முல்லைப் பெரியாறு அணைக்கு

ஆபத்து...?

 உச்ச நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்புகள் மற்றும் நிபுணர் குழுக்களின் தொடர் கள ஆய்வுகள் மூலம் முல்லைப் பெரியாறு அணை முழுமையான பாதுகாப்புடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையிலும், அணை உடைந்து பேரழிவு ஏற்படும் என்ற ரீதியில் ஏ.ஐ. (AI) தொழில்நுட்ப வீடியோக்களை வெளியிட்டு மக்களிடையே தொடர் பீதியை உருவாக்கி வரும் கேரள யூடியூபர்கள் மீது மத்திய புலனாய்வுத் துறை மூலம் கடுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 1895-ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்த முல்லைப் பெரியாறு அணை, 999 ஆண்டு கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழக நீர்வளத்துறையினரால் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த அணையின் தண்ணீரை மட்டுமே நம்பி மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் சுமார் 2.57 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும், கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தியாகி வருகின்றன.


இந்நிலையில், கடந்த 1979-ஆம் ஆண்டு முதல் அணை பலவீனமாக இருப்பதாகக் கூறி கேரள அரசியல்வாதிகள் ஏற்படுத்திய தொடர் முட்டுக்கட்டைகளுக்கு பிறகு, தற்காலிகமாக 136 அடியாக குறைக்கப்பட்ட நீர்மட்டத்தை, பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல கட்டங்களாக பலப்படுத்தப்பட்ட பின்னரும் உயர்த்த கேரளா தொடர்ந்து மறுத்து வந்தது.


இதனையடுத்து, தமிழக அரசு மேற்கொண்ட சட்டப் போராட்டங்களின் பயனாக, கடந்த 2006 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் நிபுணர் குழுக்களின் பாதுகாப்பு அறிக்கைகளை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாகத் தேக்கலாம் என்றும்,

பேபி அணையை பலப்படுத்திய பின் முழு கொள்ளளவான 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்தது.


அந்த உத்தரவுகளின்படி தமிழக அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து 142 அடி வரை நீரைத் தேக்கி நடைமுறைப்படுத்திய போதும், அங்கு புதிய அணை கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் கேரளாவில் சிலர் தொடர் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


குறிப்பாக, சமீப நாட்களாகச் சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்களை பரப்பி இரு மாநில மக்களிடையே பதற்றத்தை விளைவிக்கும் சமூக விரோத சக்திகள் மீது சட்டப்படி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தேர்தல் ஆணைய முறைகேடு..?

2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின்  வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 

இத்தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, அத்தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரங்களின் (EVM) செயல்பாட்டில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, 100% வி.வி.பி.ஏ.டி (VVPAT) தாள்களையும் மீண்டும் எண்ணித் தன்னை வெற்றியாளராக அறிவிக்கக் கோரி மு.க. ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இவ்வழக்கின் விசாரணையில், மு.க. ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். 2024-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் 7 நாட்களுக்குள் 5% மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைச் சரிபார்க்க விண்ணப்பிக்க முடியும்.

 அதனடிப்படையில், தேர்தல் முடிவுகள் மே 4 அன்று வெளியான 3 நாட்களிலேயே சரிபார்ப்பிற்காக விண்ணப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், தேர்தல் ஆணையம் இந்தச் சரிபார்ப்புப் பணியை ஜூலை 29 அன்று தாமதமாகத் தொடங்கி, ஆகஸ்ட் 5 அன்றே நிறைவு செய்தது. 

இதனால், தேர்தல் முடிவை எதிர்த்து வழக்குத் தொடரத் தேவையான 45 நாட்கள் கெடு முடிந்துவிட்டது என்றும், தாமதத்திற்குத் தேர்தல் ஆணையமே காரணம் என்பதால் மனுதாரரின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என்றும் வாதிடப்பட்டது.

 மேலும், எந்திரங்களைச் சரிபார்த்தபோது ஒரு எந்திரத்தில் வேட்பாளரின் பெயரைக் கண்டறிய முடியாமல் போனது போன்ற தீவிரமான குளறுபடிகள் வெளிப்பட்டதாகவும் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர்கள், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 329(b) மற்றும் 1951-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, ஒரு தேர்தலின் முடிவை தேர்தல் மனு (Election Petition) மூலமாக மட்டுமே சவாலுக்கு உட்படுத்த முடியும் என்று சுட்டிக்காட்டினர்.

 இதுபோன்ற ரிட் மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டால், அது தவறான முன்மாதிரியாக அமைந்து, எதிர்காலத்தில் பலரும் நீதிமன்றத்தை அணுகும் நிலையை உருவாக்கும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.

இதனிடையே, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைச் சரிபார்ப்பதற்காகத் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) எதிர்த்து மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்திருந்த மற்றொரு ரிட் மனு திரும்பப் பெறப்பட்டது. 

2024-ஆம் ஆண்டின் பழைய நெறிமுறைகளை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், 2025-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய நெறிமுறைகளின் அடிப்படையில் புதிதாக மனுத் தாக்கல் செய்ய அனுமதி அளித்தனர்.

தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு, அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர், மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த முதன்மை மனுவின் மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. 

தமிழக அரசியலில் வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்த விவாதங்களை இந்த வழக்கு மீண்டும் உற்றுநோக்க வைத்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி