சதிவலையில் சிக்காதீர்!

கர்நாடகாவின் சதிவலையில் சிக்காதீர்!,
மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம், தற்போது மாநில அரசியலில் புதியதொரு போர்க்களமாக மாறியுள்ளது.
கர்நாடக அரசின் அழைப்பை ஏற்று, காவிரி மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பு, டெல்டா விவசாயிகளிடமும் எதிர்க்கட்சிகளிடமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எதிராகத் தனது அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவு மூலமாகக் கடுமையான கண்டனக் கணைகளைத் தொடுத்துள்ளார் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சரின் இந்த முடிவை ஒரு "விஷப் பரீட்சை" என்று வர்ணித்துள்ள மு.க.ஸ்டாலின், கர்நாடக அரசு விரித்துள்ள சதிவலையில் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் தன்னிச்சையாகப் போய் சிக்குவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் தனது அறிக்கையில், "கடந்த காலங்களில் காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற யோசனை சொல்லப்பட்டபோதெல்லாம், அதனைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
ஏனெனில், உரிமையை நிலைநாட்டுவதாக இல்லாமல் பிரச்சினையை மேலும் இழுத்தடிப்பதற்காகவே கர்நாடகாவின் பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும்" என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்குரிய நீர் உரிமை சட்டப்பூர்வமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், மீண்டும்
கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புவது தமிழ்நாட்டின் 30 ஆண்டுகாலச் சட்டப் போராட்டத்தையே முற்றிலும் சிதைத்துவிடும் என ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
மேலும், இந்த தேவையற்ற அரசியல் பேச்சுவார்த்தை முயற்சி, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டிற்கு இருக்கக்கூடிய சட்டப்பூர்வமான வலுவை பலவீனப்படுத்தி, நீதிமன்றத்தில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அதே நேரத்தில், தமிழ்நாட்டின் தற்போதைய தமிழக வெற்றிக் கழக (TVK) தலைமையிலான அமைச்சரவையிலும் காங்கிரஸ் கட்சி பங்கு வகிக்கிறது.தமிழக அரசு பிரதிநிதி கர்நாடக்காரர்.கர்நாடக முதல்வர் சிவகுமாரின் நெருங்கிய நண்பரும் கூட..
இதைக் குறிப்பிட்டுப் பேசியுள்ள தி.மு.க தலைவர், "அண்டை மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி மயக்கத்தில், தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளைப் பணயம் வைத்துவிடக் கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரலாக உள்ளது" என்று சாடியுள்ளார்.
மேலும், இரு மாநிலங்களுக்கும் இடையே தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பேச்சுவார்த்தை நாடகம், வெறும் "கண்துடைப்பு" நடவடிக்கைதானா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தன்னிச்சையாகக் கர்நாடகம் செல்லும் தவறான முடிவைக் கைவிட்டு, உடனடியாக முதலமைச்சர் செய்ய வேண்டிய இரண்டு முக்கியக் கடமைகளை ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.காவிரி போன்ற தமிழ்நாட்டின் மிக முக்கியமான வாழ்வாதாரப் பிரச்சினைகளில் முதலமைச்சர் தன்னிச்சையாகச் செயல்படக் கூடாது. உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.
டெல்டா பகுதி விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளை நேரில் அழைத்து, அவர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற்ற பின்பே அரசு அடுத்தகட்ட சட்டபூர்வ நடவடிக்கைகளை நோக்கி நகர வேண்டும்.
காவிரி நதிநீர் உரிமை என்பது வெறும் அரசியல் தராசு அல்ல; அது தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வுரிமை.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நமக்கு வரவேண்டிய தண்ணீரைப் பெற்றுத் தருவதை விடுத்து,
கர்நாடகாவின் அரசியல் நாடகத்திற்குத் தமிழக அரசு உடன்படக் கூடாது என்ற மு.க.ஸ்டாலினின் இந்த எச்சரிக்கை, தற்போதைய முதலமைச்சர் விஜய்க்கு அரசியல் ரீதியாகப் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மேந்திர பிரதான் பதவி விலகல்!
போராட்டக் களத்தில் கொண்டாட்டம்
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, டெல்லியில் சிஜேபி போராட்டக்களத்தில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
“டெல்லி ஜந்தர் மந்தரிலும், நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் தங்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டேன்; மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எனது ராஜினாமாவை பிரதமருக்கு அனுப்பியுள்ளேன்” என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தர்மேந்திர பிரதான் தனது ராஜினமாவை அறிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சீர்திருத்தத்திற்காக நான் என்னை அர்ப்பணித்துள்ளேன்.
ஒரு வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட கல்வி முறையே ஒரு வலிமையான தேசத்தின் அடித்தளம் என்று நான் எப்போதும் நம்பி வந்துள்ளேன்.
நாட்டின் இளைஞர்களின் விருப்பங்கள், உணர்வுகள் மற்றும் நியாயமான எதிர்பார்ப்புகளை நான் ஆழ்ந்து மதிக்கிறேன். இந்தியாவின் இளம் தலைமுறையின் கனவுகளை நனவாக்குவது, அரசியல் மற்றும் சமூக வாழ்வில் நம் அனைவரின் தார்மிகக் கடமையாக இருந்து வருகிறது.
பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ் தேசத்துக்கு சேவை செய்ய எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பிற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மே 3, 2026 அன்று நடைபெற்ற நீட்-யுஜி (NEET-UG) தேர்வில் முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இதைக் கவனத்தில் கொண்டு உடனடியாக இந்திய அரசு, விசாரணையை சிபிஐ-யிடம் (CBI) ஒப்படைத்து, தேர்வை ரத்து செய்து, மறு அட்டவணையை வெளியிட்டது.
அடுத்த ஆண்டு முதல் கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் தேர்வை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இந்தக் காலகட்டத்தில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான தேர்வு தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமையாக இருந்தது.
இந்த நோக்கத்திற்காக, இந்திய அரசாங்கம், மாநில அரசாங்கம், மாவட்ட நிர்வாகம் ஆகியவை முக்கியப் பங்காற்றின. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் ஜூன் 21, 2026 அன்று தேர்வு நிறைவடைந்தது.
முதல் நாளிலிருந்தே இதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். இதில் இருந்து நான் ஒருபோதும் பின்வாங்கவில்லை. எந்தவொரு திறமையான மாணவரின் எதிர்காலமும் தேர்வு மாஃபியாவால் பாதிக்கப்படக் கூடாது என்றும், எந்தவொரு மாணவருக்கும் அநீதி இழைக்கப்படுவதை அனுமதிக்கக்கூடாது என்றும் நான் உறுதியாக இருந்தேன்.
ஜூலை 16 அன்று அறிவிக்கப்பட்ட நீட்-யுஜி (NEET-UG) தேர்வு முடிவுகள் திருப்திகரமாக இருந்தன. ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த பல திறமையான மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
இருப்பினும், பொறுப்புள்ள பதவிகளில் இருந்த சில தனிநபர்கள், பல மாணவர்களைத் தவறாக வழிநடத்த முயன்றனர். இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.
நமது ஜனநாயகத்தின் சக்தியின் மீது எனக்கு எப்போதுமே அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இளைஞர்களின் விருப்பங்கள், கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நான் ஆழ்ந்து மதிக்கிறேன்.
அவர்கள் இந்தியாவின் எதிர்காலம் மட்டுமல்ல, ஒரு புதிய; வளர்ச்சியடைந்த இந்தியாவின் சிற்பிகள்.
கடந்த 10 நாட்களில் நடந்த நிகழ்வுகளால் நான் வருத்தமடைகிறேன். இது எனக்கு தனிப்பட்ட கவுரவம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல.
இந்தியாவின் இளைஞர் சக்தியே இந்த நாட்டின் உண்மையான பலம்.
நாட்டின் இளைஞர்கள் மாயைகளின் தீய வட்டத்திற்குள் வீழ்வதை நான் அனுமதிக்க மாட்டேன், இதுவே எனது உறுதி.
ஜந்தர் மந்தரிலும் நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் தங்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதை நான் அனுமதிக்க மாட்டேன். நாட்டின் ஒற்றுமை பேணப்பட வேண்டும்.
இந்தியாவில் ஒரு மாணவரின் எதிர்காலம் கூட சட்டச் சிக்கல்களில் சிக்கக்கூடாது. நமது பிள்ளைகள் தங்கள் நேரத்தை படிப்பிற்கு அர்ப்பணித்து, தங்கள் தொழில் வாழ்க்கையை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
இதை மனதில் கொண்டு, எனது ராஜினாமாவை
பிரதமருக்கு அனுப்பியுள்ளேன்.
பிரதமரின் வழிகாட்டுதலுக்கும், நம்பிக்கைக்கும், தொடர்ச்சியான ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைச்சரவையில் உள்ள எனது மதிப்புக்குரிய சக ஊழியர்களுக்கும், அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும், என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசத்துக்கு சேவை செய்வதே என் வாழ்வின் தலையாய முன்னுரிமை. நான் எப்போதும் அதற்கே என்னை அர்ப்பணித்துக் கொள்வேன்.
புரி ஜெகந்நாதரின் அருளால், இந்திய மக்களின், ஒடிசா மக்களின், நாட்டின் இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக, என்னால் இயன்ற எல்லா வழிகளிலும் என்னை தொடர்ந்து அர்ப்பணித்துக் கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
தர்மேந்திர பிரதானின் ராஜினமாவை அடுத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



