இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வெள்ளி, 9 அக்டோபர், 2015

அந்த 36 மணி நேரம்தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக, நேற்று முன்தினம், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்தன. குறிப்பாக, சரத்குமார் அணிக்கு ஆதரவாக, நடிகை எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து, நடிகர் சங்க வட்டாரத்தில் விசாரித்ததில், கிடைத்த தகவல்கள்:
* 'தேர்தலில் போட்டி வேண்டாம்; இரு தரப்பினரும் சுமுகமாக பேசி தீர்வு காணலாம்' என, விஷால் அணியில் உள்ள முக்கிய நடிகர்கள் மற்றும் மூத்த நடிகர்களிடம் ராதிகா பேசினார்; ஆனால், யாரும் அதற்கு சம்மதிக்கவில்லை.
* அதனால், நிருபர்கள் சந்திப்பு மூலம், தன் கருத்தை விஷால் அணிக்கு தெரிவிக்க, ராதிகா முடிவு செய்தார். இதுகுறித்து, தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணுவுக்கு தகவல் தெரிவித்தார். அதற்கு முன் சினிமா சங்கங்களின் கூட்டு குழு கூட்டம் நடக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.
* உடனே, தாணுவின் ஏற்பாட்டில், சென்னையில், சினிமா சங்கங்களின் கூட்டு குழு கூட்டம் நடந்தது. 'தேர்தல் நடந்தால், நடிகர்களிடம் பிளவு ஏற்படும். இது யாருக்கும் நல்லது அல்ல. இரு அணியினரையும் வரும், 10ம் தேதி, அழைத்து பேசி தேர்தல் இல்லாமல் நிர்வாகிகளை நியமிக்கலாம்' என, இதில் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு சரத்குமார் அணிக்கு ஆதரவாக இருந்தது.
* இத்தகவல் விஷால் அணிக்கு தெரிவிக்கப்பட்டது. 'தயாரிப்பாளர் சங்க தேர்தல், நீதிமன்றம் வரை சென்று நடந்தது; தேர்தலுக்கு பிறகு, தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக தான் உள்ளனர். அதுபோல், நடிகர்களும் தேர்தலுக்கு பின், ஒற்றுமையாக இருப்பர். இதுபற்றி, தயாரிப்பாளர்கள் கவலைப்பட வேண்டாம்' என, விஷால் அணியினர் திட்டவட்டமாக கூறி விட்டனர்.
* இதன்பின், தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள சரத்குமார் விசுவாசி ஒருவர், ராதிகாவிடம் பேசினார். 'நீங்கள் கூறியபடி, கூட்டு குழு கூட்டம் நடந்தது; அதில் எடுக்கப்பட்ட முடிவை விஷால் அணி ஏற்கவில்லை. தற்போதைய நிலை நீடித்தால், விஷால் அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. எனவே, நீங்களே முடிவு எடுத்து கொள்வது தான் சிறந்த வழி' என, தெரிவித்தார்.
* இதன் பிறகே, ராதிகா தரப்பில் நிருபர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ராதிகாவும், நடிகர் சிம்புவும் தங்கள் ஆத்திரத்தை கொட்டினர். ராதிகா, 'விஷால் ரெட்டி' என, ஜாதியை குறிப்பிட்டு பேசினார். சிம்புவோ, 'ராதாரவி இவர்களை, நாய் என, திட்டியதாக கூறப்பட்டது. நரி என, கூறியிருக்க வேண்டும்' என்றார். மேலும், விஷாலை, ஒருமையில், 'நீ, அவன்' என, சிம்பு பேசியது விஷால் அணியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
* சினிமா சங்கங்களை சேர்ந்த பலரும், விஷால் அணியினரை தொடர்பு கொண்டு, 'தேர்தலில் இருந்து வாபஸ் பெற வேண்டாம்' என, வலியுறுத்தினர்.
* இதன் பிறகே, விஷால் அணி சார்பில், 'பாண்டவர் அணி' என்ற பெயரில், சினிமா கூட்டுக்குழு கூட்டத்தின் முடிவுகளை விமர்சித்து அறிக்கை வெளியிடப்பட்டது.இவ்வாறு நடிகர் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து விஷால் அணியினர் கூறியதாவது:சரத்குமார் அணி சார்பில், வரும், 11ம் தேதி நடக்க உள்ள தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் தான், அவர்கள் இஷ்டத்திற்கு பேசுவர் என்றிருந்தோம். ஆனால், தேர்தல் பயத்தில் முன்கூட்டியே அவர்கள் மனம் திறந்து பேசியதால், அவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்பதை முழுமையாக நன்கு அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இது, எங்களுக்கு நல்லதாகத் தான் அமையும்.நடிகர் சங்க நல விரும்பிகளாக தங்களை காட்டிக் கொள்ளும் ராதிகாவும், சிம்புவும், திடீரென மனம் திறந்து பேசியதன் விளைவு, தேர்தல் முடிவில் தெரிய வரும்.இவ்வாறு விஷால் அணியினர் கூறினர்.
விஸ்வரூபம் பட பிரச்னையில் மற்ற மொழி நடிகர்கள் எல்லாம் ஜெயலலிதா அரசுக்கு எதிராக கருத்துக்களை கூறியபோது  கமல்ஹாசன் ஆயுள்கால உறுப்பினராக இருக்கும் நடிகர்சங்க தலைவர்,செயலாளர் இருவரும் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் விஸ்வரூப பிரச்னையில் கடைசி வரை தலையிடவில்லை.
அப்போது விஷால் நடிகர் சங்கம் என்ன செய்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
அதானால் கோபமடைந்த ராதாரவி,சரத்குமார் இருவரும் விஷாலைத்தாக்கி அறிக்கை விட்டனர்.
இப்போது ராதிகா 36 மணி நேரம் சரத்குமார் விஸ்வரூபம் வர உழைத்தார் என்கிறார்.அந்த 36  மணி நேரம் சரத் குமார் என்ன உழைத்தார்,எங்கு உழைத்தார்,எப்படி உழைத்தார் என்று சொல்லுவாரா?
அன்று ராதா ரவி,சரத்குமார் நடந்து கொண்ட முறை கமல்ஹாசனை கோபத்தில் தள்ளியது.
அதைவிட கோபம் கொள்ள வைத்தது தனது விடயத்தில் ஆதரவாக நடிகர் சங்கத்தை கேள்வி கேட்ட விஷாலை நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்தது மற்றும் ஒரு அரசியல் கட்சி தலைவர் ஜெயலலிதா அவர் ஊழல் செய்து சிறை சென்றதுக்கு எதிராக அதிமுக கட்சியனரைப் போல் நடிகர் சங்கம் உண்ணாவிரதம் இருந்தது.அதில் கண்டிப்பாக எல்லா நடிகர்களும்  கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டளை இட்டது.
திமுகவுக்கு ஆதரவாக தேர்தலில் பரப்புரை செய்த நடிகர் வடிவேலுவை தாங்கள் அதிமுகவுக்கு பரப்புரை செய்ததை மறந்து விட்டு படங்களை நடிக்க விடாமல் தடை போட்டது எந்த விதத்தில் சரியாகும்/
அப்போதே தங்கள் சொந்த நலனுக்கு மட்டுமே நடிகர் சங்கத்தைப்பயன்படுத்தி பணத்தை சம்பாதித்து வரும் மாமன்,மச்சானை நடிகர் சங்க  பொறுப்பில் இருந்து கழட்டி விட வேண்டும். 
இளைய பொறுப்பான நடிகர்களை பொறுப்பில் அமர்த்த தன்னாலான முயற்சிகளை செய்வது என்று கமல்ஹாசன் முடிவெடுத்தார்.
அப்போது கார்த்தி,விஷால் என்று இளையத்தலைமுறையினர் சங்க நடவடிக்கையில் கலந்து கொள்வதை பார்த்ததும் அவர்களுக்கு தனது அறிவுரைகளை சொல்லி அவர்களை பொறுப்புகளை கைப்பற்றும் முயற்சிக்கு கொண்டு சென்றுள்ளார்.
சரத் குமார் கமல்ஹாசன் இதன் பின்னணியில் இருக்கிறார் என்று சொல்லும் முன்னரே ராதாரவி கமலை திட்டி தீர்த்து விட்டார்.
சமீபத்தில் விஷால் அணியினரை திட்டியது சிம்பு.சிம்பு எப்போதுமே தவறான முடிவுகள் ,செயல்களை செய்துதான் பல சிக்கல்களை எதிர் கொள்ளுகிறார்.எதிர் அணியினரை ராதாரவி அளவுக்கு அசிங்கமாக திட்தியுள்ளார்,ராதிகாவும் சாதி பிரச்னையை எல்லாம் கொண்டுவந்தார்.
இது போன்ற சரத்குமார் அணியினர் பேச்சு அவர்கள் ஆதரவாளர்களை கூட எதிர்த்தரப்புக்கு தள்ளி விடும் பணியைத்தான் செய்கிறது.
தோல்விப்பயம்தான் அவர்களை இவ்வாறு பேச வைக்கிறது என்பதுதான் நடிகர்கள் மத்தியில் இப்போதைய பரபர பேச்சு.
திமுக தரப்புதான் இவர்களை தூண்டி விடுகிறது என்று கூட பேச்சு உள்ளது.ஆனால் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர், 'எங்களால் முடிந்தவைகளை செய்து வருகிறோம். அரசியல் முக்கியத்துவம் உள்ளவர்களால், எந்த உதவியும் செய்யப்படவில்லை. எதிர் அணியினர் பரபரப்பை ஏற்படுத்த, இஷ் டத்திற்கு தவறாக பேசி வருகின்றனர்' என்றனர்.

தேர்தல் அறிக்கை தயாரிக்க திணறல்:'விஷால் அணியின் தேர்தல் அறிக்கையில், புதிய கட்டடம் உட்பட, 42 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றை தாண்டி, வேறு எதையும் புதிதாக அறிவிக்க முடியாது. அப்படி அறிவித்தாலும், நம்பும்படியாக இருக்காது' என, சரத்குமார் அணிக்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருதுகிறது.

எனவே, தேர்தல் அறிக்கையை தயார் செய்வதில் திணறி வருகிறது. தற்போது வரை, தேர்தல் அறிக்கை முழு வடிவம் பெறவில்லை என, கூறப்படுகிறது.

சந்தேகம் தரும் சங்க செலவுகள்:நடிகர் சங்க செலவுகள் குறித்து விஷால் அணியினர் பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
* சினிமாவுக்கு சேவை வரி விலக்கு அளிக்க கோரி, நடிகர், நடிகையர் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதற்கு, 12 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளதாக எழுதப்பட்டுள்ளது
* இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நடந்த உண்ணாவிரதத்திற்கு, 5.5 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது
* நடிகர் சங்க வளாகத்தில் உள்ள கோவில் கும்பாபிஷேகத்திற்கு, 4.5 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது
* அந்த கோவிலை இடிக்க, 2.5 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது
* நடிப்பு பயிற்சி அளிக்க, பல லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இவ்வளவு தொகை செலவாகியிருக்குமா என, விஷால் அணியினர் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர். 
 விஷால் கூறியதாவது:

வரும், 18ல் நடிகர் சங்க தேர்தல் நடக்கிறது; இதில், அனைத்து உறுப்பினர்களும் ஓட்டு போட வேண்டும். சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், காரைக்குடி, மதுரை என, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறோம்.சமாதானம் பேசுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமாதானம், வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை. சமரசத்தை மதிக்கிறோம். எங்களுடைய உணர்வுகளை மதித்து, நடிகர்கள் ஆதரவு அளிப்பதால் தேர்தல் நடக்கும்.

தேர்தலில் வெற்றி பெற்று, நிர்வாக பதவிகளை தேர்வு செய்தால் மட்டுமே, திறம்பட செயல்பட முடியும். நடிகர் சங்கம் என்றில்லாமல், தயாரிப்பாளர் சங்கம் உட்பட, அனைவரும் குடும்பமாகவே செயல்படுகிறோம்; தேர்தலுக்கு பின்னரும், இந்நிலை தொடரும்.நடிகர் சங்க கட்டடம் குறித்து, மூன்றாண்டுகளுக்கு முன்னரே கேள்வி எழுப்பியும், 45 கடிதங்கள் அனுப்பியும், எந்த பதிலும் கிடைக்காததால் தான், தேர்தலில் நிற்க முடிவு செய்தோம். நடிகர் சங்கத்துக்கு சொந்தமான, 19 கிரவுண்ட் நிலத்தை மீட்போம். இளைஞர்கள் கையில், நடிகர் சங்கம் வரவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

பின், நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, அவர் கூறியதாவது:நடிகர் சங்கத்தில், தான் ஒரு கவுரவ உறுப்பினர் என்ற முறையில், முதல்வர் ஜெயலலிதா, உங்களை அழைத்துப் பேசினால், சமாதானத்தை ஏற்பீர்களா?சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நீங்கள், இந்த பிரச்னையை பெரிதுபடுத்தப் பார்க்கிறீர்கள்; யார் அழைத்தாலும் சமாதானம் இல்லை.
முதல்வர் ஜெ.,வை சந்தித்து, ஆதரவு கேட்டீர்களா?
முதல்வரை சந்திக்க கடிதம் கொடுத்து, ஒரு மாதத்துக்கு மேல் ஆகி விட்டது; அனுமதி கிடைக்கவில்லை.
பாக்யராஜ்மாறியது ஏன்:
பாக்கியராஜ் மகன் சாந்தனுகூறுகையில், ''என் தந்தை, எதிர் அணியின் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக, அவரை, அந்த அணி என்று சொல்லிவிட முடியாது. அவருக்கு, எந்த அணி நல்லது செய்யும் என்பது தெரியும். ஓட்டுப்பதிவு நெருங்கும்போது, நல்லவர் அணிக்கு ஆதரவு தருவார்,'' என்றார்.ஆனாலும் ராதிகா பாக்கியராஜை பார்த்து பேசி சாதி அடிப்படையில் உணர்ச்சியை தூன்டி அவர்கள் பக்கம் வரவைத்ததாக சொல்லப்படுகிறது.

'12 ரூபாய் கட்டவில்லை எனக்கூறி சங்கத்தில் இருந்து நீக்கி விட்டனர்'
நான், 1990ல் இருந்து, நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக உள்ளேன். கடந்த டிசம்பரில்,
உறுப்பினர் கட்டணம், 12 ரூபாய் கட்டவில்லை எனக்கூறி, சில தினங்களுக்கு முன், என்னை நடிகர் சங்க உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளனர்.

இப்போது எந்த நடிகர், உறுப்பினர் கட்டணம் கட்டுகிறார்? எவருமே கட்டுவதில்லை. என்னை
சங்கத்தில் இருந்து நீக்கி விட்டால், நடிகனாகஇல்லாமல் போய் விடுவேனா?நடிகர் சங்க தேர்தலில், விஷால் அணிக்குஆதரவு தெரிவித்தேன். அதற்காகவே என்னை திட்டமிட்டு நீக்கியுள்ளனர். ஓட்டுப் பதிவின் போது,நீதிபதியிடம் முறையிடுவேன். அவர் அனுமதியளித்தால் ஓட்டு போடுவேன்; இதற்காக, நீதிமன்றம் செல்ல விரும்பவில்லை.

நான் தயாரித்துள்ள, 'அதிரடி' திரைப்படம் வரும், 16ம் தேதி திரைக்கு வருகிறது. அதை
வராமல் தடுப்பதோடு, அப்படம் குறித்த செய்திகளும், பத்திரிகைகளில் வருவதை சரத்குமார் தடுக்கிறார். திட்டமிட்டபடி திரைப்படம், 16ம் தேதி வெளியாகும்.-
என்று  நடிகரும், தயாரிப்பாளருமான மன்சூர் அலிகான் தனியே பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டி தெரிவித்துள்ளார்..
களவுபோன நடிகர் சங்கத்தை கண்டுபிடிப்போம் - வடிவேலு

=====================================================================================
காலையில் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது; 
எட்டு அல்லது பத்து மணி நேரம் இடைவெளிக்கு பின், உடலுக்கு "பெட்ரோலாக" தேவைப்படும் உணவு அது.

காலை உணவு முறையை "பிரேக் பாஸ்ட்" என்று கூறுவர். "பாஸ்ட்"டை (உண்ணாதிருத்தலை) "பிரேக்" (துண்டிப்பது) பண்ணுவது என்று அர்த்தம். முதல் நாள் இரவு சாப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும் போது, பல மணி நேரம், சாப்பிடாமல் உடல் இயங்குகிறது. அதனால் அதற்கு, சத்துக்கள் தேவைப்படுகிறது. காலையில் சாப்பிடாமல், மதிய உணவு சாப்பிடலாம் என்று எண்ணுவது சரியல்ல. பத்து மணி நேரத்தையும் தாண்டி பட்டினி போடுவது, உடலில் உள்ள முக்கிய சத்துக்கள் குறைபாடு ஏற்படக் காரணமாகி விடும்.

காலையில் எழுந்தவுடன் காபி, பால் போன்ற பானங்கள் சாப்பிட்டு விட்டு, உணவு அல்லது சிற்றுண்டி சாப்பிடுவோர் பலர் உள்ளனர். சிலர், காலையில், ழுமு உணவு சாப்பிட்டு விட்டு, மதியம் சாதாரண அளவில் சாப்பிட்டு, இரவு டிபன் சாப்பிடுகின்றனர்.

ஆனால், காலை உணவை தவிர்ப்போரும் உண்டு. இவர்களுக்கு தான் பாதிப்பு வரும். குறிப்பாக, வீட்டு, ஆபீஸ் வேலை பார்க்கும் பெண்களுக்கு காலை உணவு மிக முக்கியம். அதை தவிர்த்தால், அவர்களுக்கு பல கோளாறுகள் வர வாய்ப்பு அதிகம்.

உடலுக்கு தேவைப்படும் சத்துக்களை தருவது தான் உணவு. கார் போன்றது உடல். கார் ஓட பெட்ரோல் தேவைப்படுவது போல, உடல் சிறப்பாக இயங்க எரிசக்தி தேவை. அந்த எரிசக்தியை தருவது சத்துக்கள் தான். அந்த சத்துக்களை நாம் உணவில் இருந்து தான் பெற வேண்டும். காலை உணவு சாப்பிட்டால், அது சிற்றுண்டியாக இருந்தாலும், உணவாக இருந்தாலும், உடலுக்கு முழு எரிபொருளை தருகிறது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், மயக்கம், சோர்வு, தலைவலி, மூட்டு பாதிப்பு வராமல் இருக்கவும், காலை உணவு மிக முக்கியம்.

பெண்களுக்கு இரும்புச்சத்து மிக முக்கியம், நாம் சாப்பிடும் உணவு மூலம் அது கிடைத்தால், மனது மற்றும் உடல் ரீதியாக திடத்தன்மை ஏற்படுகிறது. காலை உணவில், மக்காச்சோள உணவை சேர்த்துக்கொள்ளலாம். "கார்ன்பிளேக்ஸ்" போன்ற பாக்கெட் உணவுகளை பின்பற்றினால், இரும்புச் சத்து கிடைக்கும். இந்தியாவில், 90 சதவீத பெண்கள், இரும்புச்சத்து குறைபாடுடன் உள்ளனர். அவர்களுக்கு காலை உணவு கைகொடுக்கும் மக்காச்சோளம் உட்பட தானிய வகை உணவுகள் மிக நல்லது. உடலுக்கும், மூளைக்கும் வலுவை தரும்.

காலை உணவு சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீராக இருக்கும். அதனால், "ஸ்லிம்"மை தொடர்ந்து பாதுகாத்து வரலாம். ஆனால், பலரும் காலை உணவை தவிர்த்தால் "ஸ்லிம்"மாக முடியும் என்று நினைக்கின்றனர். இது தவறு. காலை உணவை தவிர்த்தால், மதிய வேளையில் அதிகமாக சாப்பிட தூண்டப்படுகிறது. அதனால் எந்த உணவாக இருந்தாலும், அதிகமாக சாப்பிட்டு கொலஸ்ட்ரால் ஏறியும் விடுகிறது. காலை உணவில், புரோட்டீனும், நார்ச்சத்தும் அதிகம் தேவை. அப்படிப்பட்ட தானிய வகை உணவை சேர்த்துக் கொள்ளலாம். இதில் எரிசக்தியை வெளிப்படுத்தும் வைட்டமின் "பி" ஆன்டி ஆக்சிடென்டாக உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை உள்ளன.

காலை உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீண்ட நாள் வாழலாம். அதற்கேற்ப, உடலுக்கு தேவையான அனைத்துச் சத்துக்களும் கிடைத்துவிடுகின்றன. பாக்கெட், உணவு வகைகள், இப்போது கொழுப்பு நீக்கப்பட்ட நிலையில் விற்பனை செய்யப்படுகின்றன. சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம், சாப்பாடாகவும் காலை உணவை சாப்பிடலாம்.

காலை உணவில் பலவகை உண்டு. தானிய வகை சத்துக்களாக சமைத்து சிற்றுண்டியாக சாப்பிட்டாலும், முழு உணவாக சாப்பிட்டாலும் நல்லது தான். ஆனால், முதல் நாள் சமைத்ததை மறுநாள் பயன்படுத்துவது கூடாது. அதனால், உடலுக்கு சத்துக்கள் கிடைக்காது. முழு அளவில் சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும்.

காலை உணவில் எல்லா சத்துக்களும் இருக்க வேண்டுமானால், தானிய வகை உணவு, பானங்கள், யோகர்ட், பால் உணவு போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவுடன் பழங்களையும் சேர்த்துக் கொண்டால், உடலுக்கு இன்னும் நல்லது. காலை உணவை சாப்பிட்டவுடன், ஓய்வு எடுப்பது தவறான பழக்கம். வேலைக்கு போகாத பெண்கள் என்றால், காலாற நடக்கலாம்; ஏதாவது வேலையில் இறங்கலாம். வேலைக்கு போவோராக இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், உட்கார்ந்தபடி பல மணி நேரம் ஒரே வேலையை செய்யக் கூடாது. உடலை இயக்கும் வண்ணம் அரை மணிக்கு ஒரு முறை நடக்க வேண்டும்; குறைந்தபட்சம் நாற்காலியை விட்டு எழுந்திருக்க வேண்டும்.

சிலர் காலை சிற்றுண்டி சாப்பிடுவர்; சிலர் முழு உணவு சாப்பிடுவர். ஒவ்வொருவருக்கும் இது மாறுபடும். ஆனால், இந்த பழக்கத்தை திடீரென மாற்றக்கூடாது. மாற்றினால், உடலுக்கு பாதிப்பு தான் அதிகம்.
================================================================================
உடனடி தகவல்கள் அனுப்பப்படும் இன்ஸ்டன்ட் மெசேஜிங் முறை பயன்பாடு உலக அளவில் தினமும் 12 சதவீதம் என மிக வேகமாக  அதிகரித்து வருகிறது. அதிலும் வாட்ஸ்அப், பேஸ்புக் மெசஞ்சர், வீ சாட் ஆகியவை மக்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தப்படும் உடனடி தகவல்  பகிர்வு ஆப்ஸ்களாக இருக்கின்றன. ஆசியா பசிபிக் நாடுகளில் தினமும் 5 பேரில் 3 பேர் இந்த ஆப்ஸ்களை பயன்படுத்துகின்றனர்.

கடந்த ஆண்டு முதல் சமூக வலைதளங்கள் பயன்பாடு சராசரியாக 6 சதவீதம் என அதிகரித்து பிரபலமாகி வருகிறது. 
அதிலும், ஆசியா பசிபிக்  நாடுகளில் இந்தியாவில் மட்டும் 38 சதவீதம் பேர் இந்த ஆப்ஸ்களை பயன்படுத்துகின்றனர்.  சமூக வலைதளங்களை பொறுத்தவரை பேஸ்புக் உலக  அளவில் 30 சதவீதம் தினசரி பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளது. 
இந்தியாவில் பேஸ்புக்கை தினமும் 51 சதவீதம் பேர் பார்க்கின்றனர். இங்கு  வாட்ஸ்அப்தான் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது.

இளைஞர்கள் பலரும் பேஸ்புக், வாட்ஸ்அப்களில் தங்களுக்கும் குழுக்களை ஏற்படுத்தி தகவல்களை பகிர்ந்து கொள்கின்றனர். இதுபோல் ஸ்நாப் சாட்,  வீ சாட், லைன் ஆகியவற்றிலும் புதிய சந்தாதாரர்கள் தினமும் இணைந்து வருகின்றனர்.
=================================================================================
தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது என பலரும் கூறியது கேள்விப்பட்டிருப்போம். 
ஆம், தண்ணீர் குடிப்பதால் எண்ணற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். 
தினமும் தண்ணீர் குடிப்பதால் வயிறு சுத்தமாவதுடன், உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர், மலம் மூலம் வெளியேறிவிடும்.

பெரும்பாலான நபர்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறையும்போது தான் தலைவலி ஏற்படுகிறது, அத்தகைய நபர்கள் தினமும் தண்ணீர் குடித்து வருவது நல்லது. 
குறிப்பாக காலையில் அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பும் நபர்கள், சாப்பிடாமல் செல்வது வழக்கமாகிவிட்டது. 
இவர்கள் தினமும் தண்ணீர் குடிக்கும் போது பசி எடுப்பதுடன் அல்சர் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். 

வெதுவெதுப்பான தண்ணீரை குடித்தால் உடலின் மெட்டாபாலிசம் அதிகரிப்பதுடன், உண்ணும் உணவு விரைவில் செரிமானமாகி விடும். மேலும் இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்சிஜனை கொண்டிருப்பதால் உடலானது எனர்ஜியுடன் இருக்கும். எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். 
முகமும் பொலிவுடன் இருப்பதுடன், பருக்கள் வருவது குறைந்துவிடும். 


=================================================================================
இன்று,
அக்டோபர்-09.
  • உலக அஞ்சல் தினம்
  • உகாண்டா விடுதலை தினம்(1962)

  • தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் பிறந்த தினம்(1897)
  • டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது(1804)
  • இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது(2001)

=================================================================================