திமுக Vs ஆளுநர்

மக்களவையில் 

ஆளுநர் 

எதிர்ப்புக் குரல்கள்

தமிழ்நாடு ஆளுநர்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெறக் கோரி இந்திய நாடாளுமன்ற மக்களவையில் ஏப்ரல் 4ஆம் தேதி திமுக எம்.பிக்கள் விடாமல் குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். 

இந்த விவகாரத்தால் இரு முறை திமுக மற்றும் அதன் கூட்டணி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

மக்களவை இன்று காலையில் அதன் சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா தலைமையில் தொடங்கியதும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெறுவது தொடர்பாக பேச அனுமதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு கோரிக்கை விடுத்தார்.

 இது தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஆனால், அவையில் காலை 11 மணிக்கு வழக்கமாக நடைபெறும் கேள்வி நேரத்தின்போது இந்த பிரச்னையை எழுப்ப சபாநாயகர் அனுமதி மறுத்தார்.

இதேவேளை விலைவாசி உயர்வு விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் குரல் எழுப்பின. 

இந்த நிலையில், திமுக எம்.பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதைத்தொடர்ந்து கேள்வி நேரம் முடிந்ததும் முக்கிய பிரச்னைகளை எழுப்பும் நேரத்தில் மீண்டும் ஆளுநர் விவகாரத்தை எழுப்ப திமுக எம்.பிக்கள் முற்பட்டனர். 

அப்போது மக்களவையை மூத்த உறுப்பினர் ராஜேந்திர அகர்வால் வழிநடத்திக் கொண்டிருந்தார்.

மக்களவை

முன்னதாக, திங்கட்கிழமையன்று மக்களவையில் திமுக உறுப்பினர்கள், "திரும்பப் பெறு, திரும்பப் பெறு, ஆளுநரை திரும்பப் பெறு," என்று தமிழிலும் அதே வரிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் முழக்கமிட்டனர். 

சுமார் 15 நிமிடங்கள் வரை அவர்கள் குரல் கொடுத்தபோதும் இந்த விவகாரத்தை எழுப்ப அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து திமுக உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலுவிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களை மத்திய அரசுக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது அரசியலமைப்புக்கு எதிரானது. 

மாநில நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் அவரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை. அதை தொடர்ந்து எழுப்புவோம்," என்று கூறினார்.

இன்று மக்களவையில் பிரச்னை எழுப்பியபோது தங்களுடைய கோரிக்கைக்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததாக டி.ஆர். பாலு குறிப்பிட்டார்.

இதேவேளை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், "மக்களவையில் விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் கொடுத்தோம். 

கூட்டணி கட்சி என்ற முறையில் திமுக எழுப்பிய ஆளுநர் விவகாரத்துக்கு எங்களுடைய ஆதரவு உண்டு," என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, ஆளுநர் தொடர்பான பிரச்னையை எழுப்புவது மாநில விவகாரம் என்பதால், அது குறித்து விவாதிக்க மக்களவை சபாநாயகரின் அனுமதியை உறுப்பினர்கள் பெற வேண்டும். 

அந்த வகையில், டி.ஆர். பாலு அளித்துள்ள நோட்டீஸை சபாநாயகர் ஏற்றால் மட்டுமே, அவர் பேசும் கருத்துக்கள் அவையில் பதிவாகும்.

மக்களவை விதிகளின்படி நேரமில்லா நேரம் எனப்படும் பூஜ்ஜிய நேரத்தில் ஒருமுறை பதிவு செய்யப்பட்ட ஒரு பிரச்னையை மீண்டும் அதே கூட்டத்தொடர் அமர்வில் அவசர தேவை எழுந்தால் ஒழிய பதிவு செய்ய அனுமதிக்கப்படாது. 

அந்த வகையில், ஆளுநர் ரவிக்கு எதிரான கோரிக்கையை குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய போதே டி.ஆர். பாலு பதிவு செய்து விட்டார்.

இந்த நிலையில், மக்களவையில் தமிழ்நாடு ஆளுநர் பற்றி பிரச்னை எழுப்ப திமுக அளித்துள்ள நோட்டீஸ் மீது சபாநாயகர் அனுமதி கொடுக்காவிட்டாலும் கூட, ஆளுநரின் செயல்பாடு குறித்து அவையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் குரல் கொடுப்போம் என்று திமுக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆளும் திமுகவுக்கும் மாநில ஆளுநர் ஆர். என் ரவிக்கும் இடையிலான பனிப்போர் போன்ற கருத்து மோதல், நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது முதலே தீவிரம் அடைந்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றியபோதும், அதை மீண்டும் சபாநாயகருக்கே ஆளுநர் திருப்பி அனுப்பினார். 

இதையடுத்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்த தமிழக அரசு மீண்டும் சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி கூட்டப்பட்டது. அதே மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும்படி ஆளுநரை தமிழக அரசு கேட்டுக் கொண்டது.

இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி இரண்டாவது முறையாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் மசோதாவை ஆளுநர் தமது அலுவலகத்திலேயே நிறுத்திவைக்க முடியாது என்றும் அதை அவர் குடியரசுத் தலைவருக்கே அனுப்பி வைக்க வேண்டும் என்றும் விதிகள் கூறுவதாக சட்ட நிபுணர்களை மேற்கோள்காட்டி திமுக தலைவர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், இரண்டாவது முறையாக அனுப்பி வைத்த மசோதாவையும் ஆளுநர் தன்வசமே வைத்துள்ளதால், அவரது செயல்பாடுகளை விமர்சித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் திமுக பல தளங்களில் குரல் கொடுத்து வருகிறது. 

சமீபத்தில் டெல்லி வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தபோது அவரிடம் அளித்த மனுவிலும் ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

----------------------------------------------------------------------------

ஊரடங்கு

கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் அண்டை நாடான சீனாவில், கொரோனா வைரஸ் தொற்றின் நான்காவது அலை கோரத் தாண்டவமாடி வருகிறது. 

ஒமைக்ரான் வகை தொற்றின் திரிபான பிஏ 2 வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், சீன அரசு திண்டாடி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே, சாஞ்சுன், ஜலின், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில், சீனாவின் பெரிய நகரமான சுமார் 2.6 கோடி மக்கள் வசிக்கும் ஷாங்காயில், கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதால், அமலில் உள்ள முழு ஊரடங்கை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஷாங்காய் நகரில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 13 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஷாங்காயில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 73 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

ஷாங்காய் நகரில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சுமார் 10 ஆயிரம் மருத்துவப் பணியாளர்களை சீன அரசு அங்கு அனுப்பி உள்ளது.

 இதில் 2,000 பேர் ராணுவ மருத்துவப் பணியாளர்கள். இதற்கிடையே, தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவது சீன மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

---------------------------------------------------------------------

இலங்கையை விட மோசமான நிலைமைக்கு இந்தியா ஆளாக நேரிடும்... 

பொருளாதார நெருக்கடியால் இலங்கை தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்நாடு சென்ற பாதையில்தான் இந்தியா சென்று கொண்டிருப்பதாகவும் சிவசேனா எச்சரிக்கை செய்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பண வீக்கம், நாட்டின் கடன் சுமை உள்ளிட்டவை காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் வீதிக்கு வந்து அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 தற்போதைய நிலவரப்படி அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் கூட்டணி பெரும்பான்மையை இழந்துள்ளது. நிலைமை சீரடைவதற்கு அதிகபட்சம் ஓராண்டு வரை ஆகலாம் என்று எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர். 

நிலைமை இவ்வாறு இருக்க, இலங்கையின் நலனில் இந்தியாவை தவிர்த்து உலக நாடுகள் எதுவும் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில் இலங்கையின் நிலைமை குறித்த சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- இலங்கையின் நிலைமை மிக மோசமாக உள்ளது. 

அந்நாடு சென்ற பாதையில்தான் இந்தியாவும் செல்கிறது. பண வீக்கத்தை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இலங்கையை விட மோசமான நிலைமைக்கு இந்தியா ஆளாக நேரிடும்.


இந்தியாவில் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. 
நாட்டின் நலன் கருதி இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த அனைத்துக் கட்சி கூட்டத்தை பிரதமர் மோடி கூட்ட வேண்டும். உத்தரப்பிரதேச தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
 இதைப் பற்றி மத்திய அரசு பேசுவதில்லை. அரசியலையும், தேர்தலையும் தவிர்த்து மத்திய அரசுக்கு எதுவும் முக்கியமில்லை.
என்று தெரிவித்துள்ளார்.
--------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?