சுற்றுச்சூழல்வாதி சிவபெருமான்??
இந்திய அறிவியல் 103வது மாநாடு மைசூரு பல்கலைக்கழகத்தில் நடந்து முடிந்துள்ளது.
இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு கட்டுரையை கேட்டு பல விஞ்ஞானிகள் மயக்க நிலைக்குச் சென்றுள்ளனர்.
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பல்கலைக் கழக ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரான அகிலேஷ் கே. பாண்டே என்பவர்
‘சிவபெருமான்: உலகின் தலைசிறந்த சுற்றுச்சூழல்வாதி’ என்பது அந்த கட்டுரையின் தலைப்பு.இந்த தலைப்புக்கு அவர் கொடுத்துள்ள விளக்கம் என்னவென்றால், சிவபெருமான் கைலாச மலையில் இருந்து தனது சக்தியின் மூலம் நீரை சுத்திகரித்து மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும் அளித்து வருகிறார்.
சிவபெருமானுடைய தலையில் கங்கை இருப்பதால் அங்குதான் சுத்திகரிப்பு பணி நடக்கிறது என்று ஒரு மிகப் பெரிய அறிவியல் உண்மையை போட்டு உடைத்திருக்கிறார்.
இந்த மாநாட்டில் வெளிநாடுகளைச் சேர்ந்த 150 விஞ்ஞானிகளும், இந்தியாவைச் சேர்ந்த 15 ஆயிரம் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
நாம் அமர்த்திருப்பது அறிவியல் மாநாடா அல்லது புராண பிரசங்க கதாகாலட்சேபமா என்று அவர்கள் ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அந்த அறிவியல் கட்டுரையில் அடுத்த குண்டு வீசப்பட்டிருக்கிறது.
சிவபெருமானுடைய குடும்பம் பல்வேறு விலங்கினங்களுடன் நல்ல உறவை கையாண்டு வந்துள்ளது.
பல்லுயிர் பாதுகாப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டு பரசிவனுடைய குடும்பம்தான்.
ஏனென்றால் சிவபெருமான் காளையையும், அவருடைய மூத்த பிள்ளையான பிள்ளையார் எலியையும், இளைய பிள்ளையான முருகன் மயிலையும் வாகனங்களாக வைத்துள்ளனர்.
இதுதான் பல்லுயிர் பாதுகாப்பு என்று கட்டுரையில் கூறியிருக்கிறார் பாண்டே.
பாண்டே இன்னும் சிலவற்றையும் கூறியிருக்கலாம். பார்வதி தேவி சிங்கத்தையும், சிவனின் மைத்துனர் கிருஷ்ணன் கழுகையும், பரமசிவன் குடும்பத்தை சேர்ந்ததாக கூறப்படும் ஐயப்பன் புலியையும், பிரம்மா அன்னத்தையும், எமதர்மன் எருமை மாட்டையும் வாகனமாக கொண்டுள்ளனர்.
இவையெல்லாம் பல்லுயிர் பாதுகாப்பின் இலக்கணம் என்றும் கூறியிருக்கலாம்.
ஒருவேளை வந்திருந்த விஞ்ஞானிகளின் நலன்கருதி விட்டுவிட்டார் போலிருக்கிறது.பரமசிவன் தன்னுடைய கழுத்தில் பாம்பை மாலையாக போட்டுள்ளார்.
அதையும் சேர்த்து சொல்லியிருந்தால் பல்லுயிர் பெருக்கம் இன்னும் கொஞ்சம் பலமாக இருந்திருக்கும்.
பரமசிவனுடைய தலையில் கங்கை இருப்பது குறித்து பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. தன்னுடைய மனைவி பார்வதிக்கு தெரியாமல், இன்னொரு மனைவியான கங்கையை தலைமுடிக்குள் ஒளித்துவைத்திருப்பதாக ஒரு கதை.
பரமசிவன் படத்தை பார்க்கும்போது அவருடைய தலையில் ஒரு பெண் ஒளிந்திருப்பதும், அவருடைய வாயில் இருந்து நீர்வழிந்து கொண்டிருப்பதும் சித்தரிக்கப்படுகிறது.
மேலே இருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டிருப்பதை பக்கத்தில் அமர்ந்திருக்கும் பராசக்தியான பார்வதி தேவி அறிந்திருக்க மாட்டாரா?
புராணக் கதைகளில் உண்மைகளை தேட முடியாது.
ஒரு கதை என்கிற அளவில் படித்துவிட்டு போகலாம்.
