ஜெயா வழியில் விஜய்?
வென்றது மாணவர் இயக்கம்!
செர்பியாவில் சுமார் 10 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த அதிபர் அலெக்சாண்டர் வுசிக் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்.
அதிலும் குறிப்பாக மாணவர் இயக்கத்திடம் அவர் தோல்வி அடைந்துள்ளார்.கல்வி சீர்திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வந்த மாணவர்கள், தற்போது தேர்தல் களத்திலும் வெற்றி பெற்றிருப்பது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
வடக்கு ஆசியாவில் உள்ள முக்கியமான நாடு செர்பியா. சுமார் 66 லட்சம் மக்கள் தொகையை கொண்ட இந்த நாட்டின் அதிபராக கடந்த 10 ஆண்டுகள் இருந்து வந்தவர் அதிபர் அலெக்சாண்டர் வுசிக். இவரை தான் மாணவர் இயக்கத்தினர் தேர்தலில் வீழ்த்தியுள்ளனர்.
இப்போது வரை வெளியான முதற்கட்ட தேர்தல் முடிவுகளின்படி, மாணவர் இயக்கத்தின் ஆதரவு பெற்ற ‘ஸ்டூடன்ட் லிஸ்ட்’ கட்சிக்கே அதிக வாக்குகள் விழுந்துள்ளன.
இதையடுத்து வுசிக் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். 250 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் மாணவர் இயக்கம் 135 முதல் 140 இடங்களைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது செர்பிய முன்னேற்ற கட்சி 105 இடங்களை மட்டுமே பெறும் என்றும் வுசிக் தெரிவித்தார். அவர் மேலும், “இந்தத் தேர்தலில்நாங்கள்தோல்வியடைந்துள்ளோம். ஸ்டூடன்ட் லிஸ்ட் வெற்றி பெற்றுள்ளது என்பதும் தெளிவாகிறது” என்று வுசிக் கூறினார்.
இதையடுத்து தலைநகர் பெல்கிரேடில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு மாணவர் இயக்கத்தின் வெற்றியை கொண்டாடினர்.
இந்த மாணவர் இயக்கத்தின் எழுச்சிக்கு பின்னால் நீண்ட போராட்ட வரலாறு உள்ளது. 2024ம் ஆண்டு நோவி சாட் நகரில் ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்பது, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் அங்கு முதலில் போராட்டத்தில் இறங்கினர்.
சுமார் இரண்டு ஆண்டுகளாக நீடித்த இந்த போராட்டம், மெல்ல மெல்ல வளர்ந்தது. அந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்கு எதிராக தொடங்கிய மாணவர் போராட்டம் பிறகு அரசியல் அமைப்பில் மாற்றங்களை கோரும் இயக்கமாக வளர்ந்தது.
தற்போது தேர்தல் வெற்றியின் மூலம் அந்த இயக்கம் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலும் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், செர்பியாவில் கிடைத்த வெற்றி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
செர்பியாவின் ஸ்டூடன்ட் லிஸ்ட் இயக்கத்தில் கல்வியாளர்கள், நடிகர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றாலும் கூட புதிய அரசுக்கு தலைமை தாங்குவது யார், அவர்கள் முன்வைத்த கொள்கைகளை எப்படி நடைமுறைப்படுத்துவார்கள் என்பதில் தெளிவு இல்லை.
ஒரு பக்கம் பிரான்ஸ் நாட்டில் ஆசிரியர் பற்றாக்குறை, பள்ளிகளின் மோசமான கட்டமைப்பு மற்றும் அதிகரிக்கும் வாழ்க்கை செலவுகள் ஆகியவற்றுக்கு எதிராக மாணவர்கள் போராடினர்.
அக்டோபர் மாதத்தில் மட்டும் அங்கு இதுவரை 110 போராட்டங்கள் நடந்துள்ளன. இதில் சுமார் 5.5 லட்சம் பேர் பங்கேற்றதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் தெரிவித்தார். சில நகரங்களில் வன்முறை வெடித்த நிலையில், சுமார் 400 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு, ராணுவ செலவுகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அல்பேனியாவில் ஊழல், வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து பிரதமர் எடி ராமா பதவி விலக கோரி இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.
ஜெர்மனியில் கட்டாய ராணுவ சேவைக்கு எதிராகவும், ஆஸ்திரியாவில் பல்கலைக்கழக நிதி குறைப்புக்கு எதிராகவும் மாணவர்கள் குரல் எழுப்பினர். கிரீஸில் வீட்டு வாடகை, மற்றும் கல்விக் கொள்கைகள் போராட்டங்களுக்கு காரணமாக அமைந்தன.
இந்தியாவிலும் கூட நீட் வினாத்தாள் லீக்கிற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. மாணவர்களிடையே இந்த போராட்டம் பெரிதாக வெடித்தது..
வழக்கமாக எந்தவொரு போராட்டமாக இருந்தாலும் மோடி அரசு அதை பெரிதாக எடுத்து கொள்ளாது. ஆனால், மாணவர் போராட்டம் நாடு முழுக்க தீவிரமாக பரவியதால் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஜூலை 25ம் தேதி பதவி விலகினார்.
ஜெயா வழியில் விஜய்?
தவெக அரசு அமைந்த நாள் முதல், அரசு ஊழியர்கள் மீது பல்வேறு சுமைகளை சுமத்தி வருகிறது.
குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டம், ஒப்பந்த முறைகளை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்த்த அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. அரசு ஊழியர்கள் சொத்து விபரங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என இந்த அரசு கிடுக்கிப்பிடி போட்டு வருகிறது.
மேலும் அரசு ஊழியர்கள் தங்கள் துறை ரீதியிலான குறைகளுக்கு, துறை தலைவரின் முன் அனுமதியின்றி, மக்கள் பிரதிநிதிகள், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மிரட்டி வருகிறது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973ன் விதி 12-ஐ சுட்டிக்காட்டி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் சோமசுந்தரம் அனைத்து அலுவலர்களுக்கும் அதிரடி சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் அனுப்பினார். `
அரசு ஊழியர்கள் ஒன்றிய அல்லது மாநில அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ அல்லது பொதுக்கூட்டங்களிலோ பாதகமாக விமர்சிக்கக் கூடாது.
மேலும், பிற அரசுகளுடனான நல்லுறவைப் பாதிக்கும் வகையிலான எந்தவொரு கருத்தையும் எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது. அரசை விமர்சித்து நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் இடம்பெறும் அலுவல் சாராத கூட்டங்களில் அரசு ஊழியர்கள் எக்காரணம் கொண்டும் பங்கேற்கக் கூடாது.
விதிகளுக்கு மாறாகச் செயல்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது அரசு ஊழியர் நடத்தை விதிகளின் கீழ் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என அந்த உத்தரவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இந்த எச்சரிக்கை உத்தரவு, தற்போது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உத்தரவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் தீவிர எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அரசை விமர்சிப்பதற்கும், அமைதியான முறையில் தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்கு போராடுவதற்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமைகளை இந்த சுற்றறிக்கை பறிப்பதாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அரசின் தவறான கொள்கைகளைத் தட்டிக் கேட்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம், பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினரும் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அடிக்கடி போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், ஒப்பந்த முறை செவிலியர்கள் ஆகியோர் தங்களுக்கு என்றாவது விடியல் வரும் என்கிற நம்பிக்கையிலே தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் அவர்களது பிரச்னைகளை களைய மனமின்றி, ஆளும் தவெக அரசு போராட்டங்களை ஒடுக்கவும், அரசுக்கு எதிராக கொடிபிடிப்பதே தவறு என்கிற போக்கில் நடந்து கொள்வதும் சரியல்ல.
அரசு ஊழியர்களை பொறுத்தவரை இதற்கு முன்பு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் எஸ்மா, டெஸ்மா சட்டங்களையே எதிர்த்த நெஞ்சுரம் மிக்கவர்கள்.
மோடியா, லேடியா என தேர்தல் களத்தில் கேள்வி எழுப்பிய ஒரு பெண்மணிக்கே சவால் விடுத்த அரசு ஊழியர்கள், இப்போதைய சுற்றறிக்கை பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுவர் என்பது அறியாமையின் வெளிப்பாடாகும்.










