தமிழ்நாடு வெல்லும்!
தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டதை பட்டாசு வெடித்து கொண்டாடிய முதலமைச்சர். தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கியும் உற்சாகம்.
தொகுதி மறுவரையறைக்கான மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வி. அரசியலமைப்பு சட்டத் திருத்தத்திற்கு மூன்றில் இரு பங்கு ஆதரவு பெற முடியாததால், மோடி அரசுக்கு பெரும் பின்னடைவு.மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டுவந்த ஒரு மசோதா, முதல் முறையாக தோல்வி. தொகுதி மறுவரையறையை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக வாக்களித்ததால், பாஜக அதிர்ச்சி.
அரசியலமைப்பு மீதான தாக்குதலை முறியடிக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி பேட்டி. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ற பெயரில், நாட்டின் அரசியல் கட்டமைப்பை பாஜக மாற்ற முயன்றதாக கண்டனம்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி இன்று பரப்புரை. பொன்னேரி, சோளிங்கர், துறையூர் உள்ளிட்ட தொகுதிகளில் பிரச்சாரம் செய்வதாக காங்கிரஸ் அறிவிப்பு.
தொகுதி மறுசீரமைப்பு, தொடர்பான 3 மசோதாக்களும் மக்களவையில் தோற்கடிக்கப்பட்டன
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்களுக்கும் ஆதரவாக 298 உறுப்பினர்களும், எதிராக 230 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இந்த மசோதாக்கள் வெற்றி பெற மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் ஆதரவாக தேவை. அந்த வகையில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற 326 வாக்குகள் தேவை. அது கிடைக்காத காரணத்தால், மூன்று மசோதாக்களும் தோல்வி அடைந்தன.
இன்றைய விவாதத்தின்போது, நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும், இதற்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள வழிமுறைகளின்படியே தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள அரசு விரும்புகிறது என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
ராகுல் காந்தி பேசும்போது, “மத்திய அரசு கொண்டுவரும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா உண்மையில் மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா அல்ல. மாறாக, தேசத்தின் அரசியல் வரைபடத்தை மாற்றும் முயற்சி” என்று சாடினார்.
தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக விரிவாக விவாதிக்க வேண்டும் என மக்களவையில் வலியுறுத்திய காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், அவசர கதியில் நிறைவேற்றினால் அது கூட்டாட்சியின் கட்டமைப்பைக் சிதைத்துவிடும் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
“மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால், அதனை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறை செய்ய உள்ளீர்கள். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சொல்வது ஒன்றாக இருக்கிறது.
மசோதாவில் இருப்பது வேறாக இருக்கிறது. தொகுதி மறுவரையறை செய்ய அமைக்கப்படும் குழு, உள்துறை அமைச்சர் கூறிய 50% தொகுதிகள் உயர்வை பின்பற்றாவிட்டால் என்ன நடக்கும்?” என்று திமுக எம்பி கனிமொழி மக்களவையில் பேசினார்.
முன்னதாக, கடந்த 2023-ம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.
மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த மக்களவையில் தற்போதுள்ள 543 இடங்களை, 850 ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இதற்கு அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளும் நோக்கிலும், யூனியன் பிரதேசங்களிலும் மகளிர் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் நோக்கிலும், இதற்காக தொகுதி மறுவரையறையை மேற்கொள்ளவும் மூன்று மசோதாக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.
அரசியல் சாசன திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026 ஆகியவற்றை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் அறிமுகம் செய்தார்.
யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026-ஐ உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அறிமுகம் செய்தார்.
இந்த மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இவற்றின் மீது விவாதம் தொடங்கியது.
ஆளும் தரப்பிலும் எதிர்க்கட்சிகள் தரப்பிலும் பலர் தங்கள் கேள்விகளையும் வாதங்களையும் முன்வைத்தனர். இவற்றுக்கு பதில் அளிக்கும் விதமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பேசினர்.
இந்த விவாதம் நேற்று இரவு சுமார் 1 மணி வரை நீடித்தது. இதையடுத்து இன்று காலை மீண்டும் விவாதம் தொடங்கியது.
இன்றைய விவாதத்தில் திமுக எம்பி கனிமொழி, காங்கிரஸ் எம்பி சசி தரூர், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி மிதுன் ரெட்டி, ஐக்கிய ஜனதா தளம் எம்பி ராஜிவ் ரஞ்சன் சிங், திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, தெலுங்கு தேசம் கட்சி எம்பி ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு, சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ், ஷிரோமணி அகாலி தளம் எம்பி ஹர்சிம்ரத் கவுர் பாதல், திமுக எம்பி ராஜா, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, பாஜக எம்பி ஹேமமாலினி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்று பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.
எம்பிக்களில் பலர் மசோதாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பதில் அளித்தனர்.
இறுதியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மிக நீண்ட விளக்கத்தை அளித்தார்.
இதனைத் தொடர்ந்து மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.
மக்களவையின் மொத்த பலம் 543 ஆகும். இதில் 3 இடங்கள் காலியாக உள்ளன. தற்போது 540 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். இதில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 293 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது.
எதிர்க்கட்சிகளிடம் 233 எம்.பி.க்கள் உள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு ஆதரவின் அடிப்படையில் மக்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற 326 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. தற்போதைய சூழலில் பாஜக கூட்டணிக்கு போதிய பெரும்பான்மை இல்லை.
மாநிலங்களவையின் மொத்த பலம் 245. இதில் ஓர் இடம் காலியாக உள்ளது. அவையில் 244 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். இதில் பாஜக தலைமையிலான தே.ஜ. கூட்டணிக்கு 141 எம்.பி.க்கள் உள்ளனர்.
எதிர்க்கட்சிகளிடம் 83 எம்.பி.க்கள் உள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு என்ற வகையில் மசோதாக்களை நிறைவேற்ற 163 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.
மசோதாவை நிறைவேற்றும் அளவுக்கு மாநிலங்களவையிலும் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை.
இந்தச் சூழலில் மூன்று மசோதாக்களும் மக்களவையில் நடந்த வாக்கெடுப்பில் தோவ்வியைடைந்தன.
ஹோர்மூஸ் நீரிணை திறப்பு.. எல்பிஜி சிலிண்டர் விலை குறையுமா?ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் கூட்டாக தாக்குதல் நடத்தியதை அடுத்து, முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமாக விளங்கும் ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது.
இதனால் உலகளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது.
வர்த்தக கப்பல் போக்குவரத்துக்கு ஏதுவாக ஹோர்மூஸ் நீரிணையைத் திறக்க வேண்டுமென இந்தியா உள்ளிட்ட உலகநாடுகள் தொடர்ந்து வலியுறுத்தின.
இதனிடையே, ஈரான் - அமெரிக்கா இடையே இடைக்கால போர் நிறுத்தம் அமலான நிலையில், ஈரானுக்கு ஆதரவு அளித்த லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வந்தது.
இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பத்து நாட்கள் போர் நிறுத்தம் செய்ய இருநாடுகளும் ஒப்புக்கொண்டன.
இந்த சூழலில், இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் வரை ஹோர்மூஸ் நீரிணை முழுவதுமாக திறக்கப்படுவதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அபாஸ் அராக்சி அறிவித்துள்ளார்.
இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மக்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்பட்டதால், இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியா தனது பெரும்பாலான எல்பிஜி தேவைகளுக்கு இறக்குமதியையே சார்ந்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால், விநியோகம் தாமதமானது மட்டுமல்லாமல், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் விநியோக நிறுவனங்கள் குறைந்த கையிருப்புடன் செயல்படவும் நிர்பந்திக்கப்பட்டுள்ளன.
எல்பிஜி சிலிண்டர் விலைகள் குறையுமா? ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்ட உடனேயே எரிவாயு விலைகள் குறையும் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
காரணம், ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டாலும் கூட, எல்பிஜி விநியோகம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்புவது என்பது சற்று கடினம்.
கத்தாரில் உள்ள ராஸ் லஃபான் எரிவாயு உற்பத்தி நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களே இதற்கு முக்கிய காரணமாகும்.
இந்தத் தாக்குதல்களால் கத்தாரின் மொத்த எல்என்ஜி ஏற்றுமதித் திறனில் சுமார் 17 சதவீதம் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சேதமடைந்த உள்கட்டமைப்பைச் சரிசெய்ய 3 முதல் 5 ஆண்டுகள் ஆகக்கூடும். இது ஒவ்வொரு ஆண்டும் உலக சந்தையில் சுமார் 12.8 மில்லியன் டன் எல்என்ஜி பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியா கத்தாரிலிருந்துதான் அதிக அளவு இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்கிறது.
ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படுவது, உலகளாவிய எரிசக்திப் போக்குவரத்தின் மீதான அழுத்தத்தை ஓரளவு குறைக்கக்கூடும்.
கப்பல் வழித்தடங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பலாம். பயண நேரம் குறைவதோடு, காப்பீட்டுச் செலவுகளும் குறைய வாய்ப்புள்ளது.
மாற்று வழிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கூடுதல் செலவும் குறையும்.
இது இந்திய எரிசக்தி நிறுவனங்களின் இறக்குமதிச் செலவுகளைக் குறைத்து, உள்நாட்டு எரிசக்தி விலைகள் மீதான அழுத்தத்தை ஓரளவிற்குத் தணிக்கும். இந்திய இறக்குமதியாளர்களுக்கு மீண்டும் பரந்த அளவிலான தேர்வுகள் கிடைக்கும். வளைகுடா நாடுகளிலிருந்து சிறந்த நிபந்தனைகளில் கொள்முதல் செய்வதற்கான வாய்ப்பும் உருவாகும்.







