இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

புதன், 13 ஜனவரி, 2016

ஏறு தழுவல் நடத்தலாமே?

பெத்தநாயக்கன் பாளையம் நடுகல் தமிழ் நாட்டின் தமிழர்  திருநாள் பொங்கல் முன்னிட்டு "ஜல்லிக்கட்டு"தடையை நீக்கி நடத்த வேண்டும்  என்பது மதுரை மாவட்ட மக்கள் வெகுநாள் கோரிக்கை .

அதனை வாங்கித்தருவதாக அலங்கார நல்லூர் நமக்கு நாமே பயணம் சென்ற மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சியினர் குரல் கொடுத்தனர்.
தடையை நீக்கி அனுமதி வழங்க வேண்டி உண்ணாவிரதம் இருக்கவும் ஸ்டாலின் எற்பாடு செய்தார்.
ஆனால் பாஜக தமிழக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்தான் எப்படியும் மூடியிடம் சொல்லி அனுமதி வாங்கித்தருவதாக சொல்ல அந்த உணாவிரதம் ஒத்திவைக்கப்பட்டது.

சொன்னபடியே மத்திய அரசு ஜல்லிக்  கட்டுக்கு அனுமதி ஆணை கொடுத்தது.

உடனே பாஜகவினர தங்களாலும் ,அதிமுகவினர் முதல்வர்  ஜெயலலிதா எழுதிய கடித்தாலும் தான் ஜல்லிக்கட்டு வந்தது என்று மதுரை மாவட்டம் முழுக்க தங்கள் வழமைப்படி பதாகைகள்,கட் அவுட்கள் வைத்து அமர்க்களப்படுத்தி விட்டனர்.
ஆனால் இன்று அந்த ஜெயலலிதா ,மோடி பதாகைகள்,கட் அவுட்கள் மக்களால் கிழித்து குப்பையில் வீசப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்றம் ஜல்லிக் கட்டுக்கு தடைவிதித்ததே அதற்கு காரணம்.

இப்போது நம் முன் உள்ளக் கேள்வி ஒரு இனத்தின் பாரம்பரிய வீர விளையாட்டை அரசும்,நீதிமன்றமும் சேர்ந்து கைவிடச்சொல்லி கட்டாயப்படுத்துவது சரியா?
ஜல்லிக்கட்டை எதிர்த்து அறிக்கை,பேசுபவர்கள் அனைவரும் தமிழகம் சாராத மற்றைய மாநில,மொழியினர்தான்.சர்க்கஸ் போல் தொடர்ந்து நடப்பதல்ல .ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமேனடப்பது.
நீலகிரி மலையில் உள்ள ஓவியம் 
இதற்கும் விலங்குகள் கொடுமை படுத்துவதற்கும் தொடர்பில்லை.

காரணம் இதற்கென்றே காளைகள் தனியாக வளர்க்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டின் போது காளைகளுக்கு காயம் உண்டாவதில்லை.அதன் கொம்புகளால் மனிதர்களுக்குத்தான் காயம்.அதை அவ்ர்கள் வீரத்தழும்பாக விருப்பத்துடன் ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஸ்பெயின்,பிரான்ஸ் போன்ற நாடுகளில் காளைகளை தெருக்களில் ஓடவிட்டு அடக்குகிறார்கள்.

இதனால் பொது மக்களுக்கு ஆபத்து எற்படுகிறது.அப்படியிருந்தும் அங்கு அதை அனுமதித்தே இருக்கிறார்கள்.

ஆனால் ஜல்லிக்கட்டை பார்ப்பவர்களுக்கு ஆபத்தில்லை.தனி மைதானத்தில்தான் நடக்கிறது.விருப்பட்டவர்கள் மட்டுமே காளையை அடக்க களம் இறங்குகிறார்கள்.அப்படிப்பட்ட
இதற்கு தடை எதற்கு?

முந்தைய தமிழகத்தில் காளையை அடக்குபவர்களுக்குத்தான் பெண் என்று திருமணங்கள் நடந்துள்ளது வரலாறு.
இன்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ஒட்டக பந்தயம் போன்றவை நடக்கத்தான் செய்கின்றன.அதை பாரம்பரிய விளையாட்டு என்று அனுமதித்துத்தான் வருகின்றனர்.

இந்திய விடுதலை நாள்,குடியரசு தினக் கொண்டாட்டங்களில் குதிரைகள் சாகசம் செய்ய வைக்கப்படுகின்றன.நாய்கள் தீ வளையத்திலும்,வெடிகுண்டு கண்டு பிடிப்புகள் போன்ற ஆபத்தான பணிகளை செய்ய வைக்கப்படுகின்றன.அப்போது இந்த  விலங்குகள் நலச்சட்டம் எங்கே போய் விடுகிறது?
மொத்தத்தில் இந்திய கூட்டாட்சியில் ஒரு குறிப்பிட்ட மாநில மக்களின் பாரம்பரிய,கலாச்சார விளையாட்டை தடை செய்யும் உரிமை மத்திய அரசுக்கும் அதற்கு துணை போகும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கும் உண்டா?

மோடியின் அரசு ஜல்லிக்கட்டு தடைக்கு சட்டத்திருத்தத்தின் மூலம் அனுமதி வழங்காமல் தடை கிடைக்கும் என்று தெரிந்தே ஒரு அரசாணை அனுமதி நாடகத்தை நடத்தியுள்ளது.
அதையும் ஜல்லிக்கட்டு நடப்பதற்கு முதல் நாள் வழங்கியிருந்தால் கூட தடை ஆணை வரும் முன் ஜல்லிக்கட்டு நடந்து முடிந்திருக்கும்.

தடை வாங்க அவகாசம் தந்து ஆணை வெளியிட்டதும்,அதற்கு தடை வாங்கியது மற்றொரு  மத்திய அரசு அமைப்பான விலங்குகள் நல வாரியம்தான் என்பதும் மூட்டி அரசின் இரட்டை வேடத்தை கலைத்து விட்டது,.

இப்போதும்  நம் தமிழக மக்களுக்கு,ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.

அதை சுட்டிக் காட்டியிருப்பவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.
ஜல்லிக்கட்டு என்ற பெயரை விடுத்து வேறு பெயரில் இதை நடத்தினால் நீதிமன்ற தடை ஒன்றும் செய்ய இயலாது ,என்பதுதான் அது.
  "'பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால்
  திருமாமெய் தீண்டலர் என்று கருமமா
  எல்லாரும் கேட்ப அறைந்தறைந்து எப்பொழுதும்
  சொல்லால் தரப்பட்டவள்.
   குடர்சொரியக் குத்திக் குலைபதன் தோற்றங்காண்…..
   சீறரு முன்பினோன் கணிச்சிபோல் கோடுசீஇ….
  கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்
  புல்லாளே ஆய மகள்."
                                                                                                              -முல்லைக்கலி பாடல்.
    உரிய கணவன் வீரம் மிக்கவனாக இருத்தல் வேண்டும்; இன்ன காளையைத் தழுவி அடக்கவல்ல வீரனே அவளை மணப்பதற்கு உரியவன் என்று பலரும் அறியத் தெரிவிப்பது வழக்கம். இவ்வாறே வேறு குடும்பத்துப் பெண்களுக்கும் திருமண ஏற்பாடாக ஏறுகள் குறிக்கப்படும். இந்த ஏறுகளைத் தழுவி அடக்குவதற்கு வீரர்கள் காத்திருப்பார்கள். இதற்கு ஒரு நாள் குறிக்கப்படும். அன்று அஞ்சாமல் களத்தில் புகுந்து ஏறுகளை எதிர்த்து, அவர்றின் கொம்புகளால் குத்துண்டும் புண்பட்டும் வெற்றி பெறும் வீரர்களை அந்தந்தப் பெண்கள் மணந்துகொள்வார்கள். 
   இவ்வாறு நிகழ்வதே ஏறு தழுவல் என்பது. 
   இன்ன ஏற்றை அடக்கித் தழுவும் வீரனுக்கே உரியவள் இப்பெண் என்று பலமுறை சொல்லிப் பலர் அறியச் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது.
   ஏறுகள் வீரர்களின்மேல் பாய்ந்து கூரிய கொம்புகளால் குடர் சரியக் குத்துவதும் உண்டு; அவற்றின் கொம்புகளை இதற்கென்றே சீவிக் கூர்மைப்படுத்துவதும்உண்டு.
   வீரர்களும் அவற்றின் கூரிய கொம்புகளுக்கு அஞ்சுவதில்லை, அவற்றால் குத்துண்டபோதும், உடலில் வடியும் இரத்ததாலேயே கைபிசைந்து மீண்டும் களத்துள் புகுந்து ஏறுகளை எதிர்ப்பார்கள்; அவற்றின் முதுகின்மேல் ஏறி உட்கார்ந்து, கடலில் படகுகளைச் செலுத்தும் பரதவர்போல் தோன்றுவார்கள். 
   இறுதியில் வெற்றி பெற்ற வீரர்களை  எல்லோரும் கூடி வாழ்த்துவர்; போற்றுவர். அவர்களை மணப்பதற்கு உரிய காதலியர் மகிழ்வர். 

ஜல்லிக்கட்டுக்கு முந்தைய பழந்தமிழ் பெயர் "ஏறு  தழுவல் "அதையே சொல்லி நாம் நடத்தலாமே?
===========================================================================================
இன்று,
ஜனவரி-13.
 • மிக்கி மவுஸ் கார்டூன் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத் தொடங்கியது(1930)
 • கானாவில் ராணுவ புரட்சி இடம்பெற்றது(1972)
 • அரிமா சங்கத்தை நிறுவிய மெல்வின் ஜோன்ஸ் பிறந்த தினம்(1879)
===========================================================================================