கடல் சூல் உலகு.,.!

 சட்டப்பேரவையில்  முக்கிய விவாதங்கள்* இன்றைய சட்டப்பேரவை நடவடிக்கைகளில்  அரசின் முடிவுகள் முக்கிய இடம் பெற்றுள்ளன. 

குறிப்பாக, முந்தைய ஆட்சிக் காலத்தில் அமைதியான போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்துள்ளது. * திருப்பூர் வடக்கு தொகுதியைச் சேர்ந்த தவெக எம்.எல்.ஏ வி. சத்யபாமா, சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இருவரும் இல்லாத நிலையில், மாற்றுச் சபாநாயகர் பட்டியலின்படி இன்று அவையை வழிநடத்தினார். 

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் அந்தப் பொறுப்பை ஏற்ற முதல் பெண் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.* முதல்வர் விஜய் எதிர்காலத்தில் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகிப்பார் என்ற தவெக தரப்பினரின் கருத்துகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையான கிண்டலுடன் பதிலளித்துள்ளார். 

விஜய் பிரதமராக வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் குறித்தும் அவர் விமர்சனம் செய்துள்ளார். இது அதிமுக–தவெக இடையேயான அரசியல் மோதல் தீவிரமடைவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.* தவெக ஆட்சி அமைந்துள்ள சூழலில், திமுக எதிர்க்கட்சியாக அரசின் முடிவுகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறது. மறுபுறம், தவெக தன்னை முந்தைய ஆட்சியிலிருந்து மாறுபட்ட நிர்வாகமாக முன்னிறுத்துகிறது. இதனால் தமிழக அரசியல் களம் தற்போது திமுக–தவெக–அதிமுக மோதலைச் சுற்றி நகர்கிறது.* மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமலேயே சில ஈரநில மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுக்கும் வகையில் புதிய மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது. 

இதற்கு தி.மு.க,அதிமுக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாதிக்கப்படலாம் என்பதே அவர்களின் கருத்து.* வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா என்ற எளிய கேள்விக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் நீண்ட பதில் வள,வள என அளித்ததால் அவையில் நகைச்சுவையான சூழல் ஏற்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் இதை நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு முறையை கொண்டு வந்தவர் ஜெயலலிதா என்று விவரமறிந்த பலரும் கூட நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இடஒதுக்கீடு வரலாறு (சுருக்கமாக) :

* 1921ல் நீதிக்கட்சி ஆட்சியில் சாதிவாரியாக இடஒதுக்கீடு கொடுத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

* 1971 கலைஞரின் திமுக ஆட்சியில் சட்டநாதன் ஆணையம் பரிந்துரைப்படி இடஒதுக்கீடு 49% ஆக (பிற்படுத்தப்பட்டோர் 31%, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 18%) நிர்ணயிக்கப்பட்டது. அன்றைய நிலையில் இந்தியாவில் இடஒதுக்கீடு 50%-க்கு மிகக்கூடாது என்கிற வரையறையின் உச்சத்தை முதலில் எட்டியது தமிழ்நாடு.

* 1980ல் இடஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் அமல்படுத்த முயற்சித்த அதிமுக ஆட்சி, பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து இழந்த செல்வாக்கை மீட்க பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டுமே 50% இடஒதுக்கீடு என்று எம்.ஜி.ஆர் அறிவிக்க, 50% பிற்படுத்தப்பட்டோர் + 18% தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் என்று 68% இடஒதுக்கீடு ஆனது.

* 1987 வாக்கில் வன்னியருக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு பெரும் போராட்டங்கள் நடந்தன. 1989ல் ஆட்சிக்கு வந்த கலைஞர், வன்னியர் உள்ளிட்ட சாதிகளை இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்கிற புதிய பிரிவை உருவாக்கி அவர்களுக்கு 20%, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 30%, தாழ்த்தப்பட்டோருக்கு 18%, பழங்குடியினருக்கு 1% என்று 69% ஆக்கினார்.

எனவே -

ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு என்கிற முறை வந்துவிட்டது.

பின்னர் இந்திரா சஹானி வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே இந்தியாவில் இருந்த அதிகபட்ச இடஒதுக்கீடு சதவிகிதம் 50% மிகக்கூடாது என்று தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை bypass செய்வதற்காக தமிழ்நாட்டில் 69% ஒதுக்கீடுதான் என்று சட்டமன்றத்தில் ஜெயலலிதா மசோதா கொண்டுவந்து, அதை இந்தியக் குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டு அரசியமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

2007ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டிலிருந்து 3.5% இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. போலவே 2009ஆம் ஆண்டு சிறப்புச் சட்டம் கொண்டு வந்து தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் இருந்து 3% அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு செய்துக் கொடுத்தார் கலைஞர்.

2021ல் எடப்பாடி அரசு அவசர அவசரமாக தேர்தல் அறிவிப்புக்கு 3 மணி நேரம் முன்பாக கொண்டு வந்த வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

இன்றும் கூட 69% இடஒதுக்கீடு என்பதற்கு முழுமையான சட்டப் பாதுகாப்பு இல்லை. உச்சநீதிமன்றம் 50% தான் அதிகபட்ச ஒதுக்கீடு என்பதில் உறுதியாக இருக்கிறது. தமிழ்நாடு போராடிக் கொண்டுதான் இருக்கிறது.

உயரும் கடல் நீர் மட்டம்...!

பருவநிலை மாற்றம் மற்றும் கடல் மட்டம் உயர்வு காரணமாக, இந்தியாவின் முக்கிய கடலோர நகரங்களான மும்பை மற்றும் கொல்கத்தாவில் வாழும் பல லட்சம் மக்கள் தங்களது வீடுகளை இழக்கும் “உடனடி ஆபத்தில்” இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

கடல் மட்ட உயர்வு என்பது இனி எதிர்காலப் பிரச்சனை அல்ல; வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் என அனைத்துத் தரப்பினரையும் அச்சுறுத்தும் தற்போதைய பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என ஐ.நா. அறிக்கை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.ஐ.நா. பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள, “கடல் மட்ட உயர்வு தொடர்பான சவால்கள் மற்றும் அதை எதிர்கொள்வதற்கான வழிகள்” (Challenges related to sea level rise and ways and approaches to address it) என்ற தலைப்பிலான அறிக்கையில், உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கடல் மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. 

இதனால் நகர்ப்புற உள்கட்டமைப்புகள், போக்குவரத்து, மின்சாரம், கட்டடங்கள் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.

கடல் மட்ட உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் உலகெங்கும் ஒரே மாதிரியாக இல்லை என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

 அமெரிக்காவின் மியாமி, நியூயார்க் மற்றும் சீனாவின் குவாங்சோ போன்ற அதிக வருமானம் கொண்ட நகரங்களில், கடலோர உள்கட்டமைப்புகள் பாதிக்கப்படுவதால் சுமார் $2 டிரில்லியன் முதல் $3.5 டிரில்லியன் டாலர் வரையிலான நிதி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்தியா (மும்பை, கொல்கத்தா) மற்றும் வங்கதேசம் (டாக்கா) போன்ற தெற்காசியாவின் தாழ்வான டெல்டா பகுதிகளில், இதன் முக்கியத் தாக்கம் மக்களின் இடப்பெயர்வாகவே இருக்கும்.

 இங்கு சுமார் 1.4 கோடிக்கும் அதிகமான (14 மில்லியன்) மக்கள் கடல்நீர் புகுவதால் நிரந்தரமாக வீடுகளை இழக்கும் உடனடி அபாயத்தில் உள்ளனர்.

நிதி இழப்புகளுக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம், மனித உயிர்கள் மற்றும் இடப்பெயர்வு சார்ந்த சமூக பாதிப்புகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என ஐ.நா. வலியுறுத்துகிறது.

கடல் மட்டம் உயர்வதோடு மட்டுமின்றி, நிலம் உள்ளிறங்கும் நிகழ்வும் சேர்வதால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. கடல் நீர் நிலத்தடி நீருடன் கலப்பதால் குடிநீர் ஆதாரங்கள் மற்றும் விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.

கடலோரச் சுகாதார அமைப்புகள் சேதமடைவதால், நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கின்றன. மேலும், மக்கள் மத்தியில் மனநலப் பாதிப்புகளும், மன அழுத்தமும் பெருகுகின்றன. 

மீன்பிடித் தொழில், சிறு சுற்றுலாத் துறை மற்றும் துறைமுகங்களை நம்பியுள்ள உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் இதனால் பெருமளவு முடங்கும்.

 மனிதர்களால் ஏற்படும் புவி வெப்பமடைதலே (Global Warming) பனிப்பாறைகள் உருகுவதற்கும், பெருங்கடல்கள் விரிவடைவதற்கும் முக்கியக் காரணமாகும்.

2014 – 2023: உலகளாவிய கடல் மட்டம் ஆண்டுக்குச் சராசரியாக 4.7 மி.மீ உயர்ந்தது.

2024: எல் நினோ (El Nino) மற்றும் பெருங்கடல் வெப்பமயமாதல் காரணமாக இது புதிய உச்சமாக 5.9 மி.மீ ஆக உயர்ந்தது. கடந்த 4,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சில பகுதிகளில் கடல் மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.

உலக மக்கள் தொகையில் சுமார் 10% (அதாவது 77 கோடி மக்கள்), உயர் அலை மட்டத்திலிருந்து 5 மீட்டருக்கும் குறைவான உயரத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்கள் கடுமையான ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

கடல் மட்ட உயர்வு என்பது மெதுவாக நடைபெறும் அதேவேளையில் மாற்ற முடியாத ஒரு நிகழ்வாகும்.

 எனவே, நீண்டகாலத் திட்டமிடல், உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவத் தேவையான நிதியாதாரங்களை உருவாக்குதல் ஆகியவை தற்போதைய அவசரத் தேவையாகும் என ஐ.நா. அறிக்கை கூறியுள்ளது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி