தமிழ்நாடு எதிர்கொள்ளும் பாதிப்புகள் ?

தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தம்...

கருப்பு கொடி உயரட்டும்!

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 543 உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது.

1971ஆம் ஆண்டு 55 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை தற்போது 140 கோடியாக உயர்ந்த நிலையில், அதற்கேற்ப எம்பிக்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்திற்கு, மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


இதற்கு முன் கடந்த 2002ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்தில், 2026க்குப் பிறகு நடக்கும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆனால், தற்போதைய மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கொண்டு, தொகுதிகளை சீரமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது

அதற்கேற்ற வகையில் தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது.


இதற்காக நாளை மற்றும் நாளை மறுதினம் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறுகிறது.


தொகுதி மறுவரையறை சட்டத் திருத்த வரைவு மசோதாவின் நகல் வெளியான நிலையில், அதில் மாநில மக்களவை எம்பிக்களின் எண்ணிக்கை, 543ல் இருந்து 850 ஆகவும், யூனியன் பிரதேச எம்பிக்களின் எண்ணிக்கை 20ல் இருந்து 35ஆகவும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மகளிர் இடஒதுக்கீட்டை 2029 மக்களவைத் தேர்தலிலேயே அமல்படுத்த முடிவெடுத்துள்ள ஒன்றிய அரசு, தொகுதி மறுவரையறை மசோதாவுடனேயே, மகளிர் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவையும் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.


ஒன்றிய அரசின் புதிய தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவின் படி 2011 அல்லது அதற்கு முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

இதனால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களை காட்டிலும், மக்கள் தொகையை முறையாக கட்டுப்படுத்தாத உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களின் பலம் நாடாளுமன்றத்தில் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.


உதாரணமாக தமிழ்நாட்டில் தற்போதைய மக்களவை எம்பிக்களின் எண்ணிக்கை 39ஆக உள்ள நிலையில், புதிய தொகுதி மறுவரையறை மசோதா மூலம் உறுப்பினர் எண்ணிக்கை 50ஆக வரை உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது.


அதேநேரம் உத்தர பிரதேசத்தில் தற்போது உள்ள 80 மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 143 வரை உயரக்கூடும் என்பதால், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டுக்கான பிரதிநிதித்துவம் குறையும் எனச் சொல்லப்படுகிறது.

புதிய தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், சட்டத் திருத்தத்தை கைவிடா விட்டால் பழைய திமுகவை காண நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


ஆனால் தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இருக்காது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் தலைவர்கள் பேசுவதை ஆதரித்து பாஜக கார்ரைப் போலவே தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இடையே, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள திமுக எம்பிக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.


இந்தியாவில் ஐந்து மாநிலங்கள் தேர்தல் பரபரப்பில் இருக்கும் நிலையில் ஏன் ஒன்றிய அரசு அவசரமாக முக்கிய மசோதாக்களை கொண்டு வருகிறது எனக் கேள்வி எழுகிறது.


வடமாநிலங்களில் அதிக தொகுதிகளை உருவாக்கி தென்மாநிலங்களின் உதவி இன்றி மத்தியில் ஆட்சியை பிடிக்கும் முயற்சி தான் இந்த தொகுதி மறுவரையறை என்று முதல்வர் ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


மேலும் தமிழகத்தில் கடும் போராட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை செய்துள்ளார்.


தொகுதி மறுவரையறை விவகாரத்தில், இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழ்நாடு தனது கடும் எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்து, மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது.

அன்று 1960-களில் 'இந்தித் திணிப்பு'க்கு எதிராகத் தமிழகம் முன்னெடுத்த அறப்போராட்டம் எப்படி இந்திய அரசியலமைப்பின் போக்கையே மாற்றியதோ, அதேபோன்றதொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டக் களத்தைத் தமிழ்நாடு இப்போது மீண்டும் உருவாக்கியுள்ளது.


மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கொள்கையைச் செவ்வனே செயல்படுத்தி, கல்வியிலும் சுகாதாரத்திலும் முன்னேறிய தென் மாநிலங்கள், இப்போது அதே மக்கள் தொகை குறைவு என்ற காரணத்திற்காகத் தங்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தை (நாடாளுமன்ற இடங்களை) இழப்பதா என்ற நியாயமான கேள்வியைத் தமிழ்நாடு முன்வைக்கிறது.


"தண்டனையா அல்லது வெகுமதியா?" என்ற தார்மீகக் கோபத்துடன், மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைக் காக்கத் தமிழகம் முன்னெடுக்கும் இந்தப் போராட்டம், ஒட்டுமொத்த தென்னிந்திய மாநிலங்களின் உரிமைக் குரலாக மாறியுள்ளது.


டெல்லியின் அதிகாரப் பரவலாக்கத்திற்கு எதிராகத் தமிழ்நாடு காட்டும் இந்தத் துணிச்சல், மீண்டும் ஒருமுறை இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிக்கும் சக்தியாகத் தமிழ் மண் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

கருப்பு கொடி பறக்கட்டும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை