எப்படி எதிர்ப்பார் பா.ஜ.க.வை?
ஊழலை மூடி மறைக்க முயன்ற விஜய் உயர் நீதிமன்றம் சவுக்கடி: திமுக

அரசு வழக்கறிஞர்கள் நியமன ஊழல் தொடர்பான வழக்கில் தவெக அரசை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நன்றாய் வெளுத்துள்ளது. ஊழலை மூடி மறைக்க முயன்ற விஜய் சர்க்காருக்கு உயர் நீதிமன்றம் சவுக்கடி கொடுத்துள்ளது” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊழலை ஒழிக்கும் உத்தம ஆட்சி போல வேடம் போட்ட தவெக அரசின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளது நீதிமன்றம்.
ஆட்சிக்கு வந்தவுடனே அரசு வழக்கறிஞர் நியமனத்தில் பார்ட்டி ஃபண்ட் வசூல் செய்ய தொடங்கிவிட்டது தவெக அரசு என பல புகார்கள் எழுந்தன. அரசு வழக்கறிஞர் நியமனத்தில் 5 லட்சம் முதல் 30 லட்சம் வரை வசூலித்ததாக தவெகவை சேர்ந்த வழக்கறிஞர் ஞானசுந்தரி என்பவரே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த ஊழல் தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டும் என திமுக துணை அமைப்புச் செயலாளர் ப. தாயகம் கவி தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC)-இல் புகார் அளித்தார். ஆனால், ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்கள் செய்தது என்ன? புகார் அளித்த அந்த வழக்கறிஞரை கட்சியை விட்டு நீக்கிவிட்டு வழக்கை மூடி மறைக்க பார்த்தனர்.
சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனங்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை லஞ்ச பேரம் நடத்திய தவெக நிர்வாகி அனீஸ் என்பவரது அதிர்ச்சி ஆடியோ வெளியானது. அது தொடர்பாக ஜெகன் ராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தவெக அரசை நன்றாய் வெளுத்துள்ளது.
“லஞ்சம் கொடுத்து வழக்கறிஞர்களாக வர வேண்டுமா?” என்றும், “இவர்கள் நாட்டை காப்பாற்றுவார்களா அல்லது சட்டத்தைப் பாதுகாப்பார்களா?” என்று கேள்வி எழுப்பி உடனடியாக இப்புகார் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
அதோடு “அரசு வழக்கறிஞர் நியமன ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முன்கூட்டியே புகார் அனுப்பப்பட்டும், அவர்கள் ஏன் இன்னும் விசாரணையைத் தொடங்கவில்லை? புகார் வந்தால் விசாரிக்க மாட்டீர்களா? லஞ்சம் தொடர்பான ஆடியோ ஆதாரங்கள் இருந்தும் ஏன் இன்னும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை?” என்றெல்லாம் லஞ்ச ஒழிப்புத் துறையின் மந்தமான செயல்பாட்டை நீதிமன்றம் நேரடியாகச் சாடியிருக்கிறது. ஊழலை மூடி மறைக்க முயன்ற விஜய் சர்க்காருக்கு உயர் நீதிமன்றம் சவுக்கடி கொடுத்துள்ளது.
இந்த அரசு வழக்கறிஞர் நியமன ஊழல் மூலம் பல கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இந்த பல கோடி ரூபாய், தவெக பார்ட்டி ஃபண்டுக்கு வசூலிக்கபட்டதா? அதுபற்றி விசாரிக்குமா தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை. இதற்கு பொறுப்பான சட்டத் துறை அமைச்சர் வீட்டில் சோதனை செய்யுமா லஞ்ச ஒழிப்பு துறை?
தூயசக்தி என கொடுத்து வந்த பில்டப்பை காப்பாற்ற லஞ்ச ஒழிப்புத் துறையை தவெகவின் கிளை அமைப்பாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், இன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தூய சக்தியின் லட்சணத்தை தோலுரித்து காட்டியிருக்கிறது. இவர்கள் தூய சக்தியல்ல, தவெக ஒரு திருட்டு சக்தி என்பது வெளிப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் நிர்மல் குமார் தேவையின்றி டேக் டைவர்ஷன் அரசியல் செய்தது எல்லாம் இந்த மெகா ஊழலை மறைக்கத்தானா? எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் அவதூறுகளை அள்ளிக்கொட்டி மக்களை மடைமாற்றும் அமைச்சர் நிர்மல் குமாரிடம் நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் உண்டா?
உத்தமர் வேடம் போட்ட விஜய் சார் எங்கே போனார்? ஏன் அவர் அரசு வழக்கறிஞர் நியமன ஊழலை பற்றி புகார் வந்தவுடன் விசாரிக்கவில்லை? திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரை இனியாவது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்குமா? இல்லை அதற்கும் நீதிமன்றம் உத்தரவிடும் வரை காத்திருக்க போகிறீர்களா?
டேபிளில் ஃபைல் உள்ளது என கதை விட்டீர்களே. ஆனால் உண்மையில் நீதிமன்றத்தின் டேபிளில் தான் தவெக வினர் செய்துள்ள ஊழல் ஃபைல்கள் உள்ளன. அதில் ஒன்றை நீதிமன்றம் தற்போது ஓபன் செய்துள்ளது. விரைவிலே தவெக அரசின் ஊழல்கள் ஒவ்வொன்றாய் வெளிவரும்.
கள்வன் கையில் வீட்டு சாவியை கொடுத்த கதையாய் தற்போது தமிழகம் தவெக கையில் மாட்டியுள்ளது. விரைவில் இந்த அயோக்கிய கூட்டத்துக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
எப்படி எதிர்ப்பார் பா.ஜ.க.வை?
டெல்லியில் இருக்கும் தி.மு.க. தான் பா.ஜ.க.வாம். தமிழ்நாட்டில் இருக்கும் பா.ஜ.க. தான் தி.மு.க.வாம்.
இப்படி கண்டுபிடித்திருக்கிறார் விஜய். மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததை அதன் அர்த்தம் புரியாமல் உளறுவது என்பது இதுதான்.
விஜய் பேசி இருப்பது ‘துக்ளக்’ குருமூர்த்திக்கே பொறுக்கவில்லை.
தலையில் ‘நங்கென்று’ கொட்டிவிட்டார் குருமூர்த்தி. ‘விஜய் இப்படி பேசி இருப்பது அவரது துளியும் அரசியல் புரிதலற்ற தன்மையையே வெளிப்படுத்தி இருக்கிறது.
எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து கொண்டு வந்து பேசுவதானாலும் கூட, ஸ்கிரிப்டைப் படித்துப் பார்க்கும் போது, ‘இது அபத்தமாக இருக்கிறதே, கேட்பவர்கள் நகைக்க மாட்டார்களா?’ என்று முதல்வருக்குத் தோன்றாமல் போனது அவரது அரசியல் அஞ்ஞானத்தையே காட்டுகிறது.
சித்தாந்த ரீதியாக நேர் எதிரெதிர் நிலையில் இருக்கும் இரு கட்சிகளை எப்படி ஒரே தட்டில் வைக்க முடியும்?” என்று குரூமூர்த்தியே எழுதி விட்டார்.
பா.ஜ.க.வைப் பற்றி பேசுவதற்கு முதுகெலும்பு உண்டா விஜய்க்கு? இத்தனை பொதுக்கூட்டங்கள் பேசி இருக்கிறாரே! இதில் எத்தனை கூட்டத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராகப் பேசி இருக்கிறார்?
‘அவங்க பாசிசம் என்றால், இவங்க என்ன பாயாசமா?’ என்று கேட்டது கூட தி.மு.க. மீதான விமர்சனமே தவிர, பா.ஜ.க. மீதான விமர்சனம் அல்ல. பாசிசத்தை இது வரை எதிர்க்காமல், பம்மிக் கொண்டு கிடப்பவர் தான் விஜய். இவருக்கு தி.மு.க.வின் பா.ஜ.க. எதிர்ப்பைக் கேள்வி கேட்க எந்த அருகதையும் இல்லை.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பா.ஜ.க.வைப் பற்றியோ மோடியைப் பற்றியோ யார் பேசினாலும் நீக்கப்படுகிறது த.வெ.க. ஆட்சியில். மற்றவர்கள் அல்ல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் வன்னி அரசு, பா.ஜ.க. குறித்து பேசியதை நீக்குகிறார் சபாநாயகர்.
அமைச்சர் பேசுவதையே நீக்கும் அளவுக்கு தான் இவர்களது பா.ஜ.க. பாசம் உள்ளது.
விஜய் அம்மாவை விமர்சித்துப் பேசியது பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன். அவரைக் கண்டிக்கக் கூட முதுகெலும்பு இல்லாதவர் தான் விஜய். அதையும் தி.மு.க. சொன்னதாக மடை மாற்றினார் விஜய்.
விஜய் முதலமைச்சராக காங்கிரஸ் கட்சி தனது ஐந்து உறுப்பினர் ஆதரவைக் கொடுத்துள்ளது. அதற்குப் பதிலாக இரண்டு அமைச்சர் பதவிகளை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. உடனடியாக த.வெ.க. கூட்டணியில் போய் சேர்ந்து விட்டது காங்கிரஸ்.
இந்நிலையில் விஜய்யை ‘இந்தியா’ கூட்டணிக்குள் கொண்டு போய் சேர்க்க காங்கிரஸ் கட்சி எவ்வளவோ முயன்று பார்த்தது முடியவில்லை. ‘இந்தியா’ கூட்டணியில் சேர்ந்து மோடி – அமித்ஷாவை எதிர்க்க விஜய் என்ன மாவீரனா? உஷார் பார்ட்டியான விஜய், ‘இந்தியா’ கூட்டணிக்குள் வரவே இல்லை.
கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் தினத்தன்று வருவதாகச் சொன்ன விஜய் வரவில்லை. டெல்லியில் நடந்த ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்துக்கு வருவதாகச் சொன்ன விஜய் வரவில்லை.
ராகுல்காந்தியையும் விஜய்யையும் ஒரே மேடையில் ஏற்றி தனது புத்தகத்தை வெளியிட திட்டமிட்டார் வைகோ. அதற்கும் செல்லவில்லை விஜய்.
‘விஜய் வந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது, அதனால் அவரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டோம்’ என்றார் வைகோ. மதுரையில் பேரிகாட் அடிப்பதைப் போல டெல்லியில் பத்து கோடி செலவழித்து பேரிகாட் அடிக்க வேண்டியது தானே? இதெல்லாம் ஒரு காரணமா? உண்மையான காரணம், ராகுல்காந்தியுடன், ‘இந்தியா’ கூட்டணிக்
கட்சித் தலைவர்களுடன் மேடை ஏறிவிடக் கூடாது என்பது தான்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மட்டுமல்ல, ஆட்சிக்கு வந்த பிறகும் பா.ஜ.க.வின் எந்த அரசியலையும் விஜய் எதிர்க்க வில்லை. அவரும் பேசவில்லை. அவரால் நியமிக்கப்பட்டுள்ள வாய்வீரர்களையும் பேச விடுவதும் இல்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட இந்தியத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் விவகாரத்தில் த.வெ.க. நிலைப்பாடு மிகமிக மோசமாக இருந்தது. ‘
ஞானேஷ்குமாரை பதவி விலகச் சொல்வது திசை திருப்பும் அரசியல் ஆகும்’ என்று சொல்லி இருக்கிறார் த.வெ.க. அமைச்சர் ராஜ்குமார். ஞானேஷ்குமார் செய்த மோசடித்தனங்களை அவருடன் இருக்கும் இரண்டு தேர்தல் ஆணையர்களே அம்பலப்படுத்தி இருக்கிறார்கள்.
பா.ஜ.க. நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று சொல்லி இருக்கின்றன. ஞானேஷ்குமார் கைது செய்யப்பட வேண்டும் என்றே கோரிக்கை வந்துள்ளது.
விஜய்யை இங்கு ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகளும், வைகோவும் கூட ஞானேஷ்குமாரைக் கண்டித்துள்ளார்கள். ஆனால் இதை திசைதிருப்பும் அரசியல் என்று த.வெ.க. சொல்கிறது என்றால் பச்சைப் பாசிசமாக இருப்பவர் விஜய் தானே?
வாங்கிய சம்பளத்தை மறைத்த வழக்குகள் இருக்கிறது.
எப்படி எதிர்ப்பார் பா.ஜ.க.வை? வருமான வரி வழக்குகள் இருக்கிறது. எப்படி எதிர்ப்பார் பா.ஜ.க.வை?
கரூரில் 41 பேர் கொலையான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
எப்படி எதிர்ப்பார் பா.ஜ.க.வை? குதிரை பேரம் நடத்தியதற்கான புகார்கள் ஆளுநரின் முன்னால் இருக்கிறது. எப்படி எதிர்ப்பார் பா.ஜ.க.வை?
குதிரை பேரம் நடத்தியது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. எப்படி எதிர்ப்பார் பா.ஜ.க.வை? இவை எல்லாம் ஒழுங்காக முறையாக நடத்தப்பட்டால் விஜய் பதவியிலேயே இருக்க முடியாது.
எப்படி எதிர்ப்பார் பா.ஜ.க.வை?
