இது வேடிக்கைப் பார்க்கும் நடவடிக்கை அல்ல...!






மேகதாது வேடிக்கைப் பார்க்க அல்ல.

ஒப்பந்தங்கள், சட்டங்கள், அறங்களை எல்லாம் மீறி, ஏற்கனவே காவிரிக்கு குறுக்கே 4 அணைகளை கட்டியிருக்கிற கர்நாடகா, இப்போது தமிழகத்தை மொத்தமாக வஞ்சிப்பதற்காக மேகதாதுவில் அணை கட்ட துடிக்கிறது.இந்த அணைக்காக தொடர்ந்து குரல்கொடுத்து வந்தவர் டி.கே.சிவக்குமார். இவர், தற்போது கர்நாடகா மாநில அரசின் முதல்வராக பொறுப்பேற்று இருக்கிறார்.

இவர் பதவியேற்ற வேகத்திலேயே,மேகதாது அணை கட்டுவதற்கான மறுசீரமைக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுவிட்டது.

ஒன்றிய அரசும், ஜாடை மாடையாக கண்அசைவு தெரிவித்துவிட்டது. விரைவில் பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற உள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் விஜய் கடந்த 7ம் தேதி பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார்.


அதில், ‘‘கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட உத்தேசித்துள்ள இடத்தை ஒன்றிய அரசு அதிகாரிகள் பார்வையிட்டது சரியல்ல. கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இன்றி எவ்வித சட்டப்பூர்வ, நிர்வாக அனுமதியை வழங்கக்கூடாது’’ என குறிப்பிட்டுள்ளார்.


இதற்கு பிரதமர் மோடி பதிலளிக்கும் முன்பாக, கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பதிலளித்துள்ளார். “மேகதாது அணை கட்டுவதற்காக நாங்கள் யாரிடமும் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை.

கர்நாடகா தனது சொந்த இடத்தில் அணையை கட்டிக்கொள்ளலாம் என்று இந்திய உச்சநீதிமன்றமே அனுமதி அளித்துவிட்டது. நாங்கள் இந்த வாய்ப்பை தவறாக பயன்படுத்த மாட்டோம். சண்டையிடுவதற்கோ அல்லது மோதிக்கொள்வதற்கோ இடமே இல்லை.


அந்த காலம் முடிந்துவிட்டது. நாட்டின் சட்டத்தை மதிப்போம். இணைந்து செயல்படுவோம், நீரை பகிர்ந்து கொள்வோம். நம்மிடையே உள்ள ஒற்றுமை உணர்வை மேலும் பலப்படுத்துவோம்” என கறாராக கூறியுள்ளார்.


கர்நாடகா மாநில முதல்வரின் இந்த அடாவடித்தனமான பேச்சுக்கு, தமிழக முதல்வர் விஜய் சூட்டோடு சூடாக பதிலடி கொடுக்காமல் அமைதி காப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேகதாது அணை விவகாரத்தில், தவெக அரசு முழுமையாக வேடிக்கை பார்க்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதர அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர். கடந்த 2007ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில், தமிழ்நாட்டுக்கு காவிரி நீரில் இருந்து 419 டிஎம்சி ஒதுக்கப்பட்டது.

பின்னர், கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு 192 டிஎம்சி நீர் வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.


உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், தமிழ்நாட்டுக்கான ஒதுக்கீட்டில் இருந்து 14.75 டிஎம்சி நீரை குறைத்தது. இதன்மூலம் கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய நீரின் அளவு 177.25 டிஎம்சியாக நிர்ணயம் செய்யப்பட்டது.


இது, இன்றுவரை முறையாக வழங்கப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு துடிக்கிறது.


இந்த விவகாரத்தில், கர்நாடகா அரசு எப்படி பிடிவாத போக்கை கடைபிடிக்கிறதோ, அதைவிட பன்மடங்கு தமிழக அரசு பிடிவாத போக்கை கையில் எடுத்தால் மட்டுமே தமிழகம் பாலைவனமாக மாறுவது தடுக்கப்படும்.


இந்த விவகாரத்தில் உள்ள மாபெரும் அபாயத்தை, தமிழக முதல்வர் எப்படி கையாளப்போகிறார் என்பது புரியாத புதிராக உள்ளது. பொதுவாழ்வில் நன்கு பழுத்த அனுபவம் உள்ள டி.கே.சிவக்குமார் அளவுக்கு, தமிழக முதல்வர் விஜய் வென்றெடுப்பாரா என்பது தெரியவில்லை.


விளைவு எதுவாயினும், தமிழக நலனே முக்கியம் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கவேண்டும்.

இதுவே, தமிழ் மண்ணின் இப்போதைய தேவை..





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி