பித்தலாட்டம்-3

🔹கர்நாடகாவைச் சேர்ந்தவரை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிப்பதா? காவிரி பிரச்சினைக்கு எப்படி தீர்வு கிடைக்கும் தமிழ்நாட்டில் தவெகவில் வேறு தமிழர்களே கிடைக்கவில்லையா?என த.வெ.க. அரசுக்கு தலைவர்கள் கண்டனம்.

🔹மாணவர்களுக்கு சாதி விவரம் அடங்கிய அடையாள அட்டை வழங்கப்படும் என செங்கோட்டையன் பேட்டி. சாதி அடையாளத்தை ஊக்குவிக்கும் கருத்து என தங்கம் தென்னரசு கண்டனம்.
🔹சரக்கு கப்பல்கள் மீதான ஈரானின் டிரோன் தாக்குதலுக்கு அமெரிக்கா பதில் தாக்குதல். தங்கள் ஏவுகணைத் தளங்கள் மீதான தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி.
வெனிசுலா நிலநடுக்கம்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 920ஆக உயர்வு.
பரிசு பொருளுடன் காத்திருந்து... காத்திருந்து... காலங்கள் போகுதடி தவெகவில் சேர பனையூர் கேட்டில் தவம் கிடக்கும் விஜயபாஸ்கர்,
நாள் பயணமாக இந்தியா வருகிறார் ஜப்பான் பிரதமர் டகாய்ச்சி.
ராமர் கோயில் காணிக்கை முறைகேடு உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த காங். கோரிக்கை.
அமைச்சருக்கும்-அமைச்சருக்கும் சண்டை மாட்டிக்கிட்டு முழிக்கும் அரசு அதிகாரிகள்: மேடையிலேயே ஜெகதீஸ்வரி-கீர்த்தனா மோதல்,டோஸ் கலெக்டர் சமாதானம்.









 கர்நாடகா பிடிவாதமும்! 

நடுவர் மன்ற கடிவாளமும்!

கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு, காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியே ஆவோம் என்ற முடிவோடு செயல்பட்டு வருகிறது.‘கர்நாடக அரசு மேகதாது அணையைக் கட்டக் கூடாது'என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். 

இதனை தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றி உள்ளன.

இது தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவர்கள் ஒரு திருத்தம் கொடுத்தார்கள்.“கடந்த 4.3.2026 அன்று அப்போது முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழ்நாடு நீர்வளத்துறை அரசு செயலாளர், மத்திய ஜல்சக்தித் துறை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்

. 'கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் பிரச்சினை புதிய சிக்கல் என்பதால், நதிநீர் தாவா சட்டம் 1956 இன் படி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்' என்று கோரி இருந்தார். ஆகவே இந்த அரசு இப்போது கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தில் அந்தக் கருத்தையும் சேர்க்க வேண்டும்.

 புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கருத்தையும் இந்த தீர்மானத்தில் சேர்க்க வேண்டும்”என்று கேட்டுக் கொண்டார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி.

“எதிர்க்கட்சித் தலைவரால் அளிக்கப்பட்ட கருத்தை தீர்மானத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்”என்று முதலமைச்சர் விஜய் அவர்களும் சொல்ல அதுவும் தீர்மானத்தில் சேர்க்கப்பட்டது. 

முதுமாணி தீர்மானம்,திருத்தியவாறு பேரவையின் முடிவுக்கு விடப்படுகிறது'என்று பேரவைத் தலைவர் அறிவித்தார். குரல் வாக்கெடுப்பு மூலமாக தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. அனைத்துக் கட்சிகளும் இதனை ஏற்றுக் கொண்டார்கள்.

கர்நாடக அரசு மேகதாது அணையைக் கட்டினால் தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் என்பதை அனைவரும் ஒற்றுமையாகக் காட்டினார்கள்.

“மேகதாது அணை விவகாரம்.. ஏற்கப்பட்ட எதிர்க்கட்சி திருத்தம்.. தமிழ்நாடு ஒற்றுமையை காட்ட வேண்டும்”- முரசொலி!

மேகதாது அணை கட்டுவோம் என கர்நாடக அரசு முனைப்புக் காட்டும் போதெல்லாம் தமிழ்நாடு அதனை கடுமையாக எதிர்த்தே வந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 5, 2015 ஆம் ஆண்டு மார்ச் 27, 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 6, 2022 ஆம் ஆண்டு மார்ச் 21 - ஆகிய நாட்களில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 கடந்த ஜூன் 19 ஆம் தேதியன்று நிறை வேற்றியது ஐந்தாவது முறையாகும். தமிழ்நாடு ஒற்றுமை உணர்வோடு மேகதாது அணையை எதிர்க்கிறது என்பதை மெய்ப்பித்து வந்துள்ளோம். அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் நடந்து கொள்ளக் கூடாது.

எதிர்க்கட்சித் தலைவரால் திருத்தம் கொடுக்கப்பட்டு, முதலமைச்சரால் ஏற்கப்பட்டு, அனைத்துக் கட்சிகளாலும் ஆதரித்து வாக்களிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விமர்சிப்பது தமிழ்நாட்டின் ஒற்றுமை உணர்வைச் சிதைப்பது ஆகும். 

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு ஒற்றுமையாக இல்லை என்று கர்நாடக அரசும், ஒன்றிய அரசும் நினைக்க இது வழிவகை செய்யும்.

*காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

*கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் ஒன்றிய அரசு அளிக்கக் கூடாது.

*கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோகூடாது என்று மத்திய நீர்வள குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது.

*கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் பிரச்சினை புதிய சிக்கல் என்பதால், நதிநீர் தாவா சட்டம் 1956 இன் படி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தெளிவாக இருக்கிறது. இதனை விமர்சிப்பது கர்நாடக அரசுக்கே சாதகமாக முடியும்.

காவிரி உரிமை பற்றியோ, காவிரி நடுவர் மன்றம் நமக்கு அளித்துள்ள நீர் பகிர்வு குறித்தோ புதிய நடுவர் மன்றம் பரிசீலிக்கப் போவது இல்லை. மேகதாது அணையைப் பற்றியது மட்டுமே இது. தண்ணீர் வழங்குவது குறித்த பிரச்சினை அல்ல இது. கர்நாடக அரசு இன்று அவசரம் காட்டி வருகிறதே, அதனை உடனடியாக நாம் தடுத்தாக வேண்டும்.

“மேகதாது அணை விவகாரம்.. ஏற்கப்பட்ட எதிர்க்கட்சி திருத்தம்.. தமிழ்நாடு ஒற்றுமையை காட்ட வேண்டும்”- முரசொலி!

காவிரி நடுவர் நீதி மன்றம் மூலமாகத்தான் நமக்கான உரிமையை கடந்த காலத்தில் பெற்றோம். 1991 ஜூன், 25இல் காவிரி நடுவர் மன்றமானது கர்நாடகா ஆண்டுதோறும் தமிழ்நாட்டுக்கு, 205 டி.எம்.சி., நீர்வழங்க வேண்டும் என இடைக்கால தீர்ப்பு கூறியது. 2007 பிப்ரவரி 5 இல் இறுதி தீர்ப்பு வழங்கியது. எனவே நடுவர் மன்றம் என்பது மிகமிக அவசியமானது ஆகும்.

2015 ஆம் ஆண்டு மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடக அரசு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. 2018 ஆண்டு மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தாக்கல் செய்த திட்ட வரைவு அறிக்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது. அப்போது தமிழ்நாடு கடுமையாக எதிர்த்தது. தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட முடியாது என காவிரி மேலாண்மை வாரியம் விளக்கம் அளித்தது. எனவே காவிரி மேலாண்மை வாரியத்தின் செயல்பாடும் மிக மிக அவசியமானதாக அமைந்துள்ளது.

ஒன்றிய அரசானது இரண்டு மாநிலத்தையும் பகைத்துக் கொள்ளாத முடிவை எடுக்க வேண்டும் என்று நினைக்கும். அந்த நேரத்தில் நடுவர் மன்றம்போன்ற அமைப்புகள்தான் நடுநிலையான தீர்ப்பை வழங்க முடியும். எனவே, நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற முடிவை விமர்சிக்கும் கட்சிகள் இதனைப் புரிந்து கொண்டு, எதிர் வாதங்கள் வைப்பதை தவிர்க்கலாம்.

விஜய்யின் மூன்றாவது பித்தலாட்டம்!வாக்குறுதியை நிறைவேற்றுகிறேன் என்று கணக்குக் காட்டுவதற்காக முதலமைச்சர் விஜய் செய்யும் அறிவிப்புகள் பித்தலாட்டமானதாக இருக்கின்றன.
முதல் பித்தலாட்டமான அறிவிப்பு, 200 யூனிட்டுகள் வரை மின்சாரம் இலவசம்.

« இரண்டாவது பித்தலாட்டமான அறிவிப்பு, பயிர்க்கடன் ரத்து.

« மூன்றாவது பித்தலாட்டம், பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் திட்டம் – இப்படி வரிசையாக அறிவிக்கும் அத்தனை திட்டங்களும் அவர் கொடுத்த வாக்குறுதிகளை அவரே மீறுவதாக அமைந்துள்ளன.

இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் வரை மின்சாரத்துக்கு கட்டணமில்லை என்று அரசாணை வெளியிட்டார் விஜய். 


இதுதான் அவரது முதல் கையெழுத்து ஆகும். ஆனால் தேர்தலுக்கு முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தகுதி வாய்ந்த வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது.

 தேர்தல் அறிக்கையில் சொன்னது வேறு. வெற்றி பெற்றதற்குப் பிறகு செய்தது வேறு.

‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம்’ என்பதுதான் அவரது வாக்குறுதி ஆகும்.

 500 யூனிட்டுக்குள், 500 யூனிட்டுக்கு மேல் என்று முதலமைச்சர் விஜய் தனது அறிக்கையில் சொல்லவில்லை. இப்போது செய்திருப்பது முதல் பித்தலாட்டம் ஆகும்.

அடுத்ததாக ஒட்டுமொத்த உழவர்கள் தலையில் மிளகாய் அரைத்தார் விஜய். ‘’5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

 5 ஏக்கருக்கு அதிகமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு அவர்கள் வைத்திருக்கும் பயிர்க்கடனில் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும்” என்று விஜய் அள்ளி விட்டார்.

முதலமைச்சர் ஆனதும் விஜய் போட்டுள்ள உத்தரவு இதற்கு மாறானது ஆகும். கூட்டுறவு வங்கிகளில் 50 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

 அதற்கு மேல் இருந்தால் அந்தக் கடனில் 50 விழுக்காடு வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார் விஜய். இது ஒட்டுமொத்த உழவர்களை ஏமாற்றியது.

 அவர்கள் கடுமையாக போராடத் தொடங்கியதும், 75 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி என்று அறிவித்துள்ளார். இதுவும் அவரது வாக்குறுதியை அமல்படுத்துவது ஆகாது. இது முதலமைச்சர் விஜய்யின் இரண்டாவது பித்தலாட்டம் ஆகும்.


முதலில் பொதுமக்களை ஏமாற்றினார் விஜய். அடுத்ததாக உழவர்களை ஏய்த்தார். அடுத்து மூன்றாவதாகச் செய்துள்ள பித்தலாட்டம், பிறக்கப் போகும் குழந்தைகளை ஏமாற்றுவது ஆகும்.


தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார் விஜய். ஆனால், தற்போது, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும் தங்க மோதிரம் வழங்கப்படும் என அரசாணை வெளியிட்டுள்ளது த.வெ.க. அரசு.

‘தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் வரவேற்கும் விதமாக தங்க மோதிரம் வழங்கப்படும்’ என தேர்தல் பிரச்சாரத்தில் விஜய் பேசிய வீடியோ ஆதாரம் இருக்கிறது.

‘’தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். உலகத்துல மனுஷனா பிறக்கிறதே பெரிய விஷயம். அதுவும் நம்ம தாய்நாடான தமிழ்நாட்டுல பிறக்கிறது மிகப்பெரிய வரம். 

அப்படி நம்ம தமிழ்நாட்டுல பிறக்கிற குழந்தைகளை வரவேற்கிற திட்டம் தான் ‘தாய்மாமன் தங்கமோதிரம்’ திட்டம்.

 தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசாங்கத்தின் ஆசீர்வாதமாக ஒரு தங்கமோதிரம் வழங்கப்படும். கூடவே ஒரு ‘பேபி வெல்கம் கிட்டும்’ வழங்கப்படும்.” – இதுதான் விஜய் பயன்படுத்திய வார்த்தைகள் ஆகும்.

ஆனால் இப்போது அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் என்று சுருக்கிவிட்டார் விஜய். 

தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் என்றும் விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது. முன்பு எத்தனை கிராம் என்று சொல்லவில்லை. இப்போது ஒரு கிராம் என்று சொல்லப்பட்டுள்ளது.

200 யூனிட் மின்சாரத்திலும் பயிர்க்கடன் ரத்திலும் செய்யப்பட்ட அதே பித்தலாட்டம்தான் இதிலும் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பரப்புரையின் போது என்ன சொன்னார் விஜய்? ‘மற்றவர்களைப் போல வாக்குறுதிகளை நான் அள்ளிவிட மாட்டேன். நிறைவேற்றக் கூடிய சாத்தியமான வாக்குறுதிகளைத்தான் சொல்வேன்’ என்றார்.

 இப்போது ஏன் அவரால் செய்ய முடியவில்லை? ஏன் சாத்தியம் ஆகவில்லை? அவர் சொன்னவை அனைத்தும் கப்சாக்கள். வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதியாகக் கொடுத்தார்.

இன்னும் கேட்டால், ‘நீங்கதான் கஜானாவுக்குப் பணம் வரும் வழிகளை எல்லாம் அடைத்து வைத்துவிட்டீர்களே’ என்பார். தமிழ்நாடு இரண்டாவது பொருளாதார மாநிலமாக வளர்ந்து விட்டது என்ற சாதனையை தனது நெற்றியில் ஒட்டிக் கொள்வதும் அவர்தான்.

கடந்த கால ஆட்சியின் சாதனைகள் தொடரும் என்பார். ஆனால் ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்களின் பயனை மறைப்பார்.

‘திராவிட மாடல்’ ஆட்சியில், தனது கனவுத் திட்டமாக ‘நான் முதல்வன்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள்.

 இதையே உல்டா பண்ணி செயல்படுத்தத் தொடங்கி இருக்கிறார் விஜய். பிரதமர் மோடியைச் சந்தித்த போது, ‘’ஆண்டுதோறும் ஐந்து இலட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பணியிடைப் பயிற்சிகள் (Internships) மற்றும் தொழில்துறையுடன் இணைந்த திறன் பயிற்சிகளை வழங்கும்

 “இளைஞர் திறன் மற்றும் வேலைவாய்ப்பு இயக்கத்தை” (Youth Skill and Employment Mission) செயல்படுத்த விழைகிறேன்” என்று சொல்லி இருக்கிறார் விஜய். அதே திட்டம்தான், பெயர்தான் வேறு. கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இதைச் செய்துள்ளார்.

அதைப் பற்றி எல்லாம் அவர் கவலைப்படும் ரகம் அல்ல. கோட், சூட் போட்டுக் கொண்டு பித்தலாட்டம் செய்தால் யாரும் கேட்க மாட்டார்கள். 

கதை சொல்லி, சைகை காட்டி ‘ரீல்ஸ்’ விட்டு மக்களைத் திசை திருப்பி நாட்களை கடத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறார் விஜய்...

ஒரு லட்சம் பேர்கள் வேலையிழப்பு!

உலகளவில் ஒரு லட்சம் வேலைகளை குறைக்கவும், ஜெர்மனியில் 4 தொழிற்சாலைமூடவும் போக்ஸ்வாகன் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.


ஜெர்மனியை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் போக்ஸ்வாகன். 1937 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனவத்தின் கார்கள் உலகளவில் மிக பிரபலம். பல நாடுகளில் இந்த நிறுவனத்திற்கு தொழிற்சாலைகள் உள்ளன. பல லட்சம் பேர் இங்கு பணியாற்றி வருகின்றனர்.


90 ஆண்டு கால வரலாறு உடைய இந்த நிறுவனத்தில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், மின்னணு வாகனங்களின் தேவை, அமெரிக்காவின் வரிவிதிப்பு, சீன நிறுவனங்களின் ஆதிக்கம் ஆகும்.

இதனால், உலகளவில் ஒரு லட்சம் பணியிடங்களை நீக்கவும், ஜெர்மனியில் நான்கு தொழிற்சாலைகளை மூடவும் போக்ஸ்வாகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


. மேலும் அடுத்த ஐந்தாண்டுகளில் முதலீட்டை 15 சதவீதம் குறைத்து ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 464 கோடியாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 


மேலும் வாகன உதிரிபாகங்கள் மற்றும் பயணிகள் கார் விற்பனை துறையை தனித்தனியாக பிரிக்கப்பட உள்ளதாக ஜெர்மன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.



சீன நிறுவனம் ஆதிக்கம்

போக்ஸ்வாகன் நிறுவனம் சீனாவில் ஆதிக்கம் செலுத்திவந்தது. அதன் கார்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த 2024 ம் ஆண்டு முதல் சீனாவின் பிஓய்டி நிறுவனத்தின் வாகனங்கள் அதிகமாக விற்பனை ஆகின.


 2025ம் ஆண்டு வாகனங்கள் விற்பனையில் சீனாவில் போக்ஸ்வாகன் 3வது இடத்தை பிடிக்கத் துவங்கியது. மேலும், ஐரோப்பிய சந்தையிலும் சீன நிறுவனங்களின் வாகனங்கள் விற்பனை அதிகரித்து வருகின்றன. 


இதனால், போக்ஸ்வாகன் பணியிடங்கள் குறைப்பு தொழிற்சாலைகள் மூடல் என முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால், இந்த தகவலை போக்ஸ்வாகன் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.


இதனிடையே, தொழிற்சாலைகள் மூடல் மற்றும் பணியிடங்கள் குறைப்பு முடிவை எதிர்த்து முழு அளவில் போராடுவோம் என ஜெர்மனி தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை