நேருக்கு நேர்!

6 தொகுதிகளில்

திமுக-காங்கிரஸ் போட்டி!



தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பலமான கூட்டணியைத் தொடர்ந்து வருகின்றன.


இருப்பினும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் இரு கட்சிகளுக்கும் இடையே நிலவிய இழுபறி, தற்போது ஒரு விசித்திரமான அரசியல் சூழலுக்கு வழிவகுத்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில், சில குறிப்பிட்ட தொகுதிகளை விட்டுக்கொடுக்க இரு தரப்பும் முன்வராததால், அங்கு "நட்பு ரீதியான போட்டி" (Friendly Contest) என்ற புதிய உத்தி அரங்கேறியுள்ளது.


இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், திமுக 14 இடங்களிலும் போட்டியிடுவது எனத் தலைமை மட்டத்தில் இறுதி செய்யப்பட்டது.


ஆனால், வேட்புமனுத் தாக்கலின் இறுதி நாள் வரை எந்தெந்தத் தொகுதிகள் யாருக்கு என்பதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.


குறிப்பாக நெல்லித்தோப்பு, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, தட்டாஞ்சாவடி மற்றும் உழவர்கரை ஆகிய 5 தொகுதிகளில் இரு கட்சிகளுமே உரிமை கோரின.


கடந்த 2021 தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றியதால், இந்த முறை தங்களுக்குச் செல்வாக்குள்ள கூடுதல் தொகுதிகளை வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது.


அதேசமயம், புதுச்சேரியின் காலி பெருங்காய டப்பா பலத்தை இழக்க விரும்பாத காங்கிரஸ், தனது பிடிவாதத்தை தளர்த்த மறுத்தது.


இதன் விளைவாக, இரு கட்சிகளின் வேட்பாளர்களும் ஒரே தொகுதிகளில் மனுத்தாக்கல் செய்தனர்.


வேட்புமனுக்களைத் திரும்பப் பெற வேண்டிய கட்டாயத்தில் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.


ஆனால், உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் பின்வாங்க மறுத்ததால், சுமார் 6 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் திமுக வேட்பாளர்கள் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.


இதனை "நட்பு ரீதியான போட்டி" என்று இரு கட்சிகளின் தலைமையும் விளக்கம் அளித்துள்ளது.


அதாவது, மாநில அளவில் கூட்டணியில் நீடித்தாலும், இந்த 6 தொகுதிகளில் மட்டும் அந்தந்தக் கட்சியின் பலத்தை நிரூபிக்க இரு தரப்பும் மோதிக்கொள்ளும்.


இது ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்குச் சாதகமாக அமையக்கூடும் என்ற அச்சம் நிலவினாலும்,காங்கிரஸ் பழைய நினைப்பு பிடிவாதம் இதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.


ஒரே கூட்டணியில் உள்ள இரு முக்கிய கட்சிகள் நேருக்கு நேர் மோதிக்கொள்வது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


குறிப்பாக, வாக்குகள் சிதற வாய்ப்புள்ளதால் இது எதிரணிக்கு வெற்றியை எளிதாக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


இருப்பினும், "எங்கள் நோக்கம் ஆளுங்கட்சியை

வீழ்த்துவதுதான், சில தொகுதிகளில் நிலவும் இந்த போட்டி கூட்டணியைப் பாதிக்காது" என்று திமுக மற்றும் காங்கிரஸ்

தரப்பில் சமாதானம் சொல்லப்படுகிறது.


தட்டாஞ்சாவடி போன்ற முக்கிய தொகுதிகளில் நிலவும் இந்தப் போட்டி, புதுச்சேரி தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.


ரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறும் வாக்கெடுப்பில், மக்கள் இந்தக் கூட்டணியின் "நட்பு ரீதியான" மோதலை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.





உதயசூரியன்-175


2019 ஆம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை அங்கம் வகிக்கின்றன.


கருத்தியல் ரீதியாக ஒத்த சிந்தனையுடைய கூட்டணியாக அறியப்படும் திமுக 2026 தேர்தலை முன்னிட்டு தனது கூட்டணியில் 23 கட்சிகளை சேர்த்து இருக்கிறது. ஆனால் கூட்டணிகளை ஆதரிப்பது தொகுதி பங்கீடு பிரச்சினை வரைக்கும் தான்.

தொகுதி பங்கீடு என வரும்போது கூட்டணி பிரச்சினை நிச்சயம் மோசம் அடையும். அந்த வகையில் திமுகவிலும் ஒருகட்டத்தில் பிரச்சனை தீவிரமடைந்தது.

அதிமுக வசம் சென்று விடும் என எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக திடீரென திமுக பக்கம் சாய்ந்தது.


ஆனாலும் தேமுதிகவிற்கு திமுக சார்பில் 10 தொகுதிகளும் ஒரு எம்பி தொகுதியும் வழங்கப்படும் என்ற வாக்குறுதி கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகளை அதிருப்திக்குள்ளாக்கியது.


அதற்குக் காரணம் நீண்ட காலமாக கூட்டணியில் அங்கம் வகித்தும் , எல்லா சூழலிலும் கூட்டணி தலைமையை ஆதரித்தும் வரும் விடுதலை சிறுத்தைகளுக்கும், கம்யூனிஸ்ட் அமைப்புகளுக்கும் போதிய அளவு தொகுதிகளை ஒதுக்காமல் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்ட தேமுதிகவிற்கு அதிகளவிலான தொகுதியை ஒதுக்கியிருப்பது பேசு பொருளாக மாறிஇருக்கிறது.


ஆனால் பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை சரி கட்டி இருக்கிறார்.


இந்த சூழலில் தான் இன்றைய தினம் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு வேலைகளையும் விருப்பம மனு அளித்தவர்களுடன் நேர்காணலையும் நிறைவு செய்து விட்டதாக குறிப்பிட்ட அவர், திராவிட மாடல் வளர்ச்சிக்கு கூட்டணி கட்சிகளின் பங்கு அதிகளவு இருந்ததாக பாராட்டி அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.


மேலும் கொள்கை வழி தோழமை இயக்கத்தினரின் பங்களிப்பினை மதித்தும் அதனை உணர்ந்தும் தான் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் ஜனநாயக பூர்வமாக நடத்தப்பட்டதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.


மேலும் அந்த கடிதத்தில் திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ள காரணத்தால்தான் குறைந்த அளவில் தொகுதிகளை பங்கிட்டு கொள்ள வேண்டிய சூழல் நிலவியதாக அவர் தனது கடிதத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்.


மேலும் இதனை உணர்ந்து கொடுத்த தொகுதிகளை ஏற்றுக்கொண்ட விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களுக்கும் நன்றி தெரிவித்து அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.


அதோடு இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் கூட்டணி வெற்றிதான் முக்கியம் எனவும் கூறி மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் வெளியிட்ட அறிக்கையையும் குறிப்பிட்டு அவர் தனது கடிதத்தில் பாராட்டியிருந்தார்.


அடுத்த நான்கு வாரங்களுக்கு தொண்டர்கள் தேர்தலில் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர் 2026 சட்டமன்றத் தேர்தலில் 175 இடங்களில் உதயசூரியன் சின்னம் களம் காண உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.


கூட்டணி கட்சிகளின் சின்னங்களுக்காகவும் அவர்களின் வெற்றிக்காகவும் திமுக தொண்டர்கள் உழைக்க வேண்டும் எனவும் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை