கோவி.செழியன்
தலைமுறைகளைத் தாண்டிய பற்று
தி.மு.க 2021-ல் ஆட்சி அமைத்த போது தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க எம்.எல்.ஏக்கள் யாருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. அந்த சமயத்தில் இது பெரும் பேசு பொருளானது. `
டெல்டா மண்ணை சேர்ந்த முதல் அமைச்சரான நானே, டெல்டாவிற்கு அமைச்சராக இருப்பேன்’ என்றார் ஸ்டாலின். டெல்டா மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களையும் நியமனம் செய்தார். ஆனாலும் டெல்டாவை சேர்ந்த யாருக்கும் அமைச்சர் பதவி கிடைக்காதது பெரும் ஏக்கமானது.
இந்த சூழலில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் மன்னார்குடி தொகுதியை சேர்ந்த டி.ஆர்.பி.ராஜா அமைச்சர் ஆனதில் அக்குறை நீங்கியது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாகவே அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சர் ஆகப்போவதாக பரவலாக பேசப்பட்டன.
உதயநிதி துணை முதலமைச்சர் ஆகும் போது அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் எனவும் பேச்சுக்கள் எழுந்தன. அமைச்சர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த பலரும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள காய்நகர்த்த தொடங்கினர்.
குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் சீனியரான துரை.சந்திரசேகரன், சாக்கோட்டை அன்பழகன், கோவி.செழியன் ஆகியோர் அமைச்சர் பதவியை பெற முயற்சி மேற்கொண்டனர்.
இந்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் கோவி.செழியனை அமைச்சர் பதவிக்கு டிக் அடித்திருக்கிறார்.
இன்று செழியன் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சூழலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் மட்டுமல்ல ஸ்டாலின், உதயநிதியிடமும் பற்றைக காட்டி அவர்களது மனதில் இடம் பிடித்ததே செழியன் அமைச்சர் ஆனதற்கு காரணம் என்கிறார்கள் மாவட்ட உடன் பிறப்புகள்.
திருவிடைமருதூர் தனி தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற கோவி.செழியனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என ஆரம்பத்தில் பேசப்பட்டது. ஆனால் டெல்டாவில் பலரும் அமைச்சர் பதவி கேட்டு நெருக்கடி கொடுத்ததால் முதல்வர் ஸ்டாலின் டெல்டாவை சேர்ந்த யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்காமல் அந்த சூழலை லாவகமாக கையாண்டார்.
கட்சிக்கு உண்மையாக இருக்கும் கோவி.செழியனுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என நினைத்த ஸ்டாலின் அவரை அரசு தலைமை கொறடாவாக நியமித்தார்.
எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர், படித்தவர், பண்பாளர், பேச்சாளர் என கோவி.செழியனுக்கு பல முகங்கள் உண்டு.
திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் ஐந்தாவது முறை எம்.எல்.ஏவாக இருக்கிறார்.
நடிகர் சிவாஜியை தோற்கடித்தவர் என்ற பெயருக்கு சொந்தக்காரர்.
உதயநிதி துணை முதலமைச்சராக பதவியேற்கும் போது தான் அமைச்சராக வேண்டும் என தீவிரமாக முயற்சி செய்தார். ஸ்டாலின், உதயநிதி என பல முயற்சிகள் கைகொடுக்காத நிலையில் நிலையில் பெங்களூரு சென்று தலைமை குடும்பத்துக்கு நெருக்கமான குடும்பத்தினரையும் பார்த்தாராம்.
இதே போல் சாக்கோட்டை அன்பழகன், திருவாரூர் பூண்டி.கலைவாணன் என பலரும் அமைச்சர் பதவியை பெறுவதற்கு காய்நகர்த்தினர்.
இதில் துரை.சந்திரசேகரன், கோவி.செழியன் இருவரது பெயரும் இறுதி வரையில் பலமாக அடிப்பட்டன. ஏற்கனவே முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த பலர் அமைச்சராக இருப்பதால் சந்திரசேகரனுக்கு வாய்ப்பிருக்காது என திமுகவை சேர்ந்தவர்களே பேசி வந்தனர்.
ஆனால் தலைமை இருவரது பெயரையும் பரிசீலனையில் வைத்திருந்தது. இந்த சூழலில் கட்சிக்கான உழைப்பு, விசுவாசத்தில் கோவி.செழியனே அமைச்சராவதற்கு வாய்ப்புள்ளதாக பேச்சுக்கள் எழுந்தது. அதன்படி ஸ்டாலின், கோவி.செழியனை அமைச்சராக டிக் அடித்துள்ளார்.
அந்த வகையில் டெல்டாவிற்கு இரண்டாவது அமைச்சர் கிடைத்துள்ளார்.
கட்சி இக்கட்டான சூழலை சந்திக்கின்ற நேரத்தில் விசுவாசத்துடன் உழைத்தால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதை உணர்த்துகின்ற வகையில் கோவி.செழியன் அமைச்சர் ஆகியிருப்பதாக சொல்கிறார்கள் திமுக வினர்.
கோவில்கள்.செழியனின் நிஜப்பெயர் நெடுஞ்செழியன். தி.மு.கவில் இருந்த நாவலர் நெடுஞ்செழியன் எம்.ஜி.ஆருடன் சென்ற பிறகு திமுகவை அழிப்பது தான் என் முதல் வேலை என்றார்.
பாரம்பர்யமான திமுக குடும்பத்தை சேர்ந்தவர் கோவி.செழியன். திமுகவுக்கு எதிராக இருக்கும் நாவலர் நெடுஞ்செழியன் பெயர் தன் பெயராக இருக்க கூடாது என கருதி பின்னாளில் முறைப்படி செழியன் என மாற்றிக்கொண்டாராம்.
இது திமுக மீது அவர் வைத்திருக்கும் அளப்பரிய விசுவாசத்தை காட்டியதாம். சென்னை சட்டக்கல்லூரியில் படித்த போது மாணவர் அணியில் மாவட்ட துணை அமைப்பாளராக இருந்தார் செழியன்.
அந்த சமயத்தில் திமுகவிலிருந்து பிரிந்து சென்ற வைகோ, காபியில் சர்க்கரை போட்டு குடிக்காதவர்கள் தான் திமுகவில் இருக்கின்றனர். இளைஞர்கள் திமுகவில் இல்லை, அவர்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்றார்.
வயதானவர்கள் மட்டும் திமுகவில் இருப்பது போன்ற பொருள்படும் படி பேசினார். வைகோவில் இந்த பேச்சுக்கு எதிராக அப்போது செழியன் தமிழகம் முழுவதும் சென்று முழங்கினார்.
கலைஞர் கருணாநிதி குறித்து ஆய்வு செய்து தான் அவர் முனைவர் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பேச்சாற்றல் நிறைந்த செழியன் மீது ஸ்டாலினுக்கு எப்போதும் தனிப்பாசம் உண்டு. கட்சி மீதும் ஸ்டாலின் குடும்பத்தின் மீது அவர் வைத்த விசுவாசமே அதற்கான காரணம்.
2021 தேர்தலுக்கு முன்பு சேலத்தில் நடைபெற்ற திமுக மாநாட்டில் செழியனை கட்சிக் கொடி ஏற்ற வைத்து அவருக்கான முக்கியத்துவத்தை கொடுத்தார் ஸ்டாலின். அமைச்சர் ஆகி விட வேண்டும் என சத்தமில்லாமல் காய்நகர்த்திய செழியன், `உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்கும் போது நான் அமைச்சராக பதவியேற்க வேண்டும் இது நடக்குமானு தெரியலை அப்படி நடந்தால் அது எனக்கான வரம்’ என முக்கிய நிர்வாகிகளிடத்தில் சொல்லியிருக்கிறாராம்.கோவி.செழியன்.
இந்த தகவல் ஸ்டாலின், உதயநிதிக்கு சென்றுள்ளது. கோவி.செழியன் மனதுக்குள் வெளியில் சொல்ல முடியாத சில வருத்தங்களும் இருந்தன.
என்னதான் நான் அரசு தலைமை கொறடாவாக இருந்தாலும் சமூக காரணங்களை காட்டி அவரின் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் அவருக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என அவ்வப்போது பேச்சுக்கள் எழும்.
இதுவும் ஸ்டாலின் கவனத்துக்கு சென்றுள்ளது. பொதுவாக தலைமை கழக பேச்சாளர்களாக இருப்பவர்களுக்கு கட்சியில் பெரிய வளர்ச்சி இருக்காது என்ற எண்ணம் நிலவுகிறது. இவற்றை உடைக்கவும் ஸ்டாலின் நினைத்தார்.
கல்வி, பண்பு, விசுவாசம் ஆகியவை கோவி.செழியனுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதற்கு கூடுதல் பலத்தை கொடுக்க யோசிக்காமல் அவரை டிக் செய்து விட்டார் ஸ்டாலின்.
சமீபத்தில் கும்பகோணம் வந்த உதயநிதி, செழியனிடம் `அண்ணே, எங்கூட அமைச்சராக பதவியேற்க ரெடியா இருங்கனு’ சொன்னாராம். அப்பவே, தம்பினு, உதயநிதி கைகளை பற்றிக்கொண்ட செழியனிடம், தலைமுறைகள் கடந்து நீங்கள் காட்டும் பாசத்திற்கான பரிசு என்றாராம் உதயநிதி.
சீனியர்கள் பலர் இருக்க உண்மை, உழைப்பு இவை தான் என்னை அமைச்சர் ஆக்கியிருக்கிறது என்று நெகிழ்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் கோவி.செழியன் உயர்கல்வித்துறையை கவனிக்க இருக்கிறார்.