இனியும் அரசை நம்பாதீர்கள்

இந்நிலையிலும் நீட் தேவையா 

ஏற்கனவே முறையற்ற வகையில் நடைபெறும் “நீட்” தேர்வை இந்த கொரோனா காலத்திலும் நடத்தாமல் மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும்; மாநில அரசும் இத்தேர்வைக் கட்டாயம் எதிர்க்க வேண்டும்” 

கொரோனா என்ற கொடூரத் தொற்றின் கோரத் தாண்டவத்தால், ஒட்டுமொத்தத் தேசமே அச்சத்திலும் பீதியிலும் முடங்கிக் கிடக்கும் இந்த நேரத்திலும், ஜூலை 26-ம் தேதி “நீட்” தேர்வு நடைபெறும் என்று நடைபெறும் என்று அறிவித்திருப்பது, மாணவ - மாணவியரைப் பற்றியோ, அவர்தம் பெற்றோர்களைப் பற்றியோ, மத்திய அரசுக்குத் துளியும் அக்கறையோ கவலையோ இல்லை என்றே தெரிகிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஒடிசா, கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கான தேதியைக் குறிக்கிறார்கள் என்றால், இது என்ன மாதிரியான மனநிலை என்பது புரியவில்லை.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான 68 ஆயிரம் கோடிக் கடனுக்குச் சலுகை அளிப்பதும், பல்லாயிரம் கோடி மதிப்பிலான நாடாளுமன்றக் கட்டடத்துக்கான பணிகளைத் தொய்வின்றி தொடர்வதும், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி மதிப்பைச் சிதைத்து அதனை மத்திய அமைச்சகத்தின் ஏவல் அமைப்பாக மாற்றுவதுமான, வெகுமக்களுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத காரியங்களில் இந்த கொரோனா காலத்திலும் குறியாக இருப்பது போலவே, நீட் தேர்வை நடத்தி சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைக் கலைப்பதிலும் மத்திய பா.ஜ.க அரசு அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.

நாடு இப்போது இருக்கும் பதற்றமான சூழலில் என்ன மனநிலையுடன் மாணவர்களால் இந்தத் தேர்வுக்குத் தயார்ப்படுத்திக்கொண்டு எழுத முடியும்?

மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்தே கொரோனா நோய் குறித்த அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. மார்ச் 16-ம் தேதி முதல் பள்ளித்தேர்வுகளே நடக்குமா, நடக்காதா என்ற நிலையில்தான் தேர்வுகள் நடந்தன. இந்தியா முழுமைக்கும் மார்ச் 22-ம் தேதி ஒருநாள் மக்கள் ஊடரங்கு கடைப்பிடிக்கப்பட்டது. 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு முந்தைய தினமான 24-ம் தேதி தமிழகம் முழுவதும் காலை 6 மணி முதல் 144 தடையுத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன. ஆனால், அன்றைய தினம் கூட பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வை எழுதினார்கள்.

அன்றைய தினம் காலை முதலே பொது மற்றும் தனியார் போக்குவரத்து இயங்கவில்லை. ஆனாலும் மாணவர்கள் தேர்வுக்கு வந்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில், எத்தகைய பதற்றத்தில் அவர்கள் தேர்வு எழுதி இருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. தமிழகத்தில் மட்டும் சுமார் 34 ஆயிரம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் அன்று நடைபெற்ற தேர்வுகளை எழுதவில்லை. அவர்களது எதிர்காலத்துக்குப் பதில் சொல்ல வேண்டியது மாநில அரசு அல்லவா?

மேலும், இந்த நீட் தேர்வு எத்தகைய பாதிப்புகளை இந்நாட்டில் ஏற்படுத்தி வருகிறது என்பதைத் தொடர்ச்சியாகச் சொல்லி வருகிறேன். ஏழுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் உயிருக்கு உலை வைத்த தேர்வு இது. ஏழை, அடித்தட்டு மக்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் தேர்வு இது. இலட்சக்கணக்கில் பணம் கட்டி பயிற்சி மையங்களில் படிக்க முடிந்த மாணவர்களுக்கு மட்டுமே வசதியான தேர்வு இது. தமிழில் படித்து, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை மருத்துவத்துறைக்குள் நுழைய விடாத தேர்வு இது. எனவேதான் அந்தத் தேர்வை எதிர்க்கிறோம்.

இத்தேர்வு நியாயமாக நேர்மையாக நடைபெறவில்லை என்பதற்கு உதாரணமாக ஆள்மாறாட்ட வழக்குகள் பதிவாகி, பல மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் சிறையில் அடைக்கப்பட்ட காட்சியையும் பார்த்தோம்.

இப்படி முறையற்ற ஒரு தேர்வை, இந்தக் கொரோனா காலத்திலும் நடத்தாமல் மத்திய அரசு ஒத்தி வைக்க வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானம் போட்டு அனுப்பியுள்ளோம் என்பதால், மாநில அரசும், இத்தேர்வைக் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” 

என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


-------------------------------------------------------

இனியும் அரசை நம்பாதீர்கள்

45 நாட்கள் கடந்த நிலையில் ஊரடங்கு முடிவுக்கு வரும் என மக்கள் நினைத்திருக்கும் வேளையில், தற்போது தான் கொரோனா தொற்று தீவிர நிலையை அடைந்திருக்கிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 527 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரே நாளில் கிட்டத்தட்ட 2 மடங்கு உயர்வு.

சென்னையில் 266 பேருக்கு ஒரே நாளில் தொற்று இருப்பது உற்தியாகியிருக்கிறது. புதிய ஹாட்ஸ்பாட்டாக மாறியிருக்கும் கோயம்பேட்டில் இருந்து மட்டும் 200 பேருக்கு மேல் கொரோனா பரவியிருக்கிறது. தமிழகம் முழுவதிலும் கோயம்பேடு சென்று வந்த வியாபாரிகள், லாரி ஓட்டுநர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நிலைமை இப்படி கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கும் போதுதான், ஊரடங்கை தளர்த்தி, டாஸ்மாக் கடைகளை திறக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அடிப்படை அறிவுள்ள யாரும், தொற்று அதிகரித்திருக்கும் இந்நேரத்தில் தான் கட்டுப்பாடுகளை அதிகரித்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், இப்போது தான் அனைத்தையும் தளர்த்தியிருக்கிறது தமிழக அரசு. இதன் பின்னணி என்ன?

ஒரே பதில் மாநில அரசிடம் நிதி இல்லை!. 45 நாட்களுக்கும் மேலாக மாநிலம் முழுவதும் ஊரடங்கில் இருந்ததால், தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உடன் கொரோனா பேரிடரை சமாளிக்க செலவும் செய்ய வேண்டி உள்ளது. இந்த நிலையில் தான் மத்திய அரசிடம் கையேந்தி நிற்கிறது தமிழக அரசு.

ஜி.எஸ்.டி வரியால் தமிழகத்துக்கு ஏற்பட்ட வருவாய் இழப்புத் தொகையான 4,458 கோடி ரூபாயை உரிமையுடன் வாங்கியிருந்தாலே மத்திய அரசிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

கொரோனா பேரிடரை சமாளிக்க 9000 கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்க வெண்டும் என தமிழக முதலமைச்சர் கோரிக்கை வைத்தார். ஆனால் கிடைத்ததோ வெறும் 510 கோடி ரூபாய் தான். அதுவும் 15வது திட்டக்கமிஷன் படி மாநிலங்களுக்கு ஏற்படும் நிதியிழப்பை சரிகட்ட மத்திய அரசு தரும் தொகை. மேலும், பேரிடர் தடுப்பு நடவடிக்கைக்காக ஆண்டு தோறும் வழங்கப்படும் நிதி. இவை இரண்டும் சேர்ந்ததே அந்த 510 கோடி ரூபாய். ஆக மாநில அரசுக்கு ஒரு ரூபாய் கூட கொரோனா சிறப்பு நிதி வழங்கவில்லை மத்திய அரசு.

கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்க இருந்த சி.எஸ்.ஆர் (corporate social responsibility) நிதியை PM Cares நிதிக்கு வழங்கினால் தான் அது சி.எஸ்.ஆர் நிதியாக ஏற்றுக் கொள்ளப்படும் என்றும், முதலமைச்சர்கள் மற்றும் மாநில பொது நிவாரண நிதிக்கு வழங்கினால் அது சி.எஸ்.ஆர் நிதியாக கணக்கில் கொள்ளப்படாது என்று மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அறிவித்தது. இதனால் தமிழகத்தில் செயல்பட்டு வரும் நிறுவனங்களிடமிருந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கிடைக்க இருந்த நிதியும் தடைபட்டது. தற்போது முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 306 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. அதுவும் மக்கள் கொடுத்த பணம்.

ஊழல், டெண்டர் முறைகேடுகள், கடன் சுமை, நிதி மேலாண்மை தோல்வி என தமிழக அரசு நிதியின்றி தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் தான் 245 ரூபாய்க்கு சந்தையில் கிடைக்கும் ரேபிட் டெஸ்ட் கிட்களை 630 ரூபாய்க்கு வாங்கியது தமிழக அரசு. அந்த கிட்களும் சரியான முடிவுகளை கொடுக்கவில்லை என்பதால் அதை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது வரை ரேபிட் டெஸ்டிங் எனப்படும் அதி விரைவு பரிசோதனை செய்யப்படவே இல்லை. ஆனால், உலக சுகாதார மையம் தொடக்கம் முதலே பரிசோதனை மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் என்று வலியுறுத்தி வந்தது. தமிழகத்தை விட நிதி நிலையில் பின் தங்கிய கேரள மாநிலத்துக்கு இது சாத்தியமாகியுள்ளது.

சரி பரிசோதனை தான் செய்ய முடியவில்லை. கொரோனா தொற்றை பரவ விடாமல் செய்ய மக்களை வீட்டிலேயே இருக்க வைப்பது தான் ஒரே வழி. வேலை இல்லை, வருமானம் இல்லை, சாப்பிடுவதற்கே வழியில்லை என இருக்கும் நிலையில், மக்களுக்கு உதவித் தொகையும், உணவுப் பொருட்களையும் கொடுக்க வேண்டும்.

தேசிய ஊரடங்கை அறிவித்த மோடி இதற்காவது ஏதேனும் வழி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. வருவாய் இல்லாத நேரத்தில் மக்கள் தங்கள் அடிப்படை செலவுகளை செய்துகொள்ள 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் தருகிறேன் என்று கூறிய மோடி வெறும் 500 ரூபாய் மட்டுமே வழங்கினார். அதுவும் வெறும் 20% மக்களுக்கு மட்டுமே சென்று சேர்ந்திருக்கிறது. தமிழகத்தில் 500 கிடைத்த ஒருவரைக் கூட நம்மால் கண்டறிய முடியாது.

இந்த நிலையில், முழு சுமை மாநில அரசின் மீது விழுகிறது. ரேசன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 1000 ரூபாய், மற்றும் 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதை வைத்து 4 பேர் கொண்ட குடும்பம் எப்படி ஒரு மாதம் தாக்கு பிடிக்கும் என்பதை எடப்பாடி தான் தெரிவிக்க வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 800 ரூபாயைத் தாண்டுகிறது. இதில் 1000 ரூபாயை வைத்து என்ன செய்ய முடியும்.

ரேபிட் டெஸ்டிங் கிட் இல்லை, நிதியுதவி இல்லை, பொது நிவாரணத்துக்கு வர இருந்த நிதியும் பிடுங்கப்பட்டு விட்டது, மக்களை வீட்டில் இருக்க வைக்க நிதி கொடுக்க வேண்டும், கொரோனா கட்டுப்படுத்த செலவு, கஜானாவில் நிதியில்லை என திக்குமுக்கு தெரியாமல் இருக்கிறது தமிழக அரசு.

மாநில அரசின் வரவை விட செலவு அதிகமாகும் போது, அதை சமன் செய்ய ரிசர் வங்கியிடம் கடன் வாங்கலாம். இதை Ways and means என்கிறார்கள். அந்த தொகையை 60% கூடுதலாக பெற்றுக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. ஆனால் இதில் இருக்கும் சிக்கல் யாதெனில், இந்த கடனை மாநிலங்கள் 3 மாதத்துக்குள் திரும்பி வழங்க வேண்டும். தமிழகத்துக்கு இதன் மூலம் 2,600 கோடி ரூபாய் கடன் கிடைக்கும். ஆனால், 90 நாட்களில் திரும்ப கொடுக்க வேண்டும் என்பதால் இதுவும் எவ்வளவு தூரம் பயன் தரும் என்பது தெரியவில்லை.

ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து 1.75 லட்சம் கோடியை கார்ப்பரேட்களுக்கு வரி தள்ளுபடி கொடுத்த மத்திய அரசு, வங்கிகளை ஏமாற்றிய கார்ப்பரேட் முதலைகளுக்கு 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்த மத்திய அரசுக்கு, ஒரு பேரிடர் காலத்தில் மக்களை காத்து நிவாரணம் வழங்க நிதி இருந்தும் வழங்க மனமில்லை.