ஆனால் அதுதான் அறிவியல் என்று சாதிக்கும்போது, பல்வேறு விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.இமயமலையில் கங்கை உற்பத்தியாகிறது என்பது உண்மை.
ஆனால் இதற்கும் சிவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.இயற்கையாக உற்பத்தியாகி வரும் கங்கையை மனிதர்கள் பலவகைகளில் அசுத்தப்படுத்துகிறார்கள்.
உலகின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிற நதிகளில் ஒன்று கங்கை. அந்த நதியை சுத்தப்படுத்துகிறோம் என்கிற பெயரில் பல நூறு கோடி ரூபாயை விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கங்கையை சுத்தப்படுத்துவது எப்படி என்று ஆய்வு செய்யாமல், இந்த கங்கையை பரமசிவன்தான் சுத்திகரித்து அனுப்புகிறார் என்று பேசத் துவங்கினால் அறிவியல் என்னவாகும்?
உலகில் உள்ள அரசியல் சாசனங்களிலேயே குடிமக்களிடையே அறிவியல் உணர்வு பரப்பப்பட வேண்டும் என்று கூறும் ஒரே அரசியல்சாசனம் நம்முடைய இந்திய அரசியல் சாசனம் மட்டும்தான்.
ஆனால், அறிவியல் உணர்வை பரப்புவதற்குப் பதிலாக புராண கதைகளுக்கு அறிவியல் சாயம் பூசினால் ஏதாவது உருப்படுமா?
கடந்த அறிவியல் மாநாடு மும்பையில் நடைபெற்ற போது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பங்கேற்று, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே மெகா சைஸ் விமானத்தை இந்தியர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்.
அதில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் பயணம் செய்ய முடியும். அது பல்வேறு கோள்களை தாண்டி பயணம் செய்யக்கூடிய ஆற்றல் படைத்தது என்று ஒரு போடுபோட்டார்.
ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடித்தாக படித்துவிட்டு வந்த விஞ்ஞானிகள் இதைக் கேட்டு, காய்ச்சலில் படுத்துவிட்டார்கள்.
இவர்களைச் சொல்லி குற்றம் இல்லை. நாட்டின் பிரதமரே இந்த வேலையைத்தான் செய்து வருகிறார். அறிவியல் மாநாட்டில் கடந்த ஆண்டு பங்கேற்ற பிரதமர் மோடி, பிளாஸ்டிக் சர்ஜரியின் உபயோகத்தை அன்றைக்கே கண்டறிந்தவர்கள் இந்துக்கள்.
அவ்வாறு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் உருவானவர்தான் பிள்ளையார் என்றும், குளோனிங் மூலம் உருவானவர்கள்தான் கவுரவர்கள் என்றும் கதையடித்துவிட்டுவந்தார்.இந்த கூத்துக்களையெல்லாம் படித்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியும், தமிழருமான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ,
இந்திய அறிவியல் மாநாட்டில் அறிவியல் ஆய்வு நடக்கவில்லை.
சர்க்கஸ்தான் நடக்கிறது.
ஒரேமுறைதான் இந்த மாநாட்டில் பங்கேற்றேன். இனி ஒருபோதும் அந்தப் பக்கம் தலைவைத்து படுக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.
மதவெறியர்கள் கையில் நாடு சிக்கினால் அனைத்துத் துறைகளும் நாசமாகும்.
அறிவியல் துறையும் இவர்கள் கையில் சிக்கியிருப்பதுதான் பரிதாபத்திலும் பரிதாபம்.
ராமர் குரங்குகள்,அணில்கள் உதவியுடன் இலங்கைக்கு பாலம் கட்டினார் ,விமானம் புரானகாலத்திலே போக்குவரத்தை துவக்கி விட்டது,தலையை பிள்ளையாருக்கு மாற்றி அப்போவே இந்தியாவில் உறுப்பு மாற்று சிகிச்சை கொண்டுவந்து விட்டார்கள் என்று ஆரம்பித்து சிவனில் வந்து நிற்கிறது.இனி முருகன்,பெருமாள்,ஒவ்வொருவரையும வின்ஜாநியாக்கும் முயற்சியில் பாஜக இறங்கும்.
நீங்கள் ஈன் சும்மா இருக்கிறீர்கள் ஏசு ,அல்லா கண்டு பிடித்தவைகளை சொல்லலாமே?
-மதுக்கூர் இராமலிங்கம்
இன்று,
ஜனவரி-09.
- ஐநா தலைமையகம் நியூயார்க்கில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது(1951)
- நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது(1990)
- புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது(1921)
- கனெக்டிகட், அமெரிக்காவின் 5வது மாநிலமாக இணைந்தது(1788)