இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

செவ்வாய், 13 அக்டோபர், 2015

கிரிமினலா? ஹீரோவா?

 இளைஞர் கோகுல்ராஜ் படுகொலை வழக்கின் முக்கியக் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள யுவராஜ், காவல்துறையினர் மீது ‘இரக்கப் பட்டு’ ஒருவழியாக சரணடைந்து விட்டார். 
இடைப் பட்ட 107 நாட்களும், அவர் தலைமறைவாக இருந்தார் என்றோ, அல்லது போலீசாருக்குப் பயந்து பதுங்கிக் கிடந்தார் என்றோ சொல்லிவிட முடியாது. மாறாக, முடிந்தால் பிடித்துப் பாருங்கள் என்று போலீசாருக்கு சவால் விடுத்தார். 
நானாகவே சரண் அடைந்தால்தான் உண்டு என்று இறுமாப்புடன் சொன்னார். 
எவரோடு ஊடாட விரும்பினாரோ, அவர்களோடு தொலைக்காட்சி நேரலைகள் மூலமாகவும், பத்திரிகைகள் வாயிலாகவும், சர்வ சுதந்திரத்தோடு ஊடாடிக் கொண்டே இருந்தார்.
ஆனால் பாவம், ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான(!?) தமிழ்நாடு காவல்துறையால்தான் கடைசிவரை அவரை கைது செய்ய முடியாமலேயே போய்விட்டது.
யுவராஜ் புதிய குற்றவாளி; ஆகவே அவரை அடையாளம் காணமுடியாது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் சங்ககிரி, கரூர், பெருந்துறை, திருச்செங்கோடு காவல் நிலையங்களில் அவர் மீதுபல வழக்குகள் உள்ளன. 
அனைத்தும் கொலை,கொலைமுயற்சி, ஆள் கடத்தல் தொடர்பானவை. இவை தவிர, சாதிமாறி காதலிக்கும் தன் சாதிப் பெண்களை மிரட்டி, கட்டப் பஞ்சாயத்து செய்து பிரிப்பதையே முழுநேர வேலையாகக் கொண்டிருந்தார் என்பது எல்லோரும் அறிந்த விஷயமாகக் கூறப்படுகிறது. 
கோகுல்ராஜ் தலை துண்டித்துப் படுகொலை செய்யப்பட்டதும் கூட இந்த அடிப்படையில்தான்.கோகுல்ராஜ் பிணமாக மீட்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில், யுவராஜை போலீசார் கைது செய்திருக்க முடியும். கொலைக்கு முன்னதாக கோகுல் ராஜை மிரட்டிப் பெற்ற வாக்குமூலத்தின் வாட்ஸ் அப்பகிர்வு;
திருச்செங்கோடு கோவிலின் சிசிடிவி கேமிராபதிவு; 24-ஆம் தேதி கோகுல்ராஜின் தோழி சுவாதி திருச்செங்கோடு காவல்நிலையத்தில் யுவராஜ் மீது வெளிப்படையாகவே அளித்த புகார்- என அத்த னையும் கையில் இருக்கிறது. 
ஆனால், கோகுல்ராஜ் மரணத்தை தற்கொலை என்று சொல்லி, பின்னர் நீதிமன்றம் உத்தரவிட்டு நடந்த பிரேதப் பரிசோதனைக்குப் பின், அது கொலைஎன்ற முடிவு வரும் வரை, போலீசார் காலங்கடத்தி னார்கள். அங்கு நடந்த தவறு, தற்போது யுவராஜ் சரணடையும் வரை தொடர்ந்துள்ளது.என் வீட்டில் கைப்பற்றிய துணிமணிகளை, கா வல்நிலையத்தில் வைத்து விரித்துப் பார்த்தது வரை, நடக்கும் எல்லா விஷயங்களும் எனக்குத் தெரியும் என்று யுவராஜ் தனது பேட்டியில் கூறுகிறார். 
காவல்துறையில் அவரது ஆட்கள் இருக்கிறார்கள் என்று தானே இதன் பொருள்.
சரணடையும் தேதி, நேரம், இடத்தைக்குறித்துவிட்டு, ‘சொந்தங் கள் அத்தனைபேரும்வந்துசேருங் கள்’ என்று ஒரு மாநாட்டிற்கு வரச்சொல்வது போல யுவராஜ் அழைப்புவிடுகிறார். 
அப்போதும் கூட தேமே என்று காவல்துறை இருக்கிறது.நான்குபேர் கூடினாலே 144 தடைஉத்தரவு போடும் தமிழக காவல்துறை, யுவராஜ்சொல்லி வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை, எந்த தடையுமின்றி கூடுவதற்கு அனுமதிக்கிறது. 
அவர்சரணடையும் நாளில்கூட 16 சோதனைச் சாவடிகள்அமைத்ததாக கூறப்பட்டாலும் சிபிசிஐடி அலுவலகத்திற்கு சில நூறுமீட்டர் தூரத்திற்கு முன்னதாகக் கூட யுவராஜைப் பிடிக்க முடியவில்லை. மறுபுறத்தில், சிபிசிஐடி அலுவலகத்திற்குள் யுவராஜை தரையில் அமர வைத்து விசாரிப்பது போல, அவரது கூட் டாளிகள் புகைப்படம் வெளியிடுகிறார்கள்.
கோகுல்ராஜ், விஷ்ணுபிரியா வழக்குகளில் சி.பி.சி.ஐ.டி. விசாரணையே போதுமானது; சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று சட்டமன்றத்தில் ஜெயலலிதா  விட்டுக் கொடுக்காமல் பேசினார். 
நடந்த சம்பவங்களைப் பார்த்தால், காவல்துறையின் செயல்பாடு, ஜெ .. சொன்ன வார்த்தைகளுக்கு நம்பிக்கை அளிப்பது போல இல்லை. 
ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ள ஒரு நபர், ‘ஹீரோ’ போலவலம் வருவதற்கு, தமிழ்நாடு காவல்துறை உதவி செய்கிறது.
இதுதான் இன்றைய தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகம்.அல்லது ஜெயலலிதா ஆட்சியில் தமிழக காவல்துறை மொட்டை போடுவதற்கும்,உண்ணா விரதம் இருப்பதற்கும்,கருப்பு கொடி குத்திக்கொள்வதற்கும் மட்டும்தான் இருக்கிறது.அதனுடைய மற்றொரு வேலை ஜெயலலிதாவை எதிர்ப்பவர்களை ,போராடுபவர்களை அடித்து துவைப்பது,பொய் வழக்குகளை போடுவது ஆகியவை  மட்டும்தான்.
இதில் கிரிமினலா ஹீரோவா என்று கேட்டது யுவராஜை அல்ல .
அவர் கருப்பு பனியன் சட்டையும்,லூங்கியும் கட்டி வந்ததை மாறு வேடத்தில் வந்ததால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று சொல்லும் தமிழகக் காவல்துறையைத்தான்.!
ஒரு படத்தில் தனது வழக்கமான தாடி,பாட்டுக்கு மொழி பேச்சு எதையும் விட்டுக்கொடுக்காமல் பேன்ட் போட்டிருந்தால் தம்பி,வேட்டி கட்டியிருந்தால் அண்ணன் என்று பயங்கர வித்தியாசத்தில்  ராஜேந்தர் நடித்த நடிப்பு தான் நினைவுக்கு வருகிறது.

=======================================================================================
இன்று,
அக்டோபர்-13.
  • சர்வதேச இயற்கை பேரிடர் தினம்
  • தாய்லாந்து தேசிய காவல்துறை தினம்
  • சர்வதேச நேரம் கணக்கிடும் இடமாக கிறீனிச் தேர்வு செய்யப்பட்டது(1884)
  • வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் வாஷிங்டன் டிசியில் இடப்பட்டது(1792)
  • துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் இருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது(1923)


=======================================================================================
அன்னாசிப்பழம் 

அன்னாசிப்பழத்தில் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. விட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ளன. 
இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச் சத்துக்களைக் கொண்ட அன்னாச்சிப் பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு, பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.
தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்து. நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு, சிறு துண்டுகளாக செய்து வெயிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு, தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன், ஒரு டம்ளர் பாலில், ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்க செல்லும் போது, ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. 
ஓர் அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து, அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
இரவில் அதை அப்படியே வைத்திருந்து, மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். 
இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தொப்பை கரைய ஆரம்பிக்கும். 
அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. 
அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம். 
புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு, உடலில் வீக்கம் எதிர்ப்படாது.