சங்ககால தென்காசி ..!

தமிழகத்தில் கீழடி அகழ்வாராய்ச்சி தொடங்கி, பழங்காலத் தமிழர்களின் செங்கல் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 

இந்த நிலையில், தொல்லியல் வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லாக தென்காசி மாவட்டத்தில் சங்க காலத்தைச் சேர்ந்த மிகப்பெரிய செங்கல் கட்டமைப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 இந்த புதிய கண்டுபிடிப்பு, கீழடியைப் போன்றே தென்காசியும் தமிழர்களின் தொன்மையான நாகரிக மையமாக இருந்திருக்கலாம் என்பதற்கான வலுவான சான்றுகளைத் தந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.மாநில தொல்லியல் துறையினரால் தென்காசி மாவட்டத்தின் கலிங்கப்பட்டி/மாலையடிப்பட்டி அருகே, வைப்பார் ஆற்றின் வலது கரையில் இந்த அகழ்வாய்வு நடத்தப்பட்டது. 

இங்கு முற்றிலும் செங்கற்களால் கட்டப்பட்ட சதுர வடிவ ‘படிக்கிணறு’ (Stepwell) ஒன்று வெளிப்பட்டுள்ளது. தமிழகத்தில் சங்க காலத்தைச் சேர்ந்த இது போன்றதொரு படிக்கிணறு கண்டறியப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இந்தக் கிணறு 4 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்ட சதுர அமைப்பில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உட்பகுதிக்குள் இறங்குவதற்காகக் கல்லால் ஆன படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

“இந்தக் கண்டுபிடிப்பு அன்றைய தமிழர்களின் சிறந்த நீர் மேலாண்மைத் திறனைப் பிரதிபலிக்கிறது. கடந்த 1930-களில் இதே பகுதியில் ரோமானிய தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.

 மதுரையிலிருந்து செங்கோட்டை கணவாய் வழியாக மேற்கு கடற்கரைக்குச் சென்ற மிக முக்கிய பண்டைய வணிகப் பாதையில் இந்தத் தளம் அமைந்திருந்ததே இதற்குக் காரணம்” என்று தொல்லியல் துறை ஆலோசகர் கே. ராஜன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த படிக்கிணற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்கள் 40 செ. மீ நீளமும், 20 செ. மீ அகலமும், 7 செ. மீ தடிமனும் கொண்டவையாக உள்ளன.

 இந்த செங்கற்களின் அளவும், அவை தயாரிக்கப்பட்ட பாணியும் ஏற்கனவே கீழடி, அழகன்குளம் மற்றும் பூம்புகார் போன்ற புகழ்பெற்ற சங்க காலத் தளங்களில் கண்டறியப்பட்ட செங்கற்களுடன் முற்றிலும் ஒத்துப்போகின்றன. 

இதன் மூலம் இந்த நீர் கட்டமைப்பு சங்க காலத்தைச் சேர்ந்தது (ஏறத்தாழ 2,500 ஆண்டுகள் பழமையானது) என்பது தெளிவாகிறது.


தற்போது 2 மீட்டர் ஆழம் வரை தோண்டப்பட்டுள்ள நிலையில், கிணற்றின் உட்புறச் சுவர்களில் தண்ணீரின் கறைகள் படிந்துள்ளன. இது அந்த காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் எவ்வளவு உயரமாக இருந்தது என்பதைக் காட்டுகிறது. 

கிணற்றின் முழுமையான ஆழம் அடுத்தகட்ட ஆய்வுகளில் வெளிவரும் என்று அகழ்வாய்வு இயக்குநர் வி. பி. யதீஸ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த படிக்கிணற்றின் வடிவமைப்பு மிகவும் தனித்துவமானது. சுவர்கள் செங்கற்களாலும், படிக்கட்டுகள் கற்களாலும் செதுக்கப்பட்டுள்ளன. 

இந்த படிக்கட்டுகளில் ஏற்பட்டுள்ள தேய்மானங்கள், இந்தக் கிணறு பல நூற்றாண்டுகளாகப் பொதுமக்களால் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததை உணர்த்துகின்றன.

கிணற்றின் சுவர்கள் நில அதிர்வுகளையோ அல்லது நீர் அழுத்தத்தையோ தாங்கி வலுவாக இருப்பதற்காக, செங்கற்களை ஒன்றோடொன்று பூட்டிக்கொள்ளும் ‘இன்டர்லாக்கிங்’ (Interlocking) முறையில் களிமண்ணைக் கொண்டு பிணைத்துக் கட்டியுள்ளனர்.கோடை காலத்திலும் வற்றாத நீர் ஆதாரமாக விளங்கிய பழங்கால நீரோட்டப் பாதையின் (Paleochannel) மேல் இக்கிணறு திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது.

செங்கல் கிணறு மட்டுமின்றி, இந்தத் தளத்தில் மிக அரிய பல தொல்பொருட்களும் கிடைத்துள்ளன. இரும்புக்காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் சிவப்பு நிறப் பூச்சு கொண்ட மண்பாண்டம் (பானை) ஒன்று மூடியுடன் கண்டறியப்பட்டுள்ளது.

 இதன் தோள் பகுதியில் அழகான மயில்களின் ஓவியங்கள் வரிசையாக வரையப்பட்டுள்ளன.


இப்பானைக்கு வெளியே மனிதனின் கடவாய்ப் பற்கள் மற்றும் கருப்பு-சிவப்பு நிற மண்பாண்டத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால், இது மனித எலும்புகள் அடங்கிய ஒரு ‘ஈமத்தாழி’ (Burial Urn) ஆக இருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பானைகளில் சில குறியீடுகளும் (Graffiti marks) பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த அகழ்வாய்வில் அதிக வெள்ளீயம் கலந்த வெண்கலத் துண்டு (High-tin bronze) ஒன்றும் கிடைத்துள்ளது.

 ஆதிச்சநல்லூர், சிவகளை, சாஸ்தாபுரம், திருமலாபுரம் மற்றும் சூளாபுரம் போன்ற ஈமத்தாழி வழிபாட்டுடன் தொடர்புடைய முக்கிய தளங்களில் மட்டுமே இதற்கு முன்பு இத்தகைய வெண்கலம் கிடைத்துள்ளது.

 தமிழகத்தில் இந்த அரிய வெண்கலம் கண்டறியப்படும் ஆறாவது தளம் தென்காசி ஆகும்.

இவற்றுடன் இரும்புத் தாதுவின் ஒரு வகையான ஹேமடைட் (Hematite) மற்றும் இரும்புக் கழிவுகளும் இங்கே கிடைத்துள்ளன. 

இது சங்க காலத்தில் இங்கு இரும்பு உருக்கு ஆலைகள் அல்லது உற்பத்தி மையங்கள் இயங்கியதை உறுதி செய்கிறது. 

மேலும் கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள் மற்றும் நுண்கற்காலக் கருவிகளும் (Microlithic tools) கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தென்காசியின் இந்த புதிய கண்டுபிடிப்பு, இத்தளம் நுண்கற்காலத்தில் தொடங்கி இரும்புக்காலம் மற்றும் சங்க காலம் வரை மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்த ஒரு பெருநகர நாகரிக மையமாக இருந்திருக்கலாம் என்பதை நிரூபிக்கிறது.

 மேலதிக ஆய்வுகள் தொடரும் பட்சத்தில், கீழடியைப் போன்றே தென்காசியும் தமிழர்களின் பெருமைமிகு வரலாற்றுத் தொட்டிலாக உலக அரங்கில் மிளிரும்.





ஏதாவது பேசுங்க முதல்வர் விஜய் ..!

மதுரையில் அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வு மேற்கொண்டது, மக்கள் தங்கள் பிரச்சனை குறித்து ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம் என்று சொன்னது.. இப்படி ஆளுநர் அடுத்தடுத்து தனது ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார்.


ஆனால், முதலமைச்சர் விஜய் இது குறித்து எதுவும் பேசாதது கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு விஜய்க்கு காங்கிரஸ், இடதுசாரிகள், ஐயுஎம்எல் மற்றும் விசிக ஆதரவு கொடுக்க காரணம்.. ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதால்தான்.

ஆனால், சமீப நாட்களில் ஆளுநர் செய்வதை எல்லாம் பார்க்கும்போது.. நடப்பது மக்கள் ஆட்சியா? அல்லது ஆளுநர் ஆட்சியா என்கிற கேள்வி எழுவதாக கூட்டணி கட்சிகள் பேச தொடங்கியுள்ளன.

சவுராட்டிரா கல்லூரியில் பட்டமளிப்பு விழாவுக்காக ஆளுநர் அர்லேக்கர் இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரைக்கு வந்திருக்கிறார்.

மதுரை போனோமா.. மீனாட்சி அம்மனை பார்த்தோமா.. பட்டம் கொடுக்கும் விழாவில் பங்கேற்றோமா.. என்று இல்லாமல் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர், இதர அதிகாரிகளை கூப்பிட்டு ஆய்வு கூட்டம் நடத்தியிருக்கிறார்.

அரசு திட்டங்கள் சரியாக அமல்படுத்தப்படுகிறதா? என்று அதிகாரிகளிடம் துருவி துருவி கேள்வி கேட்டிருக்கிறார்.

மட்டுமல்லாது சவுராஷ்டிரா கல்லூரி மாணவர்களிடம் பேசிய அவர், "வரும்போது வைகை ஆற்றை பார்த்தேன். ஆறு இருக்கிறது.. தண்ணீர் இல்லை.

இதை சரி செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும். துப்பாக்கியை தூக்கிக்கொண்டு சண்டைக்கு போவது மட்டும் தேச பக்தி கிடையாது! நதிகளை பாதுகாப்பதும் தேச பற்றுதான்.

இந்த பிரச்சனை சரி செய்யாவிட்டால்.. ஆளுநர் மாளிகை நேரடியாக களமிறங்கும்" என்று கூறியிருக்கிறார்.

மக்கள் ஓட்டு போட்டு ஒரு அரசை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட அரசு இருக்கும்போது.. ஆய்வு மேற்கொள்ள ஆளுநர் யார்?

தமிழகத்தில் என்ன ஆளுநர் ஆட்சியா நடக்கிறது? என்று திமுக காட்டமாக கேள்வி எழுப்பியது.

எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது.. விசிக, இடதுசாரிகள் என தவெகவுக்கு சப்போர்ட் செய்த கட்சிகளும் இந்த விஷயத்தில் கொந்தளித்திருந்தன.

விஷயம் பெரியதாவதை உணர்ந்த அமைச்சர் நிர்மல் குமாரும், ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்தார்.

சரி இத்தோடு பஞ்சாயத்து முடிந்துவிடும் என்று நினைத்துக்கொண்டிருந்தபோதுதான்.. புதிய சர்ச்சையை கிளப்பினார் பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர்!

அதாவது மக்கள் தங்கள் பிரச்சனை குறித்து ஆளுநர் மாளிகையில் முறையிடலாமாம். முதலமைச்சரிடம் புகார் கொடுக்க தனிப்பிரிவு என்று ஒன்று இருக்கிறது.. இதேபோல ஆளுநரும் தனி பிரிவை உருவாக்கி.. மக்கள் பிரச்சனைகளை கேட்க இருக்கிறாராம். வாக்களித்த மக்களால் பிரச்சனைகளை உணரவும் முடியும்; தீர்வுகளை சொல்லவும் முடியும் என்றும், மக்கள் பிரச்சனைகளை தீர்க்க தவெக அரசுடன் இணைந்து செயல்படுவேன் என்றும் ஆளுநர் நேற்று பேசியிருந்தார்.

இதையெல்லாம் பார்க்கும்போது.. தமிழகத்தில் ஆளுநர் ஆட்சிதான் நடக்கிறதோ? என்று சந்தேகம் எழுவதாக பல்வேறு தரப்பினரும் கேள்வி கேட்க தொடங்கியிருக்கின்றனர்.

இதே திமுக ஆட்சியில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால்.. ஆட்டுக்கு தாடி எதுக்கு.. நாட்டுக்கு ஆளுநர் எதுக்கு என்று பட்டாசாய் வெடித்திருப்பார்கள் திமுக தலைவர்கள்.

ஆனால், தவெக ஆட்சியில் முதலமைச்சர் விஜய் இன்னும் எதுவும் பேசாமல் இருக்கிறார்.


இது கூட்டணி தலைவர்களை டென்ஷன் ஆக்கியிருக்கிறது.


ஆளுநரை போகிற போக்கில் விட முடியாது.. நாங்களே எவ்வளவுதான் சண்டை செய்வது! முதலமைச்சரை இந்த விஷயத்தில் கறாராக பேச சொல்லுங்க என்று தலைவர்கள் கொந்தளித்துள்ளனர்.


முன்பு திமுக வினர் பேசுங்க சி.எம். என்றார்கள்.இன்று அவரின் கல்லாபெட்டி கூட்டணியினரே அதைக் கூறும். நிலைக்கு வந்துள்ளனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை