மேகேதாட்டு.......
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அண்மையில் பேசுகையில், “மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கைஒன்றிய அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும்.
ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்தவுடன் பூமி பூஜை நடத்தப்படும். இதனை தமிழக அரசு எதிர்க்க எந்த உரிமையும் இல்லை” எனக் கூறினார்.
தமிழகத்துக்கு எதிர்க்கும் உரிமை இல்லை என்று டி.கே.சிவகுமார் கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஜனநாயகத்திலும் கூட்டாட்சியிலும் இத்தகைய அணுகுமுறை விரும்பத்தக்கதல்ல.மேகேதாட்டு கர்நாடக மக்களுக்கு நியாயமான தேவையாக இருக்கலாம். ஆனால் அந்தத் தேவையை முன்னிறுத்தி, காவிரி பாயும் பிற மாநிலங்களின் நியாயமான உரிமைகளையும் நிராகரிக்க முடியாது.
தமிழ்நாட்டின் காவிரி உரிமைகள் என்பது கர்நாடகா வழங்கிய கருணையோ அல்லது அரசியல் சலுகையோ அல்ல.
தமிழ்நாட்டின் உரிமைகள் என்பது உச்ச நீதிமன்றத்தாலும் சட்டத்தாலும் உறுதி செய்யப்பட்ட உரிமைகள். இதனை டி.கே.சிவகுமார் போன்றவர்கள் மறந்துவிடக் கூடாது.
கர்நாடகாவில் காவிரி ஆறு உற்பத்தி ஆவதாலே, அதன் முழுமையான உரிமையை அம்மாநிலம் மட்டும் கோர முடியாது.
அப்படி ஒவ்வொரு மாநிலமும் பேச ஆரம்பித்தால் இந்தியாவில் மாநிலங்களிடையேயான ஒற்றுமை என்ன ஆகும்? டி.கே.சிவகுமாரின் கருத்து கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையை கேள்விக்குள்ளாக்குவதாக உள்ளது. உச்ச நீதிமன்றம் இதுவரை மேகேதாட்டு திட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை.
தமிழ்நாட்டின் மனுவை நிராகரித்தபோது, திட்டம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், அதனை எதிர்ப்பது தற்போதைக்கு உகந்ததல்ல என தெரிவித்தது.
இதனை திட்டத்திற்கு முழுமையான அனுமதி கிடைத்துவிட்டது என சொல்வது சரியானதல்ல. மேகேதாட்டு திட்டம் இன்னும் தொழில்நுட்ப, சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளுக்காக காத்திருக்கிறது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் திட்டத்தின் பல அம்சங்கள் இன்னும் ஆய்வில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. எனவே, இந்தத் திட்டம் இன்னும் பரிசீலனை நிலையில் உள்ளது என்பதே உண்மை.
இந்த திட்டம் தொடர்பாக தமிழகத்தின் மிகப்பெரிய கவலை நீரின் அளவைப் பற்றியது மட்டும் அல்ல.
அது நீர் திறக்கப்படும் காலத்தைப் பற்றியது. காவிரி டெல்டா விவசாயம் ஒரு கால அட்டவணையைச் சார்ந்துள்ளது. குறுவை, சம்பா, தாளடி போன்ற சாகுபடிகள் குறிப்பிட்ட மாதங்களில் நீர் கிடைக்கும்போது மட்டுமே வெற்றிகரமாக நடைபெற முடியும்.
விவசாயிக்கு ஆண்டு முடிவில் மொத்தமாக எவ்வளவு நீர் கிடைத்தது என்பது முக்கியமல்ல. பயிர் நட்ட நேரத்தில் நீர் கிடைத்ததா என்பதே முக்கியம். நீர் வெளியீட்டில் சில வாரங்கள் தாமதம் ஏற்பட்டால்கூட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படலாம்.
