எச்சரிக்கை மணி
எச்சரிக்கை மணி
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளது. ஆட்சியின் நிர்வாகத்திறன் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது.
இது ஒருபுறமிருக்க தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு குறைபாடுகள், வரலாறு காணாத விலைவாசி உயர்வு போன்றவை அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது.
அதிலும் குறிப்பாக பெரும்பாலும் பாதிக்கப்படுவோர் பெண்கள் தான்.
தவெக அரசின் இதுபோன்ற அவலங்களை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் மாநிலம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் நேற்று திமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மகளிர் அணியின் போராட்டம் என்பது அரசுக்கு எதிர்ப்பை பதிவு செய்யும் வழக்கமான ஒரு நிகழ்வாகவே இருக்கும் என்று ஆட்சியாளர்களும், உளவுத்துறையினரும் கணக்கு போட்டு வைத்திருந்தனர்.
ஆனால் கணக்குகளை மீறி இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அனைத்து இடங்களிலும் ஆயிரக்கணக்கான மகளிர் ஆர்ப்பரித்து திரண்டனர். அவர்கள் உணர்ச்சி பிழம்பாக மாறி சட்டம் ஒழுங்கு பிரச்னை, பெண்கள்-குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறைபாடுகள், விண்ணை முட்டிய விலைவாசி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து எழுச்சியுடன் கோஷமிட்டது பேசுபொருளானது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குறித்து மாநிலம் முழுவதும் கோஷங்கள் ஒலித்துக் கொண்டிருந்த நேரத்தில், கோவை சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம் என்று பரவிய தகவல், தவெக அரசின் மெத்தன ஆட்சிக்கு கணநேர சாட்சியாக மாறிப்போனது.இதை மக்கள் மன்றத்தில் சுட்டிக்காட்டிய மகளிர், மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதையும் பட்டியலிட்டு அதிரவைத்தனர்.
குறிப்பாக பெண்களுக்கு எதிரான கொலை, கொள்ளை, பாலியல் சார்ந்த குற்றங்களை அவர்கள் பட்டியலிட்டது, பார்வையாளர்களாக நின்றிருந்த மகளிரையும் பதறவைத்தது.
அதேபோல் தமிழகத்தில் தற்போது தலைவிரித்தாடும் மற்றொரு பெரும் அவலமாக இருப்பது விலைவாசி உயர்வு.
அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகை பொருட்கள் என்று அனைத்தின் விலையும் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இதில் பாதிக்கப்படுவோர் 95 சதவீதம் மகளிர் தான். பண்டிகை காலத்தில் நிலவும் இந்த விலைவாசி உயர்வு பெரும்சுமையாக மாறியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் பங்ேகற்றவர்கள், இதை கண்டித்து கோஷமிட்டபோது அவர்களின் வேதனை முழுமையாக வெளிப்பட்டது.
சிப்பாய்களாக கட்சியின் அனைத்து அணி நிர்வாகிகளும் சூழ்ந்திருந்தபோதும், தன்னெழுச்சியாக ஆர்ப்பாட்டத்தை மகளிரணியினர் நடத்தினர்.
நூதன முறையில் பல்வேறு அவலங்களை எடுத்துரைத்து மக்கள் படும் வேதனையை அரசுக்கு உணர்த்தினர். இது கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பு பொதுமக்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘மகளிரணியின் போராட்டம் தறிகெட்டு ஓடும் தவெக அரசுக்கு எச்சரிக்கை மணியாக அமையும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அதை நூறு சதவீதம் மெய்ப்பிக்கும் வகையில் நேற்றைய மகளிரணியின் அறிவார்ந்த எழுச்சி போராட்டம் அமைந்தது என்பது நிதர்சனமான உண்மை.
இதை உணர்ந்து ஆட்சியாளர்கள் செயல்படுவதே மக்களுக்கு செய்யும் நன்மை என்கின்றனர் மக்கள்நல ஆர்வலர்கள்..






