கள்ளக் கூட்டணி

 நாட்டின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழா என்று சொல்லிக் கொள்ளும் தேர்தலில் இதுவரை கண்டிராத, காண சகிக்க முடியாத காட்சிகள் எல்லாம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. 102 தொகுதிகளில் நடந்து முடிந்த முதல் கட்ட தேர்தலையடுத்து இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல்கட்ட தேர்தலில் தனக்கு சாதகமான சூழல் இல்லாததை உணர்ந்த ஆர். எஸ். எஸ் – பா.ஜ.க. கும்பல் தற்போது நடக்கும் பிரச்சாரத்தில் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக தனது நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டுள்ளது.

தெலுங்கானாவில் உள்ள கிறிஸ்தவ பள்ளியை மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் அடங்கிய காவி கும்பல் பள்ளியை அடித்து நொறுக்கி “ஜெய் ஸ்ரீ ராம்” என கோசமிட்டது; ஹைதராபாத்தில் மக்களவை பாஜக வேட்பாளர் மசூதியை நோக்கி அம்பு எய்வது போல் சைகை செய்தது என்பதெல்லாம் சில சான்றுகள் மட்டுமே.

இதன் உச்சகட்டமாக நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தானில் நடைபெற்ற பிரச்சார பேரணியில் ஆற்றிய உரையில் தனது இஸ்லாமிய வெறுப்பை கக்கி உள்ளார். கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி ராஜஸ்தான் பன்ஸ்வாரா பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்களின் செல்வங்களை எல்லாம்  ஊடுருவியர்களுக்கும், அதிக குழந்தை பெற்றெடுத்தவர்களுக்கும் கொடுத்து விடுவார்கள். 

இதற்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நாட்டின் வளங்களை பயன்படுத்துவதற்கு  இஸ்லாமியர்களுக்கு தான் முன்னுரிமை என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் பெண்களின் நகைகள் கணக்கீடு செய்யப்பட்டு அது பகிர்ந்து அளிக்கப்படும் என்று உள்ளது. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து யாருக்கு தரப் போகிறீர்கள்? ஊடுருவியவர்களுக்கா?” என்று தனது இஸ்லாமிய வெறுப்பை கக்கியுள்ளார் மோடி.

மோடியின் இந்த மத வெறுப்பு பிரச்சாரத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன. எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மு.க.ஸ்டாலின் என பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். குறிப்பாக பாஜகவின் கூட்டாளியாக இருந்த அகாலி தள் கூட எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறது.

மேலும் இரண்டு சிவில் உரிமை குழுக்கள் மோடியின் வெறுப்பு பேச்சை கண்டித்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி 17,000 பேர் கையெழுத்திட்ட கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் அனுப்பியிருக்கிறது. அந்த கடிதத்தில் “இது அபாயமானது மற்றும் முஸ்லிம்கள் மீது இது நேரடி தாக்குதல்” என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஏப்ரல் 22-ஆம் தேதி காங்கிரஸ், சிபிஎம் கட்சிகள் மோடி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தன. காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்கவி, “தேர்தல் ஆணையம் விசாரணையில் இருக்கிறது, ஒட்டுமொத்த நாடும் மோடிக்கு எதிரான நடவடிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறது” என்று கூறினார்.

ஆனால், மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்று எதிர்கட்சிகள் கூப்பாடு போட்டாலும் தேர்தல் ஆணையமோ மோடியின் வெறுப்பு பேச்சுக்கு கருத்து கூற இயலாது என்று இடித்துரைத்திருக்கிறது. ஆனால், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சியின் தேர்தல் சின்னத்தினை பிரபலபடுத்த வெளியிட்ட பாடலில் இருந்து “ஜெய் பவானி” “இந்து” போன்ற வார்த்தைகளை நீக்க கோரியதும் இதே தேர்தல் ஆணையம் தான். தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக மாறி பல காலங்கள் ஆகிவிட்டது.

எனவே, இனிவரும் காலங்களில் மத வெறுப்பு பேச்சுக்கள் அதிகரிக்கவே செய்யும், மதக்கலவரத்தை தூண்டவே ஆர். எஸ். எஸ்- பி.ஜே.பி. முயற்சிக்கும்.

தோல்வி பயத்தில் இருக்கும் பாசிச கும்பல் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அனைத்து வித மோசடிகளையும் செய்யத் தயாராக உள்ளது; செய்தும் வருகிறது. 

ஆதலால், எதிர்கட்சிகள் ஜனநாயக பூர்வமாக தேர்தல் நடக்க வேண்டும் என்று விரும்பினால் ஆர். எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை எதிர்த்து மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். அதன்மூலம் தான் பிஜேபியை தேர்தலில் கூட வீழ்த்த முடியும்.

இந்திய தேர்தல் ஆணையம்-பா.ஜ.க கள்ளக் கூட்டணியை சிதறடிக்க முடியும்.

----------------------------------------------

 ஒரு பாசிஸ்ட் கவலைகள்

உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட தேர்தல் பத்திரம் மீண்டும் வரும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்கிறார். இதை விட ஆணவமான அறிவிப்பு இருக்க முடியாது.

“பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் ஊழலை ஒழிப்பதற்கான அனைத்து வழிகளையும் மேற்கொள்வோம். இதில், அரசியல் குறுக்கீடு இருந்தால் முறியடிப்போம்” -–- 2014 ஏப்ரல் 18-–ம் தேதி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் ஆவதற்கு முன்பு இருந்த மோடி சொன்னார்.

 தேர்தல் பத்திரம் மூலம் அவர் ஊழலை ஒழித்த லட்சணம் உச்ச நீதிமன்றத்தில் சந்தி சிரித்தது. ‘தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது’ என உச்சநீதிமன்றம் ஓங்கி குட்டியது.

கட்சிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிதி வழங்குபவர்களின் பெயர், தொகை விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் அளிக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் முன்பு குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை தேர்தல் பத்திரங்கள் திட்டம் மூலம் திருத்திய பா.ஜ.க அரசு, கட்சிகளுக்கு நிதி அளிப்பவர்களின் பெயர்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கத் தேவையில்லை என மாற்றியது.

 இந்தத் திட்டத்தில் எங்கிருந்து பணம் வருகிறது? என்பதை தெரிந்துகொள்ளவே முடியாது. கமிஷன், லஞ்சம், கறுப்புப் பணத்தைத் தேர்தல் பத்திரம் திட்டத்தில் மூடி மறைத்து முறை கேடுகளை அரங்கேற்றியது மோடி அரசு.

இந்தியாவில் அதிகத் தொழில்களைச் செய்யும் ஒரு நிறுவனம், இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்டது ஆகும்.

 அந்த நிறுவனம், பா.ஜ.க.வுக்கு ரூ.15 கோடி கொடுத்தது. வெளிநாட்டு நிறுவனம், இந்தியாவில் இயங்கும் ஒரு கட்சிக்கு நன்கொடை தரலாமா என்பதை ஒரு அமைப்பு கேள்வி எழுப்பி வழக்கு தாக்கல் செய்தது. ‘Foreign Contribution (Regulation) Act –- FCRA சட்டப்படி இத்தகைய நன்கொடை தவறுதான் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

 உடனே, இதை சட்டபூர்வமாக்க கொண்டு வரப்பட்ட சட்டம்தான் தேர்தல் பத்திரங்கள் ஆகும். இந்த சட்டவிதிகளையே முன் தேதியிட்டு மாற்றிவிட்டது பா.ஜ.க. அரசு.

இப்படித்தான் 8 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை திரட்டியது பா.ஜ.க. அது வித்தியாசமான கட்சி அல்லவா? நிதி கொடுக்காத நிறுவனங்களை மிரட்டியும், அல்லது மிரட்டப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து அவர்களைத் தப்பிக்க வைக்கவும் நிதியை தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெற்றுள்ளார்கள். 

அரசின் ஒப்பந்தங்களைத் தருவதற்கு முன், தேர்தல் பத்திரங்கள் மூலமாக தனது கட்சிக்கு நன்கொடைகள் பெற்றுள்ளார்கள். அப்படி நன்கொடைகள் கொடுத்தவர்க்கு மட்டுமே ஒப்பந்தங்களையும் தந்துள்ளார்கள்.

15.2.2024 அன்று இந்தத் தேர்தல் பத்திரம் திட்டத்தையே தடை செய்து விட்டது உச்சநீதிமன்றம். தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு இத்தகைய மகத்தான தீர்ப்பை அளித்தது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று தீர்ப்பளித்துவிட்டது.