நிதிநிலை கையைக் கடிக்க, வருவாயை பெற, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்தியிருக்கிறது தமிழக அரசு. வாட் வரி முழுவதும் தமிழக அரசுக்கே சேரும். இதனால் பெட்ரோ விலை 3.25 ரூபாயும், டீசல் விலை 2.50 ரூபாயும், உயர்ந்துள்ளது. இதனால் காய்கறி மற்றும் உணவுப் பொருட்கள் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் இருப்பதை வைத்து நாட்களை ஓட்டி வரும் மக்களுக்கு இது கூடுதல் சுமை. அதைப்பற்றி முதலமைச்சருக்கு கவலை இல்லை.

இதற்கு அடுத்தாக வருமானம் கொழிக்கும் வியாபாரம் டாஸ்மாக் கடைகள். தமிழகமே அதில் தான் இயங்குகிறது என்று கூறினாலும் மிகையாகாது. மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள்.

இவை எல்லாவற்றிலும் இருந்து அரசு மறைமுகமாக நமக்கு தெரிவிப்பது யாதெனில், "இனியும் அரசை நம்பாதீர்கள். உங்கள் பாதுகாப்பை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு உங்கள் நலன் முக்கியமில்லை" என்பது தான். ஆனால், மக்கள் ஊரடங்கை மதிக்கவில்லை,சமூக விலகலை கடை பிடிக்கவில்லை என்று பழியை போட்டுவிட்டு, சிரித்தபடி போஸ் கொடுப்பார் எடப்பாடி.

இத்தனை நடந்தும் மோடி அரசிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்துக்குச் சேர வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என சண்டை போடுவாரா? மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை அதனால் தான் டாஸ்மாக்கை திறக்கிறோம், பெட்ரோல் டீசல் மீதான் வாட் வரியை உயர்த்தியிருக்கிறோம் என்று முதலமைச்சர் பகிரங்கமாக அறிவிப்பாரா? நிச்சயம் மாட்டார்!.

ஏனெனில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஆளும் அ.தி.மு.க-வுக்கும் மக்கள் நலனில் அக்கறையில்லை. மோடி சொன்னதை மண்டியிட்டு கேட்டதால் கிடைத்த நலன்களையும், இனி கிடைக்க இருக்கும் நலன்களுமே அவர்களுக்கு முக்கியம். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் தங்கள் நலனுக்காக மக்களை பலி கொடுப்பது.

--------------------------_-------------------------

பாரத் நெட் டெண்டர், நெடுஞ்சாலைத் துறை காண்ட்ராக்ட், துணை முதல்வரின் கார் என ஆளும் அ.தி.மு.க. அரசு மீது அடுத்தடுத்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது தி.மு.க. 

இவை தமிழக அரசுக்கு நெருக்கடியாக மாறுகிறது?

கடந்த ஏப்ரல் 30ஆம் தேதியன்று மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை தமிழக அரசின் தலைமைச் செயலருக்கும் தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குனருக்கும் ஒரு குறிப்பு ஒன்றை அனுப்பியிருந்தது.

அதில், தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் 'பாரத் நெட்' திட்டத்திற்கென விடுத்திருந்த 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் குறித்து சென்னையைச் சேர்ந்த அறப்போர் இயக்கம் என்ற ஊழலுக்கு எதிரான அமைப்பு சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகள் பற்றி கேள்வியெழுப்பப்பட்டிருந்தது.

தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் இந்த டெண்டர்களுக்கான அறிப்பை வெளியிட்ட பிறகு, ஏப்ரல் 15ஆம் தேதி கூடுதலாக சில திருத்தங்களையும் வெளியிட்டது. முன்பு குறிப்பிட்டதைவிட கூடுதலான வர்த்தகம், அனுபவம் ஆகியவை இருக்க வேண்டுமென அந்தத் திருத்தங்களில் கூறப்பட்டிருந்ததோடு 'ரூட்டர்' கருவிகள் பற்றிய அளவுகள், குறிப்புகளும் மாற்றம் செய்யப்பட்டிருந்தன. போட்டியில் உள்ள எல்லா நிறுவனங்களையும் நீக்கிவிட்டு, இரு நிறுவனங்களை மட்டும் டெண்டரில் கலந்துகொள்ளச் செய்வதற்காகவே இப்படி செய்யப்பட்டதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியிருந்தது.

இது தொடர்பான புகாரை மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பியதோடு மத்திய கண்காணிப்பு ஆணையத்திற்கும் அந்த இயக்கம் அனுப்பியிருந்தது.

இந்தப் புகாரை தமிழக தலைமைச் செயலருக்கு அனுப்பியிருந்த மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, உள்நாட்டு நிறுவனங்கள் பங்கேற்காதவகையில் விதிகளை மாற்றி தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறியிருந்தது. இந்தப் புகாரை ஆராய்ந்து, ஏதாவது விதிமீறல் இருந்தால், அதனைச் சரிசெய்ய வேண்டுமென்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

"மேலும் நிலைக்குழுவில் இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க வேண்டியிருப்பதால், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும். தகுந்த முறையில் இந்தப் புகார் குறித்து விசாரித்து முடிவெடுப்பதற்கு முன்பாக, இந்த டெண்டரில் முடிவெடுக்க வேண்டாம்" என்றும் மத்திய அரசு அனுப்பியிருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Image copyrightFACEBOOKமு.க. ஸ்டாலின்

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், டான்ஃபிநெட் இயக்குநரை வேறு துறைக்கு மாற்ற வேண்டும்; தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமெனக் கோரினார்.

"'டெண்டர் கோரிவிட்டு தொழில்நுட்ப புள்ளிக்கூட்டத்தை ரத்து செய்தனர். ஐ.டி. துறையின் செயலராக இருந்த சந்தோஷ் பாபு விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துவிட்டு, பிறகு வேறு பதவிக்கு தூக்கியடிக்கப்பட்டார். டான்ஃபிநெட்டின் நிர்வாக இயக்குனராக ஒரு ஜூனியர் அதிகாரி நியமிக்கப்பட்டார். இவ்வளவுக்குப் பிறகும் முறைகேடு ஏதுமில்லையென அறிக்கைவிட்டார் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

இப்போது மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை, டெண்டரின் குறித்து மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டிருக்கிறது. மத்திய அரசின் மூன்று செயலாளர்கள், இரு இணைச் செயலாளர்கள் கொண்ட குழுவும் இது குறித்து விசாரிக்கவிருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்திற்கு விரோதமாக வெளியிடப்படும் டெண்டர்களை மாநில லஞ்ச, ஊழல் தடுப்புத் துறை கண்காணிக்கிறதா?" ஸ்டாலின் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப் பதிவுசெய்து, விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் ஆளுநருக்குக் கோரிக்கைவிடுத்தார் மு.க. ஸ்டாலின்.

இதற்கு அடுத்த நாளே, மே மூன்றாம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வசமுள்ள நெடுஞ்சாலைத் துறையில் விடப்பட்டுள்ள காண்ட்ராக்டில் ஊழல் இருப்பதாகக் குற்றம் சாட்டியது தி.மு.க.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை உப கோட்டங்களில் 462.11கி.மீ. நீள நெடுஞ்சாலைத்துறை சாலைகளை ஐந்து வருடங்கள் பராமரிக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டரைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக ஏப்ரல் 15ஆம் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. பதிவுபெற்ற முப்பத்தி இரண்டு முதல்நிலை ஒப்பந்ததாரர்கள் செய்ய வேண்டிய இந்தப் பணியை ஒரேயொரு ஒப்பந்ததாரருக்கு (MONOPOLY) வழங்கும் விதத்தில் இந்த டெண்டர் விடப்பட்டது என்று துரை ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

Image copyrightGETTY IMAGESகோப்புப்படம்

"இந்த டெண்டரில் கூறப்பட்டுள்ள பணிகள் 500 கோடி ரூபாய் மட்டுமே மதிப்பிலானவை. ஆனால், 1165 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இது 700 கோடி ரூபாய் வரை அதிகம்" என்றும் "டெண்டருக்காக குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளில் பல" ஒரு சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களை மனதில் வைத்து, கொண்டு வரப்பட்டுள்ளது" என்றும் அந்த வழக்கை மேற்கோள்காட்டி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

அன்று இரவே ஆளும் தரப்பு மீது மற்றொரு குற்றச்சாட்டை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார் ஸ்டாலின். அதில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் கீழ் இயங்கும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை குழுமத்திடம் அவரது இரு மகன்களும் இயக்குநராக உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒரு திட்டத்திற்குஅனுமதி கோரி விண்ணப்பித்து, அனுமதியைப் பெறுவது அப்பட்டமான அதிகார அத்துமீறல் என குற்றம்சாட்டினார்.

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன்களான ஓ.பி. ரவீந்திரநாத், ஓ.பி. ஜெயபிரதீப் ஆகிய இருவரும் இயக்குனர்களாக உள்ள விஜயந்த் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிட்டட் நிறுவனம் தங்களது ப்ராஜெக்ட்களைப் பதிவுசெய்து கொள்ள தமிழ்நாடு ரியல் எஸ்டேட் அத்தாரிட்டியிடம் கடந்த ஜனவரி 20ஆம் தேதி விண்ணப்பித்தது.

இந்த தமிழ்நாடு ரியல் எஸ்டேட் அத்தாரிட்டி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் கீழ் உள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்குகிறது.

இதனைச் சுட்டிக்காட்டிய மு.க. ஸ்டாலின், தந்தையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு குழுமத்திடம் மகன்கள் தங்கள் நிறுவனத்திற்கு சாதகமான உத்தரவுகளைப் பெற முயல்வது, அனுமதி பெறுவது என்பது அதிகார துஷ்பிரயோகம் என ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மேலும் இதில் ஒருவர், தனது தந்தை ஓ. பன்னீர்செல்வத்திற்கு அரசு ஒதுக்கிய வீட்டிலிருந்தே விண்ணப்பித்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

Image copyrightGETTY IMAGESஓ.பன்னீர்செல்வம்

ஓ. பன்னீர்செல்வம் இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் திங்கட்கிழமையன்று காலையில், மாநில மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் நெடுஞ்சாலைத் துறை டெண்டர் தொடர்பாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தார். "டெண்டர் விடப்பட்டதில் எவ்வித முறைகேடும் இல்லை. செவி வழியாகக் கேட்ட தகவலைக் கொண்டு, இந்த ஒப்பந்தப் புள்ளியில் 700 கோடி ரூபாய் அதிகம் என கருத்துத் தெரிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மின்னணு முறையில் டெண்டர் கோரப்படுவதால், யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். குறிப்பிட்ட நபர்களுக்குத்தான் வழங்கப்படும் எனக் கூற முடியாது. இதில் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை" என்று தெரிவித்திருந்தார்.

இதற்குப் பிறகு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும் இது தொடர்பாக தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். பாரத் நெட் உருவாக்கத்திற்காக கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதியன்று ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டதாகவும் அதற்குப் பிறகு, ஒப்பந்தப் புள்ளிக்கான முன்னோடிக் கூட்டம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி கூட்டப்பட்டபோது, உத்தேச ஒப்பந்ததாரர்களின் சந்தேகங்களை மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டு அதற்கேற்ற வகையில்தான் பிழை திருத்தப் பட்டியல் (Corrigendum) ஏப்ரல் 15ஆம் தேதி வெளியிடப்பட்டதாகவும் விளக்கமளித்திருக்கிறார்.

இந்தத் திட்டத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் நிறைவேற்ற மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்திருப்பதால் முன் அனுபவமும் பொருளாதாரத் திறனும் மிக்க நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து திட்டத்தை நிறைவேற்றவே திருத்திய டெண்டர் வெளியிடப்பட்டிருப்பதாகவும் உதயகுமார் கூறியிருக்கிறார்.

தவறான புரிதல்களின் அடிப்படையில் சில அமைப்புகள் புகார் அளித்திருப்பதால், மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக விரிவான அறிக்கையை அரசு அனுப்புமென்றும் ஒப்பந்ததாரரின் தகுதியையும் திறமையும் வரையறுக்கும் பொறுப்பு மக்கள் நலன் காக்கும் அரசின் கடமை என்றும் அவர் கூறியிருக்கிறார். பாரத் நெட் திட்டத்திற்கு மத்திய அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லையென்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், மாநில அரசின் மீது அடுத்தடுத்து ஊழல்குற்றச்சாட்டுகள் புறப்பட்டிருப்பது ஆளும் தரப்புக்கு நெருக்கடியாகவே அமையும்.

------------------------------------_-_---------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?