அரசு என்று ஒன்று.......
🗞️ சட்டம்-ஒழுங்கு ஐசியு-விலும், ஆட்சி நிர்வாகம் கோமாவிலும் இருப்பதாக மு.க.ஸ்டாலின் விமர்சனம். தவெகவை சேர்ந்த பிரதிநிதிகளுக்கே கட்டுப்பாடு இல்லை என்றும் கண்டனம்..
🗞️ கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ., ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய செய்தியறிந்து அதிர்ச்சி. அருள் விக்னேஷை கைது செய்து நேர்மையான விசாரணை நடத்துவதை உறுதி செய்ய எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
🗞️ 6 மாதங்களை நிறைவு செய்தது விஜய் தலைமையிலான தவெக ஆட்சி. விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவுதான் சாதனை என பொதுமக்கள் வேதனை.
🗞️ முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று த.வெ.க MLA-க்கள் கூட்டம். அமைச்சர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் ஆலோசனை.
🗞️ தன் எம்.எல்.ஏ.க்களின் ஆட்டத்தை எப்போது கட்டுப்படுத்துவார் டம்மி CM? என்று உதயநிதி கேள்வி. சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்காமல் தூங்கும் முதலமைச்சர், விழித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
🗞️ தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை கைது செய்யாதது ஏன்? என பெ.சண்முகம் கேள்வி. நடவடிக்கை எடுக்க தயங்குவது எதற்காக என்றும் தவெக அரசுக்கு சரமாரி கேள்வி.
🗞️ சென்னையில் காசிமேடு, செம்பியம் பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து கொலை. அமைச்சர்கள் குடியிருக்கும் அபிராமபுரத்திலும் இளைஞர் வெட்டிக்கொலை.
🗞️ நாளை மறுநாள் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு. வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையக்கூடும் என்றும் வானிலை மையம் கணிப்பு.
🗞️ தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பள்ளி பேருந்தில் சிக்கி எல்கேஜி மாணவன் பலி. சிறுவன் இருப்பதை அறியாமல் வாகனத்தை பின்னோக்கி இயக்கியபோது விபத்து.
🗞️ தூத்துக்குடி அருகே விசாரணை என்ற பெயரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை. தருவைக்குளம் காவல்நிலைய தனிப்பிரிவு தலைமைக் காவலர் சஸ்பெண்ட்.
🗞️ பிரதமர் பதவியை ஏற்காதது ஏன் என்பது பற்றி சுயசரிதையில் சோனியா காந்தி தகவல். ராகுல், பிரியங்காவின் எதிர்ப்பு காரணமாகவே ஏற்க மறுத்துவிட்டதாக உருக்கம்.
🗞️ உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம். மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய அணி பதக்கம் வென்று அசத்தல்..
🗞️ பாகிஸ்தானில் பிரபல பெண் செய்தி தொகுப்பாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை. கொலை செய்துவிட்டு தற்கொலை போன்று சித்தரித்த கணவரை கைது செய்தது போலீஸ்.
🗞️ பல்கேரியாவில் பனிமூட்டம் காரணமாக சாலையில் அடுத்தடுத்து 50 வாகனங்கள் மோதி விபத்து. 10 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பின்பு சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அன்றாடம் நடக்கும் நிகழ்வாகவே மாறி விட்டன.
கடந்த மாதம் 26ம் தேதி தேனி மாவட்டம், தேக்கம்பட்டி சிறையில் இருந்து இரவு, போலீசாரை கொடூரமாக தாக்கி விட்டு, 17 கைதிகள் தப்பிச் சென்ற விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் சட்டம், ஒழுங்கில் நம் மாநிலம் எவ்வளவு பின்னடைவை சந்தித்திருக்கிறது என்பதற்கு சாட்சியமாகவே அமைந்து விட்டது.
மேலும், விசாரணை கைதிகள் மரணம், சிறைக்குள் கைதிகள் தற்கொலை என பல சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன. கைதிகள் தப்பிய சம்பவம் நடந்து 2 வாரத்தில் தீபாவளி தினத்தன்று, சாலையில் மது போதையில் ரகளை செய்தவர்களை தட்டிக் கேட்ட சிறப்பு எஸ்ஐ செந்தில்குமார், கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
தெருக்கள் எங்கும் பிரகாசமாகவும், வாண வேடிக்கையால் வானமே வண்ணமயமாகவும் திகழும் தீபாவளி பண்டிகை நாளில் மட்டும், 17 பேர் கொலையாகியுள்ளனர்.இதில் 2 ரவுடிகள், சிறுவர்கள் உள்பட பலர் அடக்கம். குறிப்பாக, சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்து சீரான இடைவெளியில், பழிக் குப்பழியாக ரவுடிகள் கொல்லப்படும் சம்பவம், அம்மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
தமிழகத்தில் தீபாவளி தினத்தில் கூட கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதே என்ற கேள்விக்கு, அமைச்சர் ராஜ்மோகன் பண்டிகை காலங்களில் இது போன்ற கொலைச் சம்பவங்கள் நடப்பது புதிதல்ல;
கடந்த காலங்களிலும் தீபாவளி நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன - என கூலாக அளித்த பதில் கட்சி தலைவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
பண்டிகை தினத்தில் கொலையானவர்கள் குறித்த கேள்விக்கு, ஒரு அமைச்சர் இப்படியா பொறுப்பின்றி பதில் சொல்வது? இதிலுமா முந்தைய ஆட்சி மீது குற்றம் சுமத்த பார்ப்பது? இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சட்டம், ஒழுங்கு பிரச்னையை சமாளிக்க முடியாமல், உரிய பதில் தராமல் பொறுப்பை தட்டிக் கழிக்கும் செயலென, அமைச்சர் ராஜ்மோகனுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. மேலும், இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உள்ளிட்டோரை வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவமும் தொடர்கதையாக உள்ளன.
தமிழகத்தில் கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
பெரும்பலான சம்பவங்கள் மது, கஞ்சா மற்றும் உயர்ரக போதைப்பொருள் பயன்பாட்டினால், நடப்பதாக கூறப்படும் நிலையில், இவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முயல வேண்டும்.
உச்சக்கட்டமாக, சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் தயாரிக்கப்பட்டது பேரதிர்ச்சியை உருவாக்கியது.
உச்சக்கட்டமாக தவெக அரசின் துணை சபாநாயகர் ரவிசங்கர், அடிப்படை வசதிகள் கோரியவரை தாக்கும் வீடியோ, கலெக்டருக்கு, தவெக எம்எல்ஏ ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய விவகாரம், கொலை மிரட்டல் விடுப்பது, போதைப்பொருள் வழக்கில் சிக்குவது, பாலியல் வழக்கில் சிக்குவது, கவுன்சிலர், கட்சிப்பதவிகளுக்கு பல லட்சம் கேட்பது என அக்கட்சியினரே பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர்.மேலும், பல குற்ற சம்பவங்களில் பிரச்னைகளை மூடி மறைக்கவே தவெக அரசு முயல்கிறது. இனியாவது, குற்ற சம்பவங்களை தீவிரமாக தடுக்க தவெக அரசு முயல வேண்டும். காவலர் ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும்.
சட்டம், ஒழுங்கு சீர்குலைவை சரி செய்வது தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் விஜய், அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபட வேண்டுமென மக்கள் கோரிக்கை வலுத்துள்ளது.

