ஆணவத்திற்கான வரம்பு,?

 

தேர்தல் ஆணையரின் அதிகார வரம்பு!


தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த டி.என். சேஷன் நடத்திய சட்டப் போராட்டம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

ஒன்றிய அரசுடன் ஏற்பட்ட அதிகார மோதலை சட்டரீதியாக எதிர்கொண்ட சேஷனின் வழக்கு, தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பு மற்றும் அதன் உறுப்பினர்களுக்கிடையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பான முக்கியமான தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.


1990களில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை தீவிரமாகப் பயன்படுத்தியவர் டி.என். சேஷன்.


தேர்தல் விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தியதன் மூலம் அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை உணர்த்தியவர் என்ற பெயரை அவர் பெற்றார்.


இந்த நிலையில், 1993ஆம் ஆண்டு மத்திய அரசு தேர்தல் ஆணையத்தை மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக மாற்றியது.

இதன் மூலம் தலைமைத் தேர்தல் ஆணையருடன் தேர்தல் ஆணையர்களாக எம்.எஸ். கில் மற்றும் ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இதையடுத்து, சக தேர்தல் ஆணையர்களின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் வகையில் டி.என். சேஷன் செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.


இதனை எதிர்த்து டி.என். சேஷன் உச்சநீதிமன்றத்தை நாடினார். தலைமைத் தேர்தல் ஆணையரே தேர்தல் ஆணையத்தின் தலைவராக இருப்பதால், இறுதி அதிகாரம் அவரிடமே இருக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.


இந்த வழக்கை 1995ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு விசாரித்தது. தலைமைத் தேர்தல் ஆணையருக்கு மட்டுமே தேர்தல் ஆணையத்தின் முழு அதிகாரமும் உள்ளது என்ற சேஷனின் வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.


பல உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையத்தில் முடிவுகள் பெரும்பான்மை அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


இதன் மூலம் தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோருக்கு இடையிலான அதிகார வரம்பு தொடர்பாக முக்கியமான சட்ட நிலைப்பாடு உருவானது.

தேர்தல் ஆணையம் பல உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக செயல்படும் நிலையில், அதன் முடிவுகள் ஒரே நபரின் தனிப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் அமைய முடியாது என்பதே அந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சமாக அமைந்தது.


சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளிலும் இதே அதிகார வரம்பு தொடர்பான விவகாரம் முக்கிய சட்டப்புள்ளியாக மாறியுள்ளது.


குறிப்பாக, பல உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும், தலைமைத் தேர்தல் ஆணையரின் அதிகாரத்துக்கு என்ன வரம்பு உள்ளது,


தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் பெரும்பான்மை அடிப்படையில் எடுக்கப்படுகிறதா என்பன போன்ற கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன.


இதனால், மூன்று தசாப்தங்களுக்கு முன்பு டி.என். சேஷன் தொடர்ந்த சட்டப் போராட்டத்தில் உச்சநீதிமன்றம் வகுத்துக் கொடுத்த அதிகார வரம்பு தொடர்பான கொள்கைகள், தற்போதைய தேர்தல் ஆணையம் தொடர்பான விவாதங்களிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி