"கோட்டா"பீகாரின் புதுப் போதை!
இளைஞர்களை குறிவைக்கும் ஆபத்து,
போதை புது வரவு "கோட்டா"
பீகாரில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அம்மாநில காவல்துறை இதுவரை சுமார் 3.16 கோடி லிட்டர் மதுபானங்களைப் பறிமுதல் செய்துள்ளதுடன், மாநிலம் முழுவதும் 7.15 லட்சம் பேரைக் கைது செய்துள்ளது.
அதாவது நாளொன்றுக்கு சராசரியாக 8,650 லிட்டர் மதுபானம் பறிமுதல் மற்றும் 196 கைது நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன. இது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
ஆனால், வெளியுலகின் கவனத்திற்கு வராமல் மறைந்திருக்கும் கசப்பான உண்மை என்னவென்றால், கடத்தி வரப்படும் மது பாட்டில்களையும் தாண்டி, அங்கு ஒரு புதிய அபாயகரமான போதை உலகம் உருவெடுத்து வருகிறது.
சிறிய பாக்கெட்டுகள், மாத்திரை அட்டைகள், ஹெராயின், கோட்டா எனப்படும் புதிய வகை(போலி ஆக்ஸிடோசின் ஊசிகள்)போதைப்பொருள், திரவ பாட்டில்கள், சோப்புப் பெட்டிகளில் கூட இந்த போதைப்பொருட்கள் ரகசியமாக பரிமாறப்படுகின்றன.கோட்டா” என்பது ஹெராயினின் பதப்படுத்தப்படாத அல்லது குறைவாகப் பதப்படுத்தப்பட்ட வடிவத்தைக் குறிக்கப் பீகாரில் பயன்படுத்தப்படும் உள்ளூர் பெயர்.
கடந்த ஒரு தசாப்தமாக ரயில்கள், டேங்கர் லாரிகள் மற்றும் குதிரைகள் மூலம் கடத்தப்படும் சட்டவிரோத மதுபானங்களைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தி வந்த பீகார் காவல்துறைக்கு, தற்போது அதிவேகமாக உருவெடுத்து வரும் இந்த போதைப்பொருள் சந்தை மிகப்பெரிய எச்சரிக்கை மணியை அடித்துள்ளது
பீகார் காவல்துறை தலைமை அலுவலகத் தரவுகளின்படி, 2026-ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை (1,905), 2022-ஆம் ஆண்டு முழுவதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விட (1,822) 83 வழக்குகள் அதிகம். 2019-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை வெறும் 697 ஆக மட்டுமே இருந்தது.
2022-ல் 16,691.81 கிலோவாக இருந்த கஞ்சா பறிமுதல், 2025-ல் 31,915.29 கிலோவாக அதாவது 3 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. அதேபோல் பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் எண்ணிக்கை பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
2022-ல் 29,762 ஆக இருந்த மாத்திரைகள், 2026-ன் முதல் 5 மாதங்களில் மட்டும் 9.29 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் வழி நிவாரணிகள், தூக்க மாத்திரைகள் மற்றும் தொழில்துறை இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட போலி மாத்திரைகளும் அடங்கும்.
போதைப்பொருள் கடத்தலை தடுக்க கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்ட பீகார் காவல்துறையின் சிறப்புப் படை, அக்டோபர் 10, 2026 வரை ரூ.52.32 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்து 315 பேரைக் கைது செய்துள்ளது.
இதில் ரூ.25.58 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் இந்த ஆண்டு மட்டும் பறிமுதல் செய்யப்பட்டவை ஆகும்.மாநில தரவுகளின் படி, 2016 முதல் 2023 வரையிலான 7 ஆண்டுகளில் என்.டி.பி.எஸ் சட்டத்தின் கீழ் வெறும் 11 சிறுவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்ட நிலையில், 2024-ல் மட்டும் 50 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் இந்த ஆண்டு மார்ச் 10 அன்று நாடாளுமன்றத்தில் அளித்த பதிலின்படி, பீகாரில் உள்ள ஒன்றிய அரசு ஆதரவு பெற்ற போதை மறுவாழ்வு மையங்களில் பயன் பெற்றோரின் எண்ணிக்கை 2022-23-ல் 1,487 ஆக இருந்தது,
2024-25-ல் 29,429 ஆக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகரிப்பாகும் என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மாநில அரசும் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க சிறப்புப் படை செயல்பட்டு வரும் நிலையில், செப்டம்பர் 2025-ல் 'மதுவிலக்கு மற்றும் மாநில போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம்' என்ற தனிப் பிரிவை அரசு உருவாக்கியது.
ஒன்றிய அரசின் 'நஷா முக்நாத் பாரத் அபியான்' (போதை இல்லாத பாரத இயக்கம்) திட்டத்தின் கீழ் 2029-ஐ இலக்காகக் கொண்டு பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு மட்டுமல்ல, அவர்களின் தன்மையும் மாறியுள்ளதுதான் உண்மையான கவலை.
முன்பு கஞ்சா போன்ற இயற்கை போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் அதிகம் வந்தனர். ஆனால் தற்போது ஹெராயின் போன்ற செயற்கை மற்றும் அரை செயற்கை போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களே அதிகம் வருகின்றனர்"
பீகாரில் 'நஷா முக்த் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஆதரவுடன் செயல்படும் போதை மறுவாழ்வு மையங்களின் பயனாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததற்கான காரணம் குறித்து அந்த அமைச்சகம் பதிலளிக்கவில்லை.
ஏப்ரல் 5, 2016 அன்று பீகாரில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. முதல் ஆண்டிலேயே 21.26 லட்சம் லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டு 75,225 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், மதுபானங்களுக்கான தடை தீவிரமடைந்தபோது, அதற்கு மாற்றாக மலிவான இரண்டாவது போதைச் சந்தை வேரூன்றத் தொடங்கியது.
சட்டவிரோத மதுபானம் ஒரு பாட்டில் ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை விற்கப்படுகிறது, ஆனால் அதன் போதை சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும்.ஆனால், அதே பணத்திற்கு அல்லது அதைவிடக் குறைந்த பணத்திற்கு வாங்கப்படும் சிறிய அளவிலான போதைப்பொருள் பல நாட்களுக்கு போதையைத் தருகிறது.
இதனால் மதுவுக்கு பதில் போதைப்பொருளை நோக்கி சிலர் மாறத் தொடங்கியுள்ளனர்.
வெளிமாநிலங்களில் ரூ.650-750-க்கு விற்கப்படும் விஸ்கி பாட்டில் பீகார் கள்ளச்சந்தையில் ரூ.1,500-க்கு விற்கப்படுகிறது.
அதேநேரம், 'பிரவுன் சுகர்' பாக்கெட் வெறும் ரூ.300 - 500-க்கு கிடைக்கிறது. கொரோனா லாக்டவுன் காலம் இதில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
பஞ்சாப், ஹரியானா, டெல்லி, மும்பை, குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் செயற்கைப் போதைப்பொருட்கள் கிராமப்புறங்களுக்கும் பரவின.
நேபாள எல்லை மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கான ரயில், சாலை வழிகள் பீகாரில் அமைந்திருப்பது கடத்தல்காரர்களுக்கு சாதகமாக உள்ளது.
கஞ்சா முக்கியமாக நேபாளம், திரிபுரா, ஒடிசா மற்றும் ஆந்திராவில் இருந்து பீகார் வழியாக வட மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது.
சாரஸ் மற்றும் கசகசா கழிவுகள் நேபாளம் மற்றும் ஜார்கண்டில் இருந்து வருகின்றன. 2022-ல் 3,677 ஆக இருந்த போதை ஊசிகளின் பறிமுதல், 2024-ல் 63,208 ஆகவும், 2026-ன் முதல் 5 மாதங்களில் 3.83 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.
2025-ல் 65.08 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2026-ன் முதல் 5 மாதங்களிலேயே 51.92 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருட்கள் உலகில் தற்போது கோட்டா என்ற புதிய பொருள் புழக்கத்தில் உள்ளது என்று கூறப்படுகிறது. இது 'டோஸ்' என்ற வார்த்தையிலிருந்து உருவானதாக தெரிகிறது.
உள்ளூர் வழக்கில், போதைக்கு அடிமையானவர்களும் விற்பனையாளர்களும் ஒரு குறிப்பிட்ட அளவு போதைப்பொருளை 'கோட்டா' என்று குறிப்பிடுகின்றனர். இது சுத்திகரிக்கப்படாத ஹெராயின் ஆகும். கடுகைப் போல மஞ்சள்- வெள்ளை நிறத்தில் இருக்கும் இதை சிதைந்துவிடாமல் இருக்க சோப்புப் பெட்டிகளில் வைத்து பாதுகாப்பார்கள்.
மியான்மரில் இருந்து வடகிழக்கு மாநிலங்கள் வழியாக அசாமின் சில்ச்சார் வழித்தடத்தில் இருந்து இது பீகாருக்குள் வருவதாக கூறப்படுகிறது.
முன்பு ஒரு பெட்டி ரூ.25,000 - 30,000-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது இதன் விலை ரூ.50,000 ஆக உயர்ந்துள்ளது. இதில் உள்ள சிறிய டியூப்கள் ரூ.300 - 400 வரை விற்கப்படுகின்றன.
போதைப்பொருட்களை கடத்த கூரியர்களாக பெண்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். பாவாடை மற்றும் பிளவுஸ்களில் சிறப்பு பைகளை தைத்து அதில் போதைப்பொருட்களை மறைத்து எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் பயணிப்பதால் சந்தேகமும் வருவதில்லை.
கடத்தல்காரர்கள் சட்டத்தின் பிரிவுகளையும் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். கைதாகும் போதைப்பொருளின் அளவை பொறுத்தே தண்டனை மாறும் என்பதால் (உதாரணமாக கஞ்சா 1 கிலோ வரை சிறிய அளவு, 20 கிலோவுக்கு மேல் வணிக அளவு), கடத்தல் பொருட்களைப் பல கூரியர்களிடம் பிரித்துக் கொடுத்து பாதுகாப்பாக கடத்துகின்றனர்.
மேலும், பீகாரை அடையும் போதைப்பொருட்களில் சாக்கட்டி தூள், சர்க்கரை தூள், காஃபின், எருமைச் சாணம் மற்றும் டயஸபாம் போன்ற அபாயகரமான ரசாயனங்களைக் கலந்து கலப்படம் செய்து வருவதாக கூறப்படுகிறது.அனைத்தையும் விட காவல்துறைக்கு மிகப்பெரிய கவலையாக இருப்பது, இந்த மலிவு விலை போதைப்பொருட்கள் ஏழை எளிய சிறுவர்களை சென்றடைவதுதான்.
நாடாளுமன்ற குழுவின் அறிக்கையின்படி, பீகாரில் 10 - 17 வயதுடைய சிறுவர்களில் 99,000 பேர் கஞ்சாவிற்கும், 40,000 பேர் ஓபியாய்டு போதைப்பொருட்களுக்கும் அடிமையாகி உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வெறும் ரூ.150 - 200 கையில் இருக்கும் சிறுவர்கள், கள்ளச்சந்தை மதுவை விட மலிவாகக் கிடைக்கும் இந்த 'கோட்டா' மற்றும் மாத்திரைகளை நோக்கி எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள்.
கடைகளின் ஓரத்தில் விற்கும் டீ, பாக்குக் கடைகள் வழியாக முதன்முதலில் அறிமுகமாகும் இந்த போதை, இரண்டு மூன்று பயன்பாடுகளிலேயே சிறுவர்களை மீள முடியாத அளவிற்கு அடிமையாக்கி விடுகிறது என்பதுதான் தற்போதைய கப்பான உண்மையாகும்.









