UPI கட்டணத்தில் முக்கிய மாற்றம்.

 UPI கட்டணத்தில் முக்கிய மாற்றம்.

 MDR என்றால் என்ன?


யு.பி.ஐ. (UPI) மூலம் பணம் செலுத்தும் இந்தியர்களுக்கு முக்கியமான மாற்றம் ஒன்று உருவாகியுள்ளது.


ரூ.2,000 வரையிலான யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை சேவை நிறுவனங்கள் எந்தக் கட்டணமும் வசூலிக்க முடியாது என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.


அதே நேரத்தில், ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு எதிர்காலத்தில் கட்டணம் விதிப்பதற்கான வாய்ப்பை இந்த புதிய அறிவிப்பு உருவாக்கியுள்ளது.

இதனால், கடைகளில் ரூ.2,000-க்கு மேல் பொருட்கள் வாங்கும்போது யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தினால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தற்போது அப்படி எந்தக் கட்டணமும் அமலில் இல்லை. ஆனால், அதிக மதிப்புள்ள யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு மெர்சண்ட டிஸ்கவுண்ட் ரேட் (MDR) என்ற கட்டணத்தை அறிமுகப்படுத்துவதற்கான சட்டரீதியான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


எம்.டி.ஆர். (MDR) என்றால் என்ன?

எம்.டி.ஆர். (MDR) என்பது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையைச் செயல்படுத்துவதற்காக வணிகர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணம்.


ஒருவர் கடையில் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது, அந்தப் பரிவர்த்தனையைச் செயல்படுத்தும் வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு வணிகர் ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்துவார்.

இதுதான் எம்.டி.ஆர். (MDR).


பொதுவாக கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் பரிவர்த்தனைத் தொகையில் 1 முதல் 3 சதவீதம் வரை எம்.டி.ஆர். இருக்கலாம்.

டெபிட் கார்டுகளில் இது 0.9 சதவீதம் வரை இருக்கலாம்.


ஆனால் யு.பி.ஐ. -க்கு ஜனவரி 2020 முதல் ஜீரோ எம்.டி.ஆர். நடைமுறை உள்ளது. அதாவது, UPI மூலம் கடைகளில் பணம் செலுத்துவதற்கு தற்போது எம்.டி.ஆர். வசூலிக்கப்படுவதில்லை.

முக்கியமாக, எதிர்காலத்தில் எம்.டி.ஆர். அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பணம் அனுப்பும் யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு பொருந்தாது. உதாரணமாக, நண்பருக்கு ரூ.5,000 யு.பி.ஐ. மூலம் அனுப்பினால் அதற்கு MDR கட்டணம் விதிக்கப்படாது.


ரூ.2,000-க்கு மேல் யு.பி.ஐ. செய்தால் என்ன ஆகும்?

இதுதான் தற்போது எழுந்துள்ள முக்கியமான கேள்வி.

புதிய அறிவிப்பின்படி, ரூ.2,000 வரையிலான யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க முடியாது.

ஆனால் ரூ.2,000-க்கு மேல் நடைபெறும் பரிவர்த்தனைகள் இந்தக் கட்டண விலக்குக்குள் வரவில்லை.


இதனால், குறிப்பிட்ட அதிக மதிப்புள்ள வணிகர்-வாடிக்கையாளர் யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு எம்.டி.ஆர். கொண்டு வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


ஆனால், இதனால் பொதுமக்கள் உடனடியாக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அர்த்தமில்லை.

தற்போது யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணம் எதுவும் இல்லை.


எதிர்காலத்தில் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டால், எந்தப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம், எவ்வளவு கட்டணம், அந்தக் கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கலாமா என்பது போன்ற விவரங்கள் தனியாகத் தீர்மானிக்கப்படும்.


எம்.டி.ஆர். (MDR) என்பது வணிகர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணம் என்றாலும், அதன் செலவை சில வணிகர்கள் வாடிக்கையாளர்களிடம் மாற்ற வாய்ப்பு உள்ளது.


உதாரணமாக, கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது சில வணிகர்கள் தங்களுக்கு ஏற்படும் எம்.டி.ஆர். செலவை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கின்றனர்.

அதேபோல், UPI-க்கும் எம் .டி.ஆர்.கொண்டு வரப்பட்டால், சில வணிகர்கள் அந்தக் கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கலாம் என்ற அச்சம் உள்ளது.

அப்படி நடந்தால், அதிக தொகைக்கு யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும் பழக்கத்தில் மாற்றம் ஏற்படலாம்.


எண்ணிக்கையை மட்டும் பார்த்தால், ரூ.2,000-க்கு மேல் உள்ள யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் சிறிய அளவில்தான் உள்ளன.


2025-26ஆம் ஆண்டில், வணிகர்களுக்கு வாடிக்கையாளர்கள் செய்யும் எம்.டி.ஆர். பரிவர்த்தனைகளில் ரூ.2,000-க்கு மேற்பட்டவை எண்ணிக்கையில் சுமார் 4 சதவீதம் மட்டுமே.


ஆனால் பணத்தின் மதிப்பைப் பார்த்தால் நிலைமை மாறுகிறது.


ரூ.2,000-க்கு மேல் உள்ள பரிவர்த்தனைகள் மொத்த UPI பணப்பரிவர்த்தனை மதிப்பில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு ஆகும்.

2025-26ஆம் ஆண்டில் இந்தியாவில் 24,000 கோடிக்கும் அதிகமான யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.314 லட்சம் கோடி.


ரூ.3,000-க்கு மேல் யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்துவதற்கு கட்டணம் விதிக்கப்பட்டால் மக்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது குறித்து லோக்கல் சர்க்கிள் ( LocalCircles) நிறுவனம் 20,000-க்கும் மேற்பட்டோரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது.

பெரிய வணிக நிறுவனங்களில் ரூ.3,000-க்கு மேல் UPI மூலம் பணம் செலுத்துவதற்கு கட்டணம் விதிக்கப்பட்டால், 12 சதவீதம் பேர் மட்டுமே தொடர்ந்து யு.பி.ஐ. பயன்படுத்துவோம் என்று தெரிவித்தனர்.


அந்தப் பரிவர்த்தனைக்கான கட்டணத்தை வணிகர்கள் வாடிக்கையாளர்களிடம் வசூலித்தால், தொடர்ந்து யு.பி.ஐ. பயன்படுத்துவோம் என்று கூறியவர்கள் வெறும் 2 சதவீதமாக குறைந்தனர்.


இதனால், யு.பி.ஐ. கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் மாற்றுவது நடைமுறைக்கு வந்தால், மக்கள் வேறு பணப்பரிவர்த்தனை முறைகளைத் தேர்வு செய்யக்கூடும் என்று தெரிகிறது.


யு.பி.ஐ.-க்கு எம்.டி.ஆர்.கொண்டு வருவது குறித்து ஒன்றியஅரசு ஏற்கெனவே சில விளக்கங்களை அளித்துள்ளது.


கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் பேமெண்ட் அன்ஃப் செட்டில்மெண்ட் சிஸ்டெம்ஸ் விதியில் (Payment and Settlement Systems Act) மாற்றம் செய்யப்பட்ட பிறகு, UPI-க்கு எம்.டி.ஆர். அறிமுகப்படுத்தப்பட்டால் அது குறிப்பிட்ட வரம்புக்கு மேல் நடைபெறும் குறிப்பிட்ட சில வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்தது.


மேலும், கட்டணம் மிகவும் குறைந்த அளவில் இருக்கும் என்றும் கூறப்பட்டது.

முக்கியமாக, வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பணம் அனுப்பும் அனைத்து பர்சன் 2 பர்சன் யு.பி.ஐ. (P2P UPI) பரிவர்த்தனைகளும் தொடர்ந்து இலவசமாக இருக்கும் என்றும் அமைச்சகம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.


இருப்பினும், இதற்கான இறுதி விதிமுறைகள் இன்னும் தெளிவாகவில்லை.

தற்போது UPI-க்கு எம்.டி.ஆர். கட்டணம் இல்லாத நிலையில், அதிக மதிப்புள்ள வணிகர்-வாடிக்கையாளர் யு.பி.ஐ. (M2P UPI) பரிவர்த்தனைகளுக்கு சுமார் 0.4 சதவீதம் எம்.டி.ஆர். விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


சட்டத்தில் என்ன மாற்றம் செய்யப்பட்டது?

கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் டேக்ஸேஷன் அண்ட் அதர் லா சட்டத்திருத்த மசோதா 2026 (Taxation and Other Laws (Amendment) Bill, 2026) நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் பேமேண்ட் அண்ட் செட்டில்மெண்ட் சிஸ்டம்ஸ் ஆக்ட் 2007-ன் பிரிவு 10 ஏ-வில் (Payment and Settlement Systems Act, 2007-ன் Section 10A) மாற்றம் செய்யப்பட்டது.


வருமான வரிச் சட்டத்தின் செக்‌ஷன் 269 எஸ்.யு-ன் கீழ் (Section 269SU) குறிப்பிடப்பட்ட மின்னணு பணப்பரிவர்த்தனை முறைகளுக்கு வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை அமைப்புகள் கட்டணம் விதிப்பதில் முன்பு கட்டுப்பாடு இருந்தது.


இதில் ரூபே டெபிட் கார்டு, பீம்- யு.பி.ஐ. (BHIM-UPI) மற்றும் யு.பி.ஐ. கியூ.ஆர். கோட் (UPI QR Code) ஆகியவை அடங்கும்.


செக்‌ஷன் 269 எஸ்.யு (Section 269SU) என்பது ஆண்டுக்கு ரூ.50 கோடிக்கும் அதிகமான வர்த்தக வருவாய் கொண்டவர்களுக்கு பொருந்தியது.

