மூன்று மாத்ததிலே வாங்கியக் கடன்.!
தமிழக அரசின் நிதி நிலைமை மற்றும் கடன் சுமை குறித்த புதிய அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களிலேயே தமிழக அரசு வாங்கியுள்ள கடன்களும், அதற்காகச் செலுத்தியுள்ள வட்டித் தொகையும் பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஏற்கனவே தமிழக அரசின் மொத்தக் கடன் சுமை சுமார் 10 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ள நிலையில், தற்போதைய புதிய புள்ளிவிவரங்கள் மாநிலத்தின் நிதி நெருக்கடியை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளன.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் மூன்று மாதங்களில் மட்டும், பல்வேறு மூலதன திட்டங்களுக்காகத் தமிழக அரசு இருபதாயிரத்து எண்ணூற்று எண்பத்தொன்று (20,881) கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது.
அதுவும் தேர்தல் நடை முறை ஏப்ரலில் அமுலுக்கு வந்து தேர்தலுக்குப்பின் த.வெ.க. ஆட்சி மே-10'ல் அமைந்த பின் அரசு வாங்கியது
மாநிலத்தின் உள்கட்டமைப்புப் பணிகளான சாலை அமைத்தல் மற்றும் பாலங்கள் கட்டுதல் போன்ற தேவைகளுக்காக இந்தக் கடன்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுக்கு சொந்த வரி வருவாயாக ஜிஎஸ்டி (State GST), முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம், விற்பனை வரி எனப் பல வழிகளில் வருவாய் கிடைத்தாலும், வரவை விடச் செலவுகள் பல மடங்கு அதிகமாக இருப்பதாலேயே இந்த கூடுதல் கடன்கள் வாங்கப்படுகின்றன.
வட்டிக்கு மட்டுமே ரூ.14,618 கோடி செலவு
மாநில அரசு வாங்கிய கடனை விட, அதற்குச் செலுத்தப்படும் வட்டியின் அளவுதான் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நிலுவையில் உள்ள மொத்த கடன்களுக்கான வட்டியாகப் பதினான்காயிரத்து அறுநூற்று பதினெட்டு (14,618) கோடி ரூபாயைத் தமிழக அரசு வட்டித் தொகையாக மட்டுமே செலுத்தியுள்ளது.
அரசுப் பணியாளர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பழைய கடன்களுக்கான வட்டி போன்ற அத்தியாவசியத் தேவைகளைச் சமாளிக்க, தொடர்ந்து ரிசர்வ் வங்கி மூலமாகக் கடன் பத்திரங்களை விற்பனை செய்து அரசு நிதியைத் திரட்டி வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசு வட்டி வடிவில் மட்டுமே செலுத்தியுள்ள தொகையின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது 2021-22 நிதியாண்டு: வட்டி செலவு நாற்பத்தோராயிரத்து ஐந்நூற்று அறுபத்து நான்கு கோடி ரூபாய். 2022-23 நிதியாண்டு: வட்டி செலவு நாற்பத்தாறாயிரத்து தொள்ளாயிரத்து பதினொன்று கோடி ரூபாய்.
2023-24 நிதியாண்டு: வட்டி செலவு ஐம்பத்து மூன்றாயிரத்து ஐந்நூற்று அறுபத்து ஆறு கோடி ரூபாய். 2024-25 நிதியாண்டு: வட்டி செலவு ஐம்பத்தொன்பதாயிரத்து தொள்ளாயிரத்து ஒன்பது கோடி ரூபாய். 2025-26 நிதியாண்டு: வட்டி செலவு அறுபத்தேழாயிரத்து ஐம்பது கோடி ரூபாய். 2026-27 (நடப்பு பட்ஜெட் மதிப்பு): இந்த நிதியாண்டின் இறுதியில் வட்டி செலவு மட்டும் எழுபத்தாறாயிரத்து நானூற்று ஐம்பத்து இரண்டு கோடி ரூபாயை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு முழு நிதியாண்டில் மட்டும் கூடுதலாக ஒரு லட்சத்து இருபத்தி இரண்டாயிர கோடி ரூபாய் கடன் வாங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதில் கொடுமை என்னவென்றால், மாநிலத்தின் மொத்த வருவாயில் இருபத்தி இரண்டு புள்ளி எட்டு இரண்டு சதவீதம் (22.82%) தொகை, மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படாமல் வெறும் வட்டி கட்டுவதற்கே செலவிடப்படுகிறது.இந்தக் கடன் சுமை வருங்காலத் தலைமுறையினரின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்பதால், அரசு தேவையற்ற செலவினங்களைக் குறைத்து வருவாயைப் பெருக்க மாற்று வழிகளை ஆராய வேண்டும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.