அதிகரிக்கும் சாவுகள்!
அதிகரிக்கும் காவல் நிலைய மரணங்கள்.!
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் 6க்கும் மேற்பட்ட காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளன.
இவற்றில் நாகர்கோவில் மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் நீதிமன்ற காவலில் மரணமடைந்த சம்பவமும், மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி டிரைவர் பாலகிருஷ்ணன் மரணமடைந்த சம்பவமும் கொடூரமானதாகும்.
மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் தேனி மாவட்டம் அழகநாயக்கன்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் பாலகிருஷ்ணன் (42) விசாரணைக்காக சென்று பிணமாகத் திரும்பியிருப்பது, காவல்துறையின் செயல்பாடுகள் மீது கேள்விக்குறியை எழுப்பி வருகிறது.
ஏலக்காய் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்தது குறித்து புகார் அளிக்கவே பாலகிருஷ்ணன் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு சென்றார். ஆனால், லாரியில் இருந்த ஏலக்காய் மூடைகள் மாயமானது குறித்தும், தீ பிடித்ததும் குறித்து கேட்டு காவல்துறையினர் அவரை சித்திரவதை செய்துள்ளனர்.நவம்பர் 14ம் தேதியன்று அதிகாலையில், காவல் நிலையக் கழிப்பறையில் பாலகிருஷ்ணன் தான் அணிந்திருந்த சட்டையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இது கடும் சித்திரவதையால் நிகழ்ந்த ‘லாக்அப் மரணம்’ அல்லது அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் என்ற குற்றச்சாட்டை எழுப்பி உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தையடுத்து செக்கானூரணி காவல் நிலைய ஆய்வாளர் முத்து உள்ளிட்ட 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை தற்போது சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
விசாரணை கைதிகளாக இருந்தாலும், புகார் அளிக்க சென்றவராக இருந்தாலும், காவல் நிலைய வளாகத்தில் அவர்கள் உயிருக்கு காவல்துறைதான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அலட்சியமாக விசாரணை என்ற பெயரில், தமிழகத்தில் சமீபகாலமாக தொடர்ந்து வரும் லாக்கப் மரணங்கள் கவலையை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் (ஜெயராஜ் - பென்னிக்ஸ்) காவல் சித்திரவதையால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து போலீசாரும் குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்டனர். இருப்பினும் அத்தகைய கொடூர நிகழ்வுக்குப் பிறகும், தமிழகத்தில் காவல் நிலைய உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறையவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.
அறிவியல் பூர்வமான விசாரணை முறைகளுக்கு மாற்றாக, குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்க அடித்துத் துன்புறுத்தும் பழைய அணுகுமுறையை இன்றும் காவலர்கள் கையாள்வது காவல் மரணங்கள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாகும்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி அனைத்து காவல் நிலையங்களிலும் 24 மணி நேரமும் இயங்கும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். ஆனால் பல இடங்களில் அவை இயங்காமல் இருப்பது அல்லது காட்சிகள் மாயமாவது சந்தேகங்களை அதிகரிக்க செய்கிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சமீபகாலமாக சரிந்து வரும் நிலையில், காவல் நிலைய மரணங்களும் காவல்துறை அதிகாரிகளின் காட்டாட்சியில் குடிமகன்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய காவல் நிலையமே ஒரு குடிமகனின் உயிருக்கு பாதுகாப்பற்ற இடமாக இருக்குமானால், அக்கொடுமையை பொதுமக்கள் எங்கு சென்று முறையிட முடியும்?
எனவே லாக்கப் மரணங்களை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கள்ளக்குறிச்சி இடைத்தேர்தல் வருமா?
தவெகவிற்கு சவால்
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் விவகாரம் டெல்லி வரை சென்றுவிட்டதா? என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் மாவட்ட ஆட்சியர் தரப்பில் இருந்து தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு புகார் அளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
ஆட்சியர் மத்திய அரசால் நியமிக்கப்படும் ஐஏஎஸ் அதிகாரி என்பதால், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசே களமிறங்குமா? எனக் கேட்கின்றனர்.
இதற்கிடையில் தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது. ஒரு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், அதிமுக பெண் நிர்வாகி ஆகியோர் சார்பில் தனித்தனியே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எஃப்.ஐ.ஆர் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
சமீபத்தில் நடந்த தவெக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டத்தி3ல் கூட, முதலமைச்சர் விஜய் கண்டிக்கவோ இல்லை என்கின்றனர்.
ஆனால் அதற்குள் வழக்கில் என்ன மாதிரியான தண்டனை கிடைக்கும் என்று விவாதிக்க தொடங்கியுள்ளனர். ஒரு எம்.எல்.ஏ பதவியிழக்க வேண்டுமெனில் அவர் மீதான குற்ற வழக்கில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை பெற வேண்டும்.
இதைத் தான் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 சொல்கிறது. அப்படி தண்டனை பெற்று விடுதலையான பின்னர், அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
ஒருவேளை தீவிர குற்றமாக இருந்தால் அபராதம் அல்லது சில நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டாலே உடனடியாக பதவி பறிபோகும் எனத் தெரிகிறது.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தை பொறுத்தவரை இரண்டு விதமான குற்றங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன.
பெண் மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பினார். மதுபோதையில் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு அத்துமீறி சென்று தொல்லை கொடுத்தார். இந்த குற்றங்கள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 பிரிவு 67ன் கீழ் மின்னணு சாதனங்கள் மூலம் ஆபாசமான செய்திகள் அனுப்புவது குற்றமாக கருதப்படும்.
இதன்கீழ் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 75, 79, 333 ஆகிய பிரிவுகளின் கீழ் பெண்ணின் மாண்பை குலைக்கும் நோக்கில் அல்லது துன்புறுத்தும் நோக்கில் நடந்து கொண்டது நிரூபிக்கப்பட்டால் 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.
இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அப்படியே செய்யப்பட்டாலும் போதிய ஆதாரங்கள் உடன் நிரூபிக்கப்படுமா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக தான் இருக்கும்.
ஏனெனில் மாவட்ட ஆட்சியர் தரப்பில் இருந்து வெளிப்படையாக எந்த ஒரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. அவர் தரப்பு நியாயத்தை குற்றச்சாட்டை கேட்காமல் நடவடிக்கை எடுக்க முடியாது.
அடுத்தகட்டமாக அருள் விக்னேஷ் தனது பதவியை இழப்பதாக வைத்துக் கொள்வோம். அது நிச்சயம் தவெகவிற்கு சிக்கலாகும்.
கட்சி எம்.எல்.ஏ அவதூறுக்கு ஆளாகி எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்கள் கிடைப்பதற்கு வழிவகுக்கும். அடுத்து வரும் இடைத்தேர்தலில் நெருக்கடியை சந்திக்கலாம்.
உதாரணமாக 2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை எடுத்து பாருங்கள். அருள் விக்னேஷ் (81,132) வெறும் 798 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் ராஜீவ் காந்தி 80,334 வாக்குகளும், விசிகவின் மாலதி 77,666 வாக்குகளும் பெற்றிந்தனர்.
முதல் மூன்று இடங்களை பிடித்த வேட்பாளர்கள் 32.50 சதவீதம், 32.18 சதவீதம், 31.11 சதவீதம் என வாக்குகளை பெற்றனர். எனவே இடைத்தேர்தல் வரும் பட்சத்தில் தவெக கடினமான போட்டியை சமாளிக்க நேரிடும். இதில் விசிக தற்போது தவெக கூட்டணியில் இருக்கிறது.
இருப்பினும் திமுகவிற்கும் கணிசமான வாக்குகள் கிடைத்திருக்கும். சென்ற தேர்தலில் வணிக பெற்றது திமுக வாக்குகள்தான்.
மறுபுறம் அதிமுகவும் சவாலாக நிற்கும். இதுபோன்ற சிக்கல்கள் வருமா? இல்லையா? என்பதே கேள்வி.






