அழகிரி புராணம்.......!

அழகிரி இப்போதைய நிலை திமுக விற்கு மிக நல்ல வாய்ப்பு.
அழகிரிக்கு கொஞ்சம் அடியாட்கள் ஆதரவுதான் உள்ளது.அதுவும் காசு கிடைக்காவிட்டால் அழகிரியை அம்போ என்று விட்டு விடும் கூட்டம்தான்.அரசியல் ஆதரவாளர்கள் என்றால் ஒருவரும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை அழகிரி பக்கம் இல்லை.
கட்சியை அழிக்கும் திட்டப்படி ரவுடித்தனம் செய்யும் குண்டர்கள்தான் அழகிரி பக்கம் உள்ளனர்.
பிறந்த நாளுக்கும் ,ஆலோசனை கூட்டத்திற்கும் வந்த கூட்டம் தானாக வந்ததா என்றால் வரவழைக்கப் பட்டது என்றே உளவுத்துறை கூ்ுகிறது .
 அழகிரியை சில ஊடகங்கள் திமுகவை அழிக்கும் தங்கள் பணிக்கு கருவிகளில் ஒன்றாகத்தான் கொண்டு இப்பிரச்னையில் அழகிரி ஒரு மாபெரும் சக்தி.அவர் திமுகவை நினைத்தால் இல்லாமல் ஆக்கி விடுவார் என்று வாராவாரம் எழுதி தள்ளிவருகின்றன.
மதுரையில் அதிகார மையம், அடாவடி அரசியல், திருமங்கலம் ஃபார்முலா, ரவுடிகளோடு நட்பு, தாகி கொலை, பொட்டு சுரேஷ் கொலை, தினகரன் ஊழியர்கள் கொலை என்றெல்லாம் அழகிரியை வைத்து திமுகவை தாக்கி வந்த ஊடகங்கள் இன்று அழகிரிக்கு நேர்மறையில் முக்கியத்துவம் கொடுப்பது போல செய்திகளை வெளியிடுகின்றன. காரணம் இப்போது அவர்கள் முன்பு எழுதிய வில்லன் அழகிரி திமுகவின் வில்லனாக மாறிவிட்டதால் திமுகவை வில்லனாக்க அழகிரியின் ஆதங்கத்தை வெளியிடுகிறார்களாம்.
மேலும் தமிழக அரசியல் வாசிப்பு இன்பத்தின் மையமான அழகிரி, ஸ்டாலின் மோதல் இல்லையென்றால் வார, வாரமிரு, புலானாய்வு புண்ணாக்குகள் ஒன்றும் கல்லா கட்ட முடியாது. ஆகையால் அழகிரிக்கு திமுக முடிவுரை எழுதினாலும் ஊடகங்கள் அத்தனை சீக்கிரம் எழுதிவிடாது. அந்த படிக்கு அழகிரி புராணம் இனியும் ஓயாது.
அழகிரி - கருணாநிதி
அழகிரி, ஸ்டாலின் மோதல் இல்லையென்றால் வார, வாரமிரு, புலானாய்வு புண்ணாக்குகள் ஒன்றும் கல்லா கட்ட முடியாது.
வாரிசு அரசியல், குடும்ப அரசியல் அல்லது கருணாநிதிக்கு அடுத்து திமுகவை ஆளப்போவது யார் என்ற கேள்வியை திமுக எனும் கட்சி வெகுநாட்கள் கேட்டுக் கொண்டே இருக்க முடியாது. இது ஜனநாயகத்தின் அக்கறையில் இருந்து வரும் பிரச்சினையல்ல. கோபலபுரம், சிஐடி காலனியைத் தாண்டி தமிழகம் முழுவதும் திமுகவின் வட்டார தளபதிகள் அனைவரும் வாரிசு, குடும்ப அரசியலின் சொத்துரிமையாக வந்தவர்கள்தான். மேலும் திமுக எனும் கட்சியை வைத்து உருவான இந்த கூட்டம் பெருக்கியிருக்கும் சொத்துக்களும் அண்ணாவே கற்பனையிலும் நினைத்திராத அளவுக்கு இருக்கிறது.
எனவே திமுக தேர்தலில் வெல்லுகிறதோ இல்லை ஆட்சியை பிடிக்கிறதோ, இழக்கிறதோ இவையெல்லாம் திமுக தலைகளுக்கு முக்கியமில்லை. மாறாக வளர்த்து விட்ட சொத்துக்களை பெருக்குவதற்கும், பாதுகாப்பதற்கும் ஒரு கட்சி என்ற முறையில் இயங்குவது அவசியம். அதில் போனசாக ஆட்சி, அமைச்சர் பதவிகள் வந்தால் மகிழ்ச்சி. இல்லையேல் ஆளும் கட்சிக்கு கப்பம் கொடுத்து விட்டு தொழிலை தொடர்வது அத்தியாவசியம். இது திமுக என்றில்லை, அதிமுக போன்ற மாநில கட்சிகளுக்கும் காங்கிரசு, பாஜக போன்ற தேசிய கட்சிகளுக்கும் பொருந்தும்.
ஜெயா-சசிகலா கும்பலை திமுகவும், கருணாநிதி குடும்பம் மற்றும் வட்டார திமுக பிரமுகர்களை ஜெயாவும் சொத்து சேகரிப்பு வழக்குகள் மூலம் தண்டிக்க முடியவில்லை என்பதை இங்கே இணைத்துப் பார்க்க வேண்டும். ஒரு வகையில் இந்த வழக்குகள் ஒரு அரசியல் மிரட்டல் என்பதைத் தாண்டி அடிப்படையையே தகர்த்து விடும் நோக்கம் கொண்டதல்ல. மேலும் இரு ஆட்சிகளிலும் இரு கட்சிப் பிரமுகர்களும் தங்களது தொழிலை செவ்வனே தொடர்வதும் எப்படி என்று நினைத்துப் பார்க்க வேண்டும். இதே ஜெயா ஆட்சி திமுக மீது ஜென்ம பகையும், வெறுப்பும் கொண்டிருந்தாலும் சன் டிவியோ இதர திமுக பிரமுகர்களின் தொழில்களோ எந்த பாதிப்புக்கும் ஆளாகவில்லை. மாறாக திமுக ஆண்ட காலங்களில்தான் சன் டிவி மற்றும் திமுக பிரமுகர்கள் தமது தொழில் சாம்ராஜ்ஜியத்தை பெருக்கினார்கள் என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
ஆகவே அழகிரி-ஸ்டாலின் பிரச்சினையில் திமுக உடைபடுவதையோ இல்லை உருக்குலைந்து போவதையோ திமுகவின் பெருந்தலைகள் மற்றும் வட்டார தளபதிகள் விரும்ப மாட்டார்கள். மேலும் இது விருப்பம் விருப்பமில்லை என்பதைத் தாண்டி இப்படி ஒரு நிலையெடுத்தே ஆகவேண்டிய நிர்ப்ந்தமும் கூட.
அழகிரி
வாரிசு பிரச்சினையில் அலட்டிக் கொள்வதால் அழகிரி எதையும் இழக்கப் போவதில்லை.
அந்த வகையில் ஸ்டாலின் அவர்களது ஏகோபித்த தெரிவாகவும், அழகிரியை புறக்கணிக்க வேண்டியதும் இயல்பாக நடக்கிறது. இந்த நிலையை பொதுவில் அழகிரியே கூட புரிந்து கொண்டிருந்தாலும் பண்ணையார்கள் பவுசு இழந்தாலும் கவுரவத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதாக மறுப்பு தெரிவிக்கிறார். தான் தோற்போம் என்று தெரிந்தாலும் முடிந்த வரை விளையாடுவது என்பது அவர் நோக்கம். முக்கியமாக இந்த ஆட்டத்தில் அவர் பொருளாதார ரீதியாக இழக்கப் போவது ஏதுமில்லை.
சில பல ஆயிரம் கோடிகளாவது அவரது சொத்து மதிப்பில் இருக்குமென்பதாலும் அவற்றை பாதுகாக்க வேண்டிய சட்டபூர்வ சடங்குகளை கவனமாக செய்துமிருப்பார் என்பதால் வாரிசு பிரச்சினையில் அலட்டிக் கொள்வதால் அழகிரி எதையும் இழக்கப் போவதில்லை. அழகிரியின் புதிய தலைமுறை பேட்டியை பார்க்கும் போது அவர் கொஞ்சம் முட்டாள் என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம்.
தனது சாதனையாக மதுரையில் 14 கட்டணக் கழிப்பறைகளை கட்டியதையும், உரம், மருந்து விலைகள் உயராமல் பார்த்துக் கொண்டதையும், பிறந்த நாள் விழாவில் போட்ட பிரியாணி முதலான நலத்திட்டங்களையும்  கூறும் அழகிரி அதிமுக ஆட்சி வந்ததும் தனது சாதனைகளை நிறுத்திவிட்டதாக புலம்பிக் கொள்கிறார். முக்கியமாக அவரது கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பதை தெரிவிக்கிறார். பா வரிசை படங்களில் பண்ணையார்கள் உப்பரிகையிலிருந்து வீசும் சில்லறைகளின் கருணை காலத்தால் பிந்தியதென்றாலும் அழகிரி அங்கேயே நிற்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் உலகமயக்கால கட்டத்தில் அடாவடி அரசியலோ, ரவுடித்தனமோ இன்றி மாபெரும் ஆதாயங்களை சட்டப்பூர்வமாகவே சுருட்டமுடியும் என்பதால் அழகிரியின் அதிரடி அரசியல் ஃபார்முலாவுக்கு இனி வேலையில்லை என்பதே இந்த சண்டையில் அவரது தோல்விக்குரிய தத்துவ விளக்கம். மு க ஸ்டாலினது அரசியல் செயல்பாடு ஒரு வகையில் கார்ப்பரேட் உலகின் அலைவரிசையில் வருவது தற்செயலான ஒன்றல்ல. மற்றபடி காலி பெருங்காய டப்பா போல கருணாநிதி பேசும் திராவிட இயக்க சிந்தனைகளை பேச இனி திமுகவில் ஆளில்லை, தேவையுமில்லை.
தனது அறிவின்மையை விஞ்சும் விசயமாக அள்ளி வழங்கும் வள்ளல் குணத்தை அரணாக வைத்திருக்கிறார் அழகிரி. அதை வைத்தே ஆதரவாளர் கூட்டத்தை பெருக்கியும், கைத்தட்டவும் வைக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.
அழகிரி
எலும்புத் துண்டுகளால் ஏற்றிவிடப்பட்ட அழகிரிக்கு தன்னிடம் ஏதோ ஒரு மாஜிக் உள்ளதாகவும் அதனால் திமுகவிற்கு வாழ்வு கிடைப்பதாகவும் நம்புகிறார்.
இதை சரியாக கூறுவதென்றால் திமுக ஆட்சி செல்வாக்கில் அழகிரி வளர்த்த எடுபிடிகள் பல தொழிலதிபர்களாக, மாபெரும் புரோக்கர்களாக, கல்வி முதலாளிகளாக, அதிகார மையங்களாக வளர்ந்திருக்கிறார்கள். இப்படி அவரால் வளர்க்கப்பட்ட எலும்புத்துண்டுகள் அழகிரியை அஞ்சா நெஞ்சன் என்று ஏற்றி விடுகிறார்கள். இது பொறுக்கித் தின்னும் கூட்டம், நாளையே ஸ்டாலின்தான் ஆள் என்றால் நைசாகவோ, நெற்றியடியாகவோ முகாம் மாறிவிடுவார்கள் என்பது அழகிரிக்கு அப்போது தெரிந்திருக்காது, இப்போது தெரிந்தே ஆக வேண்டியிருக்கும்.
இப்படி எலும்புத் துண்டுகளால் ஏற்றிவிடப்பட்ட அழகிரிக்கு தன்னிடம் ஏதோ ஒரு மாஜிக் உள்ளதாகவும் அதனால் திமுகவிற்கு வாழ்வு கிடைப்பதாகவும் நம்புகிறார். இதற்கு தோதாகவே முந்தைய ஆட்சிக்காலத்தில் வந்த இடைத் தேர்தல்களில் திமுக வெற்றி பெறுகின்றது. ஒவ்வொரு தேர்தலிலும் அழகிரி சொன்ன வாக்கு வித்தியாசத்தின் படியே முடிவுகள் வெளியாகின்றன. திருமங்கலம் ஃபார்முலா என்பதாக அழகிரியின் வெற்றி கொண்டாடப்படுகிறது. எனினும் இந்த ஃபார்முலாவை கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் முதலில் கண்டுபிடித்தவர் ‘புரட்சித் தலைவி’ என்பது வேறு விசயம். இதைப் பார்த்து பூரித்துப் போன கருணாநிதி இந்தா பிடி மகனே என்று தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை அழகிரிக்கு அளிக்கிறார். இதன் பின்னர் அழகிரி தனது எலும்புத்துண்டு வட்டத்தை தென் மாவட்டங்களுக்கு விரிக்கிறார்.
ஜனநாயகத்திற்கு கட்டுப்படாமல் அழகிரி செய்த தேர்தல் வேலைகளை கொண்டாடிய கருணாதி இன்று அதே அழகிரி உட்கட்சி ஜனநாயகத்தை மதிக்கவில்லை என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார். இதுதான் தக்காளி, ரத்தம் வகைப்பட்ட ஜனநாயகம் போலும். சென்ற சட்ட மன்றத் தேர்தலில் அழகிரி முழு வீச்சுடன் செயல்பட்டாலும் திமுக மாநிலம் முழுக்க தோற்றுவிட்டது. அந்த தேர்தலோடு அதிமுக எனும் கட்சி காலி என்று முழங்கிய அழகிரியின் நெஞ்சம் எப்படி அஞ்சி சாகும் என்பது பிறகு அம்மா போட்ட வழக்குகளில் தெரிய வந்தது.
பிறகு திமுக எனும் கட்சி அமைப்புகளில் அழகிரியின் பிடியும் தளர்ந்து வந்தது. தனது சொத்துபத்துக்கள், குடும்பத்தினரை அம்மா போலிசிடமிருந்து பாதுகாப்பதிலேயே ஒடுங்கிப் போன அழகிரியை விட்டு அவரது எடுபிடிகள் எஸ்கேப் ஆனதில் வியப்பில்லை. மேலும் என்னதான் அழகிரி இப்போது தோற்றுப் போனாலும் அவர் கருணாதியின் மூத்த புத்திரன் என்பதால் என்றும் அவர் திமுகவில் ஒரு அதிகார மையமாக இருப்பார் என்ற வகையில் சில பல அடிப்பொடிகள் இன்றும் அவருடன் உறவைப் பராமரிக்கலாம். மற்ற திமுக பெருந்தலைகளும் அந்த வகையில் அழகிரியை ஒரேயடியாக உதறிவிட முடியாது. எனினும் ஸ்டாலின் முன்பு போல பீதியில் இருக்க வேண்டியதில்லை. இனி எந்த எதிர்ப்புக்கிடமின்றி அவர்தான் அடுத்த தலைவர். அதை கருணாதியே மறுத்தாலும் நடக்காது.
இப்போது அழகிரி வெளியேற்றத்தை வைத்தாவது தேமுதிக கூட்டணிக்கு வந்து வரும் தேர்தலில் குறிப்பிட்டதக்க வெற்றி பெற வேண்டும், மத்திய் ஆட்சியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதெல்லாம் கூட திமுக ஆவலுடன் எதிர்பார்க்கும் கனவுகள். அப்படியும் கேப்டன் கவிழ்த்து விட்டார் என்றால் அழகிரி வீட்டில் பிரியாணி சாப்பிடுவதற்கு கூட்டம் அலை மோதும். எனவே அழகிரி நீக்கத்திற்கு நீண்ட கால நோக்கம் இருப்பது போலவே உடனடி ஆதாயமும் கூட இருக்கிறது. என்றாலும் இந்த புத்திர சோக புராணத்தை பொருத்தமாக புனைய வேண்டாமா?
அழுகுணி ஜனநாயக ஆட்டத்தை ஆடுபவர்கள் யாரும் நேர்மையான முறையில் தத்தமது விளக்கத்தை முன்வைத்து வாதிட முடியாது. இங்கு நேர்மை என்பதை விட அதே அழுகுணி ஜனநாயகத்தை நம்பும் காரியவாதிகளுக்கு பொருத்தமான கதையும், காட்சி அமைப்புகளும் கூட தேவைதான். அழகிரி அப்பாவை அடித்தார், ஸ்டாலின் செத்துப் போவார் என்றார்,  கருணாநிதி உருகினார், அழகிரி உருவ பொம்மைகள் எரிப்பு என்பதெல்லாம் அந்த காட்சிகளின் அணிவகுப்புகள்.

உதவி &நன்றி:வினவு.
Photo
 --------------------------------------------------------------------------------------------------------------------------
 தீர்ப்பும்  -பத்திரிக்கைகளும் ,

நம்  தமிழகப் பத்திரிகைகள் எவ்வளவு நடுநிலை என்பதை உணராதவர்களுக்கு இந்த செய்தி அர்ப்பணம்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவருடைய உடன்பிறவா சகோதரி சசிகலா சம்பந்தப் பட்ட வழக்கு 30-1-2014 அன்று இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பான ஒரு தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பு அன்றைய மாலைப் பத்திரிகைகளில் ஒரு வரிகூட வெளியிடப்பட வில்லை. "தமிழ் முரசு" இதழிலே மட்டும் அந்தச் செய்தி வந்துள்ளது. அதுகூட மிகவும் குறைக் கப்பட்டு ஓரளவிற்குத்தான் வெளிவந்துள்ளது. 
அந்தத் தீர்ப்பு எந்த வழக்கிலே தெரியுமா? 

 தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவருடைய உடன்பிறவா சகோதரி சசிகலா சம்பந்தப் பட்ட வழக்கு அது. ஜெயலலிதா மற்றும் அவரது சகோதரி சசிகலா ஆகியோர் மீது மத்திய வருமான வரித் துறை கடந்த 96ஆம் ஆண்டு எழும்பூர் பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 1991-92, 1992-93 ஆகிய நிதி ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை அவர்கள் தாக்கல் செய்யவில்லை என்ற குற்றத்துக் காக அந்த வழக்கு 21-8-1997 அன்று தாக்கல் செய்யப்பட்டது. வருமான வரித் துறையினர் குறிப்பிட்டுள்ள அந்தக் கால கட்டத்தில் தனக்கு வருமானம் இல்லை எனவும், அதனால் கணக்கு தாக்கல் செய்யவில்லை எனவும், ஜெயலலிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை வருமான வரித் துறையினர் ஏற்றுக்கொள்ள வில்லை. வருமான வரி சட்டப்படி வருமான வரி செலுத்து பவர்கள் வருமானம் இல்லாத காலத்திற்கும் கணக்கு காட்ட வேண்டும் என்பதுதான் சட்டம். இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென்று கீழ்க் கோர்ட்டில் ஜெயலலிதா தரப்பினர் முறையீடு செய்ததை 14-6-2006 அன்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் பிறகு ஜெயலலிதா தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து, அதுவும் 2-12-2006 அன்று தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. எனவே இந்த வழக்கி லிருந்து தன்னை விடுவிக்கக்கோரி உச்சநீதி மன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல் முறையீடுதான், உச்சநீதிமன்றத்தினால் இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் நீதிபதிகள் வருமான வரி வழக்கை ஜெயலலிதா எதிர்கொள்ள வேண்டும் என்றும் இந்த வழக்கை நான்கு மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமென்றும் ஆணை பிறப்பித்திருக்கிறார்கள். 
Photo: தி.மு.க சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட திருச்சி சிவா என்னை சந்தித்து வாழ்த்து பெற்றபோது.
 மேலும் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் """"வருமான வரி செலுத்த வேண்டியவர்கள் தவறாமல் வருமான வரிக் கணக்கை முறையாகத் தாக்கல் செய்ய வேண்டும். அப்படித் தாக்கல் செய்யாததே குற்றமாகும். வருமான வரித் துறையினர் வழங்கும் ஒவ்வொரு உத்தரவும் மேல்முறையீட்டுக்கு எடுத்துச் செல்லப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அப்படி மேல் முறையீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிகழ்வுகள் குறித்த விவரங்கள் இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்க்கும் போது எந்த அளவுக்கு இந்த வழக்கில் வேண்டு மென்றே தாமதத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. எனவே இனி அனைத்து நீதிமன்றங்களும் குற்றம் செய்பவர்கள் தங்கள் மீதுள்ள வழக்குகளைத் தாமதப்படுத்துவதற்காக நீதிமன்றங்களைப் பயன் படுத்துவதை கட்டாயம் தவிர்த்திட வேண்டும்"" என்று தங்கள் தீர்ப்பில் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். 
நீதிபதிகள் தெரிவித்திருப்பதைப் பார்க்கும் போது, பெரிய பொறுப்புகளிலே இருப்போர் மீது வழக்குகள் வந்தால், தாங்கள் பொறுப்பிலே இருக்கும்போது அந்த வழக்குகள் நடைபெற வேண்டுமென்றும், வேறு கட்சிகள் ஆட்சியிலே இருக்கும்போது வழக்கு விசாரணைக்கு வருமேயானால், அந்த வழக்கு விசாரணையை எவ்வளவு காலத்திற்கு இழுத்தடிக்க முடியுமோ, 
அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவதையும், பொறுப்பிலே இருக்கும்போதே வழக்கு விசார ணைக்கு வந்தால்கூட, தங்களுக்கு ஒத்துழைக்கக் கூடியவர்களே நீதிபதிகளாக நீடிக்க வேண்டு மென்றும், அவர்கள் ஓய்வுபெற நேர்ந்தால் கூட, அவர்களே தங்கள் வழக்கினை விசாரிக்க வேண்டு மென்றும், எதிர் தரப்புக்கு ஆஜராகக்கூடிய வழக்கறிஞர்களும் தங்களுக்கு வேண்டியவர் களாக, அல்லது தாங்கள் சொல்கிறபடி நடப்பவர் களாக இருக்க வேண்டுமென்றும் நினைத்து, அதற்கேற்ப உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கு நடத்துவதையும் நாம் கண்ணால் கண்டு வருவதால், நீதிபதிகள் தற்போது உத்தரவு பிறப்பித் திருப்பது நியாய உணர்வுடைய அனைவருக்கும் ஏற்புடைய கருத்தாகத்தானே உள்ளது!
                                                                                                                -கலைஞர் கருணாநிதி 
-----------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?