வெள்ள நிவாரணம் வரும்! ஆனா பாதித்த அளவு வராது?
2015 டிசம்பர் - வரலாறு காணாத வெள்ளம், ஜெயலலிதா அரசின் தப்பான முடிவின் காரணமாக சென்னை செயற்கை பேரழிவுக்கு தள்ளப்பட்டது.
* கடந்த டிசம்பர் 1ம் தேதி கொட்டத் தொடங்கிய பேய் மழையால் செம்பரம்பாக்கத்தில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரின் அளவு தாங்காமல் அடையாறு சென்னை நகர சாலைகளிலும், குடியிருப்புகளிலும் பாய, தரை தளமும், முதல் தளமும் முழ்கி 2வது மாடியில் இருந்த வீட்டுக்குள்ளும் வெள்ளம் பாய்ந்தது. லட்சக்கணக்கானோர் சொந்த ஊரிலேயே அகதியான சோகம். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த பரிதாபம்.
* தெரிந்தே செய்த தவறால் ஏற்பட்ட பேரழிவை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத தமிழக அரசு இயந்திரம் நிவாரணப் பணிகளில் கூட கவனம் செலுத்தாமல் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேகரித்து சென்னைக்கு அனுப்பும் நிவாரண பொருட்களில் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டுவதிலேயே கவனம் செலுத்தியது பெரும் கொடுமை.
* வெள்ள நிவாரணத்திலும் விளம்பரம், அரசு தரும் நிவாரணத்திலும் கல்லா கட்ட பார்ப்பது என்று பல அவப்பெயர்கள்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவுவது வழக்கம். இதற்காக மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை துறையிடம் மாநிலங்கள் முறையிட வேண்டும். தட்ட தட்டத் தான் நிவாரணம் கொட்டும்.
ஆனால், கதவை தட்டுவதையே கவுரவ குறைச்சலாக நினைக்கிறது தமிழக அரசு. பேரழிவை சமாளிக்க மாநில பேரிடர் நிவாரண நிதி, தேசிய பேரிடர் நிவாரண நிதி என்று இரு நிதிகள் உள்ளன. இதில் மாநில நிதிக்கு 25 சதவீதத்தை மாநில அரசு ஒதுக்கினால், மீதமுள்ள 75 சதவீதத்தை மத்திய அரசு தரும்.
இதன்படி கடந்த நவம்பரில் பெய்த கனமழையால் கடலூர் மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் பாதிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசிடம் தமிழகம் நிதி கேட்டது.
தானும் தன் பங்குக்கு தமிழக அரசு ரூ.500 கோடி ஒதுக்க மத்திய அரசு ரூ.940 கோடியை தந்தது.
அடுத்த கட்டமாக டிசம்பர் மாத பெருமழையின்போது மூழ்கி கிடந்த சென்னையை பார்வையிட்ட பிரதமர் மோடி, மேலும் ரூ.1000 கோடியை தேசிய பேரிடர் நிதியில் இருந்து தருவதாக அறிவித்தார். இப்படி வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு மொத்தம் ரூ.1940 கோடி ஒதுக்கியது.
சேத மதிப்பு எவ்வளவு: ஆனால், வெள்ள சேத மதிப்பு தமிழக அரசின் கணக்குப்படி ரூ.25,912 கோடியாகும்.
இது பற்றி பிரதமருக்கு ஒரு கடுதாசி எழுதியதோடு தன் பணி முடிந்தது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சும்மா இருக்கிறார். அதி்ல், வெள்ளத்தால் சீர்குலைந்த தமிழகத்தை சீர்படுத்த ரூ.25,912 கோடியை உடனடியாக ஒதுக்குங்கள் என்ற கோரிக்கையை வைத்தால் மட்டும் போதுமா? இப்படி, ஒவ்வொரு மாநிலமும் மனு போடுவதோடு அதை பெற முட்டி மோதுகிறார்கள்.
ஆனால், தமிழகம் மட்டும், ‘அதான் கடுதாசி போட்டாச்சே’ என்று அசால்டா இருப்பது நிவாரண பணிகளில் தொய்வை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு ஏற்கனவே கொடுத்த பணத்தை வைத்து வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் வங்கிகள் மூலம் வழங்கும் பணி நடந்து வருகிறது. இதற்கே மத்திய அரசு கொடுத்த நிதியின் பெரும் பகுதி செலவாகிவிட்டது. சாலை, ஏரி, குளங்கள் சீரமைப்பு பணிகள் உள்ளிட்ட எந்த பணியுமே செய்ய முடியாத நிலை.
2வது குழு வந்தது: இந்த நிலையில், மத்திய குழு 2வது முறையாக தமிழகத்தை பார்வையிட்டு சென்றுள்ளது. இந்த குழு அறிக்கை சார்ப்பித்தாலும் உடனடியாக நிதி ஒதுக்க அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியம்.
மத்திய அரசின் நிதியை பெற்றால்தான் நிவாரண பணிகளை தொய்வின்றி செய்ய முடியும். இது தமிழக ஆட்சியாளர்களுக்கு தெரியாதா என்ன?
ஆனாலும் துரும்பை கூட கிள்ளி போடமாட்டோம் என்று இருக்கிறார்கள்.
மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியை பெற பிரதமரை முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்று நேரில் சந்திக்க வேண்டும். அப்படி செய்தால் சீக்கிரமே நிதி கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆனால், டெல்லி செல்ல முதல்வர் தயங்குவது ஏன் என்று தெரியவில்லை.
தர மறுப்பு: இது தவிர வெள்ள பாதிப்பு குறித்து தமிழக அரசு கொடுத்த தகவல்கள் முழுமையாக இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இது பற்றி மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், தமிழக அரசு சேத விவரத்தை முழுமையாக தெரிவிக்காமல் குத்து மதிப்பாக ரூ.25 ஆயிரத்து 912 கோடி கேட்டுள்ளது.
இதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. மேலும், ஏற்கனவே ரூ.1940 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இவ்வளவு பணத்தை ஒரு அரசால் உடனடியாக செலவிட முடியாது. இதனால் உடனடியாக தமிழகத்துக்கு பணம் ஒதுக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை.
மத்திய குழுவினரின் விரிவான அறிக்கை வந்தபிறகு அதை முழுமையாக பரிசீலித்து நிதியை எப்போது தருவது என்று எங்களுக்கு தெரியும் என்கிறார்கள். தமிழக அரசு முழுமுயற்சி செய்யாததால் பல நிவாரண பணிகள் தொடங்கப்படாமலேயே இருக்கும் ஆபத்து உள்ளது. என்ன நிதி வந்தாலும் சாலை சரியாகுமா?
ஏரிகள், ஆறுகள் தூர்வாரப்படுமா? மக்களுக்கு என்ன திட்டங்கள் தான் நிறைவேறும்?
இது தான் பெரும் கேள்வி.
கடந்த 2005ல் தமிழகத்தில் பெய்த பெருமழையின்போதும் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது மத்தியில் இருந்தது பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. அந்த கூட்டணியில் அதிமுக இல்லை.
திமுக அங்கம் வகித்தது.
திமுகவினர் கேட்டபடி பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக ரூ.1000 கோடியை ஒதுக்கினார். இப்போது, 2005 சேதத்தைவிட பல மடங்கு அதிக சேதம் ஏற்பட்ள்ளது ஆனால் மோடி -ஜெயலலிதாவுடன் நல்ல உறவில் இருந்த போது குறைந்த நிதியே மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரி ஒருவர் வேதனை தெரிவித்தார்.
முதல்வர் நினைத்தால் கூடுதல் நிதியை உடனே பெற முடியும் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி 2 முறை பிரதமர் மோடியை சந்தித்து வெள்ள நிவாரண நிதி உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வெள்ள நிவாரணமாக ரூ.382 கோடி தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதேபோல் மேலும் பல முதல்வர்கள் பிரதமரை , உள்துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டுள்ளனர். அவர்கள் தாங்கள் கோரிய தொகையை பெற்றுள்ளார்கள்.
ஆனால் தமிழக முதல்வர் நேரில் செல்லவில்லை என்றால் கூட , அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவையாவது அனுப்பி நிவாரணத்தை பெறுவதில் ஜெயலலிதா முயற்சிக்க வேண்டும் .வேழ்ரும் கடிதங்கள் எழுதுவதுடன் தனது பணியை முடித்துக்கொள்ளக் கூடாது.
மத்தியக்குழு வருகையை கூட தமிழக அரசு பாத்திப்பான இடங்களை காண்பிப்பதில் முனைப்பு காட்டாமல் அரங்கு களில் படங்களையும்,வரை படங்களையும் வைத்து காட்டி திருப்பி அனுப்பியுள்ளனர்.விவசாயிகளை சந்திக்கவே விடவில்லை.பின் எப்படி ஜெயலலிதா கோரும் 2000கோடிகள் கிட்டும்.?
சில பாதிக்கப்பட்ட இடங்களில் மக்கள் உண்ணாவிரதம் இருந்து தங்கள் பாதிப்பை வெளிக்காண்பித்துள்ளனர்.
ஆனால் தமிழகத்தை தானே காப்பாற்றியதாக கட்டிக்கொள்ளவும்.இந்த பேரிடரை தான் மட்டுமே தனித்து நின்று சமாளித்ததாக காட்டுவதே முதல்வர் ஜெயலலிதாவின் நோக்கமாக உள்ளது.அதுதான் தமிழகத்தின் சாபக்கேடாகவும் உள்ளது.
இன்று,
ஜனவரி-10.
- உலகின் மிகப் பழமையான சுரங்க ரயில்பாதை லண்டனில் திறக்கப்பட்டது(1863)
- விக்கிப்பீடியா, நியூபீடியாவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது(2001)
- தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்தம் ரங்கம்பிள்ளை இறந்த தினம்(1761)
- முதல் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வர வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது(1920)
பிரமாண்டமான நாடகங்கள் மூலம் அசத்திய திரைப்பட நடிகர் மனோகர் பிறந்த நாள்.
=================================================================
பாடகர் கே.ஜே.யேசுதாஸின் பிறந்த தினம்.
சிறந்த பாடல் பாடியமைக்காக ஏழு முறை தேசிய விருது பெற்ற பெருமைக்குரியவர்.
மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார்.
இசைப்பேரறிஞர் விருது, பத்மசிறீ விருது, பத்மபூசன், சங்கீத கலாசிகாமணி ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார் .
==========================================================================
லண்டன் ஹார்ட்வார் பல்கலைக்கழகத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் சிறப்புரையாற்றுகிறார்.
=============================================================================================