வியாழன், 14 ஜனவரி, 2016

அறிவியலுக்கு சங்கு ஊதும் மோடி அரசாங்கம் !

இந்திய அறிவியல்103ஆவது மாநாடு 2016, ஜனவரி 3 முதல் 7 வரை மைசூருவில் நடந்து முடிந்தது. அறிவியல் அடிப்படையிலான சர்ச்சைகளும், கலந்துரையாடலும் அங்கே நடந்தன. 
அதோடு அஞ்ஞானத்தை விஞ்ஞானமாக காட்டும் முயற்சிக்கு எதிரான போராட்டமும் நடந்தது.
சர்.சி.வி.ராமனையும், கணித மேதை ராமானுஜத்தையும் உருவாக்கிய இந்திய பாரம்பரியத்திற்கும் பிரதமர் மோடியின் அரசியலதிகார கதகதப்பில் வளரும் இந்துத்வா மூடத்தனத்திற்கும் உள்ள வேறுபாட்டை மக்கள் அறிய இந்த போராட்டம் உதவியது. 
சொந்த வாழ்க்கையில் சைவ, வைணவ சம்பிரதாயங்களை பின்பற்றிய சர்.சி.வி ராமனோ, கணித மேதை ராமானுஜமோ விஞ்ஞானத்தையும் ஆன்மீகத்தையும் குழப்பியதே இல்லை. நம்மை விட நமது முன்னோர்கள் தொழில் நுட்ப அறிவியலில் சிறந்து விளங்கினார்கள் என்று கருதி அதை தேடி தங்களது நேரத்தை வீணடித்ததில்லை. வேதங்களையோ புராணங்களையோ இன்றைக்கும் பயன்படும் அறிவியல் பொக்கிஷம் என்று எந்த இடத்திலும் கூறியதில்லை. 
ஆதிகாலத்தில் திரண்ட அறிவுச்செல்வத்தை அவர்கள் அறிவியல் அடிப்படையில் அலசி மேலும் வளர்த்தார்கள்.
ஹிட்லர் காலத்து ஜெர்மனி போல் அல்லாமல் அஞ்ஞானத்தை விஞ்ஞானமாக காட்டும் மோடியிசத்தை எதிர்த்துப் போராட வல்ல விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் இங்கே உண்டு என்பதை இந்த மாநாடு காட்டி விட்டது. 
ஆனால், அறிவியல் கண்ணோட்டத்திற்காக போராடும் அவர்களுக்கு மக்களின் அரசியல் ஆதரவு கிடைக்காமல் போனால், அதாவது அவர்கள் இந்தப் போராட்டத்தில் தோற்றால் வறுமையும் கொள்ளை நோய்களும் நம்மை விட்டு விலகும் காலம் தள்ளிப்போகும்.பிரிட்டன் நாட்டு உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானக் கழகத்தின் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, நோபல் பரிசு பெற்ற தமிழ் மண்ணில் பிறந்த விஞ்ஞானி வெங்கி என்ற வெ.ராமகிருஷ்ணன் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். இந்தக் கூட்டம் அறிவைத் தேடுவோர் உவப்ப தலைக்கூடி கலந்துரையாடும் இடமாக இல்லை, இது ஒரு சர்க்கஸ் என்று கண்டிக்கவும் அவர் தயங்கவில்லை.
ஏன் எனில் 2015ல் நடந்த 102வது மாநாட்டில் நடந்த கூத்தே அவரை உலுக்கிவிட்டது. 
சென்ற ஆண்டு மும்பையில் நடந்த 102வது அறிவியல் மாநாட்டில் ஆதிகால பரத்வாச முனிவர் ஏவியேஷன் டெக்னாலஜி தெரிந்தவர். 
ஆதிகாலத்தில் நமது முன்னோர்கள் வைரஸ் தாக்க இயலாத உடை அணிந்து கிரக சஞ்சாரம் செய்தார்கள்.
 அதற்கான கருவிகள் சமைக்கத் தெரிந்திருந்தார்கள். 
எருமைப் பாலை உணவாக, எடுத்துச் சென்றார்கள் என்று நிரூபிக்க சமஸ்கிருத ஸ்லோகங்களை காட்டி ஒரு ஆய்வறிக்கையை விவாதிக்கும் அமர்வு இருந்தது. 
இன்னொரு அமர்வில் விஞ்ஞானத்தையும் ஆன்மீகத்தையும் இரண்டறக் கலக்க வேண்டும் என்று புராண காலச் சடங்குகளுக்கும், சம்பிரதாயங்களுக்கும் அறிவியல் சாயம் பூசும் ஆய்வறிக்கையும் சுற்றுக்கு விடப்பட்டது.
அப்பொழுதே அறிவியல் ஆய்விற்கு அப்பாற்பட்டதை விவாதிக்கும் இடமாக இந்த மாநாட்டை மாற்ற வேண்டாமென விஞ்ஞானிகள் குரல் எழுப்பினர். 
ஆனால் 103ஆவது கூட்டத்திலும் அறிவியல் ஆய்விற்கு அப்பாற்பட்டதை விவாதிக்கும் இடமாக மாற்றுவதில் மோடி அரசு பின்வாங்கவில்லை.
இந்த அமர்வில் உத்தரப்பிரதேச ஐஏஎஸ் அதிகாரி நமது முன்னோர்கள் காட்டியபடி சங்கு ஊதுவதால் உடல் ஆரோக்கியத்தை பேண முடியும். 
வெள்ளை முடிகருக்கும், நுரையீரலை பேணலாம் என்று ஒரு ஆய்வில் கண்டுபிடித்ததாக ஆய்வறிக்கை வாசித்தார். 
சங்கை ஊதியும் கூத்து ஆடினார். 
வீடு தோறும் காலையில் குடும்பமே எழுந்து சங்கு ஊத ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். 
அறிவியல் ஆய்வுகளையும் அனுபவம் காட்டுவதையும் பாருங்கள். 90 டெசிபலை தாண்டிய சப்த அலைகளை தொடர்ந்து கேட்டால் காது செவிடாகும் என்பது பஞ்சாலை தொழிலாளர்கள் அனுபவம். இந்த சங்கொலியோ 180 டெசிபலை நெருங்கியது. 
என்ன கொடுமை உடல் நலத்தை பேண இந்திய மக்களை காது கேளாதவர்களாக மாற்ற ஒரு ஆய்வா? 
இன்னொரு கூத்தும் இங்கே அரங்கேற இருந்தது. சிவபெருமான் சுற்றுப்புறத் தூய்மைக்கு வழி கண்டுபிடித்தவர் என்பதை நிரூபிக்கும் ஆய்வு ஒன்று மத்தியப் பிரதேச அதிகாரி ஒருவரால் சமர்பிக்கப்பட்டது. 
நல்ல வேளையாக விஞ்ஞானிகள் கூட்டத்தில் விவாதிக்க தகுதி அற்றது என்ற எதிர்ப்பு வலுக்கவே அவர் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
 இருந்தாலும் மாநாட்டின் ஆய்வறிக்கைகளில் அது இடம் பெற்று விட்டது.
ஏன் இந்த அவலம் தொடர்கிறது?
இந்திய அறிவியல் மாநாட்டு நிர்வாகிகளுக்கு அரசியல் காரணங்களால் மோடி அரசின் முரட்டுத்தனத்தையும், மூடத்தனத்தையும் எதிர்க்க இயலவில்லை. 
இதற்கு ஒரு வரலாறு உண்டு.நாம் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் 1914ஆம் ஆண்டில் பிரிட்டன் நாட்டு விஞ்ஞானிகள் இருவர் அரசின் உதவியோடு இந்திய அறிவியல் கழகத்தை உருவாக்கினர். 
அதன் நோக்கம் இந்திய மக்களிடையே விஞ்ஞானத்தின் அவசியத்தைப்பரப்புவது, விஞ்ஞான ஆய்விற்குத் தூண்டுவது என்று இருந்தாலும் நடைமுறை வேறாக இருந்தது. 
ஆண்டாண்டு நடக்கும் மாநாடுகளில் கலந்து கொள்ளும் துடிப்பான ஆய்வாளர்களை தங்கள் நாட்டு அறிவியலை வளர்க்க அள்ளிக் கொண்டு போகவே இந்த மாநாடுகள் பயன்பட்டன. 
இன்னொரு வரலாற்றுத் தகவலையும் இணைத்துப் பார்க்கிற பொழுது தான் இது தெளிவாகும். இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் விடுதலை வேட்கை கொண்ட அறிவாளிகள் மேலை நாடு செல்லாமலே ஆய்வுகள் நடத்தி அறிவியல் தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க விரும்பினர். 
1876இல் கொல்கத்தாவில் விஞ்ஞானத்தை வளர்க்கும் இந்தியக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினர்.
 9 ஏக்கர் பரப்பளவில் ஆராய்ச்சிச் சாலையும் அமைத்தனர். பின் நாளில் இந்த ஆராய்ச்சிச் சாலையில் தான் உலகம் வியந்த கண்டுபிடிப்புகளுக்காக சர்.சி.வி.ராமன் சோதனைகள் செய்தார்.இங்கே ஆராய்ச்சி மையங்கள் உருவாக்க பிரிட்டிஷ் அரசு விரும்பவில்லை. 
மாறாக சுதேசி ஆராய்ச்சி மையங்களில் தேறும் ஆராய்ச்சியாளர்களை தங்கள் நாட்டிற்கு கொண்டு போவதில் கவனமாக இருந்தனர். 
1914இல் உருவான இந்திய அறிவியல் கழகம் அந்த வேலையை சிறப்பாக ஆண்டு தோறும் மாநாடுகள் நடத்தி செய்தது. சென்னையை விட்டு வரமாட்டேன் என்று உறுதி காட்டிய கணித மேதை ராமானுஜத்தை இங்கிலாந்திற்கு கொண்டு செல்ல பிரிட்டிஷ் அரசு பட்டபாட்டை அவரது வாழ்க்கை வரலாற்றை படித்தவர்கள் அறிவர்.நாடு விடுதலை ஆனவுடன் பிரதமர் நேரு விஞ்ஞான தொழில் நுட்ப அறிவை வளர்க்க கவனம் செலுத்தினார். 
ஆனால் தொழில்களை நடத்தும் லேவா தேவி பாரம்பரியம் கொண்ட பெரு முதலாளிகள் ஆய்வுகளின் அவசியத்தை உணராமல் போனதால் சர்.சி.வி. ராமன்களும், ராமானுஜங்களும் தோன்றுவது அபூர்வமாக ஆகிவிட்டது. 
ஆய்வு வேட்கை கொண்டவர்களுக்கு இங்கே வேலை இல்லாமல் போய் விட்டது, பெரு முதலாளிகளின் அந்நிய தொழில் நுட்ப மோகம் உள்நாட்டு ஆராய்ச்சியின் அவசியத்தை உணர விடவில்லை. சுதந்திரத்திற்குப் பிறகு அறிவியலுக்கு நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் அனைவரும் மேலை நாட்டு ஆராய்ச்சி மையங்களில் கண்டுபிடிப்பாளர்களாக இருந்தவர்களே, புதிதாக சர்.சி.வி.ராமன்களோ, ராமானுஜங்களோ இங்கே தோன்றும் சூழலை உருவாக்க ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர் .
நேருவிற்கு பிறகு சிவப்பு நாடா நடைமுறையும், ஊழலும், துதிபாடலும், இந்த அமைப்பை சீரழித்தது. இன்று இந்திய அறிவியல் மாநாட்டை மோடி அரசு அஞ்ஞானத்தை வளர்க்கும் மடமாக்கி விட்டது.
இன்றைய உலகமயச் சூழலில் ஒரு நாட்டின் பொருளாதார வலிமை அறிவியல் தொழில் நுட்ப ஞானத்தை வைத்தே அளக்கப்படுகிறது. 

வே.மீனாட்சி சுந்தரம்
==================================================================================================