டம்மி முதல்வரா ?

சட்டம்-ஒழுங்கை,

சீர்கேடுகளை கண்டுகொள்ளாத விஜய்?

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிர்ச்சிகரமான குற்றங்கள், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பின் மீது மிகப்பெரிய கேள்வியை எழுப்பி உள்ளது. 

வாலாஜாபேட்டை நெடுஞ்சாலைக் கொலை, குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவில் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், பள்ளி மாணவிக்கு நேர்ந்த கூட்டுப் பாலியல் கொடுமை, கோவையில் சாதியக் கொடுமையால் மாணவர் தற்கொலை,பெரம்பலூரில் இரு மாணவிகள் மாயம் என மாநிலத்தின் பல முனைகளில் கொடூரங்கள் வெடித்துள்ளன

“காவல்துறையின் உளவுத்துறை ஏன் இந்தத் துயரங்களை முன்கூட்டியே மோப்பம் பிடிக்கவில்லை?” என்ற கேள்வி ஒருபுறம் தீவிரமாக எழுந்துள்ள நிலையில், அதற்கு விடையளிக்கும் விதமாகத் தலைமைச் செயலகத்தின் அதிகார மையங்களுக்குள்ளிருந்து ஒரு பகீர் தகவல் கசிந்துள்ளது.

 அதுதான் மாநிலத்தின் அதிமுக்கிய உளவுத்துறை அறிக்கையான ‘TSR’ (Daily Secret Report) கையாளப்படும் விதம் குறித்த சர்ச்சை!

ஒரு மாநிலத்தின் ஆட்சி நிர்வாகத்தில் முதலமைச்சருக்கு மட்டுமே தரப்படும் மிக ரகசியமான ஆவணம் இந்த TSR அறிக்கை.மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் எப்படி இருக்கிறது?

 எங்கே கலவரமோ, அசம்பாவிதமோ, சமூகப் பதற்றமோ வெடிக்க வாய்ப்புள்ளது?

 ரவுடிகள், போதை மாஃபியாக்கள் மற்றும் குற்றவாளிகளின் ரகசிய மூவ்கள் என்ன?

 பொதுமக்கள் மத்தியில் அரசு மற்றும் நிர்வாகம் பற்றி என்ன மனநிலை நிலவுகிறது?

இதுபோன்ற அதிமுக்கியத் தகவல்களை உளவுத்துறை அதிகாரிகள் களமிறங்கித் திரட்டி, ஒரு நாளைக்கு மூன்று முறை நேரடியாக முதலமைச்சரின் மேசைக்கே கொண்டு சென்று சமர்ப்பிப்பார்கள்.

 முந்தைய ஆட்சிக் காலங்களில் முதல்வர்களாக இருந்தவர்கள் இந்த அறிக்கைகளை மிகுந்த கவனத்துடன் வரிவரியாகப் படித்து, உடனடி உத்தரவுகளைப் பிறப்பிப்பதே வழக்கமான நிர்வாக நெறிமுறையாக இருந்து வந்தது.

ஆனால், தற்போதைய ஆட்சி அமைப்பில் இந்த நடைமுறை தலைகீழாக மாறியுள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

உளவுத்துறை அதிகாரிகள் மிகுந்த ரகசியத்தோடு கொண்டு வரும் TSR அறிக்கைகளை முதலமைச்சர் விஜய் முழுமையாகப் படிப்பதில்லை என்றும், மேலோட்டமாகப் பார்த்துவிட்டு ஒதுக்கி வைப்பதாகவும் கூறப்படுகிறது.

அதைவிட உச்சக்கட்ட அதிர்ச்சியாக, “இதில் என்ன இருக்கிறது என்பதை அப்படியே நம்ம வியூக வகுப்பாளரிடம் (Strategist) கொடுத்துவிடுங்கள்;

 அவர் படித்துவிட்டுச் சொல்வார்” என்று முதலமைச்சர் எளிதாக அனுப்பிவிடுவதாகப் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

ஒரு மாநிலத்தின் உளவுத் தகவல்கள் என்பது தேர்தல் உத்திகளுக்கானது அல்ல; மக்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு தொடர்பானது. 

ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் கீழ் வராத, நிர்வாகத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத ஒரு தனிப்பட்ட ‘வியூக வகுப்பாளர்’ கைகளுக்கு இந்த ரகசியப் பாதுகாப்பு ஆவணங்கள் செல்வது காவல்துறை உயர் அதிகாரிகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விவகாரம் வியூக வகுப்பாளரோடு மட்டும் நின்றுவிடவில்லை. முதலமைச்சருக்காக மட்டுமே தயாரிக்கப்படும் இந்த ரகசிய அறிக்கையை, அமைச்சரவையில் உள்ள செல்வாக்கு மிகுந்த இரண்டு முக்கிய அமைச்சர்களும் தினசரி வாங்கிப் படிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கமாக மாநில உளவுத்துறை தரும் அறிக்கையில், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள், துறை ரீதியான முறைகேடுகள், களத்தில் பொதுமக்கள் மத்தியில் குறிப்பிட்ட அமைச்சர்கள் மீது உள்ள அதிருப்தி போன்ற அந்தரங்க விவரங்களும் இடம்பெறும்.

 அதனால்தான், இந்த அறிக்கை வேறு எந்த அமைச்சரின் கண்களிலும் படக்கூடாது என்பது எழுதப்படாத அதிகாரபூர்வ சட்டம். ஆனால், அந்த விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டு, குறிப்பிட்ட அமைச்சர்களின் நேரடிப் பார்வைக்குச் செல்வது நிர்வாகச் சமநிலையைச் சீர்குலைத்துள்ளது.

இந்த முறைகேடான தகவல் கசிவு உளவுத்துறையின் மிக உயர்மட்ட அதிகாரியின் கவனத்திற்குச் சென்றபோது, அவர் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்:

“TSR அறிக்கை என்பது முழுக்க முழுக்க முதலமைச்சரின் நேரடிப் பார்வைக்காக மட்டுமே சட்டப்படி உருவாக்கப்படுகிறது.

 இதை மூன்றாம் நபர்களோ அல்லது அமைச்சர்களோ பார்ப்பது அரசின் பாதுகாப்பு விதிகளுக்கு முற்றிலும் எதிரானது.

 முதல்வர் மட்டுமே இதை நேரடியாகப் படித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இப்படித் திட்டவட்டமாக அவர் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதால், தற்போது தலைமைச் செயலகத்தில் உள்ள உயர் அதிகார மையங்களுக்கும் அரசியல் தரப்பிற்கும் இடையே கடுமையான பனிப்போரும் ஈகோ மோதலும் வெடிக்கத் தொடங்கியுள்ளது.

உளவுத்துறை அதிகாரிகள் உழைத்துச் சேகரிக்கும் களத் தகவல்கள், முதலமைச்சரின் மேசையில் உடனடி முடிவுகளாக மாறாமல், அரசியல் வியூக வகுப்பாளர்களின் கைகளிலும் குறிப்பிட்ட அமைச்சர்களின் மேசைகளிலும் சுற்றிக் கொண்டிருப்பதால், காவல்துறையின் களக் கண்காணிப்பு முற்றிலும் பலவீனமடைந்துவிட்டது.

குலசேகரப்பட்டினம் போன்ற லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் ரவுடிகள் மோதல் வெடிப்பதையும், பாலியல் குற்றங்கள் நடப்பதையும் தடுக்க இயலாத நிலை. 

நெடுஞ்சாலையில் உடல்கள் வீசப்படும் அளவுக்கு ரவுடிகள் பயமின்றி உலாவுவது.

 பள்ளி மாணவர்களின் உளவியல் மற்றும் சாதியப் பிரச்சினைகளை முன்கூட்டியே அரசு அதிகாரிகள் சரிசெய்யத் தவறியது.

இந்தக் குற்றங்கள் அனைத்திற்கும் மூலக் காரணம், உளவு அமைப்பின் எச்சரிக்கைகள் உரிய நேரத்தில் முதல்வர் விஜய்யின் கவனத்திற்குச் சென்று நேரடி நடவடிக்கையாக மாறாததே என்று கள அதிகாரிகள் வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றனர்.

 ஆட்சி நிர்வாகத்தில் அரசியல் உத்திகளை விட மக்கள் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்..

 உளவுத்துறை அறிக்கைகளை முதலமைச்சர் தன் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து சட்டம்-ஒழுங்கை முடுக்கிவிடாவிட்டால், தமிழகம் இன்னும் கடுமையான பாதுகாப்புச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்பதே கள நிலவரம்.

அவையே தற்போதைய நிலவரங்கள் தரும் எச்சரிக்கை.

100 சதவீத வாக்குப்பதிவு.

தேர்தல் ஆணையக் கேலிக்கூத்து

வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தச் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று (23.10.2026) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

 இந்த கூட்டத்தில் தவெக, திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாதக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இருப்பினும்  கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் நடந்த முறைகேட்டுக்குப் பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தவெக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். 

அதனைத் தொடர்ந்து திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

மொத்தமாக தவெக கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகள், திமுக மற்றும் அதன் கூட்டணிகள், நாதக என 9 கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

 இறுதியாக அதிமுக, பா.ஜ.க, தேசிய மக்கள் கட்சி மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்றன. இதனையடுத்து, தி.மு.க.வின் சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.

 அப்போது அவர் கூறியதாவது, “கூட்டத்தின் தொடக்கத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்வைக்கப்பட வேண்டிய கருத்துகளை, மக்களின் தேவைகளை முன்னிறுத்தி அங்கே தெரிவித்துவிட்டு நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம். கூட்டத்தில் நாங்கள் முழுமையாகப் பங்கேற்கவில்லை. கூட்டத்தின் தொடக்கத்திலேயே அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றாகத் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்துவிட்டு வெளியேற வேண்டும். 

அந்த வகையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் தனது கருத்துகளை முன்வைத்துவிட்டு வெளியேறியிருக்கிறது. இதில் மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், எஸ்.ஐ.ஆர். நடைமுறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு குளறுபடிகளை எப்படிச் சரிசெய்யப் போகிறீர்கள்? 

எப்போது சரிசெய்யப் போகிறீர்கள்?

 என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதான கேள்வி. 

கடந்த முறை மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர். நடைமுறைக்குப் பிறகு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 74 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

 நீக்கப்பட்ட அந்த வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்ப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்று நாங்கள் கேட்டிருக்கிறோம்.

நீக்கப்பட்டவர்கள் எல்லாம் நாடு கடத்தப்பட்டுவிட்டார்களா? 

அவர்கள் இந்தியாவில் இல்லையா?

 தமிழ்நாட்டில் வசிக்கவில்லையா?

 அப்படியென்றால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? 

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தேர்தல் ஆணையம் பதில் சொல்லவில்லை.

 தற்போது எஸ்.ஐ.ஆர். என்ற நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. 

இப்போது எஸ்.எஸ்.ஆர். எனப்படும் ஸ்பெஷல் சம்மரி ரிவிஷன் (Special Summary Revision) நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.

 இது ஆண்டுதோறும் ஜனவரி 1ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியாகும். ஆனால், இதற்கு ஸ்பெஷல் சம்மரி ரிவிஷன் என்று பெயரிட்டு தற்போது நடத்துகிறார்கள்.

நீங்கள் எஸ்.ஐ.ஆர். நடத்தினாலும், எஸ்.எஸ்.ஆர். நடத்தினாலும், அது மக்களுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகள் வாக்காளர்களுக்கு எளிதானதாக இருக்க வேண்டும். 

வாக்காளர்கள் தங்களுடைய பெயர்களைப் பட்டியலில் பதிவு செய்துகொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். ஆனால், அத்தகைய வசதிகள் எதுவும் இல்லை. ஒருபுறம், தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விளம்பரப்படுத்துகிறது. அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.

 தேர்தல் நேரத்தில் இதையெல்லாம் நீங்கள் பார்க்கலாம். ஆனால், வாக்காளர் பட்டியலில் ஒருவருடைய பெயரைச் சேர்ப்பதற்கே பல்வேறு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தும்போது, ஜனநாயகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்துவது முரண்பாடாக இருக்கிறது” எனத் தெரிவித்தார். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி