பூஜ்ஜியம்' 0' தான்…
திமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றியதை தவிர வேறு எந்த மாற்றமும் பட்ஜெட்டில் இல்லை என உதயநிதி விமர்சித்துள்ளார். மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவெக அரசுக்கு திராணி இல்லை என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது;நூறு நாட்களில் தவெக அரசுக்கு பூஜ்ஜியம் தான் மதிப்பெண்ணாக வழங்க முடியும்.
பட்ஜெட்டுக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண் தான். வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்? என்ற கேள்விக்கு தவெக அரசிடம் பதில் இல்லை. மாற்றம், மாற்றம் என்று கூறியவர்களின் ஆட்சியில் பெயர் மாற்றம் மட்டுமே நடந்துள்ளது.
திமுக அரசின் திட்டங்களுக்கு தவெக ஸ்டிக்கர் ஒட்டி அறிவித்துள்ளது. அன்பு சோலை என திமுக கொண்டு வந்த திட்டத்துக்கு `முதியோர் பொழுதுபோக்கு மையங்கள்’ என்றும் `உலகம் உங்கள் கையில்’ என்ற லேப்டாப் திட்டத்துக்கு `வெற்றி மடிக்கணினி திட்டம்’ என்றும் `கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்துக்கு `வெற்றி வீடு திட்டம்’ என்றும் `முதல்வர் படிப்பகங்கள்’ திட்டத்துக்கு `டிஜிட்டல் நூலகம்’ என்றும் `நன்னிலம்’ திட்டத்துக்கு `மண்ணின் மகள் திட்டம்’ என்றும் பெயரை மாற்றி உள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்திய திட்டங்களையே பெயர் மாற்றி அறிவித்து உள்ளனர்.
திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்தது. மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவெக அரசுக்கு தைரியம் இல்லை. சட்டமன்றத்தில் பட்ஜெட் குறித்து கேள்வி கேட்பதை தடுக்கவே என்னை கைது செய்து அலைக்கழிப்பு செய்தனர்.
தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கடந்த 5 வாரங்களில் 4 காவல் மரணங்கள் நடந்து உள்ளன. ஜாதி ஆணவக் கொ*கள் நடந்து உள்ளன.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி நிறைவேற்றப்படவில்லை. தமிழ்நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் தருவதாக முதல்வர் தேர்தல் பிரசாரத்தில் சொன்னார்.
ஆனால், அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
-இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்..
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, “தமிழக வெற்றி கழக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பட்ஜெட்டில் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் எந்த முக்கியமான அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதனால் மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்போம் என்று முதலமைச்சரும் அமைச்சர்களும் கூறியிருந்தனர். ஆனால் பட்ஜெட்டைப் பார்க்கும்போது ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து, ‘ஸ்டிக்கர்’ ஒட்டியதுபோலவே அறிவித்திருக்கிறார்கள்.
புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த அரசு பொறுப்பேற்று சுமார் 85 நாட்கள் ஆகின்றன. இந்த 85 நாட்களில் புதிய திட்டம் ஒன்றைக்கூட கொண்டு வரவில்லை.
வெறும் வசனங்களையும், ரீல்ஸ் வெளியிடுவதையுமே இந்த அரசின் சாதனையாக பார்க்க முடிகிறது.
தேர்தலுக்கு முன்பு, இதற்கு முன் எந்த ஆட்சியும் செயல்படுத்தாத திட்டங்களை மக்களுக்கு வழங்குவோம் என்று வீரவசனம் பேசினார்கள். ஆனால் இந்த நிதிநிலை அறிக்கையில் தேர்தல் வாக்குறுதிகளில் எதுவும் முழுமையாக இடம்பெறவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலின் போது தமிழக வெற்றி கழகத் தலைவர் மற்றும் தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய், ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் உரிமைத் தொகையை ₹1,000லிருந்து ₹2,500 ஆக உயர்த்துவோம் என்றும், ஆண்டுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆறு எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
அதேபோல், முதியோர் உதவித்தொகையை ₹3,000 ஆக உயர்த்துவோம், வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ₹4,000 வழங்குவோம், மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை ₹20,000 ஆக உயர்த்துவோம், டீசல் மானியத்தை 3,600 லிட்டராக உயர்த்துவோம் என்று பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
விவசாயிகளுக்கு, ஐந்து ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்றும், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களின் பயிர்க்கடனில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் தற்போது ₹75,000 வரை கடன் பெற்ற சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மட்டுமே முழு கடன் தள்ளுபடி என்றும், அதற்கு மேல் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் ₹35,000 மட்டும் தள்ளுபடி என்றும் அறிவித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது.
மேலும், அனைத்து குடும்பங்களுக்கும் ₹25 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த வாக்குறுதியும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
மொத்தத்தில், தேர்தல் வாக்குறுதிகளும் இல்லை; புதிய திட்டங்களும் இல்லை. ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து அறிவித்திருப்பதைத்தான் இந்த நிதிநிலை அறிக்கையில் பார்க்க முடிகிறது.





