குடிநீர் பஞ்சம்.தீர்க்க
பனிப் பாறைகள்...!
உலக அளவில் நன்னீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் பூதாகரமாக உருவெடுத்து வருகிறது.
இந்நிலையில், அண்டார்டிகா மற்றும் ஆர்க்டிக் துருவப் பகுதிகளில் உள்ள பிரம்மாண்டமான பனிப்பாறைகளைக் கடல் வழியே கப்பல்கள் மூலம் இழுத்து வந்து நன்னீராக மாற்றும் திட்டத்தை சர்வதேச விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் மீண்டும் பரிசீலித்து வருகின்றனர்.
கடந்த 1977-ம் ஆண்டு சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது அல்-பைசல், அரேபிய தீபகற்பத்தின் கடுமையான குடிநீர் பஞ்சத்தைத் தீர்க்க இந்த யோசனையை முதன்முதலில் உலகுக்கு முன்வைத்தார்.
இத்திட்டத்தின் சாத்தியக்கூறை நிரூபிப்பதற்காக, அலாஸ்கா பகுதியில் இருந்த சுமார் 1.5 டன் எடையுள்ள மிகப்பெரிய பனிப்பாறை ஒன்றை ஐயோவா மாநிலத்துக்குப் பிரத்யேகக் கப்பல் மூலம் வெற்றிகரமாக இழுத்து வந்து செயல்முறை விளக்கமும் அளித்தார்.
அக்காலத்தில் தொழில்நுட்பக் குறைபாடுகள், பனிப்பாறை வழியிலேயே உருகுவதைத் தடுக்கும் முறைகள் இல்லாதது மற்றும் அதிகப்படியான கடற்போக்குவரத்துச் செலவு ஆகிய காரணங்களால் இத்திட்டம் வணிக ரீதியாகத் தொடரப்படாமல் கைவிடப்பட்டது.இப்போது நவீனத் தொழில்நுட்பத்துடன் அந்த திட்டத்தை மறுபிரவேசம் செய்ய விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
தற்போது பருவநிலை மாற்றம், நிலத்தடி நீர் மட்டம் குறைதல் மற்றும் மக்கள்தொகை பெருக்கம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் நன்னீர் தட்டுப்பாடு உச்சத்தைத் தொட்டுள்ளது.
இதன் காரணமாக, சர்வதேசப் பொறியாளர்கள் குழு இத்திட்டத்தை அதிநவீனத் தொழில்நுட்பங்களுடன் மீண்டும் கையிலெடுத்துள்ளது. துருவப் பகுதியில் மிதக்கும் சரியான வடிவம் கொண்ட பனிப்பாறைகளை செயற்கைக்கோள் மூலம் கண்டறிதல். கடல் பயணத்தின்போது வெப்பத்தால் பனிப்பாறை உருகாமல் இருக்க, அதைச் சுற்றி வெப்பம் கடத்தா சிறப்பு உறைப் பூச்சுகளைப் பயன்படுத்துதல்.குறைந்த எரிபொருளில் அதிக எடையைச் சுமந்து செல்லும் நவீனக் கப்பல்கள் மூலம் பனிப்பாறைகளைப் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வருதல் உள்ளிட்டவற்றில் விஞ்ஞானிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஒரு மிகப்பெரிய பனிப்பாறையைக் கொண்டு வருவதன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்குப் பல மாதங்களுக்குத் தேவையான தூய்மையான குடிநீரை வழங்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுற்றுச்சூழலுக்குப் பெரிய பாதிப்புகள் இன்றி இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான இறுதி சாத்தியக்கூறுகள் குறித்து தீவிர ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன
ஏ.ஐ (A.I)பயிற்சி |
இன்றைய காலக்கட்டத்தில் அடிப்படை கணினி அறிவு அனைவருக்கும் அவசியமாக இருப்பதைப் போலவே, மெல்ல மெல்ல ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) தற்போது மனித வாழ்வில் முக்கிய இடத்தைப் பெற்று, அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகவும் மாறிவருகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசின் மின்னணு - தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ‘யுவா ஏ.ஐ. ஃபார் ஆல்' என்கிற கட்டணமில்லா ஏ.ஐ. பயிற்சியை வழங்குகிறது.
அனைத்துத் தரப்பினரும் ஏ.ஐ. பற்றிய அடிப்படைத் திறன்களைப் பெற இந்தப் பயிற்சி உதவும்.
இது 4.5 மணி நேர இணையவழிப் பயிற்சி. தமிழ் உள்பட 11 மொழிகளில் வழங்கப்படுவதால், அனைவரும் எளிதாகக் கற்றுக்கொள்ளலாம்.எழுதப் படிக்கத் தெரிந்த அனைவரும் இதில் சேரலாம்.
இந்தப் பயிற்சியின் மூலம் ஏ.ஐ. செயல்பாடுகள், அதைப் பயன் படுத்தும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், இத் துறையில் உருவாகவுள்ள வேலைவாய்ப்புகள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
இந்தப் பயிற்சி பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவல கங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைவருக்கும் பயனுள்ள தாக இருக்கும். பயிற்சியை நிறைவுசெய்பவர்களுக்கு ஒன்றிய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.
இதில் சேர ‘ஃபியூச்சர் ஸ்கில்ஸ் பிரைம்' இணையதளத்தைப் பார்வையிடலாம்.
இதைத் தவிர, ‘கூகுள் ஏ.ஐ. எசென்ஷியல்ஸ்', ‘எலிமென்ட்ஸ் ஆஃப் ஏ.ஐ.', ‘ஜியோ ஏ.ஐ. கிளாஸ்ரூம்' போன்ற பயிற்சிகளையும் கற்றுக்கொள்ளலாம்.
மேலும், ‘ஏ.ஐ. / எம்.எல். யூசிங் பைத்தன்' என்கிற 36 மணி நேரப் பயிற்சியும் ‘ஸ்வயம்' இணையதளத்தில் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.
இதில் சேர கணிதத்தில் அடிப்படை அறிவும், கணினி அல்லது மென்பொருள் பயன்பாட்டில் ஓரளவு அறிவும் இருந்தால் போதுமானது.
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு இந்தப் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.




