள்ளது. வானம், பருவகாலம் மற்றும் பகல் நேரத்தைப் பொறுத்து இது அடர் நீலம் முதல் வெள்ளி - சாம்பல் நிறம் வரை தனது நிறத்தை மாற்றிக்கொண்டே இருக்கும்.
குளிர்காலத்தில் இந்த ஏரி முற்றிலும் உறைந்து பனிக்கட்டியாகக் காணப்படும். கேங்டாக்கிலிருந்து டாக்ஸி மூலம் இந்த ஏரியை அடையலாம்.
இங்கு வரும் பயணிகள் யாக் (Yak) சவாரி செய்வது, புனித தலங்களை தரிசிப்பது மற்றும் ஆல்பைன் (Alpine) மலர்களின் அழகை ரசிப்பது எனப் பலஅனுபவங்களைப் பெறலாம்.






