கபடநாடக வேடதாரி..
கபடநாடக வேடதாரி சுவாமிகள்...!
காஜியாபாத், முராத்நகரில் உள்ள ஷிவ்கங்காதேவி மடத்தில் உள்ள பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசியமாகப் பல இடங்களில் காட்சிப்பதிவு கருவிகள் (CCTV Cameras) பொருத்தப்பட்டு, அவை வெளிநாட்டு ஆபாச இணையதளங்களுக்கு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் வெளிவந்ததும், மடத்தின் தலைவரான பார்ப்பனச் சாமியார் முகேஷ் கோஸ்வாமி தலை மறைவாகிவிட்டார்.
அண்மைக் காலமாக, பெண்கள் உடை மாற்றும் காட்சிகள் ஆபாச காணொலிகளை வழங்கும் இணையதளங்களில் அதிக அளவில் பரவி வந்தன. இதில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல பெண்களின் காணொலிகளும் அடங்கும். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறையின் சோதனையின்போது, அனைத்துக் காணொலிகளும் ஒரே இடத்தில் பதிவானது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்கள் உத்தரப் பிரதேசத்தில் உள்ள காஜியாபாத் முராத் நகரில் உள்ள ஷிவ்கங்காதேவி மடத்திற்குச் சென்று, ஆற்றில் குளித்துவிட்டு அதன் உடை மாற்றும் அறையைப் பயன்படுத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து, உடை மாற்றும் அறையைச் சோதித்தபோது, அங்கு மிகவும் நவீனமான, எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் பல ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இந்தக் கேமராக்களின் நேரடி ஒளிபரப்பு கோயில் தலைமை மதகுருவாக இருக்கும் மகந்த் முகேஷ் கோஸ்வாமியின் கைப்பேசியில் இருந்தது.
காவல்துறையினர் மகந்தின் கைப்பேசியை சோதித்தபோது, அதில் பெண்கள் உடை மாற்றும் பல காணொலிப் பதிவுகள் (வீடியோ கிளிப்புகள்) கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் செய்தி பரவியதும், ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் மடத்தில் உள்ள சாமியார்களையும், ஊழியர்களையும் தாக்கியுள்ளனர்.
இதையடுத்து, மகந்த் முகேஷ் கோஸ்வாமி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவரைத் தேடி வந்த நிலையில், தற்போது அவர் தலைமறைவாகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு கங்கைக் கரையில் குளித்து விட்டு உடைமாற்ற மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்த தற்காலிகக் கூடாரத்திலும் இதே சாமியார் இதே போன்று காமிராவை வைத்து பிடிபட்டு உதைபட்டார்.
அந்த வழக்கில் மாநில காவல்துறை அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் மன்னிப்புக் கடிதம் வாங்கி அவரை விட்டுவிட்டது. மேலும் அந்தக் கூடாரங்களை மாவட்ட நிர்வாகம் அகற்றிவிட்டது.
இதனால் தனது மடத்திலேயே புதிதாக ஆடை மாற்றும் அறையை ஏற்பாடு செய்து இந்த ஆபாச மான வேலையை அந்தப் பார்ப்பனச் சாமியார் தொடர்ந்துள்ளார்.
கடவுள், மதம், மடம், கோயில், காவி பக்தி என்பது எல்லாம் எந்தத் தரத்தில் உள்ளன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே! காவி என்பது ஊரை ஏமாற்ற அணியும் கபட நாடகம்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் எழுத்தாளர் அனுராதா ரமணனுக்கு என்ன நடந்தது? தன்னிலை விளக்கமாக கண்ணீரும் கம்பலையுமாக அந்தப் பெண் எழுத்தாளர் புலம்பவில்லையா?
தொலைக்காட்சியிலும் அது ஒலிபரப்பப்பட்ட துண்டே! மறைந்த புட்டபர்த்தி சாயிபாபாவின் ஆசிரமத்தில் ஓர் அறையில் பெண்கள் கைப்பையும், பட்டுப்புடவைகளும் குவிந்து கிடந்தனவே!
மக்களை ஏமாற்றும் இந்த மத(ட)த் தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்ற நிலை ஏற்படாவிட்டால் காவல்துறை, சட்டம், நீதிமன்றம் முதலியவை தன் மரியாதையை இழக்க நேரிடும் – எச்சரிக்கை!
ஒரு வங்கியால் முடங்கிய
நாடு,...,
தென் அமெரிக்க நாடான பராகுவேயில் ஒரு டிஜிட்டல் வங்கியின் திடீர் வீழ்ச்சி, நாட்டையே பெரும் நிதி மற்றும் அரசியல் நெருக்கடியில் தள்ளியுள்ளது.
சுமார் 65 லட்சம் மக்கள் வசிக்கும் நாட்டில், 30 லட்சம் வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு பணத்தை எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். பல நூறு மில்லியன் டாலர் அரசு நிதியும் ஆபத்தில் சிக்கியுள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய நண்பராக கருதப்பட்ட பராகுவே அதிபர் சாண்டியாகோ பென்யா பதவி இழந்துள்ளார்.
பாரகுவே என்பது தென் அமெரிக்காவின் மையப்பகுதியில் ஒரு நாடாகும். சுமார் 65 லட்சம் பேர் வசிக்கும் இந்த நாட்டின் அதிபராக சாண்டியாகோ பென்யா இருந்து வந்தார்.இவர் டிரம்பின் நெருங்கி நண்பர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் இப்போது தனது அதிபர் பதவியை இழந்தது மட்டுமின்றி, வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டுள்ளார்.
ஒட்டுமொத்த பஞ்சாயத்திற்கும் மையக்கரு யூனோ வங்கி. குரூபோ வாஸ்கெஸ் என்ற குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த டிஜிட்டல் வங்கி, மிக குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்து நாட்டின் முக்கிய நிதி நிறுவனங்களில் ஒன்றாக மாறியது.
2021ஆம் ஆண்டு பைனான்சியேரா எல் கொமெர்சியோ நிறுவனத்தை கையகப்படுத்திய குரூபோ வாஸ்கெஸ், அதை யூனோ வங்கியுடன் இணைத்தது. 2022 பிப்ரவரியில் டிஜிட்டல் வங்கி சேவையை தொங்கி, பிறகு 2024ஆம் ஆண்டு அங்குள்ள முக்கிய வங்கியான விஷன் வங்கியையும் கையகப்படுத்தி இணைத்து கொண்டது.
இதன் மூலம் சுமார் 30 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்ற யூனோ வங்கி, அரசு நிறுவனங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சொந்தமான சுமார் 850 மில்லியன் டாலர் நிதியையும் நிர்வகித்து வந்தது.
வங்கியின் நிதிநிலை மோசமடைந்ததுடன், கடன் வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. வங்கியின் உரிமையாளர்களுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கப்பட்டதாகவும், அதற்கு போதிய ஜாமீன் பெறப்படவில்லை என்றும் தெரிய வந்தது.
இதனால் வங்கியின் மூலதன இருப்பு, சட்டப்படி இருக்க வேண்டிய குறைந்தபட்ச அளவைவிட பாதிக்கும் கீழே சரிந்தது. இதையடுத்து நவம்பர் 3ஆம் தேதி பராகுவே ரிசர்வ் வங்கி யூனோ வங்கியை தனது கண்டரோலில் கொண்டு வந்தது.
வங்கியை மறுசீரமைத்து பிரச்சினைகளை சரி செய்யும் பணி தொடங்கப்பட்டது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அரசு ஓய்வூதிய மற்றும் சுகாதார நிதிக்கு மட்டும் யூனோ வங்கியில் சுமார் 380 மில்லியன் டாலர் இருந்ததாக கூறப்படுகிறது. வங்கி மூலம் ஓய்வூதியம் பெற்றுவந்த 32,000 ஓய்வூதியதாரர்களும் பாதிக்கப்பட்டனர்.
நாட்டின் மிக பெரிய வங்கிகளில் ஒன்று முடங்கியதால் கிட்டத்தட்ட நாடே ஸ்தம்பிக்கும் நிலை உருவானது.
இந்த விவகாரம் அரசியல் நெருக்கடியாக மாறியதற்கு அதிபர் பென்யாவுக்கும் குரூபோ வாஸ்கெஸுக்கும் இருந்த தொடர்பே முக்கிய காரணம். பொருளாதார நிபுணரான பென்யா, சர்வதேச நாணய நிதியத்தில் பணியாற்றியவர். முன்னாள் நிதியமைச்சராகவும் இருந்துள்ளார்.
2023 ஆகஸ்டில் அதிபராகப் பதவியேற்றார். அவர் முன்பு குரூபோ வாஸ்கெஸில் பங்குகளை வைத்திருந்ததாகவும், தனது அதிபர் பதவியை பயன்படுத்தி யூனோ வங்கியின் வளர்ச்சிக்கு உதவியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஆனால், 2025 மார்ச் மாதமே தனது பங்குகளை விற்றுவிட்டதாகவும், வங்கியில் நேரடியாக முதலீடு செய்யவில்லை என்றும் பென்யா மறுத்துள்ளார்.
மேலும், யூனோ வங்கி முதலில் கையகப்படுத்திய பைனான்சியேரா நிறுவனத்தை நடத்திய கார்லோஸ் கார்வல்லோவை பராகுவே ரிசர்வ் வங்கியின் தலைவராக நியமித்ததும் சர்ச்சையானது. வங்கி முடங்கியதால் சர்ச்சைகள் பெரிதாக வெடிக்க தொடங்கிய நிலையில், நவம்பர் 3ஆம் தேதி கார்வல்லோ பதவி விலகினார்.
வங்கி சரிந்த நிலையில், தலைநகர் அசன்சியோனில் போராட்டங்கள் வெடித்தன. நவம்பர் 4ஆம் தேதி எதிர்க்கட்சிகள் பென்யாவுக்கு எதிராக பதவி நீக்க நடவடிக்கையை தொடங்கின.
நவம்பர் 5ஆம் தேதி அவர் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனாலும் அவர் மீது பதவி நீக்க நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டது. நவம்பர் 6ஆம் தேதி பென்யா பதவி நீக்கம் செய்யப்பட்டார். பதவி நீக்கத்துக்கு பிறகு பென்யா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இப்படி தான் சாதாரணமாக ஒரு டிஜிட்டல் வங்கியாக தொடங்கிய ஒன்று, 30 லட்சம் வாடிக்கையாளர்களின் பணத்தை முடக்கியதுடன், ஒரு அதிபரின் அரசியல் வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.












