யார் இந்த ஆர்.வி. அர்லேகர்?

 தமிழ்நாட்டின் 27-வது ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.




யார் இந்த ஆர்.வி. அர்லேகர்?

1954-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி கோவா மாநிலம் பனாஜியில் பிறந்தவர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்.

இவரது தந்தை விஸ்வநாத் அர்லேகர், இந்துத்துவா அமைப்பான பாரதிய ஜனசங்கத்தின் கோவா மாநிலத் தலைவராகப் பணியாற்றியவர். இதனால் இயல்பாகவே ஆர்.எஸ்.எஸ். தொடர்புடையவராக இருந்தவர் அர்லேகர்.


ஆர்.வி. அர்லேகரின் மனைவி பெயர் அனகா அர்லேகர். இவர்களுக்கு அதிதி குல்கர்னி என்ற மகளும் அமோக் அர்லேகர் என்ற மகனும் உள்ளனர்.


1989-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த அர்லேகர், கோவாவில் கட்சியை வளர்ப்பதற்கான பணிகளில் ஈடுபட்டார். கோவா மாநில பாஜக பொதுச்செயலாளர், தெற்கு கோவா பாஜக தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார்.

2002-ம் ஆண்டு கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் வாஸ்கோடகாமா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு முதல்முறையாக எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


2003-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை கோவா மாநில பாஜக தலைவராகவும் பணியாற்றினார்.


2007-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வாஸ்கோடகாமா தொகுதியில் போட்டியிட்ட அர்லேகர் தோல்வியடைந்தார்.

பின்னர் 2012-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெர்னெம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


2012-ம் ஆண்டு மார்ச் 19-ந் தேதி கோவா சபாநாயகராகப் பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலத்தில் கோவா சட்டப்பேரவை காகிதப் பயன்பாடு இல்லாத மின்னணு சட்டப்பேரவையாக மாற்றப்பட்டது.


2014-ம் ஆண்டு மனோகர் பாரிக்கர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டபோது, கோவாவின் அடுத்த முதல்வர் பதவிக்கான போட்டியில் அர்லேகரின் பெயரும் இடம்பெற்றது. ஆனால் பாஜக தலைமை லட்சுமிகாந்த் பர்சேகரை முதல்வராகத் தேர்வு செய்தது.

2015-ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி சபாநாயகர் பதவியிலிருந்து விலகிய அர்லேகர்,

அக்டோபர் 5-ந் தேதி பர்சேகர் தலைமையிலான கோவா அமைச்சரவையில் இடம்பெற்றார். வனம், சுற்றுச்சூழல் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகளின் அமைச்சராக 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பணியாற்றினார்.


இதையடுத்து 2021-ம் ஆண்டு ஜூலை 6-ந் தேதி இமாச்சலப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்ட அர்லேகர், ஜூலை 13-ந் தேதி பதவியேற்றார்.


2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இமாச்சலப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக ரச்சனா குப்தா நியமிக்கப்பட்ட நிலையில், அவருக்கான பதவியேற்பு நிகழ்ச்சியை ஆளுநர் மாளிகை கடைசி நேரத்தில் ரத்து செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.


ஆளுநரின் பணிச்சுமை காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த நியமனத்தில் பாஜக மேலிடத்துக்கு அதிருப்தி இருந்ததாக அப்போது செய்திகள் வெளியாகின.

அதே ஆண்டு சமஸ்கிருத மொழியை மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் ஆளுநர் மாளிகையில் சமஸ்கிருத வளர்ச்சிக்குத் தனிப் பிரிவு அமைக்கப்படும் என்றும் அர்லேகர் தெரிவித்தது கவனம் பெற்றது.


2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பீகார் ஆளுநராக அர்லேகர் நியமிக்கப்பட்டார். அப்போது பல்கலைக்கழகங்களில் 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்துவது தொடர்பாக மாநில கல்வித்துறைக்கும் ஆளுநர் மாளிகைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.


அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் துணைவேந்தர்கள் நியமனம், துணைவேந்தரின் சம்பளத்தை நிறுத்துவது, பல்கலைக்கழக வங்கிக் கணக்குகளை முடக்குவது ஆகிய விவகாரங்களில் முதல்வர் நிதிஷ்குமாருடனான அர்லேகரின் மோதல் தீவிரமடைந்தது.


