அந்நிய செலாவணி :.ஒரு பார்வை.
இன்றைய உலகமயமாக்கல் சந்தையில் ஒரு நாட்டின் முதுகெலும்பாக இருப்பது அந்நிய செலாவணி. ஒரு நாடு அந்நிய செலாவணி வைத்திருக்கும் அளவைப் பொறுத்தே பொருளாதாரம் மதிப்பிடப்படுகிறது; ஏற்றுமதியும் இறக்குமதியும் முடிவாகிறது.
முன்பெல்லாம், சில வாரங்களுக்கு மட்டும்தான் அந்நிய செலாவணி கையிருப்பு நம் நாட்டிடம் இருந்தது. ஆனால், கடந்த பல தசம ஆண்டுகளாக ஓர் ஆண்டு இறக்குமதிக்கு தேவையான அந்நிய செலாவணி கையிருப்பாக ஆர்பிஐ வைத்திருக்கிறது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, ஜூலை 3-ம் தேதி முடிந்த வாரத்தில், அந்நிய செலாவணி கையிருப்பு 726 கோடி டாலர் அதிகரித்து, 67,419.30 கோடி டாலர் இருக்கிறது’ என தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு ஆசியாவில் போர் தொடங்குவதற்கு முன்பாக, கடந்த பிப்ரவரி 27-ம் தேதி முடிந்த வாரத்தில், ரிசர்வ் வங்கியிடம் அதிகபட்சமாக 72,849.40 கோடி டாலர்கள் கையிருப்பு இருந்தது.
அதன்பின், கச்சா எண்ணெய் விலை உயர்வு, தங்கம் இறக்குமதி அதிகரிப்பு ஆகியவற்றால் அதிகமாக டாலரை செலவிட வேண்டியிருந்ததால், இந்திய ரூபாய்க்கு நெருக்கடி ஏற்பட்டு, மதிப்புக் குறைந்தது, டாலரின் தேவையும் அதிகரித்து, கையிருப்பும் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
அந்நிய செலாவணி என்றால் என்ன?
அந்நிய செலாவணி என்பது வேறு ஒன்றுமில்லை, வெளிநாட்டு கரன்சிகள்தான். இவை பெரும்பாலும் டாலர்களாகவே
பெரும்பாலான நாடுகள் வைத்திருக்கும். டாலருக்கு அடுத்து பவுண்ட் ஸ்டெர்லிங், யூரோக்களாகவும் இருக்கலாம். வெளிநாட்டு கரன்சிகளைத்தான் அந்நிய செலாவணி என்று அழைக்கிறோம்.
வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய், தங்கம், மின்னணு சாதனங்கள், சிப்கள் அதிகளவில் இறக்குமதி செய்கிறோம்.
இந்த இறக்குமதிக்கு டாலரில்தான் பணம் செலுத்த வேண்டும். அதற்கு அந்நிய செலாவணி கையிருப்பு தேவை என்பதால், ஒரு நாட்டுக்கு அந்நிய செலாவணி அவசியம் என்று கூறப்படுகிறது.
அந்நிய செலாவணி கையிருப்பு என்பது வெளிநாட்டுக் கரன்சிகள், தங்கம், வெளிநாட்டு பங்கு பத்திரங்கள், முதலீட்டுப் பத்திரங்கள், அரசின் உத்தரவாத பத்திரங்கள், வைப்புத்தொகை உள்ளிட்டவை.
அந்நிய செலாவணி கையிருப்பு ஒரு நாட்டின் மத்திய வங்கியால் நிர்வகிக்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, ரிசர்வ் வங்கி அந்நிய செலாவணியை நிர்வகிக்கிறது.
அந்நிய செலாவணி கையிருப்பு நிர்வாகம் அனைத்தும் ரிசரவ் வங்கியிடம்தான் இருக்கும். உள்நாட்டு கரன்சியின் மதிப்பு தாழ்ந்துவிடாமல் நிலையாக வைத்திருப்பதும் இந்த அந்நிய செலாவணி கையிருப்பை அடிப்படையாக வைத்துதான்.
எந்த ஒரு நாட்டின் மத்திய வங்கியும், அவசரகால நிதியாக வெளிநாட்டு கரன்சியைத்தான் வைத்திருக்கும்.
ரூபாய் மதிப்பு குறைந்தாலோ அல்லது அதிக அழுத்தத்தை சந்தித்தாலோ அதை ஈடுகட்டி சரியாமல் தடுக்கவும், இறக்குமதிக்கு பணம் வழங்கவும் வெளிநாட்டு கரன்சிகளையே கையிருப்பாக வைத்திருக்கும்.
ஆனால், பெரும்பாலும் இது அரசுடைய பணம் என்று தவறாக சித்தரிக்கப்படுகிறது. உண்மையில் ரிசர்வ் வங்கிதான் இந்த அந்நிய செலாவணியை உருவாக்கியது.
ஆர்பிஐ தான் இந்திய ரூபாயை கரன்சி சந்தையில் விற்பனை செய்து, டாலரை வாங்கி, கையிருப்பை அதிகப்படுத்துகிறது. தேவைக்கு ஏற்ப செலாவணி சந்தையில் விற்பனை செய்து, ரூபாயின் மதிப்பையும் நிலைப்படுத்துகிறது.
அந்நிய செலாவணி கையிருப்புதான் ஒரு தேசத்தின் சொத்தாகும். அந்நியச் செலாவணி இருப்புகளை எப்போது, எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நிதியமைச்சகம் அல்லாமல் ரிசர்வ் வங்கியே தீர்மானிக்கிறது.
அந்நிய செலாவணி கையிருப்பில் 4 முக்கியப் பிரிவுகள் உள்ளன. அவை:
வெளிநாட்டு கரன்சி சொத்துகள்:
ரிசர்வ் வங்கி வசம் உள்ள வெளிநாடுகளின் கடன் பத்திரங்கள், அந்நிய செலாவணி இருப்பின் மிகப் பெரிய அங்கமாகும். இவை பொதுவாக வெளிநாடுகளின் பத்திரங்களாகவே இருக்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கி போன்ற மத்திய வங்கிகள் வட்டி வருவாயை ஈட்டுகின்றன. இந்த வருவாய்தான் ஆர்பிஐ லாபத்தின் பெரும் பகுதியாக இருக்கிறது. லாபத்தின் ஒரு பகுதி உபரித் தொகையாக ஒன்றிய அரசுக்கு மாற்றப்படுகிறது. இது தவிர வெளிநாட்டு கரன்சிகள்.
தங்கம் கையிருப்பு:
அந்நிய செலாவணி கையிருப்பின் மற்றொரு முக்கிய அம்சம் தங்கம். பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பு அரணாகவும், பொருளாதார நிச்சயமற்ற சூழலில் பாதுகாப்பு கவசமாகவும் தங்கம் இருக்கிறது.
இந்திய மக்கள் மத்தியிலும், பொருளாதாரத்திலும் தங்கத்துக்கென பாரம்பரியம் இருக்கிறது. அதன் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில், கையிருப்பில் தங்கம் சேர்க்கப்படுவது கூடுதல் பாதுகாப்பையும் மதிப்பையும் அளிக்கிறது.
பெரும்பாலான நாடுகள் தங்கத்தை பொருளாக, கையிருப்பாக சேமித்து வைப்பதற்கான செலவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய இடர்களை தவிர்க்கவே விரும்புகின்றன.
எஸ்டிஆர் எனப்படும் சிறப்பு கோருதல் உரிமை என்பது சர்வதேச பண நிதியத்தால் (IMF) 1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது உறுப்பு நாடுகள் ஐஎம்எப் அமைப்பில் தங்களின் சொத்துகளை இருப்பாக வைக்க முடியும்.
இந்த எஸ்டிஆர் என்பது ஒரு நாடு இருப்பாக டாலர், யூரோ, சீனாவின் ரென்மின்பி, ஜப்பானின் யென், பிரிட்டனின் பவுண்ட் ஸ்டெர்லிங் ஆகிய கரன்சிகளாக சேமிக்க முடியும். ஒரு நாட்டின் மத்திய வங்கியில் எஸ்டிஆர் அதிகமாக இருக்கும் பட்சத்தில் நிதி ஆதாரம் வலுவாக இருக்கும். நெருக்கடி காலங்களிலும், அவசரத் தேவைகளுக்கும் இந்த இருப்பை எடுத்து பயன்படுத்த முடியும்.
சர்வதேச பண நிதியத்தில் உள்ள உறுப்பு நாடு எந்தவிதமான கட்டணமோ, ஒதுக்கீடோ, பொருளாதார சீர்திருத்த நிபந்தனைகளோ இல்லாமல் அணுகக்கூடிய வழிமுறை. ரிசர்வ் டெபாசிட் எனப்படும் ஆர்டிபி தொகையை உறுப்பு நாடு எப்போது வேண்டுமானாலும் வட்டி செலுத்தாமல், திரும்பப் பெறலாம். ஒரு நாடு ஐஎம்எப் அமைப்பில் வைத்திருக்கும் ஆர்டிஎப் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அந்நிய செலாவணி பயன்பாடு:
1. ஒரு நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதிக்கு டாலரில் பணம் செலுத்த பயன்படுகிறது.
2. வெளிநாட்டு சுற்றுலா, கல்விப் பயணம், மருத்துவம், தொழில்ரீதியான பயணம் ஆகியவற்றுக்குச் செல்ல அந்நிய செலவாணி தேவை.
3. வெளிநாடுகளில் ஆர்பிஐ மூலம் முதலீடு செய்வதற்கும் பங்குப் பத்திரங்களை, கடன் பத்திரங்களை வாங்கவும் அந்நிய செலாவணி தேவை.
4. வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய், தங்கம், மருந்துகள், மின்னணு சாதனங்கள் வாங்கும்போது டாலரில் பணம் செலுத்த அந்நிய செலாவணி தேவைப்படுகிறது.
5. நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை முடிவு செய்வது, அந்நிய செலாவணி கையிருப்புதான்.
6. அந்நிய செலாவணி கையிருப்பை அதிகப்படுத்தவும், அந்நிய செலாவணி சந்தையில் தனிநபர்கள், நிறுவனங்கள் ரூபாயின் மதிப்புக்கு ஏற்றார்போல் டாலர்களை வாங்கி விற்கவும் பயன்படுகிறது.
7. டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் சரிவைத் தடுத்து நிறுத்தவும் அந்நிய செலாவணி தேவை. பல்வேறு பொருளாதாரக் காரணிகள், சர்வதேச காரணிகளால் ரூபாய் மதிப்பு நெருக்கடியாகும்போது, ரிசர்வ் வங்கி தலையிட்டு தன்னிடம் இருக்கும் அந்நிய செலாவணி கையிருப்பை சந்தையில் கொடுத்து ரூபாய் மதிப்பை மேலும் சரியாமல் பாதுகாக்கும்.
டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்தவும், உயர்த்தவும் ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணியால்தான் முடியும்.
ஒரு நாட்டின் அந்நிய செலாவணிக் கையிருப்பு என்பது பொருளாதாரக் காரணிகள், அரசியல் காரணிகள், சர்வதேச காரணிகள் என 3 வகைகளில் பாதிக்கப்படும்.
இதில் பொருளாதாரக் காரணிகளில், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அல்லது குறைவு, நிலைத்தன்மையில் ஏற்படும் பாதிப்பு, வர்த்தகப் பற்றாக்குறை, பணவீக்கம் ஆகியவை கையிருப்பை பாதிக்கும்.
அரசியல் காரணிகளில், ஓர் அரசின் கொள்கை முடிவுகள், குறிப்பாக வெளிநாட்டு வர்த்தகம், உறவுகள், முதலீடு, நிதி மேலாண்மை ஆகியவற்றில் எடுக்கும் முடிவுகள், அரசியல் நிலைத்தன்மை அல்லது ஆட்சியின் நிலைத்தன்மை, சர்வதேச உறவுகள் ஆகியவை நிர்ணயிக்கும்.
மூன்றாவதாக, உலகளவில் நிலவும் பொருளாதாரச் சூழல். உலகப் பொருளாதாரத்தில் மந்த நிலை இருந்தால் அல்லது தேக்கநிலை நீடித்தால் அது அந்நிய செலாவணியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உலகப் பொருளாதாரத்தில் ஆரோக்கிய நிலை இருந்தால், சாதகமாக இருக்கும்.
அந்நியச் செலாவணி சந்தையில் ஏற்படும் அதிகமான ஊசலாட்டம், ஏற்றத் தாழ்வுகள், சர்வதேச அளவில், பிராந்திய அளவில் ஏற்படும் பிரச்சினைகள், போர்கள், இயற்கை பேரிடர்களான வெள்ளம், மழை, பூகம்பம், வறட்சி ஆகியவையும் பாதிக்கும்.