கையில காசு குடத்திலே குடிநீரு.,!
குடிநீர் மக்களின் அடிப்படை உரிமையா? அல்லது தனியார் நிறுவனங்களின் வணிகப் பொருளா?
என்ற கேள்வியை முன்வைக்கும் வகையில், சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை 30 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு தனியார் நிறுவனமான சூயஸிடம் ஒப்படைக்கும் அரசின் முடிவு, பெரும் விவாதத்தையும் மக்கள் மத்தியில் எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது.
குடிக்கும் தண்ணீரை கூட தனியாருக்கு தாரை வார்க்கதான் இந்த அரசை தேர்ந்தெடுத்தோமா? என கொந்தளித்து போயுள்ளனர் சேலம்வாழ் மக்கள்.ஊருக்கே தண்ணீரை வாரி இறைக்கும் மேட்டூர் அணையை தன்னகத்தே கொண்டிருக்கும் சேலம் மாநகர மக்களே, இனி குடிநீருக்கே கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை யாராலும் நம்ப முடியாது.
ஏதோ வறட்சியால் இந்த நிலைமை வரவில்லை, மாறாக அரசின் தனியார் மய நடவடிக்கையால் வந்த வினை தான் இது.
சூயஸ் (Suez) என்ற தனியார் நிறுவனத்திடம் குடிநீர் விநியோகத்தை ஒப்படைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை தான் இப்போது லைம் லைட்டுக்கு வந்து விவாதத்தை பற்ற வைத்திருக்கிறது.
தற்போதைய நிலையில் மேட்டூர் அணையின் தொட்டில்பட்டி நீரேற்று நிலையம் மூலம் தினமும் 155 எம்.எல்.டி. குடிநீர் சேலம் மாநகரத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 24 மணி நேர தடையற்ற குடிநீர் விநியோகம் என்ற பெயரில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டத்தின் முதல் ஆண்டில் தற்போதுள்ள குடிநீர் உள்கட்டமைப்புகள் ஆய்வு செய்யப்படவுள்ளன. இதைத் தொடர்ந்து அடுத்த நான்கு ஆண்டுகளில் ஆயிரத்து 35 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பணிகளை ஒப்பந்த நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
அதன்பிறகு 25 ஆண்டுகள் பராமரிப்புக்காக 3 ஆயிரத்து 259 கோடி ரூபாய் செலவிடப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த முடிவுக்கு சேலம் மாநகராட்சி மாமன்றமே ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
கடந்த மாதம் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் அனைத்து கட்சி கவுன்சிலர்களும் ஒருமனதாக இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதன் அடிப்படையில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருந்தது. இருப்பினும், அந்தத் தீர்மானத்தைப் பொருட்படுத்தாமல் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
மாநகராட்சி நிர்வாகத்தின் நிதி நிலையையே இந்தத் திட்டம் சீர்குலைக்கும் என எச்சரிக்கும் கவுன்சிலர்கள், தற்போது ஆண்டுக்கு சுமார் 50 கோடி ரூபாய் மட்டுமே குடிநீர் விநியோகத்திற்கு செலவிடப்படும் நிலையில்,
புதிய ஒப்பந்தத்தால் ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய் வரை தனியார் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய சூழல் உருவாகும் என தெரிவிக்கின்றனர்.
சேலம் மாநகராட்சியின் ஒட்டுமொத்த ஆண்டு பட்ஜெட்டே ஆயிரம் கோடி ரூபாய்தான் எனும்போது அதில் ஐந்தில் ஒரு பங்கை குடிநீர் ஒப்பந்தத்துக்கே செலவிட்டால், மற்ற அடிப்படை வசதிகளுக்கு எப்படி செலவு செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாதம் 151 ரூபாயாக உள்ள குடிநீர் கட்டணம் தனியார் வசம் சென்றதற்கு பின்பாக ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரை உயரக்கூடும் என்ற அச்சமும் முன்வைக்கப்படுகிறது.
“குடிநீர் என்பது வணிகப் பொருள் அல்ல, அது மக்களின் அடிப்படை உரிமை. மக்கள் நலனுக்கு எதிரான இந்தத் திட்டத்தை எந்தச் சூழலிலும் செயல்படுத்த அனுமதிக்க முடியாது. தேவையானால் நீதிமன்றத்தை நாடி சட்டப் போராட்டம் நடத்துவோம்” என்று சேலம் மாநகராட்சி கவுன்சிலர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.சேலத்தில் எழுந்துள்ள இந்த எதிர்ப்புக் குரல், ஒரு மாநகரத்தின் குடிநீர் திட்டத்தைத் தாண்டி, அத்தியாவசிய பொதுச் சேவைகள் தனியார்மயமாக வேண்டுமா?
என்ற மிகப் பெரிய விவாதத்தை தமிழக அரசியல் மற்றும் சமூக அரங்கில் மீண்டும் முன்வைத்துள்ளது.
இந்த கொடுமையான நிலை அனைத்து மாநகராட.சிகள்,நகராட்சிகள.,ஊராட்சிகள, எனத் தமிழ்நாடு முழுக்க வரப்போகிறது அது ஒன்றிய அரசின் ஜல்ஜீவன் திட்ட மறைமுககொடும் பயங்கரம்.



