மூட நம்பிக்கை !
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என்று 2018-ல் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் மீது, உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.
அப்போது, மத நடைமுறை மூடநம்பிக்கையா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க முடியுமா? என்பது குறித்து மத்திய அரசுக்கும் நீதிபதிகளுக்கும் இடையே முக்கிய விவாதம் நடைபெற்றது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், மத நடைமுறைகளை வெறும் மூடநம்பிக்கை என்று முத்திரை குத்த மதச்சார்பற்ற நீதிமன்றங்களுக்கு கல்விசார் தகுதி கிடையாது.
நீதிபதிகள் சட்ட வல்லுநர்களே தவிர, மத வல்லுநர்கள் அல்ல. ஒரு மதத்தில் வழிபாடாக இருப்பது மற்றவருக்கு மூடநம்பிக்கையாகத் தெரியலாம். இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் நீதிமன்றம் இதில் தலையிடுவது ஆபத்தானது.
ஏதாவது மத நடைமுறை சீர்திருத்தப்பட வேண்டும் என்றால், அதைச் சட்டப்பேரவை (Legislature) தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, நீதிமன்றம் அல்ல.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி-அஹ்சானுத்தீன் அமானுல்லா, நீதிமன்றத்தின் அதிகாரத்தை நீங்க மிக எளிதாக குறைத்து மதிப்பிடுகிறீர்கள்.
ஒரு நடைமுறை மூடநம்பிக்கையா இல்லையா என்று நீதித்துறை மறுஆய்வு செய்ய முழு அதிகாரம் உண்டு. அதை எப்படி கையாள்வது என்பதை வேண்டுமானால் சட்டப்பேரவை முடிவு செய்யலாம் என்றனர்.
மேலும், பில்லி சூனியம் போன்றவற்றை மதத்தின் அங்கமாகக் கருதினால், அதை மூடநம்பிக்கை என்று நீதிமன்றம் சொல்லக் கூடாதா? என்றும் கேள்வி எழுப்பினர்.
மனிதப் பலி, நரமாமிசம் உண்பது அல்லது பில்லி சூனியம் போன்ற மனசாட்சியை உலுக்கும் செயல்கள் போன்ற மூட நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிடலாம் .
இதே வேலையாப் போச்சு!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரித் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடுமையான கண்டனங்களுடன் தள்ளுபடி செய்துள்ளது.
கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, மனுதாரரின் நோக்கத்தைக் கடுமையாக விமர்சித்தது.
அரசியல் லாபம் அடைவதையே நோக்கமாகக் கொண்டு, இதுபோன்ற மனுக்களைத் தாக்கல் செய்வதையே ஒரு வேலையாக வைத்துள்ளீர்களா என்றும், நீதிமன்றத்திற்கு இதைவிட முக்கியமான மற்ற பணிகள் இல்லையா என்றும் நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
தொடக்கத்தில், இந்த மனுவை ஐந்து லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மனுதாரர், இனிவரும் காலங்களில் இதுபோன்ற மனுக்களைத் தாக்கல் செய்ய மாட்டேன் என நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அபராதத் தொகையை ஐம்பதாயிரம் ரூபாயாகக் குறைத்தனர்.
மேலும், எதிர்காலத்தில் இது போன்ற மனுக்களைத் தாக்கல் செய்ய மாட்டேன் என்பதை உறுதிப்படுத்தி முறையான உறுதிமொழிப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்






