"உலகநாயகன்"

 பாடகர் "கமல்ஹாசன"

கமல்ஹாசனை நடிகராகதான் பலரும் அறிகிறார்கள். அவர் அரசியலுக்கு வந்த பின்னரும் கூட.

‘நான் ஏன் பிறந்தேன்’ படத்தில் எம்.ஜி.ஆரையும், ‘சவாலே சமாளி’ படத்தில் சிவாஜியையும், ‘அன்பு தங்கை’ படத்தில் ஜெயலலிதாவையும் ஆட்டுவித்த நடன இயக்குநர் அவர்.எண்பதுகளின் தொடக்கத்தில் சகலகலாவல்லவனாக லட்சங்களை சம்பாதித்துக் கொண்டிருந்தபோது திடீரென பிரேக் எடுத்து ஹாலிவுட்டுக்கு சென்று மேக்கப் ஜாம்பவானான மைக்கேல் வெஸ்ட்மோரிடம் மேக்கப் அசிஸ்டெண்ட்டாக வேலைக்கு சேர்ந்தார். 

பின்னாளில் அதே வெஸ்ட்மோர், கமலுக்கு ‘இந்தியன்’, ‘தசாவதாரம்’ படங்களுக்கு அரிதாரம் பூசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பெரும் பிரபலம் பெற்று, மஞ்சள் வெளிச்சத்தில் குளித்தவர்கள் டீனேஜை எட்டும்போது பெரும் வாழ்வியல் சிக்கலுக்கு உள்ளாவது உண்டு.

 சினிமாத்துறையிலேயே தொடர்வதா, படிப்பதா என்று இரு பாதைகளில் ஒன்றை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் வரும். படிக்கப் போகிறவர்களை நடிப்பு கைவிட்டு விடும். படித்துக் கொண்டே நடிப்பது இண்டஸ்ட்ரிக்கு ஆகாது.

கமல் கொஞ்சம் படித்தார். படிப்பை தூக்கியெறிந்துவிட்டு மீண்டும் சினிமாவுக்கே வந்தார். ரெண்டுங்கெட்டான் வயதில் அவருக்கேற்ற கதாபாத்திரங்கள் அன்றைய கதைகளில் இல்லை.

நடிப்புக்காக கூடுதலாக மேற்கொண்ட சண்டைப்பயிற்சி, நடனப்பயிற்சி ஆகியவற்றின் காரணத்தால் ஏதோ ஒருவகையில் சினிமாவில் நீடிக்கலாம் என்கிற எண்ணம் கொண்டார்.தங்கப்பன் மாஸ்டருக்கு நடன உதவியாளராக அன்றைய பெரும் நட்சத்திரங்களை ஆட்டுவித்தார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் திரையில் முகம் காட்டவும் தவறவில்லை. 

1971ல் ‘அன்னை வேளாங்கண்ணி’ படத்தின் ‘தேவமைந்தன் போகின்றான்’ பாடலில் சிலுவை சுமக்கும் இயேசுகிறிஸ்து, நம்ம கமல்ஹாசன்தான். நடன இயக்குநர் தங்கப்பன் இயக்கிய இப்படத்தில் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தபோது கமலின் வயது வெறும் பதினேழுதான்.

சினிமாதான் எதிர்காலம் என்று முடிவு செய்துவிட்ட கமலுக்கு, சினிமாவில் ஏதாவது ஒரு துறையில் பணிபுரிந்தால் போதுமென்ற மனம் இருந்தது. அதிகபட்சமாக இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக இணைவதுதான் அவரது அன்றைய இலட்சியம். 

இதற்காக சிபாரிசுக்கு எம்.ஜி.ஆரிடம் போனபோது (எம்.ஜி.ஆருக்கும் கே.பாலச்சந்தருக்கும் அப்போது பனிப்போர் உச்சத்தில் இருந்ததை ஒருவேளை கமல் அறியவில்லையோ என்னவோ) ‘நீ அழகன், நடிப்புதான் உன் துறை’ என்று கமலை நடிப்புத்துறைக்கு திருப்பி விட்டவர் எம்.ஜி.ஆர்தான்.

கே.பாலச்சந்தர் அலுவலகத்துக்கு போய் வந்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில்தான் கமலுக்கு பாலச்சந்தரின் வலதுகையான அனந்துவின் அறிமுகம் கிடைத்தது. அவருடனான உரையாடல்கள் கமலின் சினிமா குறித்த பார்வையை சர்வதேச அளவுக்கு விரிவாக்கியது.கமல்ஹாசனின் ஆரம்பக்கால திரையுலக நாட்களில் அனந்துவின் ஆலோசனைகள்தான் அவரை சகலகலாவல்லவனாக உருவெடுக்க வைத்தது. உலக சினிமாக்களை கமலுக்கு அவர் அறிமுகப்படுத்தி வேறொரு உலகத்தைக் காட்டினார். 

சினிமாவின் 24 துறை சார்ந்த அறிவும் இன்று கமல்ஹாசனுக்கு இருப்பதற்கு அனந்துவே முக்கியமான காரணம்.

அனந்துவை போல ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொருவர் என ஏராளமானோர் கமல்ஹாசனின் வெற்றிக்கு படிக்கட்டுகளாக அமைந்திருக்கிறார்கள்.

சினிமாவுக்கு வந்த புதிதிலேயே கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றிருந்தார். ‘சங்கர்லால்’ படத்தை இயக்கிக் கொண்டிருந்த டி.என்.பாலு பாதி படத்திலேயே காலமாகி விட்டதால், மீதிப்படத்தை கமல்ஹாசனே இயக்கினார்.

 தன்னுடைய நூறாவது படமான ‘ராஜபார்வை’க்காக தயாரிப்பாளராகவும் மாறினார். 1975லேயே ‘அந்தரங்கம்’ படத்தின் ‘ஞாயிறு ஒளிமழையில்’ பாடல் மூலமாக பின்னணிப் பாடகரானார். 

அதில் தொடங்கி, இப்போது ‘விக்ரம்’ படத்தின் ‘பத்தல பத்தல’ வரை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.

பாட ஆரம்பித்த தொடக்கத்தில் ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் போன்றவர்களின் தாக்கம் கமல்ஹாசனின் சொந்தக்குரலில் இருந்தது. 

இளையராஜா இசையில் ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் அவர் பாடிய ‘நினைவோ ஒரு பறவை’தான் பின்னணிக் குரலில் கமல்ஹாசனுக்கு திருப்புமுனை. கமலுக்கு என்றொரு தனித்துவக் குரலை அடையாளப்படுத்திய பாடலும் அதுவே.

தான் நடிக்கும் படத்தில் மட்டுமின்றி பிற நடிகர்களுக்கும் கமல் பின்னணி பாடியிருக்கிறார். 

‘ஓ மானே மானே’ படத்தில் மோகனுக்காக அவர் பின்னணி பாடிய ‘பொன்மானே தேடுதே’ ஒரு அட்டகாசமான மெலடி. குரலிலேயே தனி ஸ்டைலை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார் கமல். 

‘உல்லாசம்’ படத்தில் அஜித்துக்காக ‘முத்தே முத்தம்மா’ பாடியிருந்தார். ‘நளதமயந்தி’ படத்தில் மாதவனுக்கு, ‘முத்துராமலிங்கம்’ படத்தில் கவுதம் கார்த்திக்குக்கு, ‘மெய்யழகன்’ படத்தில் அரவிந்த்சாமிக்கு என்று நிறைய பாடல்களை சொல்லலாம். கமல்ஹாசன் பாடிய பாடல்களில் 90% பெரியளவில் ஹிட் ஆனவை.

                                                   -யுவகிருஷ்ணா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை