ஒட்டு மொத்தமாகவே.,
விஜய் சர்க்கார்!
போலீஸ் சர்க்கார்!!
தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகாவை அராஜகமாகக் கைது செய்துள்ளது விஜய் அரசாங்கம்.
‘’நான் எந்தத் தவறும் செய்யவில்லை. பிரச்சாரத்தின் கடைசி தினத்தன்று முதலமைச்சர் விஜய்க்கு மட்டும்தான் வாக்குச் சேகரிக்க உரிமை உள்ளதா? இரவு உடையில், நைட்டியுடன் என்னை கைது செய்துள்ளனர்.
நாங்கள் என்ன போதைப்பொருள் கடத்தினோமா?’’ என்று ஊடகங்களின் முன்னால் கார்த்திகா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இது தனிப்பட்ட கார்த்திகாவுக்கு மட்டும் நடக்கும் கொடூரம் அல்ல. விஜய் ஆட்சி அமைத்தது முதல் அவரது ஆட்சிக்கு, கட்சிக்கு எதிராகச் செயல்படும் அனைவரும் எதிர்கொள்ளும் நெருக்கடி ஆகும்.
ஜனநாயக வழியில் போராடும் அனைவரும் எதிர்கொள்ளும் நெருக்கடி ஆகும்.
வாக்குத் திருட்டுக்கு எதிராக சென்னையில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர், இளைஞர் அமைப்பினரைக் கூட விஜய் அரசு விட்டு வைக்கவில்லை. அராஜகமாகக் கைது செய்துள்ளது.
வாக்குத்திருட்டுக்கு எதிராகவும், டெல்லியில் இது தொடர்பாக போராடி வருவோருக்கு ஆதரவாகவும், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டம் நடைபெற்றது.
எஸ்.எஃப்.ஐ., ஏ.ஐ.எஸ்.எஃப்., ஏ.ஐ.ஒய்.எஃப். உள்ளிட்ட 9 மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று, 24 மணி நேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர்.
வாக்குரிமை பறிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டியும், ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என வலியுறுத்தியும் பல்வேறு பதாகைகளை ஏந்தி, ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்நிலையில், அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினரை விஜய் அரசு அராஜகமாகக் கைது செய்துள்ளது.
சாதாரணமாகப் போராடும் உரிமைகூட தடுக்கப்படுகிறது.
சென்னை எழும்பூரில் 20 முக்கியமான கோரிக்கைகளை வைத்துப் போராட்டம் நடத்திய செவிலியர்களை பெண்கள் என்றும் பாராமல் அராஜகம் செய்தது விஜய் போலீஸ்.
ஆயிரக்கணக்கான செவிலியர்கள் காலை முதலே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்துவதற்காக முறையான அனுமதி பெற்றும் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை போன்ற வசதிகளைக் கூட தங்களுக்குச் செய்து தரவில்லை எனக் குற்றம்சாட்டிய செவிலியர்கள், தங்களின் நியாயமான கோரிக்கைகளைக் கேட்க, அழைத்துப் பேசக் கூட மனமில்லாமல் த.வெ.க. அரசு வேடிக்கை பார்ப்பதாகக் குற்றம்சாட்டினர்
. இந்நிலையில், செவிலியர்களின் போராட்டம் மாலை நேரத்திலும் தொடர்ந்ததால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இரவோடு இரவாக செவிலியர் சங்க நிர்வாகிகள் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டனர்.
போராட்டக் களத்தில் இருந்த பந்தல்களை அகற்றி, மின் இணைப்புகளையும் துண்டித்து போலீசார் அராஜகத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகும் செல்போன் வெளிச்சத்தில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றதால் செவிலியர்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர்
இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு போராட்டக்களம் போர்க்களமாக மாறியது. இதில் செவிலியர்கள் பலர் மயக்கமடைந்தனர்.
அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகூட தராமல் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். சாலை மறியலில் போய் முடிந்தது இந்தப் போராட்டம்.
