தொடர் சரிவு...!
தங்கத்தில் முதலீடு
இந்திய சமூகத்தில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் என்பதை தாண்டி, மக்களின் கலாச்சார அடித்தளமாகவும், முக்கிய சேமிப்பு முறையாகவும் விளங்குகிறது.
2026-ம் ஆண்டில் தங்கத்தின் விலை, வரலாற்றிலேயே மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.தற்போது, சரிய தொடங்கியுள்ளது. இந்தியா, உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோராக இருப்பதால், நாடு விலை ஏற்ற, இறக்கங்களை தனது முக்கிய பொருளாதார குறியீடாக பயன்படுத்துகிறது.
அமெரிக்கா-ஈரான் மோதல் போன்ற அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் இருந்தபோதிலும், மார்ச் 2026-ல் தங்கத்தின் விலை கடுமையான ஏற்ற, இறக்கங்களை காட்டி, கணிசமாக சரிந்தது. இந்தியாவில், தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் குறைந்தது.
கடந்த திங்கள்கிழமை தொடங்கி நேற்று வரை தொடர்ந்து 3 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,040 குறைந்துள்ளது.
நேற்று சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,590-க்கு விற்றது.
பவுனுக்கு ரூ.760 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,08,720-க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவுக்கு முக்கிய காரணங்களில், அமெரிக்க டாலர் மதிப்பு கடந்த 18 மாத உச்சத்தில் இருப்பது முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இதுதவிர, அமெரிக்க கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 5.27 சதவீதமாக உயர்ந்திருப்பதும் காரணமாக சொல்லப்படுகிறது. கடன் பத்திரங்கள் மூலம் வட்டி அதிகம் கிடைப்பதால், வட்டி தராத தங்கத்தில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
இதனுடன், அமெரிக்க பணவீக்க தரவு மீதான எதிர்பார்ப்பு மற்றும் உச்ச விலையில் நடக்கும் பிராபிட் புக்கிங் ஆகியவையும் தங்கம் விலை தொடர்ந்து குறைய காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.கடந்த ஜனவரி மாதம், சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ்-க்கு 5,200 டாலரை தாண்டியது. ஆனால், இப்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலை 4,000 டாலருக்கு கீழ் வர்த்தகமாகி வருகிறது.
அந்த பிரதிபலிப்புதான் இந்திய சந்தையில் எதிரொலிக்கிறது. ஈரான் விவகாரத்தில் அவ்வப்போது தாக்குதல்கள் நடந்தாலும், முன்பு இருந்தது மாதிரி இப்போது தீவிர போர் இல்லை.
பணவீக்கத்தின் மீதான இந்த போரின் தாக்கத்தை முழுவதுமாக கணக்கிட்ட பிறகுதான் தங்கம் விலை அடுத்து பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கலாம் என்கிற எதிர்பார்ப்பால் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவாகிறது. இதன் விளைவாக, தங்கம் விலை இறங்குமுகத்தில் இருக்கிறது.
வங்கி சேமிப்புகளில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்தால், தங்கத்தின் விலையில் மேலும் சரிவு இருக்கும் என்கிறார்கள்.நடப்பாண்டின் தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த தங்கம் விலையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த சரிவு, நடப்பாண்டு முழுவதும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. அதனால், சரிவில் இருக்கும்போது தங்கத்தை வாங்கினால், அதன் விலை உயரும்போது லாபம் பார்க்க முடியும்.

இது மட்டும் நடந்தால், தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட் தான்.
அதே சமயம், சாமானிய மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறிவிடும்.
மூளை;பூஞ்சை தொற்று
அமெரிக்காவில் மனிதர்களின் மூளையைத் தாக்கி, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் மிக அரிய வகை பூஞ்சை தொற்று வேகமாகப் பரவி வருவதாக புதிய ஆய்வு அறிக்கை எச்சரித்துள்ளது.
கிளாடோஃபைலோஃபோரா பாண்டியானா (Cladophialophora bantiana) என்றழைக்கப்படும் இந்த கருமை நிற பூஞ்சை, மனிதர்களின் மூளையை நேரடியாகத் தாக்கி சீழ் கட்டிகளை உருவாக்குகிறது.
தி லான்செட் மருத்துவ இதழின் கூற்றுப்படி, இந்த பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 60% முதல் 70% பேர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் உயிரிழக்கின்றனர்.
பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையே பூஞ்சை தொற்றும், ஆனால் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பாதியளவினர் எந்தவித நோயும் இல்லாத ஆரோக்கியமான மனிதர்கள் என்பதுதான் மருத்துவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்துடன் (CDC) இணைந்து சீயேட்டில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இந்தத் தொற்று வழக்குகள் சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதுதெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா, புளோரிடா, டெக்சாஸ் மற்றும் பென்சில்வேனியா உட்பட 21 மாகாணங்களில் இதுவரை 49 பேருக்கு இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் சராசரி வயது 68 ஆகவும் உள்ளது.
சுவாசிக்கும் போது காற்றில் உள்ள பூஞ்சை வித்துக்கள் நுரையீரலுக்குள் சென்று, பின்னர் ரத்தத்தின் வழியாக மூளையை அடைகின்றன அல்லது தோலில் ஏற்படும் காயங்கள் மூலமாகவும் உடலுக்குள் நுழைகின்றன என நம்பப்படுகிறது.
மூளையில் சீழ் கட்டிகள் உள்ள நோயாளிகளுக்கு இந்த பூஞ்சை தொற்று இருக்கிறதா என்பதை உடனடியாகப்
பரிசோதிக்குமாறு சிடிசி (CDC) மருத்துவர்களை அறிவுறுத்தியுள்ளது.
உடனடியாக பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளை கொடுப்பதோடு, அறுவை சிகிச்சை மூலம் மூளையில் உள்ள கட்டியை அகற்றுவது நோயாளியின் உயிரைக் காப்பாற்ற உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










