தன் தலையில் தானே.....!

 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (வி.சி.க) முன்னாள் முதன்மைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பனையூர் பாபு, தனது ஆதரவாளர்கள் மற்றும் மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக தி.மு.க.வில் இணைந்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது.புதிதாகக் கட்சியில் இணைந்தவர்களை வரவேற்றுப் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், லட்சக்கணக்கான கழக உடன்பிறப்புகளில் ஒருவராக தங்களை இணைத்துக்கொள்ள வந்துள்ள அனைவரையும் முதன்மை தொண்டனாக வரவேற்கிறேன். 

பனையூர் பாபு கொள்கைக்காக உறுதியோடு உழைக்கக்கூடிய ஒரு செயல்வீரர்; அதற்கு அவரது அரசியல் பயணமே சாட்சி. ஆதிதிராவிடர் மக்களுக்கு தி.மு.க. அரசு எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. 

தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் வேலை அதிகமாக இருக்கும். அத்தகைய உழைப்பிற்குத் தயாராக வந்துள்ள உங்களை மனதார வரவேற்கிறேன் என்றார்.

தொடர்ந்து தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) ஆட்சி குறித்து மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சி பொறுப்பேற்றபோது, நான் 6 மாதங்களுக்கு இதைப் பற்றிப் பேசப்போவதில்லை என்று சொல்லியிருந்தேன். 

ஆனால், தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சி 6 மாதங்கள், 5 மாதங்கள், 4 மாதங்கள் இல்லை… 3 மாதங்களாவது தாங்குமா? என்ற கேள்வியுடன்தான் தற்போது போய்க்கொண்டிருக்கிறது. 

6 மாதங்களுக்கு முன்பாக இதைப் பற்றிப் பேச வேண்டிய சூழல் வந்துவிடுமோ என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது என்று காரசாரமாகப் பேசினார்.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தனித் தொகுதியில் வி.சி.க சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பனையூர் பாபு. கடந்த 2026 தேர்தலில் அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.

 இதற்கிடையே, கடந்த மாதம் 24-ஆம் தேதி வி.சி.க.வின் அரசியல் நிலைப்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து அக்கட்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்திருந்தார்.

அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், சமீபகாலமாக வி.சி.க தலைமையின் செயல்பாடுகளும், அரசியல் நிலைப்பாடுகளும் வேதனை அளிக்கிறது. நேர்காணலிலும், செய்தியாளர் சந்திப்பிலும் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது தொண்டர்களிடையே குழப்பத்தை உருவாக்குகிறது. 

நேற்று வரை ஒரு நடிகரை (விஜய்) விமர்சித்துவிட்டு, இன்று அதே பிள்ளையைத் தத்தெடுப்பது போல் நிலைப்பாடு எடுப்பது, வி.சி.க. தலைமை கொள்கையில் இருந்து தடம் மாறத் தயாராகிவிட்டதையே காட்டுகிறது.

 அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றும் இத்தகைய தலைமையின் கீழ் இனியும் பயணிக்க முடியாது என்று பனையூர் பாபு குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், வி.சி.கவில் இருந்து விலகிய பனையூர் பாபு, தற்போது தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்துள்ளார். 

தமிழக அரசியல் களத்தில் இந்த வி.சி.க – தி.மு.க – த.வெ.க இடையிலான அரசியல் நகர்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

"தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்ட ராகுல்" !

முரசொலி தலையங்கம் 

“தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் கழகத் தோழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் 'இந்தியா' கூட்டணிக் கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது” என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துள்ளது.


இத்தகைய முடிவை தி.மு.க. எடுக்க வேண்டிய சூழலை உருவாக்கியது காங்கிரஸ் கட்சியே ஆகும். அதிலும் குறிப்பாக, ராகுலின் தன்னிச்சையான, ஆணவமான நடவடிக்கைகளே இதற்குக் காரணம்! தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டே இதற்கு குழிபறிக்கும் செயல்களை ராகுல் செய்தார்.

அதைப் பச்சையாக வெளிப்படையாகவே செய்தார். இதைச் சகித்துக் கொள்ளும் தேவை தி.மு.க.வுக்கு இல்லை.

தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்.


காங்கிரஸ் கட்சியை ஆழக் குழி தோண்டி ஒவ்வொரு மாநிலத்திலும் புதைக்கும் செயலை அவர் செய்து வருகிறார். இதுதான் மற்ற மாநிலங்களிலும் நடந்தது தமிழ்நாட்டில் நடக்கிறது.


தான் பிரதமர் ஆவதை விட, பிரவீன் சக்கரவர்த்தியை எம்.பி. ஆக்குவதற்காகத்தான் ராகுல் அலைந்திருக்கிறார்.


இப்படி ஒரு கெட்ட மதியாளரைத் தூக்கிச் சுமந்தோமே என்ற வருத்தமே மிஞ்சுகிறது.

2018 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் சிலை திறப்பு விழாவில் சோனியா, ராகுலை மேடையில் வைத்துக் கொண்டே ”பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிகிறேன்” என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள்.


இத்தகைய தலைவர் மு.க.ஸ்டாலினை அவமானப்படுத்துவதைத் தான், நம்பிக்கைத் துரோகம் என்று தெரியாமல் செய்து வந்துள்ளார் ராகுல்.


ஸ்வீட் பாக்ஸ் வாங்கித் தந்து, 'நீங்கள்தான் என் சகோதரர்' என்று சொன்னார் ராகுல். 'நான் யாரையும் சகோதரர் என்று சொன்னதில்லை' என்றார் ராகுல். இது வெறும் நடிப்புதான் போலும். தன்னை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவார் என்பதற்காகச் செய்யப்பட்ட நாடகமாகவே கருத வேண்டி உள்ளது.


ஒரு முறை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியைக் கடுமையாகப் பேசிவிட்டு, பிரதமர் இருக்கைக்கு வந்து அவரைக் கட்டிப் பிடித்தார் ராகுல். அப்படி கட்டிப் பிடித்துக் கொண்டே நாடாளுமன்றத்தைப் பார்த்து கண் அடிக்கவும் செய்தார் ராகுல்.


அவரது இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திய காட்சி அது. அந்த இரட்டை வேடத்தைத் தான் எல்லா மாநிலங்களிலும் நடத்திக் காட்டி வருகிறார் ராகுல்.


பீகாரில் தேஜஸ்வீயை முதுகில் குத்திய காட்சியை யாரும் மறக்க முடியாது. தேஜஸ்வீக்கு இருந்த மக்கள் செல்வாக்கை கபளீகரம் செய்வதற்காக அவர்களோடு கூட்டணி போட்டார் ராகுல். தேர்தல் நெருங்கி வரும் போது பிரச்சாரமும் சரியாகச் செய்யாமல் வெளிநாடு போனார் ராகுல்.


தேர்தலுக்குப் பத்து நாட்கள் இருக்கும் போதுதான் தேஜஸ்வீயை முதலமைச்சர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி ஒப்புக் கொண்டது. அதை அறிவிக்கவும் ராகுல் வரவில்லை. இறுதியாக பீகாரில் தோல்வியைத் தழுவியது இக்கூட்டணி.


இதற்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டியவர் ராகுல்தான். இப்படித்தான்ஒவ்வொரு மாநிலத்திலும் அணைத்துக் கெடுக்கும் செயலை ராகுல் செய்து வருகிறார். அதையே தான் தமிழ்நாட்டிலும் செய்தார் ராகுல்.


2019 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி முன்மொழிவதற்கு முன்னதாகவே அவர் பெயரை முன்மொழிந்தவர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.


அத்தகைய தலைவர் மு.க.ஸ்டாலின்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காக உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் ராகுல் பேசினாரா என்றால் இல்லை. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் சேர்ந்து ஒரு கூட்டம் பேசாமல் அடம்பிடித்தார், ஆணவமாக நடந்து கொண்டார் ராகுல்.


புதுச்சேரியில் திருபுவனை, மங்களம், காலாப்பட்டு, ராஜ்பவன், உழவர் கரை, காரைக்கால் ஆகிய தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சியே போட்டியிட்டது.


இத்தகைய போட்டி வேட்பாளர்கள், ராகுலைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். அதாவது, தி.மு.க. வேட்பாளர்கள் வென்று விடக் கூடாது என்பதற்காக ராகுலே போட்டி வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார் என்றுதானே இதற்குப் பொருள்?

ஒரு மாநிலங்களவை இடத்தையும் 28 சட்டமன்றத் தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெற்றது. கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் பெற்ற வெற்றியைப் பணயம் வைத்து மாற்று அணிக்கு மூன்று நாட்களுக்குள் காங்கிரஸ் கட்சி மாறியது.


இவர்கள் புதிதாக ஒருவரோடு சேர்ந்துள்ளார்களே.. அந்த விஜய், காங்கிரஸ் கட்சியைப் பற்றி என்ன சொன்னார்? 'சில பல கோடிகளைக் கொடுத்து தமிழ்நாடு காங்கிரஸை, ஸ்டாலின் தனது பைக்குள் போட்டுக்கிட்டார்’ என்று பேசினார்.


இன்று சில பல கோடிகள் கொடுத்துத்தான் காங்கிரஸ் ஆதரவைப் பெற்றாரா விஜய்? காங்கிரஸ் கட்சி எவ்வளவு பெற்றது?

அதில் ராகுல் எவ்வளவு பெற்றார்?

ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவி மட்டும்தான் காங்கிரஸுக்கு தரப்பட்ட விலையா?

அவ்வளவுதானா?


தேர்தலுக்கு முன்னதாக தி.மு.க.விடம் ஒரு ராஜ்ய சபா. தேர்தலுக்குப் பின்னதாக த.வெ.க.விடம் ஒரு ராஜ்ய சபா. இப்போது ஏதோ ராஜ்யத்தையே பிடித்துவிட்டதாக மகிழ்ச்சியில் இருக்கிறது காங்கிரஸ்.


'இந்தியா' கூட்டணியை இழந்து, ஒரு ராஜ்ய சபா இடத்தைப் பெற்றுள்ளது காங்கிரஸ். கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கி இருக்கிறது காங்கிரஸ்.

இவ்வளவுக்குப் பிறகும், 'இந்தியா கூட்டணியில் தி.மு.க. இருக்கிறது' என்று சொல்வதற்கு காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் கிரீஷ் ஜோடங்கருக்கு வெட்கமாக இல்லையா?


மான ஈனத்தைப் பற்றிக் கவலைப்படாத கட்சியாக காங்கிரஸ் இருக்கலாம். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை