ஆன்மிக அரசு?

யோகி ஆதித்யநாத் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சமயத்தில், உத்தரப்பிரதேச மாநிலம் குற்றங்கள் அற்ற மாநிலமாக இருந்திடும் என்று ரொம்பவும்தான் தம்பட்டம் அடிக்கப்பட்டது.  
காரணம் யோகி முற்றும் துறந்த அன்பே உருவான சாமியார் என்று  பாஜகவினரால் மக்களிடம் கதைக்கப்பட்டன.
யோகியின் அரசு ஆன்மிக அரசாக செயல்படும் என்றனர்.

அரசுக்கட்டிடங்களுக்கு காவி அடிக்கப்படத்தைத் தவிர ஆன்மிகம் அங்கு இல்லை. இந்துத்துவ வெறி தான் தலைவிரித்தாடுகிறது.
மாற்று மதத்தினர் குறிப்பாக முஸ்லிம்கள் மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட ,பின்தங்கிய ஏழைகள் தான் தாக்குதலின் குறையாக உள்ளனர்.புதிய உடை உடுத்தியததற்காக தாழ்த்தப்பட்ட இளைஞர் தாக்கப்படுவது சாதாரண விடயம். சில கிராமங்களில் இறைசசி வாங்கி செல்லும் மக்கள் பசுவை கொன்றதாக கொலை செய்யப்படுவது வழமையாகிவிட்டது.
அதுவும் முஸ்லீம் கையில் இருந்தால் சாவுதான்  கண்டிப்பாக.
இம்மாநிலத்தில் 2017இலேயே ‘என்கவுண்டர்’ கொலைகள் தொடங்கிவிட்டன. கிரிமினல்களைக் கண்டதும் சுட்டுக்கொல்ல காவல்துறையினருக்கு கட்டளைகள் அளிக்கப்பட்டன. 
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீதே அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற சமயத்தில் 15 கிரிமினல் வழக்குகள் நிலுவையில்  இருந்தன என்பதும், மாநிலத்தின் 143 எம்எல்ஏ-க்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன என்பதும், இவர்களில் 83 பேர் ஆளும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பதும் தனி சமாச்சாரம்.
‘என்கவுண்டர்’களில் ஈடுபடும் காவல்துறையினருக்கு அவர்கள் அவ்வாறு ஈடுபட்டவுடனேயே பதவி உயர்வுகள் அளிக்கப்பட்டன. குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பிராந்தியத்தில், ‘என்கவுண்டர்’ கொலைகள் இவ்வாறு அரங்கேற்றப்பட்டன. இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் அநேகமாக முஸ்லீம்களாக, தலித்துகளாக அல்லது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.  
அற்பக் குற்றங்கள் புரிந்த கிரிமினல்கள் குறிவைக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக ‘என்கவுண்டர்கள்’ திட்டமிடப்பட்டன. சில சமயங்களில் அவர்கள் கொல்ல வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்த நபர்கள் சிறைக்குள் இருந்தால் அவர்கள் வெளியே கொண்டுவரப்பட்டு, பின்னர் காவல்துறையினரால் கொல்லப்பட்டார்கள்.  இவ்வாறு நபர்களைக் கொல்வதற்கு, யோகி ஆதித்யநாத், ஒவ்வொரு போலீஸ்காரருக்கும் குறியீடு நிர்ணயித்திருந்தார் என்று ஓர் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கூறினார். 
மொத்தத்தில் 1,478 என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளன. 
இதில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்,  390 பேர் காயங்கள் அடைந்துள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதத்தினர் முஸ்லீம்கள், 15 – 20 சதவீதத்தினர் தலித்துகள். மற்றவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்கள் ஷேபா ஃபரூக்கி, ஆஷா ஷர்மா, மது கார்க் மற்றும் சரோஜ் வர்மா முதலானவர்கள், கடந்த ஜூன் 3, 4 தேதிகளில், ஷாம்லி, முசாபர்நகர் மற்றும் சகரன்பூர் ஆகிய இடங்களில் இவ்வாறு என்கவுண்டர்கள் மூலம் கொல்லப்பட்டவர்களில் ஒரு சிலரின் குடும்பத்தாரைச் சென்று சந்தித்தார்கள்.
தூதுக்குழுவினர் சகரன்பூரில் பிதன்பூரா மற்றும் செர்பூர் என்னும் இரு கிராமத்தில் இருந்த இரு குடும்பத்தினரைச் சந்தித்தார்கள். பிதான்பூர் கிராமத்தில் வசித்த மன்சூர் என்பவர் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் சிறையிலிருந்து வெளிவந்து, தற்சமயம்  மிகவும் அமைதியாக வாழ்ந்து வந்தார். சிறையிலிருந்த  அவருக்கு மின் அதிர்ச்சி (electric shock) ஏற்பட்டு  அதன்பின்னர் அவர் மூளை பிறழ்ந்து மனநலம் குன்றியவராக (mentally retarded) மாறிவிட்டார்.

  2017 செப்டம்பர் 26 அன்று சில போலீஸ்காரர்கள் சீருடையின்றி ‘மப்டி’யில் அவரது வீட்டிற்கு வந்து, அவரை அழைத்துச் சென்றிருக்கின்றனர். மறுநாள் காலை 3 மணியளவில் போலீஸ்காரர்கள் கிராமத் தலைவரின் வீட்டிற்குச் சென்று அவருடைய கையொப்பங்களைக் கேட்டிருக்கிறார்கள். பின்னர் மன்சூரின் இல்லத்திற்குச் சென்று மன்சூரின் தந்தையினுடைய கைரேகையை ஒரு தாளில் பதிவு செய்து எடுத்துச் சென்றிருக்கிறார்கள். 
ஆனால் அப்போது அவர்கள் மன்சூர் என்கவுண்டர்  மூலமாகக் கொல்லப்பட்டது குறித்து எதுவும் கூறவில்லை. காலை 7 மணியளவில்தான் மன்சூரின் உறவினர் ஒருவர் அவரிடம் வந்து மன்சூர் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்திருக்கிறார்.
காவல்துறையினரின் தரப்பில்,  மன்சூர் முகின் கலா கும்பல் என்னும் ஒரு கொள்ளைக் கூட்டத் தலைவன் என்றும், குறிபார்த்துச் சுடுவதில் வல்லவன் என்றும் அவனது தலைக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது என்றும் கூறப்பட்டது. 
அவனுக்கு எதிராக கொள்ளை, கூட்டுக்கொள்ளை, கொலை போன்ற குற்றங்களுடன் பல டஜன் வழக்குகள் நிலுவையிலிருந்ததாகவும் போலீசார் கூறியிருக்கிறார்கள். கடந்த இரண்டரை ஆண்டு காலமாக வீட்டிலிருந்த மன்சூர் இவ்வழக்குகளுக்காக போலீசாரால் மிகவும் எளிதாகக் கைது செய்யப்பட்டிருக்கலாமே, அவ்வாறு ஏன் கைது செய்யப்படவில்லை என்பது புரியாத புதிராகும்.  அவனை செப்டம்பர் 26 அன்று போலீசார் அழைத்துச் சென்றிருக்கின்றனர். 
உண்மை நிலை இப்படி இருக்கையில் அவன் எப்படி வேகன்-ஆர் (WagonR) காரை ஒன்றைச் சூறையாடினான் என்று எப்படிக் கூற முடியும்?  அவ்வாறுதான் போலீசார் கூறுகின்றனர். 
அவன் மிக அருகில் நிறுத்திவைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறான். எனவே அவன் போலீசாரால்தான் கொல்லப்பட்டான் என்கிற அவனது குடும்பத்தாரின் சந்தேகங்கள் ஊர்ஜிதமாகின்றன.
செர்பூர் கிராமத்தைச் சேத்ரந்த ஷம்ஷத் வழக்கும் இதேபோன்றதுதான். 2017 செப்டம்பர் 8 அன்று அவன் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்கிற்காகக் கொண்டுசெல்லப்பட்டபோது போலீசாரிடமிருந்து மோட்டார் சைக்கிளில் இரு கிரிமினல்களின் உதவியுடன் தப்பி ஓடிவிட்டான் என்பது போலீஸ் கூற்றாகும். அவனது சடலம் செப்டம்பர் 11 அன்று ஓரிடத்தில் இருந்திருக்கிறது. 
தன் கணவர் “தப்பி ஓடிவிட்டார்” என்ற செய்தியைக் கேள்விப்பட்ட உடனேயே, அவரது மனைவி, மனித உரிமைகள் ஆணையத்திடம் சென்று, தன் கணவர் என்கவுண்டர் மூலமாகக் கொல்லப்படலாம் என்கிற அச்ச உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார். அவன் தன்னுடைய குடும்பத்தினரிடம் தான் சிறையிலிருந்து வெளியே வர விரும்பவில்லை என்றும், தன் மீதான வழக்குகள் அனைத்தும் முடிவுற்ற பின்னர்தான் தான் சிறையிலிருந்து வீட்டிற்கு வருவேன் என்றும் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார். எனவே, அவன் போலீசாரின் பாதுகாப்பிலிருந்து தப்பி ஓடினான் என்று சொல்வதெல்லாம் போலீசாரால் ஜோடிக்கப்பட்ட கதையாகும்.  
அவனது குடும்பத்தாரின் கூற்றுப்படி அவன் செப்டம்பர் 8ஆம் தேதியே கொல்லப்பட்டுவிட்டான். அவனது உடம்பின்மீது எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தன என்றும், துணிமணிகளில் ரத்தக்கறை எதுவும் கிடையாது என்றும் அவர்கள் மேலும் கூறினார்கள். 
அவனது உடம்பு முழுவதும் மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்திருக்கின்றன. 
அவனது கழுத்திலும் முதுகிலும் கயிறால் கட்டப்பட்ட அடையாளங்கள் நன்கு தெரிந்தன. 
அவன் கோவிலுக்குள் வைத்துக் கொல்லப்பட்டான்.
மற்றுமொரு அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவம், ஷாம்லியில் பூரா கிராமத்தைச் சேர்ந்த நௌஷத் என்கிற டான்னி (25 வயது) இளைஞன் 2017 ஜூலை 29 அன்று கொல்லப்பட்ட சம்பவமாகும். 
அவன் ஒரு சிறிய சண்டையில் ஈடுபட்டான் என்பதற்காக ஒரு சமயம் ஐந்து மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். ஆனால் இது ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. கடந்த மூன்றாண்டு காலமாக அவன் மீது எந்தவிதமான வழக்கும் கிடையாது. எனவே அவன் சிறையில் இருந்ததில்லை. ஜூலை 29 அன்று அந்தக் கிராமத்தில், போலீசுக்குத் தகவல் தருபவராகச் செயல்பட்டுவந்த ஒரு பெண்மணி,  மாங்கனித் திருவிழாக் கொண்டாட்டத்திற்காக அவனை அழைத்திருந்தார். அவன் தன்னுடைய நண்பன் சர்வார் என்பவனையும் அக்கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக அழைத்துச் சென்றிருந்தான். சர்வார், பெங்களூரில் துணி வியாபாரம் செய்து வருபவன். 
போலீசார் ஒரு சூழ்ச்சி செய்து அவர்கள் இருவரையும் கொன்றுவிட்டார்கள். அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வெளியே ரத்தக் கறை இருந்ததையும், இரு சடலங்களையும் போலீசார் தங்களுடைய வாகனங்களில் ஏற்றிச் செல்வதையும் கிராமத்தார்கள் பார்த்தார்கள். மேற்படி இருவரும் அந்தப் பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும், பின்னர் என்கவுண்டரில் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும், போலீசாரின் அதிகாரபூர்வ அறிக்கையில் வன்புணர்வுக் குற்றம் பதிவு செய்யப்படவில்லை.  
போலீசாரின் கூற்றின்படி, இரண்டு கிரிமினல்கள் பூரா கிராமத்தில் பதுங்கி இருந்தார்களாம். அவர்கள் இருவரும் முகிம் கலா கும்பலைச் சேர்ந்தவர்களாம். அவர்கள் தலையைக் கொண்டுவருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்ததாம்.
நௌஷத் குடும்பத்தினர் மனித உரிமைகள் ஆணையத்தை அணுகியபோது, நௌஷத் மீதும் மற்றொருவர் மீதும் கூட்டு வன்புணர்வு வழக்கு பொய்யாகப் பதிவு செய்யப்பட்டது. இதிலும் “பாதிக்கப்பட்ட” பெண்மணி யார் தெரியுமா? 
போலீசுக்குத் தகவல் தருபவராகச் செயல்படும் அதே பெண்மணிதான்.
2017 அக்டோபர் 23 அன்று போலீசார் தித்தர்வாதைச் சேர்ந்த ஃப்ர்கான் என்பவனைச் சுட்டுக் கொன்றார்கள். அவனும் முகின் கலா கும்பல் என்னும் கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவன்தானாம். இந்த என்கவுன்டர் கொலைக்கு எதிராக ஃபர்கானின் தந்தை அபு மிர்ஹாசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். 
 மார்ச் மாதத்தில், சுமார் 20 போலீசார் அவரது வீட்டிற்கு வந்து, அவரிடம் கைரேகைகளை ஒரு தாளில் பெற்றுக்கொண்டு,  மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். 
அவனது தந்தையும், தாயும் நாட் கூலிகள். அவனுடைய மூன்று சகோதரர்கள் செங்கல் சூளையில் (brick kiln) வேலை செய்பவர்கள்.
இதேபோன்று, நொய்டா தாத்ரி காவல்நிலையத்தில் சந்தேகத்திற்குரிய நபர்களை சோதனை செய்துகொண்டிருந்தபோது, அஸ்லாம் என்பவன் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே தப்பி ஓட முயற்சித்ததாகவும், இதில் இரண்டு போலீசாருக்குக் காயங்கள் ஏற்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. 
கட்டி தவுலத்தைச் சேர்ந்த அக்பர் என்பவரும் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டான். அக்பர் பெங்களூரில் வியாபாரம் செய்து வந்தான். போலீசாரின் கூற்றுப்படி இவன் செய்ததாகக் கூறப்படும்  குற்றமும் பெங்களூரில்தான் நடந்திருக்கிறது. 
அவன் கொல்லப்பட்டது தொடர்பாக அவனது குடும்பத்தார் கூறுகையில், போலீசுக்குத் தகவல் தெரிவிக்கும் பெண்ணொருத்தி அவனை மொபைல் போனில் அழைத்து, அவனை ஷாம்லிக்கு வரச் சொல்லியிருக்கிறார்.  அவ்வாறு வந்தால், கிரிமினல்களில் பட்டியலில் உள்ள அவனது பெயரை நீக்கிவிடலாம் என்றும் கூறியிருக்கிறார். 
பின்னர் அவனது குடும்பத்தார் அவனிடம் கடைசியாக 2018 ஜனவரி 29 அன்று பேசியிருக்கிறார்கள். பிப்ரவரி 3 அன்று அவன் என்கவுண்டரில் கொல்லப்பட்டுவிட்டான் என்ற செய்தி அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. 
போலீசாரின் கூற்றப்படி அவனும் முகிம் கலா கும்பலைச் சேர்ந்தவன்தானாம்.
ஏழைகளே குறி.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள். பிரதானமாக தொழிலாளர்கள். பெரும்பாலான வழக்குகளில் அற்ப குற்றங்களுக்காக அவர்கள் சிறைகளில் இருந்திருக்கிறார்கள். இதனை வைத்துக்கொண்டு அவர்களுக்கு போலீசார் கே.டி. லிஸ்ட் தயார் செய்துவிட்டார்கள். இது தொடர்பாக அவர்களது குடும்பத்தாருக்கு எதுவும் தெரியாது. பின்னர் அவனது தலையைக் கொண்டு வருபவர்களுக்குப் பரிசு அளிக்கப்படும் என்று பிரகடனம் செய்யப்படும். 
உண்மையில் இவ்வாறு பிரகடனம் செய்யப்பட்டிருப்பது சம்பந்தப்பட்ட நபருக்கே தெரிந்திருக்காது.  என்கவுண்டர்களில் கொல்லப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று பார்த்தபோது அவ்வாறு கொலைபாதகச் செயல்களில் ஈடுபடுபவர்களின் வீடுகளாக அவை தோன்றவில்லை. அக்குடும்பங்களில் பல பட்டினிக் கொடுமைக்கு ஆளாகி இருந்ததைப் பார்த்தோம்.  
ஷாம்லி மற்றும் அதற்கு அருகே கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முகிம் கலா கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது. இவ்வாறு என்கவுண்டர்களில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள், தலித்துகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.  இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளோ, சடலக் கூராய்வு (போஸ்ட்மார்ட்டம்) சான்றிதழ்களோ கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படவில்லை. 
இறந்தவர்களின் சடலங்கள் அவர்களுடைய உறவினர்களிடம் அளிக்கப்பட்டு அவர்களால் ஈமச்சடங்குகள் செய்யப்படும்போது, அநேகமாக அவர்கள் அனைவருமே போலீசாரால் கொண்டுசெல்லப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, மிக நெருக்கமாக நிறுத்தி வைத்து, சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதை உறவினர்கள் அனைவரும் நன்கு உணர்ந்தார்கள். சகரன்பூர், ஷாம்ஷாத் வழக்கில் இது மிகவும் தெளிவாகத் தெரிந்தது. 
இங்கே கொல்லப்பட்டவர் குறித்து போலீசார் கூறிய தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னமேயே  அவரது உடலின் மீது சடலக்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்கிறது.
கொல்லப்படும் விதம்  ஒரேமாதிரிதான்
என்கவுண்டர்கள் மூலமாக கொல்லப்படும் அனைத்து வழக்குகளுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருந்திடும். ‘கிரிமினல்கள்’ மோட்டார் சைக்கிளில் வருவார்கள், போலீசைக் கண்டதும் போலிசாரை நோக்கி சுடுவார்கள், இதில் போலீசாருக்குக் காயம் ஏற்படும். 
பதிலுக்கு, போலீசார் சுடுவார்கள். இதில் அந்தக் ‘கிரிமினல்’ கொல்லப்படுவார்.  மற்றவர்கள் ஓடிவிடுவார்கள். கொல்லப்படும் கிரிமினல்களின் முதுகெலும்பு உடைந்திருக்கும், ஆனால் ‘கிரிமினல்களால்’ சுடப்பட்ட போலீசாருக்கு இலேசான காயம்தான் இருந்திடும்.   
  மருத்துவமனை களிலிருந்து உடனடியாக அவர்கள் வீட்டுக்கு வந்துவிடுவார்கள்.
இவ்வாறு என்கவுண்டர்கள் கொலைகளை மேற்கொள்ளும் போலீசாருக்கு, கிரிமினல்களைக் கொல்வதற்காக அறிவிக்கப்பட்டிருக்கும் பரிசுத்தொகை அளிக்கப்பட்டுவிடும். இவ்வாறு நடக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஆணித்தரமாகக் கூறியிருக்கிறது. மேலும் இவ்வாறு என்கவுண்டர்கள் நடைபெற்றால் அது தொடர்பாக சுயேச்சையான ஏஜன்சிகள் மூலமாகவோ அல்லது நடுவர் மூலமாகவோ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறது. 
ஆயினும் அவ்வாறெல்லாம் நடைபெறுவதில்லை. 
மாறாக, காவல்துறையின் உயர் அதிகாரிகளைக் கொண்டு விசாரணைகள் நடத்தப்பட்டு முடித்துக்கொள்ளப்படுகின்றன. காவல்நிலையத்திற்குப் பொறுப்பு வகிக்கும் அலுவலர் என்கவுண்டரில் ஈடுபட்டாரென்றால், அவருக்கு மேலுள்ள காவல் துணை கண்பாணிப்பாளர் விசாரணையை நடத்துவார். நீதித்துறை நடுவரின் மூலமாகக்கூட விசாரணைகள் நடைபெறுவதில்லை. 
என்கவுண்டர் தொடர்பாக கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தாருக்கு மனக்குறை இருக்குமானால் அவர்கள் நீதிமன்றத்தை அல்லது மனித உரிமைகள் ஆணையத்தை  அணுகலாம் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது. ஆனால் என்ன நடக்கிறது என்றால், அவ்வாறு என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தார் காவல்துறையினரால் மிரட்டிப் பணியவைக்கப்படுகிறார்கள். பொய் வழக்குகள் அவர்கள் மீது ஜோடிக்கப்படுகின்றன. 
இவை அனைத்தும் ஒன்றை மிகவும் தெள்ளத்தெளிவாக்கி இருக்கின்றன. அது என்னவெனில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய கிரிமினல்களாக போலீசார் மாறியிருக்கிறார்கள் என்பதேயாகும். 
இது, உ.பி. போலீசாரை மேலும் காட்டுமிராண்டிகளாக, தமிழக போலீசாரைப் போல் மனிதாபிமானமற்றவர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது.
===================================================================================
ன்று
ஜூன் -29.
  • பிரின்ஸ் எட்வர்ட் தீவு, ஜாக் கார்ட்டியர் என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது(1534)
  • வான்கூவர் தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது(1850)
  • செஷெல் விடுதலை தினம்(1976)
  • அட்லாண்டஸ் விண்ணோடம், ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்துடன் முதல் முறையாக இணைந்தது(1995)
===================================================================================

உலகம் சுற்றும் - - - -?

பிரதமர் மோடி கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு 355 கோடி ரூபாய் என செய்திகள் வெளியாகியுள்ளன.

பீமப்பா கடாட் என்பவர் பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்கு இதுவரை எவ்வளவு ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்ற கேள்வியை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.

இந்த கேள்வி தொடர்பாக பதிலளித்திருந்த பிரதமர் அலுவலகம் இதுவரை மோடியின் வெளிநாட்டு பயணத்திற்காக 355 கோடி செலவிடப்பட்டுள்ளது என பதிலளித்துள்ளது.




மேலும் அந்த பதிலில், இந்த நான்கு ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 41 முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு 52 நாடுகள் சுற்று பயணத்தை இதுவரை முடித்துள்ளார். 
மேலும் இந்த நான்கு ஆண்டுகளில் 165 நாட்கள் அவர் வெளிநாடுகளில் சுற்று பயணத்தில் இருந்துள்ளார். 
அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் 2015-ஆம் ஏப்ரல் மாதம் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா நாடுகளுக்கு சென்ற வந்த சுற்றுப்பயண செலவு மட்டும் 31,25,78,00 ரூபாய். 

அதேபோல் 2014-ஆம் ஜூன் மாதம் மேற்கொண்ட பூட்டானுக்கு சென்றுவந்த செலவு மட்டும் 2,45,27,000 ரூபாய். இதுவே அவரது குறைந்தபட்ச சுற்றுப்பயண செலவு  எனவும்  கூறப்பட்டுள்ளது.
இன்னும் கடைசியாக சுற்றுப்பயணம் சென்றுவந்த நான்கு நாடுகள் செலவு விபரம் தங்களுக்கு தரப்படவில்லை, பிரதமர் அலுவலகம் உள்நாட்டு சுற்றுப்பயணங்கள் தெடர்பான தகவலை  தர மறுத்துவிட்டது என்பதால் அதன் விபரம் தெரிவிக்க இயலவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?