தற்போதைய சட்ட மாற்றம் காரணமாக, அமேசான், ஃபிளீப்கார்ட் போன்ற பெரிய வணிக நிறுவனங்களிடம் நடைபெறும் குறிப்பிட்ட UPI மற்றும் ரூபே டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு MDR போன்ற கட்டணத்தை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.


யு.பி.ஐ-க்கு கட்டணம் ஏன் தேவைப்படுகிறது?

இந்தியாவில் யு.பி.ஐ. பயன்பாடு மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது.

தற்போது 55 கோடிக்கும் அதிகமானோர் யு.பி.ஐ. பயன்படுத்துகின்றனர்.


வங்கிகள் முதல் பணப்பரிவர்த்தனை சேவை நிறுவனங்கள் வரை 703 நிறுவனங்கள் UPI பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ளன.

இவ்வளவு பெரிய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கட்டமைப்பை இயக்குவதற்கு அதிக செலவு ஏற்படுகிறது.

சைபர் பாதுகாப்பு, மோசடி தடுப்பு, தொழில்நுட்ப உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கான செலவுகளை வங்கிகளும் பணப்பரிவர்த்தனை நிறுவனங்களும் பல ஆண்டுகளாக ஏற்றுக்கொண்டு வருகின்றன.


இந்தச் செலவு ஆண்டுக்கு ரூ.20,000 கோடி வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.


மார்ச் மாதம் வெளியான நாடாளுமன்ற நிதி நிலைக்குழுவின் அறிக்கையிலும், எம்.டி.ஆர். இல்லாதது UPI அமைப்பை நீண்ட கால அடிப்படையில் நிதி ரீதியாக நிலைத்திருக்க முடியாத நிலைக்கு கொண்டு செல்லலாம் என்று குறிப்பிடப்பட்டது.


யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் வேகமாக அதிகரித்து வருவதால், சைபர் பாதுகாப்பு, மோசடி தடுப்பு மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்த வேண்டியுள்ளது.


மேலும் பல நிறுவனங்கள் UPI துறையில் செயல்படவும் போட்டி அதிகரிக்கவும் நிலையான வருவாய் மாதிரி தேவைப்படுகிறது என்று அரசு கூறுகிறது.


யு.பி.ஐ. வளர்ச்சிக்கான செலவுகளை அரசு வழங்கும் மானியங்களை மட்டும் நம்பி சமாளிப்பது சாத்தியமில்லை. UPI தொடர்ந்து வலுவாகவும் பாதுகாப்பாகவும் செயல்படுவதற்கு நிலையான வருவாய் கட்டமைப்பு தேவை என அரசு தெரிவித்துள்ளது,


ஏ.ஐ. காரணமாக அதிகரிக்கும் பாதுகாப்புச் செலவு

யு.பி.ஐ. தளங்களை இயக்கும் நிறுவனங்கள், பணப்பரிவர்த்தனை பாதுகாப்புக்கான செலவு வேகமாக அதிகரித்து வருவதாக

ஒன்றியஅரசிடம் தனிப்பட்ட சந்திப்புகளில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியால் ஆன்லைன் மோசடிகளைத் தடுப்பதிலும் சைபர் பாதுகாப்பிலும் புதிய சவால்கள் உருவாகி வருகின்றன.

தொழில்துறை வட்டாரங்களின் முந்தைய மதிப்பீட்டின்படி, UPI தளத்தை இயக்குவதற்கான மொத்த செலவில் பாதுகாப்பு தொடர்பான செலவுகள் 20 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளன.

ஏ.ஐ. சார்ந்த புதிய மோசடி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அதிநவீன பாதுகாப்பு மென்பொருட்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் இந்தச் செலவு மேலும் அதிகரிக்கலாம்.


. தற்போதைக்கு ரூ.2,000-க்கு மேல் UPI மூலம் பணம் செலுத்துவதற்கு புதிய கட்டணம் அமலுக்கு வரவில்லை.


புதிய அறிவிப்பு, ரூ.2,000 வரையிலான யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க முடியாது என்பதை உறுதி செய்கிறது. அதே நேரத்தில், அதற்கு மேல் நடைபெறும் குறிப்பிட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு எதிர்காலத்தில் எம்.டி.ஆர். (MDR) அறிமுகப்படுத்துவதற்கான சட்ட வாய்ப்பை உருவாக்கியுள்ளது.


அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளபடி, எம்.டி.ஆர். வந்தாலும் அது குறிப்பிட்ட சில அதிக மதிப்புள்ள வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தக்கூடும். வாடிக்கையாளர்களிடம் நேரடியாக கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அரசு கூறியுள்ளது.


எனவே, தற்போது ரூ.5,000 மதிப்புள்ள பொருளை யு.பி.ஐ. மூலம் வாங்கினாலும், அதற்காக கூடுதல் எம்.டி.ஆர். கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இல்லை. ஆனால் எதிர்காலத்தில் எம்.டி.ஆர்.(MDR) நடைமுறை எவ்வாறு அமல்படுத்தப்படும், அதன் செலவு வாடிக்கையாளர்களுக்கு மாற்றப்படுமா என்பதுதான் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி