சரியும் சட்டம் ஒழுங்கு

சரியும் சட்டம் ஒழுங்கு
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவுடன் புதிய கூட்டணியை அமைத்து ஆட்சியைப் பிடித்துள்ளது.
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நாளில் இருந்தே, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கோவை சூலூர் பகுதியில் சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கடலூரில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதும், சென்னை வேளச்சேரியில் மூதாட்டி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதும், மதுராந்தகத்தில் மூதாட்டியை நகைக்காக கொலை செய்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மரக்காணத்தில் 11வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை, கடலூர் அருகே வடலூரில் 30 வயது இளம்பெண்ணின் சடலம் மீட்பு உள்ளிட்டவை சட்டம் ஒழுங்கை நிலைகுலைய வைக்கின்றன.
எப்போதுமே கொலை களமாக திகழும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தற்போது கண்ணில் கண்டவர்களை எல்லாம் அரிவாளால் வெட்டி சென்ற ஒரு கும்பல் 10 பேரை வெட்டி காயப்படுத்தியுள்ளது.
வேறு வழியின்றி 3 தினங்களுக்கு பின்னர் போலீசார் நேற்று ஒருவரை துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்துள்ளனர். தமிழகத்தில் இன்றளவில் நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும், குற்றங்களைக் குறைப்பதற்கும் சில முக்கிய கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டார். மாநிலம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த 37 மாவட்டங்கள் மற்றும் 9 முக்கிய நகரங்களை உள்ளடக்கிய 65 காவல் நிலையங்களுடன் கூடிய போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது.
ஆனால் தமிழகத்தில் இப்போதும் நடக்கும் பல வன்முறை சம்பவங்கள் போதையின் பாதையில் திரியும் இளைஞர்களும், சிறுவர்களும் அரிவாளை கையில் எடுத்து கொண்டு களம் புகுந்திருப்பதையே படம் பிடிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு பிரிவு உருவாக்கப்படும் என கூறிய தமிழக அரசு, சிங்கப்பெண் அதிரடிப்படையை உருவாக்க உத்தரவிட்டது. ஆனால் அதற்கான தொடக்க விழா கூட இன்னமும் நடத்தப்படவில்லை.
அதற்குள்ளாக தூத்துக்குடி மாவட்டத்தில் அவர்கள் உருவாக்கிய சிங்கப்பெண் அதிரடிப்படையில் பெண் போலீசிடம், இன்ஸ்பெக்டரே சில்மிஷம் செய்த சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

பயிர்களை மேயும் வேலிகளை வைத்து கொண்டு முதல்வர் விஜய், பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு தரப்போகிறார் என்பது கேள்விக்குறியாகி வருகிறது. சென்னையில் 16வயது சிறுவனுக்கு மது கொடுத்துவிட்டு, பாலியல் வன்கொடுமையில் ஏட்டு ஈடுபட்டதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
தவெக ஆட்சி அமைத்து ஒரு மாதம் ஆவதற்குள் பாலியல் வன்கொடுமை, கொலை, ரவுடியிசம் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
விளம்பரங்களிலும், ரீல்ஸ்களிலும் அதிக கவனம் செலுத்தும் அமைச்சர்களும், அரசு நிர்வாகமும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தவறிவிட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
தவெக நிர்வாகிகளே சில இடங்களில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதும், பொதுமக்களை மிரட்டி மாமூல் வாங்கிய சம்பவங்களும் பொதுவெளியில் அரங்கேறி வருகின்றன.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காகவே ஆட்சிக்கு வருவதை போல தோற்றத்தை உருவாக்கிய தவெக அரசு, இப்போது ஆட்சியில் அமர்ந்தவுடன் சட்டம் ஒழுங்கில் கோட்டை விடுவது சரியல்ல.
ஒன்றிய,மாநில அரசுகளின் பணி!தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு காரீப் பருவத்தில் அதிகபட்ச பரப்பில் பயிர்களை சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
இதனால் யூரியா மற்றும் டிஏபி உரங்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசானது தமிழகத்திற்கு ஏப்ரல், மே மாதங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உரத்தை இதுவரை வழங்கவில்லை.
அதாவது மொத்த தேவைக்கான 39,001 டன் யூரியா, 28,607 டன் டிஏபி, 24,235 டன் பொட்டாஷ் உரங்களை, உர நிறுவனங்கள் தமிழகத்திற்கு வழங்கவில்லை.
தென்மேற்கு பருவமழை மே மாதம் மூன்றாவது வாரத்தில் துவங்கும் என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதை ஆதாரமாக வைத்து சுமார் 25 லட்சம் ஏக்கரில் நெல், உளுந்து, பச்சைபயறு, நிலக்கடலை, எள் என்று தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள உரத்தட்டுப்பாடு என்பது விவசாயிகளின் நம்பிக்கையை மெல்லச்சிதைத்து வருகிறது.
இதில் யூரியா என்பது பயிர்களின் ஆரம்ப வளர்ச்சிக்கும், இலைகளின் பசுமைத்தன்மைக்கும் தேவையான நைட்ரஜனை வழங்குகிறது.
டிஏபி உரமானது வேர்கள் நன்கு ஆழமாக பரவவும், பூக்கள் மற்றும் காய்கள் பிடிப்பதற்கும் உதவுகிறது. பொட்டாஷ் உரமானது பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து, விளைச்சலின் தரத்தை உயர்த்துகிறது.
இந்தவகையில் தற்போதைய காரீப் பருவ பயிர்களை வளர்த்தெடுக்க, தங்கு தடையில்லாத உரம் விநியோகம் என்பது பிரதானமாக இருக்க வேண்டும்.
மேலும் பாகுபாடு காட்டாமல் தமிழக விவசாயிகளுக்கு உரங்களை வழங்கிட வேண்டும். மாநிலத்தில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசும், கடிதம் எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
காரீப் பருவம் என்பது இந்தியாவில் தென்மேற்கு பருவமழையை சார்ந்தது. இந்த பருவத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் விதைக்கப்படும் பயிர்கள், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அறுவடை செய்யப்படும்.
இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த உணவு தானியங்களின் பெரும்பகுதி, காரீப் பருவத்தில் தான் விளைகிறது. இது தமிழகத்திற்கும் பொருந்தும்.
எனவே இந்த காலக்கட்டத்தில் நிகழும் உரத்தட்டுப்பாடு என்பது, உணவு தானியங்களின் உற்பத்தியை அடியோடு குறைத்து விடும். இதை உணர்ந்து ஒன்றிய, மாநில அரசுகள் துரிதகதியில் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.
உரத்தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் உரங்களின் விலை உயர்வு என்பதும் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னணி உர நிறுவனங்கள் மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களில் மூட்டை உரத்தின் விலையானது ரூ.200 முதல் ரூ.650 வரை அதிகரித்துள்ளது. இதேபோல் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலையும் அதிகரித்துள்ளது.
இப்படி விவசாயிகள் மீது ஏற்றப்பட்டுள்ள சுமையும், அவர்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. எனவே இதில் அரசுகள் மெத்தனம் காட்டக்கூடாது. அப்படி இருந்தால் எதிர்காலத்தில் உணவு பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல்கள் உருவாகும்.
எனவே பாதிப்புகள் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த மக்களுக்கும் தான் என்பதையும் ஒன்றிய, மாநில அரசுகள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு.