இதே போல்தான் தூய்மைப் பணியாளர் போராட்டத்தையும் போலீஸை வைத்து ஒடுக்கியது விஜய் அரசு. போராடியவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினார்கள். பேருந்துகளில் ஏற்றி வேறு இடங்களில் கொண்டு போய் விட்டார்கள்
போலீஸாருடன் வர மறுத்தவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தார்கள். போலீஸை அளவுக்கு அதிகமாகக் குவித்து மிரட்டினார்கள்.
விஜய் பெரம்பூரில் போட்டியிட்டவர் என்பதால் அவரது அலுவலகத்தையே முற்றுகையிட்டார்கள் தூய்மைப் பணியாளர்கள். அவர்களை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தது காவல் துறை.
பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் மேம்பாட்டுச் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 12ஆம் தேதி சென்னையில் அமைதி வழி உண்ணாவிரதம் இருக்கத் திட்டமிட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் இருந்து சென்னை வந்தனர். சென்னைக்குக் கிளம்பியவர்களை உள்ளூரில் கைது செய்தது காவல் துறை. சென்னைக்கு வந்து இறங்கியவர்கள் கைது செய்யப்பட்டார்கள். உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்கு வந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
காவல் துறையைப் பார்த்து கலைந்தவர்களையும்
விரட்டிச் சென்று கைது செய்தார்கள். அருகில் இருந்த கழிவறைக்குச் சென்ற பணியாளர்களையும் கழிவறைக்குள் சென்று போலீஸ் கைது செய்தது. இவை அனைத்தும் கடந்த ஒரு மாதத்தில் நடந்தவை ஆகும்.
தூய்மைப்பணியாளர் போராட்டம், செவிலியர் போராட்டம், மருத்துவப்பணியாளர் போராட்டம், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் ஆகிய அனைத்தையும் போலீஸ் வைத்து ஒடுக்கி இருக்கிறது விஜய் அரசு. காவல் துறையையே அவர்தானே வைத்துள்ளார். மக்களை ஒடுக்கவே போலீஸைப் பயன்படுத்துகிறார் விஜய்.
‘விஜய்யை நம்பி வோட்டுப் போட்ட எங்களுக்கு இந்த தண்டனையா?
’ என்று இப்போராட்டங்களில் பங்கெடுத்த மக்கள் பேட்டி அளிப்பதைப் பார்க்கும் போது வருத்தமாகத் தான் இருக்கிறது. தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு தண்டனையை மட்டுமே தந்து கொண்டுள்ளார் விஜய்.
விஜய் சர்க்கார், ஒட்டுமொத்தமாக போலீஸ் சர்க்காராகவே இருக்கிறது.
தமிழகத்தை அதிக முறை ஆண்ட கட்சி, 2 முறை அடுத்தடுத்து ஆட்சியை அமைத்த கட்சி என பல பெருமைகளை கொண்ட அதிமுக தற்போது மிக மோசமான நிலையில் இருக்கிறது.
பதவி சண்டையில் பல அணிகளாக அதிமுக சிதறுண்ட நிலையில், தற்போது தனுஷுக்கு ஜால்ரா போட்டு வருகின்றனர் முன்னாள் அமைச்சர்கள்.
இதனால் கட்சியில் இருக்கலாமா? அல்லது வேலை வேறு வேலையை பார்க்க போய்விடலாமா? என்ற மனநிலையில் இருக்கிறோம் என புலம்புகின்றனர் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள்.
முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இருந்தவரை எஃகு கோட்டை போல இருந்தது அதிமுக என்பார்கள்.
ஒவ்வொரு நாளும் காலையில் பேப்பரை படித்தால் தான் தங்கள் பதவி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வார்களாம்.
அப்படியெல்லாம் ஒரு காலத்தில் இருந்த அதிமுக இன்று மிகவும் பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதா வளர்த்த அந்த கட்சி தற்போது பல அணிகளாக சிதறுண்டு கிடக்கிறது.
2016 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு உடல்நலக்குறைவால் ஜெயலலிதா காலமான பிறகு ஓபிஎஸ் இடைக்கால முதல்வராக பதவி ஏற்றார்.
