குழம்பிப் போனது யாரு?

 
குழம்பிப் போனது

 யாரு?

திமுக உடன் கூட்டணியில் இருந்தாலும், விமர்சனம் செய்பவர்கள் செய்து கொண்டு தான் இருப்பார்கள் என்றும், தன்னை மதிப்பிட வேறு யாருக்கும் ஆளுமையே இல்லை என்றும், திமுகவை நோக்கி திமிறி இருந்த திருமாவளவன், தற்போது அவர்களுடன் தான் கூட்டணியில் உள்ளோம் என்பதுபோல் பேசி உள்ளது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

 அது எப்படி தவெக அமைச்சரவையில் இருந்து கொண்டு அதனை எதிர்க்கும் திமுக உடன் நட்புறவில் இருக்க முடியும்? அது சாத்தியமா? அப்படியென்றால் திருமாவளவன் விமர்சனம் செய்வாரா? அல்லது விமர்சனத்திற்கு தான் பதில் அளிப்பாரா? ஒரேநேரத்தில் 2 படகில் பயணிக்க முடியுமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 இருப்பது தவெக அமைச்சரவையில், ஆனால் இன்னும் கூட்டணி என்னவோ திமுக உடன் தான் என்பதுபோல் பேசிவரும் திருமாவளவன் ஏன், ”ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்” என தத்தளித்துக் கொண்டிருக்கிறார்? 

இக்கரைக்கு அக்கரை பச்சையாக தெரிகிறதா? 

தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாததுபோல தவெகவுடன் ஒட்ட முடியாமல் புழுங்கி கொண்டிருக்கிறாரா? அல்லது திமுகவைவிட்டு முழுமையாக விலக முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாரா? 

அவருக்கு என்ன தான் நெருடல்? எடுத்த நிலைப்பாட்டில் ஏன் இவ்வளவு தடுமாற்றம்? என்பதே பலரது கேள்வி.

நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க முடியாமல் ஆதரவு கட்சிகளின் கடைக்கண் பார்வைக்காக காத்துக் கொண்டிருந்தது.

 அந்த நேரத்தில், திமுக உடனான பல ஆண்டு பந்தத்தையே முறித்துக்கொண்டு முதல் ஆளாக ஓடிவந்து ஆதரவுக்கரம் நீட்டியது காங்கிரஸ். 

அடுத்து, சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளும் ஆதரவு கொடுத்து ஆட்சியமைப்பதற்கான வழியை ஏற்படுத்தி கொடுத்தது. 

அந்தநேரத்தில், வெளியிலிருந்துதான் ஆதரவு, அமைச்சரவையில் கட்டாயம் இடம் பெறமாட்டோம் என வாக்குறுதியளித்த விசிக அடுத்த சில நாட்களிலேயே அமைச்சரவையில் இடம்பிடித்து ஆச்சரியப்பட வைத்தது.

அதன்பிறகு, திமுகவினர் விசிகவினரை நோக்கி துரோகிகள் என விமர்சனக் கணையை தொடுக்க, கூட்டணியில் இருந்தபோது ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என காட்டுக் கத்து கத்தினோமே, அதனை ஒருநாளாவது காதுகொடுத்து கேட்டீர்களா? என விசிகவினரும் பதில் கொடுத்தனர். 

இப்படி இருதரப்பினரும் மாறி மாறி விமர்சன அம்பை வீச தன் பங்குக்கு திருமாவும் திமுகவிற்கு சாஃப்ட்டாகவே பதிலளித்தார்.

’நட்பிற்கு இலக்கணமாக இருந்த தங்களையே திமுகவினர் விமர்சனம் செய்வது வலியை தருகிறது, ஆனாலும் அவர்கள் விமர்சிப்பதும் சரி தானே’ என அவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தையும் எடுத்துக்கூறிய திருமாவளவன், திமுக உடனேயே தொடர்ந்தாலும் விமர்சனம் செய்பவர்கள் செய்து கொண்டுதான் இருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

 அப்படியென்றால், அவர் திமுக கூட்டணியில் இல்லை என்பது அப்போதே உறுதியாகி விட்டது. இது, தவெக அமைச்சரவையில் விசிக இடம் பிடித்த நேரத்தில் திருமாவளவன் பேசியது. 

இதனை தொடர்ந்து பல இடங்களில் பேசிய திருமாவளவன், திமுக மீதான விமர்சனத்தை பட்டும் படாமல் முன்வைக்க தவறவில்லை.

இந்நிலையில், திருமண விழா ஒன்றில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, சோபா வந்ததும் சிலர் திமுகவை உதறிவிட்டு சென்றுவிட்டதாக விமர்சனம் செய்தார்.

 இதற்கு பதிலளிக்கும் வகையில் விசிகவின் விருது வழங்கும் விழாவில் பேசிய திருமாவளவன், தங்களுடன் கூட்டணி இல்லை என அறிவித்தது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தானே தவிர, நாங்கள் இல்லை எனக் கூறியதோடு நூற்றுக்கணக்கான கோடிகளை சோஃபாவில்தான் கொண்டு வந்து கொடுப்பார்களா?

 தன்னை காயப்படுத்தி தலைமையை பலவீனப்படுத்துகிறார்களா? என்னை மதிப்பிட இங்கு வேறு யாருக்கும் ஆளுமை இல்லையென திமுகவை நோக்கி திமிறி இருந்தார்.

இதுமட்டுமல்லாது, தவெக கூட்டணி அமைத்தால் நிச்சயம் அதில் இடம்பெறுவோம் எனவும் திட்டவட்டமாக கூறினார். இதுஒருபுறமிருக்க, பதவிக்காக ஒட்டிக்கொள்ள முடியுமா? அல்லது பதவிக்காக கட்டி புரண்டு உருளதான் முடியுமா? 

திமுக கூட்டணியில் இருந்த தங்களுக்கு தவெகவின் வெற்றி எப்படி மகிழ்ச்சியை தரும்? எனவும் கேள்வி எழுப்பினார். திருமாவின் இந்த பேச்சை எப்படி கூட்டிக்கழித்து பார்த்தாலும் எந்த பக்கம் ஆதரவு?

எந்த பக்கம் நட்புறவு?

 என்பது மட்டும் புலப்படவே இல்லை.

அந்நியன் போன்று கருத்தை மாற்றி மாற்றி சொல்லி வரும் திருமாவளவன், 

அவர்தான் குழப்பத்தில் உள்ளாரா? அல்லது மற்றவர்களை தான் குழப்புகிறாரா? என்ற சந்தேகம் எழும் நிலையில், தவெக அரசு அமைவதற்கே காரணமாக உள்ள திருமாவளவன், தற்போது அந்த கூட்டணியிலேயே இல்லை என்பதுபோல் பேசுவது வியப்பாக தான் உள்ளது.

 கம்யூனிஸ்ட்டுகள் எடுக்கும் முடிவைதான் நாங்கள் எடுப்போம் என தவெக ஆட்சியமைந்த நேரத்தில் கூறிய திருமாவளவன், அந்த முடிவிலேயே உறுதியாக இல்லை. 

காரணம், கம்யூனிஸ்டுகள் தற்போதுவரை வெளியிலிருந்து தான் ஆதரவு கொடுத்துள்ளார்கள். 

அமைச்சரவையில் இடம்பெறவில்லை.

எதுவும் செய்யமுடியவில்லை இப்படி திருமாவளவன் மாறிமாறி பேசுவதற்கு பின்னால் சில காரணங்கள் உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இத்தனை ஆண்டுகாலம் கூட்டணியில் இருந்த திமுகவை விட்டு மனதளவில் அவரால் வெளியில் வர முடியவில்லையாம்.

 அதேபோல், தற்போது தங்களிடம் உள்ள 2 சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றிக்கும் கூட சிறிதளவேனும் திமுகவினரின் உழைப்பும் உள்ளது என்ற குற்றவுணர்ச்சியும் அவ்வப்போது தட்டி எழுப்புகிறதாம். முழுமையாக தவெக பக்கமே சாய்ந்துள்ளதால் திருமாவால் தனியாளாக எதுவும் செய்ய முடியவில்லையாம்.

இது ஒருபுறம் இருந்தாலும், திருமாவளவனின் இந்த பேச்சு குட்டி சிறுத்தைகளுக்குமே தர்மசங்கடத்தை தான் கொடுத்துள்ளதாம். வழக்கமாக வன்னி அரசுவின் பேச்சைதான் திருமாவளவன் சரிசெய்து கொண்டிருந்தார்.

 தற்போது, திமுக அவதூறு பரப்பினால் திருப்பி அடிப்போம் என வன்னி அரசுவே வெளிப்படையாக சீறிவரும் நிலையில் திருமாவளவன், ஏதோ குச்சியால் வெறும் தரையில் அடித்துவிட்டு குழந்தையை சமாதானம் செய்வதுபோல் பேசுவது சரியல்ல எனவும் முணுமுணுத்துக் கொள்கிறார்களாம். 

தவெக அரசை ஆட்டிப் படைப்பது தான் திமுகவின் எண்ணம் என அரசியல் நிலவரம் இருக்க, அந்த அமைச்சரவையிலேயே இருந்துகொண்டு திமுகவுடன் திருமாவளவன் நட்பு எனக்கூறுவது ஏற்புடையதா?

தவெக அமைச்சரவையிலும், திமுக கூட்டணியிலும் ஒரே நேரத்தில் அவர் பயணித்தாரா? அப்படி 2 படகுகளில் ஒரே நேரத்தில் பயணிக்க முடியுமா? அப்படியென்றால் திருமாவளவன் விமர்சிக்கும் இடத்தில் இருந்தாரா?

 அல்லது விமர்சனத்திற்கு பதில் சொல்லும் இடத்தில் இருந்தாரா? தவெக அரசின் மீதான விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் பொறுப்பு விசிகவிற்கு இல்லையா?

 ஒரே நேரத்தில் தவெக அமைச்சரவையிலும், அதனை எதிர்க்கும் எதிர்க்கட்சியுடனும் எப்படி நட்புறவுடன் இருக்க முடியும்? 

என சந்தேகம் எழும் நிலையில் இவரே இப்படி மாறி மாறி பேசிக் கொண்டிருந்தால் குட்டி சிறுத்தைகளும் குட்டிக்கரணம் அடிக்கமாட்டார்களா? 

என்ற கேள்வியும் எழுகிறது.







உபி அரசின் ‘உபரி வருவாய்’ முகமூடி: இமாலய புள்ளிவிபர மோசடி!

உத்தரப் பிரதேச ஆதித்யநாத் அரசு, தங்களின் மாநிலத்தில் கடந்த ஆறாண்டு களாக ‘உபரி வருவாய்’ (Revenue Surplus) நிலவுவதாகக் கூறி வரும் வெற்று விளம்பரங் களின் பின்னால் இருக்கும் இமாலயப் புள்ளி விவர மோசடியை, இந்தியத் தலைமைத் தணிக்கையாளர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வத் தரவுகள் அப்பட்ட மாக வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன.


ஜூன் 16 அன்று வெளியான சிஏஜியின் 2024-25 நிதி யறிக்கையின்படி, உபி அரசு காட்டியுள்ள ₹59,327 கோடி உபரி வருவாய் என்பது, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியால் வந்ததல்ல; மாறாக, மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைச் செலவிடாமல் முடக்கியதால் உருவான ஒரு போலியான கணக்கு வித்தையாகும்.


இது ஒட்டுமொத்தமாக 13 மாநிலங்கள் காட்டியுள்ள ₹1.27 லட்சம் கோடி உபரி நிதியில், தனி ஒரு மாநிலமாகவே 50 சதவீதத்தை உபி பிடித்துள்ளது போன்ற போலி பிம்பத்தை உருவாக்கியுள்ளது.

கடந்த பத்தாண்டு காலமாகவே, உபி அரசு தனது சொந்த பட்ஜெட் தொகையை முழுமையாகச் செலவிடத் துப்பற்றுக் கிடக்கிறது. குறிப்பாக 2019-20 முதல் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தொகையில் குறைந்தது 15 சதவீதத்திற்கும் மேல் செலவிடாமல் முறை கேடாக முடக்கியுள்ளது.


2024-25 நிதியாண்டில், அம்மாநிலத்தின் வருவாய் வரவு 16 சதவீதம் குறைந்த போதிலும், திட்டங்களுக்கான செலவினங்களை அதைவிடக் கூடுதலாக 15.4 சதவீதம் அளவிற்கு பாஜக அரசு வெட்டிச் சுருக்கியுள்ளது.


சில மாநிலங்கள் தங்களின் இலக்குகளை எட்டி, பட்ஜெட்டை விடக் கூடுதலாகச் செலவிட்டு மக்கள் நலனைக் காக்கும் வேளையில், உபி அரசோ நிதியைத் தேக்கி வைத்துப் போலி உபரி பிம்பத்தைக் காட்டுகிறது.


மற்ற பல மாநிலங்களின் நிதியியல் திறனோடு ஒப்பிட்டால், உபியின் இந்த உபரி என்பது உண்மையில் ஒரு பெரும் பற்றாக்குறையாகவே (Deficit) மாறியிருக்கும்.


இந்த மோசடி, உள்கட்டமைப்பு மற்றும் மூலதனச் செலவினங்களில் மேலும் விபரீதமாகப் பிரதிபலிக்கிறது. 2024-25-ல் மூலதனச் செலவுக்காக ஒதுக்கப்பட்ட ₹1.55 லட்சம் கோடியில், வெறும் ₹1.13 லட்சம் கோடியை மட்டுமே செலவிட்டு, 27 சதவீத நிதியை அப்படியே முடக்கியுள்ளது.


ஒன்றிய அரசின் வரிப் பகிர்வு மற்றும் மானியங்கள் மூலம் தங்களின் மொத்த வருவாயில் 55.11 சதவீதத்தை மத்திய நிதிப் பகிர்வாகப் பெறும் உபி அரசு, அந்த நிதியையும் பயன்படுத்தாமல், ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதியில் 38.4 சதவீதத்தைச் செலவிடாமல் பாழாக்கியுள்ளது.


ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான நிதியைத் திட்டமிட்டு முடக்கிவிட்டு, அதனை ‘உபரி நிதி’ எனப் பறைசாற்றிக் கொள்ளும் பாஜக அரசின் இந்த மக்கள் விரோத, நிர்வாகத் திறனற்ற புள்ளிவிவரச் சூழ்ச்சிகள் தற்போது அம்பலமாகி அவமானப்படுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை