காரணம் ஆயிரம்?
தற்போது நடந்து முடிந்திருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
இதை குறித்து சில பத்திரிகைகள் பலவாறு ஊகத்தை வைத்து பல வதந்திகளை பரப்பி வருகின்றன.
இப்படி வாக்குகள் அதிகரித்திருப்பதற்கு என்ன காரணம்?
வாக்கு சதவீதம் அதிகரிப்பதை வைத்து தேர்தல் முடிவுகளைக் கணிக்க முடியுமா?
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
இதற்கு முன்பாக, 2011ஆம் ஆண்டின் சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிகபட்சமாக 78.29 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
ஆகவே இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகரித்திருக்கும் வாக்கு சதவீதத்தை வைத்து, தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கலாம் என்ற விவாதங்கள் எழுந்திருக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, வாக்கு சதவீதம் வெகுவாக அதிகரித்தால் அது அப்போதைய ஆளும் கட்சிக்கு பாதகமாக இருக்கும் என்பது பொதுவான புரிதலாக இருக்கிறது.
ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து நடந்த பொதுத் தேர்தல்களில் வாக்கு சதவீதங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், வெவ்வேறு விதமான காட்சிகள் காணக் கிடைக்கின்றன.
தமிழ்நாட்டில் முதன்முதலில் வாக்கு சதவீதம் வெகுவாக அதிகரித்த தேர்தலில், அது எல்லோரும் கருதுவதைப் போலவே ஆளும் கட்சிக்கு பாதகமாகவே இருந்தது.
1967ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் 76.57ஆக இருந்தது. இது முந்தைய தேர்தலில் வாக்களித்தவர்களின் விகிதத்தைவிட சுமார் ஆறு சதவீதம் அதிகம்.
அந்தத் தேர்தலில், இந்தியா விடுதலையடைந்ததில் இருந்து ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வீழ்த்தப்பட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்தது.
எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் துவங்கியபோது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, அந்தக் கட்சி சந்தித்த முதல் சட்டப்பேரவை பொதுத் தேர்தலிலேயே வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது.
ஆனால், அந்த முறை வாக்கு சதவீதம் மிகக் குறைவாக, அதாவது வெறும் 61.58 சதவீதமாகவே இருந்தது.
1984ல் வாக்கு சதவீதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து 73.47 சதவீதமாக இருந்தாலும், ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை.
2006ஆம் ஆண்டில்தான் வாக்களித்தோர் சதவீதம் 70ஐ (70.82% ) தொட்டது.
இதற்குப் பிறகு, 2011ஆம் ஆண்டில் வாக்குப் பதிவு சதவீதம் உச்சத்தைத் தொட்டு 78.01% சதவீதமாக இருந்தது.
சில மாதங்களுக்கு முன்பாக நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தால், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம், ஒரே வாக்காளரின் பெயர் இரு இடங்களில் இருப்பதைச் சரிசெய்வது போன்றவை நடந்திருப்பதால் வாக்கு சதவீதம் ஓரளவுக்கு அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்குப் பிறகு நடக்கும் தேர்தல் என்பதால் வாக்குப் பதிவு சதவீதம் அதிகமாக இருக்கிறது.
வாக்காளர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால், எல்லாத் தேர்தல்களுக்கும் இடையில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைப் போலத்தான் இப்போதும் அதிகரித்திருக்கிறது.
பொதுவாக ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் முந்தைய தேர்தலோடு ஒப்பிட்டால் வாக்களிப்போர் எண்ணிக்கை 20 லட்சம் அளவுக்கு உயரும்.
இந்த முறையும் அதேபோல்தான் உயர்ந்திருக்கிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிட்டால், சுமார் 30 லட்சம் என்ற எண்ணிக்கையில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
இதனை 234 தொகுதிகளுக்கும் பிரித்தளித்தால், ஒரு தொகுதிக்கு, 12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வாக்குகள் வரை அதிகரிக்கலாம்.
இறுதி வாக்காளர் எண்ணிக்கை வரும்போது இந்த எண்ணிக்கை எவ்வளவு என்பது துல்லியமாக தெரியவரும். ஆனால், தோராயமாக இதுதான்.
நான்கு முனைப் போட்டி தீவிரமாக இருக்கும் ஒரு தேர்தலில் ஒவ்வொரு கட்சியுமே தமது கட்சி வாக்காளர்களை வாக்குச் சாவடிக்குக் கொண்டுவர தீவிரம் காட்டுவார்கள். அதனாலும் இது நடந்திருக்கும்.
தேர்தல் ஆணைய தரவுகளின்படி ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலிலும் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் அதிகரித்தே வந்திருக்கிறது.
2011-ல் 3.67 கோடியாக இருந்த வாக்களித்தோர் எண்ணிக்கை, 2016-ல் 4.29 கோடியாக உயர்ந்தது. இது 2021ல் 4.58 கோடியாக (தபால் வாக்குகள் உட்பட) அதிகரித்தது.
இந்த முறை அந்த எண்ணிக்கை தோராயமாக 4.88 கோடியைத் தொட்டிருக்கிறது.
இப்படி அதிகரித்த வாக்குகள் யாருக்கு விழுந்திருக்கும்?
இது ஒரு சிக்கலான கணக்கு. வாக்காளர்களை வயதுவாரியாக பார்க்கும்போது, எந்த வயதைச் சேர்ந்த வாக்காளர்களின் சதவீதம் அதிகரித்திருக்கிறது என்பது தெரிந்தால்தான் இதனைப் புரிந்துகொள்ள முடியும்.
18 முதல் 29வரையிலான வயதுடைய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தால், அதில் பெரும்பகுதி தமிழக வெற்றிக் கழகத்திற்குச் சென்றிருக்கலாம். அதே நேரம், 30 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தால், அது அ.தி.மு.க., தி.மு.கவுக்கே விழுந்திருக்கும்.
பொதுவாக வாக்கு சதவீதம் அதிகரிக்கும்போது, அது ஆளும் கட்சிக்கு எதிரானதாகவே இருக்கும் என்ற கணிப்பு இருக்கிறது.
நான்கு முனைப் போட்டி தீவிரமாக இருக்கும் ஒரு தேர்தலில், ஆளும் கட்சி தவிர்த்த மற்ற மூன்று முனைகளும் தேர்தல் களத்தில் தீவிரமாக இருந்தால், பலன் யாருக்கு என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லைவாக்கு சதவீதம் அதிகரித்தால், அது பொதுவாக ஆளும்கட்சிக்கு பாதகமாக இருக்கும் என பொதுவாகக் கருதுகிறார்கள்.
ஆனால், அது அப்படியல்ல. இருமுனைப் போட்டி நிலவும்போது வாக்கு சதவீதம் அதிகரித்தால், அது ஒருவேளை ஆளும் கட்சிக்கு பாதகமாக இருக்கலாம்.
ஆனால், மும்முனைப் போட்டியோ, இப்போதிருப்பதைப் போல நான்கு முனைப் போட்டியோ நிலவினால், அது ஆளும் கட்சிக்கே சாதகமாக இருக்கும்.
2016ஆம் ஆண்டில் மூன்று முனைப் போட்டி நிலவியது. அப்போது சுமார் 74 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகின. ஆனால், அது ஆளும் கட்சிக்கே சாதகமாக இருந்தது.
காரணம், மும்முனைப் போட்டி நிலவும் போது, கடுமையான போட்டி என்பது 2வது, மூன்றாவது இடங்களில் உள்ள கட்சிகளுக்கு இடையேதான் இருக்கும்.