சசிகலாவுக்கு அரசின் தலைமை பதவி மீதான ஆசை ஏற்பட்ட நிலையில் தம்பிதுரை உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் அதற்கு தூபம் போட்டனர்.
அதிமுகவின் பொது செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் ஆட்சியும் கட்சியும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என அறிக்கைக்கும் மேல் அறிக்கையை விட்டு அவரை உசுப்பேற்றினர் அப்போதைய அமைச்சர்களும் எம்பிக்களும்.
இதை அடுத்து ஓபிஎஸ்ஐ ஓரம் கட்ட.. அவர் தர்மயுத்தம் தொடங்கினார். இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற நிலையில் எதிர்பாராத விதமாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார்.
டிடிவி தினகரனின் தலையீடு அதிகமாக இருந்த நிலையில் அவரை ஓரங்கட்ட முடிவெடுத்து எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சிக்கு எதிராகவே வாக்களித்த ஓபிஎஸ் உடன் கூட்டு சேர்ந்தார்.
சசிகலாவும் டிடிவி தினகரன் ஓரம் கட்டப்பட்டனர். நான்காண்டுகள் இலை மறை காயாக இருந்த மோதல் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு வெளிப்படையாக வெடித்தது. கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என ஓபிஎஸ் ஓரம் கட்டப்பட்டார்.
அதற்குப் பிறகு வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், செங்கோட்டையன் என அடுத்தடுத்து பல முக்கிய புள்ளிகள் விலகினர்.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மண்ணை கவ்விய நிலையில் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இரண்டாம் கட்ட தலைவர்களாக இருந்த எஸ் பி வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் ஒரு கோஷ்டியை சேர்த்துக்கொண்டு எடப்பாடிக்கு எதிராக முஷ்டி உயர்த்தினர்.
அதில் விஜயபாஸ்கர் அண்ட் கோ தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் எடப்பாடிக்கு எதிர்பார்த்த தோல்வியை தான் கொடுத்தது. இதை அடுத்து எடப்பாடி பதவி விலக வேண்டும், சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்ற முழக்கங்கள் வலுத்து வருகிறது.
இதற்கிடையே சமீபத்திய அரசியல் பரபரப்பாக தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என பேசிக்கொள்கின்றனர்.
அவர் வருகிறாரோ? இல்லையோ? அதிமுகவினர் விஜயை எதிர்க்கிறோம் என்ற பெயரில் தனுசுக்கு ஜால்ரா போடத் தொடங்கிவிட்டனர்.
தனுஷ் பக்கம் செல்லுங்கள் என வெளிப்படையாக பேசி இருக்கிறார் முன்னாள் அமைச்சரான ஆர்பி உதயகுமார். எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி ஜெயலலிதா வளர்த்த கட்சி தமிழகத்தை அதிக முறை ஆண்ட கட்சி என பல பெருமைகளை கொண்ட அதிமுக, இன்று விஜயை எதிர்ப்பதற்காக தனுஷுக்கு தூபம் போட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது என குமுறுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
போதாக் குறைக்கு பெரும்பாலான மாஜிகள் விஜய் பக்கம் தாவி விட்ட நிலையில் இருக்கும் அக்ரிகிருஷ்ணமூர்த்தி போன்றோர் எடப்பாடி பழனிச்சாமியை நீங்கள் தான் அடுத்த எம்ஜிஆர் என உசுப்பேற்றி வருகின்றனர்.
எக்காலத்திலும் எடப்பாடி பழனிச்சாமியால் எம்ஜிஆர் ஆக முடியாது. அதிமுகவை காப்பாற்ற வேண்டுமென்றால் இருக்கும் உறுப்பினர்களையும், இழந்த உறுப்பினர்களையும் ஒன்று சேர்த்து பயணப்பட்டால் மட்டுமே 2031வது ஆண்டிலாவது அதிமுகவுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்கின்றனர் நம்மிடம் பேசிய அதிமுகவினர்




