ஆளுநர் - அமித் சா ஆய்வு.!
நீதிபதி கர்ணன் காலமானார்!
உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் (வயது 72) உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று (13.11.2026) காலை 6 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கர்ணன், கடந்த 1955ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள கருமநாதம் என்ற கிராமத்தில் சுவாமிநாதன் - கமலம் தம்பதியிருனக்கு மகனாகப் பிறந்தார்.
1983-ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த அவர், வழக்கறிஞராகப் பதிவு செய்து தனது சட்டப் பணியைத் தொடங்கினார்.
இவரது இயற்பெயர் கருணாநிதி ஆகும். அவரது மனைவி சரஸ்வதியின் விருப்பத்திற்கிணங்க, 1991ஆம் ஆண்டு தனது பெயரை கர்ணன் என மாற்றிக்கொண்டார்.
தொடர்ந்து சட்டத்துறையில் பணியாற்றி வந்த கர்ணன், 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அதன்பின்னர் நிரந்தர நீதிபதியாகப் பொறுப்பேற்று பணியாற்றினார். இதற்கிடையே, 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றங்களில் பணியாற்றிய அவர், தனது நீதிபதி பணிக்காலத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்றார்.
அதிலும் குறிப்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகளும் பிறப்பித்த உத்தரவுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
தனக்கு உரிய அதிகாரங்கள் இருப்பதாகக் கூறி அவர் பிறப்பித்த உத்தரவுகள் நீதித்துறையில் பெரும் விவாதத்தைக் கிளப்பின.இதையடுத்து, உச்ச நீதிமன்றம் அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டது.
அப்போது தன்னைச் சாதி ரீதியாகப் பாகுபடுத்துவதாகவும், துன்புறுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதனால் நீதிபதி கர்ணனுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையிலான மோதல் நாடு முழுவதும் கவனம் பெற்றது.
இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக, 2017ஆம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவர் 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் சிறைத் தண்டனைக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி ஆபாச புகார் முதல் தீபாவளி கொலைகள் வரை..
தமிழக ஆளுநர் - அமித் சா ஆய்வு.!
தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் டெல்லியில் இன்று நேரில் சந்தித்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த முக்கியச் சந்திப்பில், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள சூழலில் மாநிலத்தில் நிலவும் பாதுகாப்புச் சூழல் குறித்து ஆளுநர் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
ஒன்றிய உள்துறை அமைச்சகம் கேட்டிருந்த விளக்கத்தின் அடிப்படையில், தமிழகத்தில் அண்மையில் நடந்த அதிர்ச்சியளிக்கும் குற்றச் சம்பவங்கள் மற்றும் ஆளும் கட்சிப் பிரதிநிதிகள் மீதான சர்ச்சைகள் அனைத்தையும் ஆதாரங்களுடன் ஆளுநர் அமித் ஷாவிடம் விளக்கியுள்ளார்.
சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில் கீழ்க்கண்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து உள்துறை அமைச்சரிடம் விரிவாகப் பேசப்பட்டுள்ளது:
தீபாவளி தினத்தன்று ஒரே நாளில் 11 முதல் 13 பேர் வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் அதனால் மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சம் குறித்து அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேனியில் மதுபோதையில் தகராறு செய்த கும்பலைத் தட்டிக்கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் நடுரோட்டிலேயே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், காவல்துறையினரின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளதாக ஆளுநர் விவரித்துள்ளார்.
புழல், கோவை மற்றும் தேனி சிறைகளில் இருந்து கைதிகள் தப்பியோடிய தொடர் சம்பவங்கள் மற்றும் சிறைத்துறை பாதுகாப்பில் உள்ள நிர்வாகத் தோல்விகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சிறுமிகள் மாயமாகும் வழக்குகள் அதிகரித்து வருவது குறித்து அமித் ஷாவிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதே பெரும்பாலான திடீர் கொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் காரணமாக இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.சட்டம் - ஒழுங்கு மட்டுமின்றி, ஆளும் கட்சிப் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆளுநர் புகார் அளித்துள்ளார்.
குறிப்பாக, பெண் மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு தவெக எம்.எல்.ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் மற்றும் சட்டப்பேரவை துணை சபாநாயகர் எம். ரவிசங்கர் தன்னிடம் மனு கொடுக்க வந்த பொதுமக்களைத் தாக்கிய விவகாரம் ஆகியவை குறித்தும் அமித் ஷாவிடம் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் அமித் ஷா உடனான இந்தச் சந்திப்பை முடித்துக்கொண்டு, ஆளுநர் ஆர்லேக்கர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஜம்மு - காஷ்மீர் புறப்பட்டுச் சென்றார். அவர் வரும் நவம்பர் 15-ம் தேதி சென்னை திரும்புகிறார்.
ஏற்கனவே இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்த முதல்வர் விஜய், கடந்த மூன்று நாட்களாகத் தலைமைச் செயலகத்தில் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் மற்றும் உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க் ஆகியோருடன் தொடர் ஆலோசனை நடத்தினார்.
இருப்பினும், 40 நிமிடங்கள் ஆளுநர் அளித்துள்ள இந்த விரிவான அறிக்கையைத் தொடர்ந்து, ஒன்றிய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு எதிராக எத்தகைய அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கப்போகிறது என்பதே தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.