‘ஊழல் மோடி’ என்ற பட்டப்பெயரைப் பெற்று அவரது முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது. இதன்பிறகும், ‘பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் திட்டம் அமல்படுத்தப்படும்’ என்று ஆணவமாக அறிவித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இது அவரது சொந்தக் கருத்தல்ல, மோடியின் கருத்துதான்.

சில நாட்களுக்கு முன்னால் ஏ.என்.ஐ. நிறுவனத்துக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடியும், இதுபோன்ற மோசடிப் பத்திரங்களை நியாயப்படுத்தியே பேசி இருந்தார். 

அவரது அனைத்துக் கவலைகளும்,தேர்தல் பத்திரங்களை தடை செய்து விட்டார்களே என்பதாக மட்டுமே உள்ளது.

தேர்தலில் கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் திட்டத்தை அவர் கொண்டு வந்தாராம். தேர்தலில் பணம் புழங்குவதை எவராலும் மறுக்க முடியாதாம். இதில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதற்காக அவரே சிந்தித்து தேர்தல் பத்திரங்கள் திட்டத்தைக் கொண்டு வந்தாராம். 

‘அதற்காக இந்தத் திட்டம் முற்றிலும் சிறந்த வழி என நான் சொல்லவில்லை’ என்றும் மோடியே சொல்லிக் கொள்கிறார்.

“முன்பெல்லாம் காசோலைகள் மூலமாக பா.ஜ.க. நன்கொடை பெற்றது. அந்த வழியில் நன்கொடைகள் தர முடியாது என்று வர்த்தகர்கள் சொல்லி விட்டார்கள். யாருக்கு எவ்வளவு தந்தோம் என்பது வெளியில் தெரிந்துவிடும் என்று அவர்கள் பயந்தார்கள். பா.ஜ.க.வுக்கு நன்கொடை கொடுக்க தயாராக இருந்தவர்களுக்கு அந்த துணிச்சல் இல்லை. 

அதனால் தேர்தல் பத்திரம் திட்டத்தை கொண்டு வந்தோம்.” என்று பட்டவர்த்தனமாக அந்தப் பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார் பிரதமர் மோடி.உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட ஒரு திட்டம் குறித்து பொதுவெளியில் ஒரு பிரதமர் இப்படி பேசியதே மிகப் பெரிய தவறு ஆகும்.



 ‘இந்தத் திட்டம் ரத்தானால் இதனை எதிர்த்தவர்களும் பின்னர் வருந்துவார்கள்’ என்றும் வருந்தி இருக்கிறார் மோடி.

புலனாய்வு அமைப்புகளால் நெருக்கடிக்கு உள்ளான நிறுவனங்கள், பா.ஜ.க.வுக்கு நன்கொடை தந்துள்ளதை இந்தப் பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார் மோடி. 

‘புலனாய்வு அமைப்புகளால் நெருக்கடிக்கு உள்ளான 26 நிறுவனங்களில் 16 நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு நன்கொடை அளித்துள்ளன’ என்பதை அவரே ஒப்புக் கொண்டு ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்திருக்கிறார்.எனவே, இவை அனைத்தும் தவறு என்பதையே பிரதமர் உணரவில்லை. 

எனவேதான் தனது வருத்தத்தை நிர்மலா சீதாராமன் மூலமாகச் சொல்ல வைத்திருக்கிறார் பிரதமர்.

தேர்தல் பத்திரம் மீண்டும் வரும் என்று நிர்மலா சீதாராமன் சொல்வதை தடை செய்யாத தேர்தல் ஆணையம், அந்தத் திட்டத்தை ஆதரித்து மணிக்கணக்கில் பிரதமர் பேட்டி அளிப்பதைக் கேள்வி கேட்காத தேர்தல் ஆணையம், 

எதிர்க்கட்சித் தலைவர்களின் பதிவுகளை மட்டும் நீக்கச் சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்?

மிரட்டி பணம் பறித்ததை நியாயப்படுத்த மோடிக்கு உரிமை இருக்கும் போது, அதை விமர்சிக்கும் உரிமை எதிர்க் கட்சிகளுக்கு இல்லையா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?