பல்கலைக்கழக வேந்தராக ஆளுநருக்கு உள்ள அதிகாரங்களில் மாநில அரசு தலையிடுவதாக ஆளுநர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் முதல்வர் நிதிஷ்குமார், ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்ட அர்லேகர், 2025-ம் ஆண்டு ஜனவரி 2-ந் தேதி பதவியேற்றார். அப்போது கேரளாவில் முதல்வராக இருந்தவர் ’இடதுசாரி’ பினராயி விஜயன்.

2025-ம் ஆண்டு ஜூன் மாதம் கேரள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் காவிக்கொடியுடன் கூடிய பாரத மாதா படம் வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் படத்தை ஆளுநர் மாளிகையில் வைப்பதற்கு மாநில அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஜூன் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியை வேளாண் அமைச்சர் பி. பிரசாத் புறக்கணித்தார்.


தொடர்ந்து ஜூன் 19-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி வெளிநடப்பு செய்தார். ஆனால், பாரத மாதா படத்தை அகற்ற முடியாது என்பதில் அர்லேகர் உறுதியாக இருந்தார்.

ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சி மையமாக மாற்றுவதாக ஆளும் மார்க்சிஸ்ட் கூட்டணியும் எதிர்க்கட்சியான காங்கிரஸும் குற்றம்சாட்டின.


2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் கேரள சட்டப்பேரவையில் மாநில அரசின் கொள்கை விளக்க உரையை அர்லேகர் வாசித்தபோது புதிய சர்ச்சை வெடித்தது. மத்திய பாஜக அரசின் நிதிக் கொள்கைகளை விமர்சிக்கும் சில பகுதிகளை அவர் வாசிக்காமல் தவிர்த்ததாக மாநில அரசு குற்றம்சாட்டியது.


இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் வாசிக்காமல் விட்ட பகுதிகளை சட்டப்பேரவையில் வாசித்தார். மாநில அமைச்சரவை தயாரித்த கொள்கை விளக்க உரையில் ஆளுநர் தன்னிச்சையாக மாற்றம் செய்யலாமா என்ற விவாதம் எழுந்தது.


2026-ம் ஆண்டு மார்ச் 5-ந் தேதி தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டார். இதையடுத்து கேரள ஆளுநராக இருந்த ஆர்.வி. அர்லேகருக்கு தமிழக ஆளுநர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டது.


மார்ச் 12-ந் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தின் 27-வது ஆளுநராக அர்லேகர் பதவியேற்றார். அப்போது முதல்வராக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து மே 6-ந் தேதி தவெக தலைவர் விஜய், தமிழக பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. அர்லேகரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.


ஆனால், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அர்லேகர் வலியுறுத்தினார். இதனால் விஜய்யை உடனடியாக ஆட்சியமைக்க அழைக்கவில்லை.


மே 7-ந் தேதி விஜய் மீண்டும் ஆளுநரைச் சந்தித்தபோதும் பெரும்பான்மை ஆதரவு உறுதிப்படுத்தப்படவில்லை என்று ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதற்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவை கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.


தனிப்பெரும் கட்சியின் தலைவரை ஆட்சியமைக்க அழைத்து, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்வது அரசியல் சாசன மரபுகளுக்கு எதிரானது என்றும் அக்கட்சிகளின் தலைவர்கள் விமர்சித்தனர்.


ஆனால், ஆட்சியமைக்க உரிமை கோரும் கட்சி போதுமான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை ஆவணங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்று அர்லேகர் விளக்கம் அளித்தார்.

இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்திற்கும் சென்றது. பின்னர் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் 120 எம்.எல்.ஏ.க்களின் பலத்தைப் பெற்ற விஜய், மே 10-ந் தேதி தமிழக முதல்வராகப் பதவியேற்றார்.


சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விஜய்யின் பதவியேற்பு விழாவில் தமிழக பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


இந்த விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. அதைத் தொடர்ந்து தேசிய கீதமும், கடைசியாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


தமிழக அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் பாடப்படுவது வழக்கம். இந்த நடைமுறை மாற்றப்பட்டதற்கு திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, உள்ளிட்டவை கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

மே 21-ந் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவை விரிவாக்கத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாகப் பாடப்பட்டு சர்ச்சையானது.


தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த காலத்தில் அவரது சில நடவடிக்கைகள் அரசியல் விவாதங்களை ஏற்படுத்தின. 2026-ம் ஆண்டு ஜூலை மாதம் மதுரையில் வைகை ஆற்றைச் சீரமைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் அர்லேகர் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.


வைகையை மீட்டெடுப்பதில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் ஆளுநர் மாளிகை நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் நிர்வாக அதிகாரங்களில் ஆளுநர் தலையிடுவதாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் ஆளுநர் நேரடியாக ஆய்வுக் கூட்டம் நடத்துவது அவரது அரசியல் சாசன அதிகார வரம்புக்குள் வருமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.


தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும் பாரம்பரிய குருகுலக் கல்வி முறை குறித்தும் அர்லேகர் பேசிய கருத்துகள் தமிழகத்தில் விவாதத்தை ஏற்படுத்தின.

தமிழகத்தின் கல்விக் கொள்கையில் ஆளுநர் தலையிடக்கூடாது என்று கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.


2026-ம் ஆண்டு ஜூலை மாதம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் வந்தே மாதரம், தேசிய கீதம் ஆகியவற்றுக்குப் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்று ஆளுநர் மாளிகை அறிவுறுத்தியதாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்தார்.


தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும் நடைமுறையை மாற்றக்கூடாது என்று அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

இந்த விவகாரத்தில் உயர்கல்வி அமைச்சர் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தார்.

தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடப்படும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று ஆளுநருக்குக் கடிதம் எழுதினர்.


இந்நிலையில் கேரளா ஆளுநராக, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகப் பணியாற்றி வந்த ஆர்.வி. அர்லேகர், தற்போது தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.


கேரளாவின் புதிய ஆளுநராக மாத்தூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


தமிழ்நாட்டின் 27-வது ஆளுநர் அர்லேகர்

தமிழ்நாட்டில் இதுவரை ஆளுநர்களாகப் பதவி வகித்தவர்கள்:

கிருஷ்ண குமாரசிங்ஜி பவ்சிங்ஜி (1948–1952)

ஸ்ரீ பிரகாசா (1952–1956)

ஏ.ஜே. ஜான் (1956–1958)

பிஷ்ணுராம் மேதி (1958–1964)

ஜெயசாமராஜ உடையார் (1964–1967)

உஜ்ஜல் சிங் (பொறுப்பு ஆளுநர், 1966–1967)

கே.கே. ஷா (1971–1976)

மோகன்லால் சுகாடியா (1976–1977)

பி. கோவிந்தன் நாயர் (பொறுப்பு ஆளுநர், 1977)

பிரபுதாஸ் பட்வாரி (1977–1980)

எம்.எம். இஸ்மாயில் (பொறுப்பு ஆளுநர், 1980)

சாதிக் அலி (1980–1982)

எஸ்.எல். குரானா (1982–1988)

பி.சி. அலெக்சாண்டர் (1988–1990)

சுர்ஜித் சிங் பர்னாலா (1990–1991)

பீஷ்ம நாராயண் சிங் (1991–1993)

எம். சென்னா ரெட்டி (1993–1996)

கிருஷ்ணகாந்த் (கூடுதல் பொறுப்பு, 1996–1997)

எம். பாத்திமா பீவி (1997–2001)

சி. ரங்கராஜன் (பொறுப்பு ஆளுநர், 2001–2002)

பி.எஸ். ராம்மோகன் ராவ் (2002–2006)

சுர்ஜித் சிங் பர்னாலா (2006–2011)

கே. ரோசய்யா (2011–2016)

சி. வித்யாசாகர் ராவ் (கூடுதல் பொறுப்பு, 2016–2017)

பன்வாரிலால் புரோஹித் (2017–2021)

ஆர்.என். ரவி (2021–2026)

________________________________________________

அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதி இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. 


இந்த தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உலகின்

பெரும் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் பணத்தை வாரி இறைத்து வருகிறார்.


 தற்போது வரை டொனால்ட் டிரம்ப் கட்சிக்கு ரூ.26,343 கோடியை நன்கொடையாக அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

__________________________________________________


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி