"ஜல்லிக்கட்டு" .தடையின் மறுபக்கம்.?
பன்னாட்டு நிறுவனங்களின் சதியே ஜல்லிக்கட்டு நடைபெறாமல் இருப்பதற்கு காரணம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இது குறித்து அவர்கள் வெளிப்படுத்தும் உண்மைகள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன் நம் நிலத்தை சுரண்ட ரகசியமாக அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.
ஜல்லிக்கட்டு
கட்டிப்போடப்பட்ட நிலையில் காளைகள் வளர்ந்தால் அதை வளர்ப்பவருக்கும் சரி, இனப்பெருக்கத்துக்காக அதை கொண்டு செல்பவர்களுக்கும் சரி, ஒரு பயனும் இல்லை. மணலில் புரண்டால்தான் அதன் உடல் வலுவாகும். வேகமாக ஓடினால்தான் கால்கள் திடமாகும். இவை எல்லாம் சரிவர நடந்தால்தான் அதன் வித்து வீரியமிக்கதாக மாறி, கன்றுகள் சக்தியுடன் பிறக்கும்.
எனவேதான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காளை மாடுகளை நம்மக்கள்
அந்தந்த நிலப்பரப்புக்கு ஏற்றபடி மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு என பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுத்தி வருகின்றனர். மொகஞ்சதாரோ - திராவிட நாகரீகங்களில் காளைகளுக்கான முக்கியத்துவமும், காளை மாட்டுக்கான விளையாட்டுகளின் அவசியமும் முக்கிய பங்கு வகித்ததை நாம் புறக்கணிக்கக் கூடாது. சங்க இலக்கியங்களில் ‘ஏறு தழுவுதல்’ குறித்து பல இடங்களில் பதிவாகி இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவை எல்லாமே மாடுகளின் அவசியத்தை உணர்த்துபவை அல்ல. ஆரோக்கியமான மனிதனின் வளர்ச்சியை குறிப்பவை.
கற்காலத்திலிருந்து
பரிணாம வளர்ச்சி வழியே மனிதனாக மாறியவன் முதலில் வேட்டையாடுவதில்தான் ஈடுபட்டான். அதன் மூலமாகத்தான் தனக்கான உணவை சேகரித்தான். ஆனால், எப்போது மாடுகளை அடக்கி உழவுக்கு பயன்படுத்த ஆரம்பித்தானோ, அப்போதுதான் முதன் முதலில் அவன் நாகரீக வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைத்தான். ஒரு பகுதி மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டு உணவை உற்பத்தி செய்தபோது, மறு பகுதி மக்கள் கைவினை உள்ளிட்ட பிற தொழில்களில் ஈடுபட ஆரம்பித்தனர்.
இதன் வழியாக ஒருவரது தேவையை மற்றவர் பூர்த்தி செய்தனர். இப்படி பரஸ்பரம் கைகோர்த்ததாலேயே வளர்ச்சி பெருகியது. எனவேதான் விவசாயிகள் தங்கள் உயிரைப் போல் மாடுகளை கருதுகின்றனர். தென்னை, வாழையைப் போல் மாடுகளும் இருக்கும்போதும், இறந்தபிறகும் செல்வத்தை தருபவை. அதன் ஒவ்வொரு உறுப்பும், கழிவும் மனிதனுக்கு பயன்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.
ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்கள்
ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்களை இருவகையாக பிரிக்கலாம். ஒருவர் நகரத்தில் வாழும் அப்பாவிகள். இவர்களுக்கு சொந்த வீட்டுக்கான நிலப்பத்திரம் என்பது தவிர நிலத்தின் பயன்பாடு குறித்து வேறு எதுவும் தெரியாது. பணத்தை கொடுத்து அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்களை வாங்கலாம் என்பதைத் தாண்டி விவசாயம் பற்றிய எந்த அறிவும் இவர்களுக்கு இல்லை.
இந்த அப்பாவிகளைத்தான் ஜல்லிக்கட்டை எதிர்க்கும் மற்றொரு பிரிவினரான பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. ‘உயிர் வதை’ என்ற சென்டிமெண்ட்டான விஷயத்தை ஜல்லிக்கட்டுக்குள் புகுத்தி, மாடுகள் துன்புறுத்தப்படுவதாக ஒரு பிம்பத்தை நகரத்தில் வாழும் நடுத்தர மக்களிடம் ஏற்படுத்துகின்றன. கருத்தளவில் தங்களுக்கு ஆதரவாக திருப்புகின்றன. இதன் வழியாக தங்கள் சதியை மறைக்கின்றன.
பன்னாட்டு நிறுவனங்களின் சதி
எப்படி பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று திகழ்கிறோமோ, அப்படி மாட்டிறைச்சியிலும் இந்தியாவே முன்னணியில் இருக்கிறது. சென்ற ஆண்டு மாட்டிறைச்சி ஏற்றுமதியில் பிரேசிலை பின்னுக்கு தள்ளிவிட்டு கிட்டத்தட்ட 2.4 மில்லியன் அளவுக்கு ஏற்றுமதி செய்து நாம் முதலிடம் பிடித்திருக்கிறோம். இந்த புள்ளிவிபரங்களை பன்னாட்டு நிறுவனங்களால் ஜீரணிக்க முடியவில்லை.
பாரம்பரிய நெல் விதைகளை அழித்து தங்கள் விதைகளை புகுத்தியது போல், கனிம வளங்களை சூறையாடுவது போல், பூச்சிக்கொல்லி உரங்கள் வழியே நிலத்தின் தன்மையை நச்சாக்கியது போல், பால் வணிகத்திலும் மாட்டிறைச்சி வியாபாரத்திலும் தாங்களே முன்னிலை வகிக்க வேண்டும். தங்களை அண்டிப் பிழைப்பவர்களாக எல்லா வகையிலும் இந்தியர்களை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்காகவே ஜல்லிக்கட்டை தடை செய்து, காளை மாடுகளின் எண்ணிக்கையை குறைத்து, நாட்டின மாடுகளே இல்லாதபடி செய்து, தங்களது ஜெர்சி மற்றும் கலப்பின மாடுகளை புழக்கத்துக்கு விட முற்படுகிறார்கள்.
இந்தியாவில் மட்டும் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பால் மற்றும் அது சார்ந்த வியாபாரம் ஆண்டொன்றுக்கு நடைபெறுகிறது.
அதாவது இறக்குமதியை நம்பாமல் தன்னிறைவு பெற்று விளங்குகிறது. இதில் பால் வணிகத்தின் தேவையை 85% அதிகமாக இந்திய கிராமங்களில் இருக்கும் விவசாயிகளே பூர்த்தி செய்கின்றனர். இதற்கு ‘அமுல்’ போன்ற கூட்டுறவு சங்கங்களின் அபார வளர்ச்சியும் வெற்றியுமே காரணம்.
இதனால் இந்திய பால் சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்களால் நுழைய முடியவில்லை. இதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் தொடர்பிருக்கிறது என்பதுதான் முக்கியமான விஷயம். ஏனெனில் சர்வதேச பால் நிறுவனங்கள்தான் ஜெர்சி இன மாடுகளையும் கலப்பின பசுக்களையும் தமிழகம் உள்ளிட்ட பாரம்பரிய விவசாய மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முற்படுகின்றன.
இப்போது A1, A2 என இரண்டு வகையான மாடுகள் இருக்கின்றன.
இதில், A1 என்பது ஜெர்சி மற்றும் கலப்பின மாடுகளையும், A2 என்பது நாட்டு மாடுகளையும் குறிக்கும். இதில் நாட்டு மாடுகளின் சாணத்திலும், சிறுநீரிலும்தான் கிருமி நாசினி உள்ளிட்ட நுண்ணுயிர்கள் அதிகம் இருக்கின்றன.
நமது நாட்டு தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப வளர்ந்திருப்பவை இந்த மாடுகள்தான். இவற்றுக்கான உணவுகள் நம் நிலங்களில் விளையும் புற்களும் வைக்கோலும்தான். ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் ஜெர்சி மாடுகள் அப்படியானவை அல்ல. அவை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மாதிரியான குளிர்பிரதேசங்களில் வளர்ந்தவை; வளருபவை.
எனவே நம் நாட்டு தட்பவெப்பம் அதற்கு ஒப்புக்கொள்ளாது. இந்த மாடுகளை வளர்க்க தொழுவத்தில் குளிர்சாதனம் பொருத்த வேண்டும். போலவே நம் தீவனங்களை அவை சாப்பிடாது. இவற்றுக்கு என்றே இருக்கும் பிரத்யேக உணவுகளை அதே பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்க வேண்டும். அதேபோல் ஜெர்சி மாடுகள் நோய்வாய் பட்டாலும் அவற்றுக்கான மருந்துகளை வெளிநாட்டில் இருந்துதான் வரவழைக்க வேண்டும். சுருக்கமாக சொல்வதென்றால் செல்வந்தர் மற்றும் உயர் நடுத்தரவர்க்கத்தினர் எப்படி நாய்களை வளர்க்கிறார்களோ, அப்படி இந்த ஜெர்சி மாடுகளை வளர்க்க வேண்டும்.
நாட்டு மாடுகளை முற்றிலும் ஒழித்துவிட்டால், சொந்தமாக மாடுகளை வைத்து சிறிய அளவில் பால் வணிகம் செய்து வருபவர் நடுத்தெருவில் நிற்பார். அவரால் ஜெர்சி மாடுகளை வாங்கி வளர்க்க முடியாது. உயிர் வாழ்வதற்காக வேறு வழியின்றி பன்னாட்டு நிறுவனங்கள் அமைக்கும் பண்ணைகளில் கூலித் தொழிலாளியாக சேருவார். தன் சுயத்தையும் சுதந்திரத்தையும் பறிகொடுத்துவிட்டு எல்லாவற்றுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கையேந்தும் அவலத்துக்கு ஆளாவார்.
இப்படியொரு நிலை ஏற்பட வேண்டுமென்றுதான் ஜல்லிக்கட்டை தடை செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் முற்படுகின்றன.
‘பீட்டா’வின் மறுபக்கம்
ஜல்லிக்கட்டை எதிர்த்து தடை வாங்கியிருக்கும் ‘பீட்டா’ (PETA - People for the Ethical Treatment for Animals) அமைப்பு, இந்திய நிறுவனம் அல்ல. 1980ல் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட அமைப்பு இது. அனாதையாக சாலையில் அலையும் விலங்குகளை காப்பாற்றி அவற்றுக்கான சரணாலயமாக, தாங்கள் செயல்படுவதாக இந்த அமைப்பு அறிவித்துக் கொள்கிறது. ஆனால், ‘கருணைக் கொலை’ என்ற பெயரில் பாரம்பரியமிக்க விலங்கினங்களை பன்னாட்டு நிறுவனங்களின் வசதிக்காக இந்த அமைப்பு அழித்து வருவதாக தகுந்த ஆதாரங்களுடன் ‘ஹாஃபிங்டன் போஸ்ட’ என்ற பத்திரிகையில் நேதன் இனொக்ராட் என்னும் சமூக ஆர்வலர் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். இவர்களை அம்பலப்படுத்தியிருக்கிறார். உண்மையில் அமெரிக்காவில்தான் விலங்குகள் அனைத்தும் குறிப்பிட்ட ஓரிடத்தில் கொத்தடிமைகள் போல் வளர்க்கப்படுகின்றன.
இங்கு துரிதமாக அவை வளரவும், கொழுப்புகள் சேரவும், எடை அதிகரிக்கவும் அவற்றுக்கு ஹார்மோன் ஊசிகளை செலுத்துகிறார்கள். சங்கிலித் தொடராக இயங்கும் உணவு நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை நாள்தோறும் சப்ளை செய்வதற்காகவே இந்த பண்ணை நிர்வாகிகள் கொடூரமாக விலங்குகளை கொலை செய்கிறார்கள். இந்த அவலத்தை தட்டிக் கேட்காத இந்த அமெரிக்க அமைப்பு, தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்க ஆர்வம் காட்டுகிறது. அதாவது, அமெரிக்க பொருளாதாரம் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. ஆனால், இந்தியாவின் பால் வணிகம் முற்றிலும் முடங்க வேண்டும் என திட்டமிட்டு காய்களை நகர்த்துகிறது.
குறிப்பிட்ட சமூகத்தின் வீரத்தை பறை சாற்றுவதற்காகவே ஜல்லிக்கட்டு நடப்பதாக ஒரு குற்றச்சாட்டை உலவ விட்டிருக்கிறார்கள். ஒருசில இடங்களில் இதுபோன்று இருப்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரம் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்பாக நடைபெறும் பூஜையை ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் செய்கிறார்கள் என்பதையும், இந்த பூசாரியை அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் வணங்கிவிட்டுதான் ஜல்லிக்கட்டை தொடங்குகிறார்கள் என்பதையும் மறக்கக் கூடாது.
சாதிக் குற்றச்சாட்டை சொல்பவர்கள் ஜல்லிக்கட்டை ஜனநாயகப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்று போராட வேண்டுமேதவிர ஒட்டுமொத்தமாக அதை தடை செய்யவேண்டும் என்று குரல் கொடுக்கக் கூடாது. இப்படி செய்வது நம்முடைய வளத்தை நாமே அழிப்பதற்கு சமம். நிலத்தையும், கனிமத்தையும், பாரம்பரிய நெல் விதைகளையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் பறிகொடுத்தது போல் பால் வணிகத்தையும் தாரை வார்க்கப் போகிறோமா?
ஜல்லிக்கட்டும் இனப்பெருக்கமும்
ஜல்லிக்கட்டு என்பது மனிதர்கள் தங்கள் வீரத்தை வெளிக்காட்டுவதற்காக நடத்தப்படும் விளையாட்டு மட்டுமல்ல. காளைகளின் ஓட்டத் திறனையும், உடல் வலிவையும் வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் அது திகழ்கிறது. எந்த அளவுக்கு தனது காளையை ஆரோக்கியமாக அதன் உரிமையாளர் வளர்த்திருக்கிறார் என்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் செயலாகவும் வெளிப்படுகிறது.
ஏனெனில் ஜல்லிக்கட்டு நடக்கும் காலம் தவிர்த்து மற்ற நேரங்களில் இனப்பெருக்கத்துக்காகவே அந்தக் காளைகள் பயன்படுகின்றன. காளைகளை அடக்குபவர்கள் மட்டுமல்ல பசுக்களை வைத்திருக்கும் விவசாயியும் ஜல்லிக்கட்டுக்கு செல்கிறார். எந்த காளையுடன் தனது பசு சேர வேண்டும் என்று தீர்மானிக்கிறார். அதாவது, மாடுகளுக்கான சுயம்வர நிகழ்ச்சியே ஜல்லிக்கட்டு.
நாட்டின மாடுகளின் பெருமைகள்
பூச்சிக் கொல்லி உரங்களை பயன்படுத்துவதை பெரும்பாலான விவசாயிகள் இப்போது விரும்புவதில்லை. காரணம் அவற்றில் இருக்கும் நச்சுத்தன்மை நில வளத்தையும் சூறையாடுகிறது. நோய்தன்மை கொண்ட பயிர்களையும் விளைவிக்கிறது.
எனவே இயற்கை விவசாயத்துக்கு பலரும் திரும்ப ஆரம்பித்திருக்கின்றனர். இந்த இயற்கை விவசாயத்தில் முக்கிய உரமாக திகழ்வது, ‘பஞ்சகவ்யம்’. இதற்கு நாட்டின மாடுகளின் கழிவுகள்தான் பெருமளவு மூலதனம். கிருமி நாசினிகளையும் நோய் எதிர்ப்பு சக்திகளும் இவைகளிடமே அதிகம்.
இதனால்தான் ஜல்லிக்கட்டுக்கு பயன்படும் காளைகள் வழியாக இனப்பெருக்கம் செய்வதை விவசாயிகள் காலம்தோறும் கடைப்பிடித்து வருகின்றனர். அதன் காரணமாகவே நம் பசுக்கள் சுரக்கும் பாலில் சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. இதுபோன்ற இயற்கை சத்துக்கள் ஜெர்சி மற்றும் கலப்பின மாடுகள் மூலம் பெற முடியாது. பெயருக்குத்தான் அவை பாலே தவிர அவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த அளவே உள்ளன. இப்படிப்பட்ட மாட்டில் இருந்து கிடைக்கும் பாலை குடிக்கும் குழந்தைகள், சவலைப் பிள்ளைகளாகவும், ஆரோக்கிய குறைப்பாட்டுடனும்தான் வளர்வார்கள். எனவே வருங்கால தலைமுறை ஆரோக்கியமாகவும் திடமாகவும் இருப்பதற்காக ஜல்லிக்கட்டை ஆதரித்துத்தான் ஆக வேண்டும்.
இந்தியாவில் 35 வரையறுக்கப்பட்ட நாட்டின மாடுகள் உள்ளன. தமிழக ஜல்லிக்கட்டில் உம்பளாச்சேரி, காங்கேயம், புலிக்குளம், பர்கூர் ஆகிய காளைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஐந்தும் பழம்பெருமை வாய்ந்தவை. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நம் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி அடைந்தவை.
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கே உரித்தான சிறிய, திடமான உடலமைப்பு. குட்டையான, வலிமையான திமில். கூர்மையான கொம்புகள் ஆகியவை புலிக்குளம் காளைகளின் தனிச் சிறப்பு. எனவேதான் இதை மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்காகவே புலிக்குளம் காளைகளை வளர்க்கின்றனர்.
ஆனால் ஜல்லிக்கட்டை தடை செய்யும் முயற்சியின் பின் உள்ள பன்னாட்டு,பார்ப்பன அரசியலை புரிந்து கொண்டதும் இவர்கள் அரசியல் நோக்கம் முறியடிக்கப்பட கண்டிப்பாக ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டாகி விட்டது.
அது அரசியல்,சாதி,மதம் கடந்து நாம் தமிழன்,நம்மை மற்றொருவன் தனது லாப வேட்டை அரசியலுக்கு பயன் படுத்தி நமது பாரம்பரிய விளையாட்டை முடக்குவதுடன் நம் வாழ்வாதாரத்தையும் சிதைக்க விடலாமா?
=========================================================================
============================
கணேஷ் சிவா
-------------------
ஆரிய கூட்டத்தால் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டு என மாற்றிவிட்ட நிலையில் உண்மையை
உரக்க சொல்ல வேண்டும் என்ற நோக்கில் இந்த பதிவு.
~~~~~~~~~~~~
உரக்க சொல்ல வேண்டும் என்ற நோக்கில் இந்த பதிவு.
~~~~~~~~~~~~
நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு...
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு! -#புரட்சிக்_கவிஞர் பாரதிதாசன்!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு...
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு! -#புரட்சிக்_கவிஞர் பாரதிதாசன்!
தமிழன் வாழ்வில் "தை" முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக கொள்ளப் படுகிறது. இன்றளவும் கிராமப்புறங்களில் எந்த ஒரு நிகழ்வையும் "தை"யை ஒட்டியே பேசப்படுகிறது. "தை பிறந்தால் வழி பிறக்கும்" எனும் முதுமொழியும் இதை பறைசாற்றும்.
சித்திரை மாற்றம் எப்படி ??
குப்தர் வம்சத்தில் வந்த இரண்டாம் சந்திர குப்தன் தான் தனது பெயரை விக்கிரமாதித்தன் என்று மாற்றிக் கொண்டு - தனது பெயரால் விக்கிரம சகம் என்ற ஆண்டு முறையை உருவாக்கிக் கொண்டான். வானவியலில் - ஜாதகம், சோதிடத்தைப் புகுத்தும் முயற்சிகள் அவனது காலத்தில் மேற்கொள்ளப் பட்டன.
அப்படி விக்கிரமாதித்தன் உருவாக்கிய விக்கிரம சகம் எனும் ஆண்டு முறையில் சித்திரை முதல் நாளே ஆண்டின் முதல் நாளாக்கப்பட்டது. விக்கிரம சகம் 60 ஆண்டுகளை வரையறுத்தது. "பிரபவ" ஆண்டில் தொடங்கி "அட்சய" ஆண்டில் முடியும். இவைகளில் ஒரு பெயர்கூட தமிழில் இல்லை. 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர்கள்தான்!
"கிருஷ்ணனுக்கும் நாரதருக்கும் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள் தான் 60 ஆண்டுகளின் பெயர்கள்" என்று அவர்கள் கூறும் கூற்றை எந்த மானமுள்ள தமிழனும் ஏற்றுகொள்ள முடியாது.
சான்றோர்களின் முயற்சி:-
1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் ஐந்நூறுக்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் கூடி திருவள்ளுவர் பெயரில் தொடர் தமிழ் ஆண்டு பின்பற்றுவது என்றும், தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்றும் முடிவு செய்தார்கள். திரு.வி.க, கா.சு.பிள்ளை, சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம், மற்றும் பல பேரறிஞர்கள் கலந்து கொண்டனர்.
1939 ஆம் ஆண்டு திருச்சியில் அகில இந்திய தமிழர் மாநாடு சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில் தந்தை பெரியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், திரு.வி.க மறைமலையடிகளார் உமாமகேசுவரனார், கா.சுப்பிரமணியம், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், எனப் பலரும் பங்கேற்றனர். தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் அந்த மாநாட்டிலும் தீர்மானங்கள் முன் மொழியப்பட்டன.
திராவிடர் கழகமும் பல்வேறு அமைப்புகளும் தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டின் முதல் நாளாய் அறிவிக்க வேண்டி தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வந்ததன் பேரில் அய்ந்தாம் முறையாக தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழர்களின் கோரிக்கையை ஏற்று "தை" முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கமாக அறிவித்தார்.
தேனில் விழுந்த பலாச்சுலை போல் "தமிழர் திருநாள் பொங்கல்" எத்திக்கும் தித்தித்திட தமிழர் வாழ்வில் தன்னிகரில்லா இடம்பெற்றது.
தமிழன் வாழ்வில் மீட்சியா? கலாச்சாரப் புரட்சியா? அடுக்குமா அக்கிரஹார கும்பலுக்கு? பார்ப்பன ஏடுகள் ஒன்று கூடி ஒப்பாரிவைத்து ஓலமிட்டன!
ஆரியம் ஆட்சியைப் பிடித்தது ! மீண்டும் அரியனையில் சித்திரை !
ஆள்வோர்க்குத் தமிழர் விடும் அறிக்கை இது!
தமிழ்முரசு கொட்டினோம் இணங்கா விட்டால் சடசடெனச் சரிந்துபடும் ஆட்சிக் கோட்டை!
எனும் புரட்சிக்கவிஞரின் வரிகளை நினைவு கொள்வோம்!
எனும் புரட்சிக்கவிஞரின் வரிகளை நினைவு கொள்வோம்!
ஆரியம் அழியும்!
தமிழர் வாழ்வும் மானமும் வீறுகொண்டெழும்!
என ஓங்காரக்குரல் எழுப்பி வீடுதோறும் பொங்கிடுவோம் இனஉணர்வுப் பொங்கல்.
தமிழர் வாழ்வும் மானமும் வீறுகொண்டெழும்!
என ஓங்காரக்குரல் எழுப்பி வீடுதோறும் பொங்கிடுவோம் இனஉணர்வுப் பொங்கல்.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.