பழிவாங்கும் பா.ஜ.க, அரசியல்!
சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை தனது பழிவாங்கும் அரசியலுக்கு மட்டுமே பா.ஜ.க. பயன்படுத்தி வருவதை அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் வந்திருக்கும் தீர்ப்பு அம்பலப்படுத்தி இருக்கிறது.
அனைவரையும் விடுதலை செய்து விட்டது சி.பி.ஐ. நீதிமன்றம்.
மூன்று மாதங்கள் சிறையில் இருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார் மணீஷ் சிசோடியா. இவர்கள் சிறையில் இருந்ததற்கு பரிகாரம் என்ன?
இவர்கள் மீது அவதூறு கிளப்பி, அவமானப்படுத்தியதை எப்படி சீர்படுத்த முடியும்?
இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாது பா.ஜ.க.. அவர்களுக்கு வேண்டியது எல்லாம், குறுகிய காலப் பலன்கள். அதற்காகத்தான் சி.பி.ஐ., அமலாக்கத்துறையை பயன்படுத்துவார்கள்.
நீதிமன்றத்தில் கொட்டு வாங்குவதைப் பற்றி எல்லாம் பா.ஜ.க. கவலைப்படுவது இல்லை. நீதிமன்றம் கேள்வி எழுப்பினால் வெட்கப்படுவதும் இல்லை.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட போது பிணை கேட்டு உச்சநீதிமன்றம் போனார். அப்போதே உச்சநீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பியது.
”டெல்லி கலால் கொள்கை வழக்கில் 100 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என்றால் அந்தப் பணம் எங்கே? அதற்கான ஆதாரம் எங்கே?” என்று கேட்டது உச்சநீதிமன்றம்.
அமலாக்கத்துறையால் ஆதாரத்தை தர முடியவில்லை. இருந்தால்தானே தருவார்கள்?

அமலாக்கத்துறை வழக்கறிஞரைப் பார்த்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல்வேறு கேள்விகளைக் கேட்டார்கள்.
”நீதிமன்ற நடைமுறைகள் ஏதுமில்லாமல் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியுமா?
இந்த வழக்கில் இதுவரை ஏதாவது சொத்து முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா?
இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளார் என்பதை தெளிவுபடுத்த முடியுமா?
கலால் கொள்கை வழக்கில் கைதான டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மணீஷ் சிசோடியாவின் வழக்கில், எந்த இடத்தில் வருகிறார்?
கெஜ்ரிவால் ஜாமீன் கோருவதற்கு பதிலாக தனது கைது மற்றும் காவலில் வைத்ததற்கு எதிராக நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார். எனவே அவரை கைது செய்தற்கான அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இருக்கிறதா?
தேர்தல் நேரத்தில் எதற்காக கைது செய்தீர்கள்?"- என்று நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினார்கள்.
டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கானது 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நிலுவையில் இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதிதான் கெஜ்ரிவால் கைது செய்யப்படுகிறார்.
இத்தனை மாதமாக பயமுறுத்தி வந்துள்ளது பா.ஜ.க.. காங்கிரஸ் கட்சியுடன் அரவிந்த கெஜ்ரிவால் கூட்டணி அமைக்க சம்மதித்துவிட்டார், அதில் உறுதியாக இருந்து விட்டார் என்று தெரிந்ததும் கைது செய்தார்கள்.

"2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கெஜ்ரிவாலுக்கு எதிரான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக அமலாக்கத்துறை சொல்லி வருகிறது.
ஆனால் மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு 2024 மார்ச் 16 ஆம் தேதி வெளியானது. உடனே மார்ச் 21 ஆம் தேதி கைது செய்கிறார்கள்"என்று அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி சொன்னார். அரசியல்
நோக்கத்துக்காக மட்டுமே இக்கைது நடவடிக்கைகள் இருந்தன.
பா.ஜ.க.வின் கயமை முகத்திரையை கிழித்துள்ளது சி.பி.ஐ. நீதிமன்றம். டெல்லி மதுபானக் கைது வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா உள்ளிட்ட 23 பேரையும் விடுதலை செய்துள்ளது சி.பி.ஐ. நீதிமன்றம்.
டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜிதேந்திர சிங் அளித்துள்ள 598 பக்க தீர்ப்பில் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையையே ஏற்க மறுப்பதாகச் சொல்லி இருக்கிறார்.
“இந்த விவகாரத்தில் குற்றவியல் சதி அல்லது நோக்கம் நிரூபிக்கப்படவில்லை. எந்தவொரு நேரடிப்பணப் பரிமாற்றமோ அல்லது சதித்திட்டமோ நிரூபிக்கப்படவில்லை.
பொது ஊழியர்கள் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் தேவை. ஆவணங்கள், சாட்சிகளை நம்பாமல் ஊகங்களை சி.பி.ஐ. நம்பி இருக்கிறது”என்று நீதிபதி சொல்லி இருக்கிறார். ஒரு ஆதாரத்தைக் கூடத் தரவில்லை என்று சொல்லி இருக்கிறார் நீதிபதி.
சி.பி.ஐ.யை கடுமையாக கண்டித்துள்ளது நீதிமன்றம்.“சி.பி.ஐ. தனது ஓட்டைகளை மறைக்க அப்ரூபவர்களை மட்டுமே நம்பியது கவலை அளிக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய தனிநபர் சுதந்திரத்துக்கு எதிரானது.
இந்த விவகாரத்தில் சி.பி.ஐ.யின் விசாரணை அதிகாரிக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

"ஆம் ஆத்மி கட்சியை முடக்க பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தீட்டிய தந்திர வியூகமே இந்த மதுபானக் கொள்ளை வழக்கு”என்று அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லி இருக்கிறார். அதனை உறுதி செய்யும் வகையில் சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துள்ளது.
“எந்த ஆதாரமும் இல்லை என்றால் முன்பு குற்றச்சாட்டு பதிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது ஏன்?” என்று சி.பி.ஐ. நீதிமன்றத்தையே மிரட்டி
இருக்கிறார் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி. பா.ஜ.க.வின் தலைமை அலுவலகத்தில் வைத்து கொடுத்த பேட்டியில் இப்படிச் சொல்லி
இருக்கிறார். இவர்கள் நீதிமன்றத்தையே வெளிப்படையாக மிரட்டுகிறார்கள்.
பழிவாங்குதல் ஒன்றே பா.ஜ.க.வின் பாதை. அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி அது மட்டும்தான்.
சின்னம்மை நோய் தடுப்பு தொடர்பாக விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது பொது சுகாதாரத் துறை
நீண்ட காலம் சேமித்து வைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், செறிவூட்டப்பட்ட அரிசியை ரேஷன் கடைகள் மூலம் விநியோகிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க, இரும்பு சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 ஆகிய நூண்ணூட்ட சத்துக்களுடன் செறிவூட்டப்பட்ட அரிசியை ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கும் திட்டத்தை 2021-ம் ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்தது.
விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு கொள்முதல் செய்யும் அரிசிகள் உணவு தானிய சேமிப்பு கிடங்கில் 2 முதல் 3 ஆண்டுகள் வரை சேமித்து வைக்கப்படுகின்றன.
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் உணவு கிடங்குகளில் 674 லட்சம் டன்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 372 லட்சம் டன்கள் ஒவ்வொரு ஆண்டும் இலவச அரிசி திட்டங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.
இந்நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசியை எவ்வளவு காலம் சேமித்து வைக்க முடியும் என்ற ஆய்வில் காரக்பூர் ஐஐடி ஈடுபட்டது. நமது நாட்டின் தட்ப வெப்ப சூழ்நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசியை நீண்ட காலம் சேமித்து வைத்தால் அது உடைந்து விடுகிறது.
மேலும், அவற்றில் உள்ள நுண்ணூட்ட சத்துக்களின் அளவுகளும் குறைவதும் சத்தில்லாமல் போவதும் ஆய்வில் தெரிய வந்தது.
இதையடுத்து இப்பிரச்சினைகளுக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் தீர்வு காணும் வரை செறிவூட்டப்பட்ட அரிசியை ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்வதை தற்போது நிறுத்தி வைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.