கடந்த பல ஆண்டுகளில் காவிரி நீர் தாமதமாக திறக்கப்பட்ட ஒவ்வொரு முறையும் அதன் தாக்கத்தை முதலில் சந்தித்தவர்கள் டெல்டா விவசாயிகள்தான். விதைப்பு தாமதமானது, சாகுபடி பரப்பளவு குறைந்தது, விளைச்சல் பாதிக்கப்பட்டது, விவசாயக் கடன்கள் அதிகரித்தன.
குறுவை சாகுபடி முற்றிலுமாக கைவிடப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. விவசாயிகள் நீதிமன்ற தீர்ப்புகளுக்காகவும், நீர் திறப்புக்காகவும் காத்திருந்த சூழல்கள் தமிழ்நாட்டின் நினைவில் இன்னும் பசுமையாக உள்ளன.
டெல்டா விவசாயிகள் சந்தித்த பொருளாதார இழப்புகள் மிகப் பெரியவை. பயிர் சேதங்கள், கடன் சுமைகள், வாழ்வாதார நெருக்கடிகள் மற்றும் சமூக பாதிப்புகள் அனைத்தும் பதிவாகியுள்ளன.
இந்த வரலாற்றுப் பின்னணியில்தான் தமிழ்நாடு இன்று கூடுதல் நீர்த்தேக்கத் திட்டங்களை எச்சரிக்கையுடன் அணுகுகிறது.
ஒரு பெரிய நீர்த்தேக்கம் உருவாக்கப்படும்போது அது வெறும் நீரை சேமிப்பதற்கான வசதியாக மட்டுமல்லாமல், நீரின் ஓட்டத்தை கட்டுப்படுத்தும் அதிகாரமாகவும் மாறுகிறது. அந்த அதிகாரம் இன்று எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதுமட்டுமல்ல, எதிர்காலத்தில் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதையும் தமிழ்நாடு கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
மேலும், மேகேதாட்டு திட்டம் அமைக்கப்பட உள்ள பகுதி சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். காடுகள், வனவிலங்குகள், உயிரினப் பன்மை மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியில் இத்தகைய பெரிய கட்டுமானம் மேற்கொள்ளப்படும்போது அதன் நீண்டகால சுற்றுச்சூழல் விளைவுகளும் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் ஒன்றியஅரசின் பங்கும் மிக முக்கியமானது. மத்திய அரசு ஒரு நடுநிலை அமைப்பாக செயல்பட்டு, எந்த மாநிலத்தின் அரசியல் அழுத்தத்திற்கும் இடமளிக்காமல், தொழில்நுட்ப உண்மைகள் மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளின் அடிப்படையில் மட்டுமே முடிவெடுக்க வேண்டும். அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் கேட்கப்பட வேண்டும்.தமிழ்நாட்டின் நியாயமான அச்சங்கள் முழுமையாக பரிசீலிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் காவிரி தீர்ப்பாயமும் உச்ச நீதிமன்றமும் வழங்கிய உரிமைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது.
அதற்கான உறுதியான சட்ட,தொழில்நுட்ப மற்றும் நிர்வாக உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும் என தமிழகம் எதிர்ப்பார்க்கிறது. அது கிடைக்கும் வரை தமிழகம் தனது எதிர்ப்பைத் தொடர்வது நியாயமானதும், சட்டபூர்வமானதும் ஆகும்.
இந்த சூழ்நிலையில் ஒன்றிய அரசு மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
எந்த ஒரு மாநிலத்தின் அரசியல் அழுத்தத்திற்கும் இடமளிக்காமல், தொழில்நுட்ப மற்றும் சட்ட அடிப்படைகளின் பேரில் மட்டுமே முடிவெடுக்க வேண்டும். “நதி எங்கள் மாநிலத்தில் உருவாகிறது; எனவே எங்களுக்கே முழு உரிமை” என்ற கொள்கை இந்தியாவின் நீர்வள நிர்வாகத்தை குழப்பத்திற்கு உள்ளாக்கும்.
அதனால் இந்த விவகாரம் காவிரியைத் தாண்டி, இந்திய கூட்டாட்சியின் எதிர்காலத்தையும் கேள்விக்கு உள்ளாக்கும்.
– எஸ்.வி.ரமணி
